கேள் கேள் பெரிது கேள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 5,461 
 

பா……,,ர……,,தீ…, நீயா? அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில் விழிகள் விரிய சாலையின் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்துக் கேட்டாள்.

தீடீரென்று எதிரே வந்தவள் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் திகைத்துப் போய் ஆ… …ஆமாம்…நீ…ங்……க? என்று சற்றே இழுத்தாள்.

நீங்க சூர்ய பாரதி தானே?………நான்……என்னை நினைவில்லையா?…,,மீனாட்சி மகளிர் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தோமே?…….

ஓ……,ஓ……ஞாபகம் வந்துடுச்சுடீ……,அனு…,,அனுஷா மோகன்……கரெக்டா? உடனே இயல்பாக இருவரையும் *டீ* தொற்றிக் கொண்டது.

“ஏய்…,,எப்படி இருக்கடீ?ஆளே மாறிப்போயிட்ட? என்ன ஆச்சு?. பள்ளி இறுதிநாளன்று சந்தித்தது.

அப்பொழுதே நீ தமிழ் இலக்கியம்தான் படிக்கப்போகிறேன் என்று சொன்னாய்? பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கூட நீதானேடி ஸ்கூல் டாப்பர், அப்போது தொலைபேசியில் பேசியதுதான், அதற்குப் பிறகு தொடர்பே இல்லை, இது உன் குழந்தையா?. க்யூட்டா இருக்கா. என்னபேரு?. கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்,

“……”

“என்னடி எதுவுமே பேசமாட்டேங்குற? என்ன ஆச்சு? நாம் சந்திச்சு கிட்டத்தட்ட பத்து வருஉக்ஷம் ஆகி விட்டது, எப்படி இருக்கு உன் திருமண வாழ்க்கை? கணவர் என்ன செய்கிறார்? புகுந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? மறுபடியும் கேள்விகளைச் செங்கற்களாக அடுக்கினாள்,

அ…,,து வந்து…,,தீடீரென்று உன்னைச் சந்திச்சதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை அனு…நீ கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன், நீ என் வீட்டிற்கு வா. அருகில்தான் இருக்கிறது, ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோமே….

மிக மிக நிதானமாக தராசில் இட்டு அளந்தது போல் பேசுகிறாள் பாரதி, நம்ப முடியவில்லை அனுவால், பள்ளி நாட்களில் ஆறாம் வகுப்பு முதல் மேடையில் முழங்கிய பாரதியா இது? சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்னும் படியாக கண்களும் பேசுமே? அவளா இவள்? கண்கள் பஞ்சடைந்து கன்னம் ஒட்டி தோள்பட்டை எலும்பு துருத்திக்கொண்டு வெளியே தெரிய. என் பாரதியா இது?.

சிந்தனையைக் கலைத்தாள் பாரதி, என்னடி நான் கேட்டதற்கு பதிலே சொல்லலையே?போவோமா?.

ஓ.கே, ஓ.கே, போலாண்டி…

அது ஒரு ஒண்டிக்குடித்தனங்கள் இருக்கும் சந்து வீடு, மு்ன்று வீடுகள் தாண்டி நான்காவது வீடு பாரதியினுடையது, நுழைந்தவுடன் எட்டிற்கு ஐந்தில் உறhh,,ல் இல்லை அது உறல்தான், இடப்புறம் திரும்பினால் ஒரு சின்னக் குகை போல் குட்டி இருட்டுச் சந்து, அதற்குள் ஜீரோ வாட் வெளிச்சம் தரும் ஒரு அழுக்கடைந்த முட்டை அளவு பல்பு தரும் வெளிச்சம்தான் மொத்தக் கிச்சனுக்கும், அதோடு கூட சில தட்டுமுட்டுச் சாமான்கள், பாத்ரு்ம் மற்றும் டாய்லெட்டும் பொதுவானதாம், பார்க்கப் பார்க்கப் பத்திக்கொண்டு வந்தது அனுவுக்கு.

தோள்வரை தொங்கும் மடித்துக்கட்டிய இரட்டைச் சடையும் செதுக்கினாற்போல் அமைந்த, முகமும் அதற்கேற்ற உடல்வாகும் நெகுநெகுவென்ற உயரமும் செக்கச்செவந்த நிறமும் இத்தனை அழகும் கொண்ட சூர்யா ஒரு சுரிதார் அணிந்த பட்டாம்பூச்சிதான். எங்கேயும் நிற்கவே மாட்டாளே. துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருப்பாளே? ஒரு போட்டி விட்டு வைக்க மாட்டாளே? ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டுவிழாவின் போது. ‘ஏய் சூர்(நாங்கள் அவளுக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர்) நீ ஏண்டி மேடையிலிருந்து இறங்கற. மறுபடியும் மறுபடியும் உன் பேரைத்தான் அழைக்கப் போகிறார்கள்,பேசாம அங்கேயே ஓரமாக நின்னுக்கோடி’.

அவளின் ஆழ்ந்த சிந்தனையைக் கலைத்தாள் சூர்யபாரதி, இந்தாடி அனு. காப்பியைக் குடி, குழந்தை தூங்கிவிட்டான் போல,இரண்டு பக்கமும் தலையணை வைத்து விட்டு வருகிறேன்.

ம்………சொல்லு உனக்கு இப்ப என்ன தெரியணும்? என் கல்யாணம். புகுந்த வீடு. கணவன் இதெல்லாம் பற்றிதானே? எல்லாம் சொல்றேன். பள்ளி இறுதி முடித்து 96சதவீதம் மதிப்பெண்களும் பெற்று நான் விரும்பிய தமிழ் இலக்கியம் படிக்கலாம் என்ற வேளையில்தான் அந்த கோரவிபத்து நேரிட்டது, ஆம் என் பெற்றோர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது, அதில் பயணம் செய்த ஒருவருமே பிழைக்கவில்லை, எனக்குத் தாய்மாமன் என்கிற பெயரில் இருந்த ஒரு பகாN்ரன் எல்லா சொத்துக்களையும் ஏமாற்றி எடுத்துக்கொண்டு ரொம்ப நல்லவன் போல உன் அப்பா பிஸினசில் கடன்தான் நிறைய வைத்திருந்தார், நான்தான் அதையெல்லாம் சரி பார்த்து மேற்கொண்டு என் கையிலிருந்த சொத்துக்களையும் விற்று உன் அப்பா பெயர் கெடாமல் உன்னையும் காப்பாற்றியிருக்கிறேன், மேற்கொண்டு உன்னைப் படிக்க வைப்பதோ காப்பாற்றுவதோ என்னால் முடியாத காரியம், எனவே என் பையனை உனக்குக் கட்டி வைத்து என் அக்காவின் ஆன்மாவைக் குளிர வைக்கிறேன், என்று சொல்லி படிக்காத வேலையுமில்லாத ஒரு குடிகாரனை என் தலையில் கட்டி வைத்து விட்டார். அதோடு இருந்தால் கூடப் பரவாயில்லை, அவர் ஒரு சந்தேகப் பிராணி, கடந்த ஒன்பது வருடங்களாக நான் படும் பாடு சொல்லி மாளாது அனு என்று கண்களில் நீர் வழிய அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

அனுவால் அவளைத் தேற்ற முடியவில்லை, அவள் கையைப் பற்றி அழுத்திக் கொள்கிறாள்.

தீடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவளாக, ‘அனு, உன்னைத் தமிழ் நாட்டின் சிறந்த போராளிக்கான விருதும் இந்தியாவிலேயே சிறந்த சமுக சேவகிக்கான விருதும் கொடுத்து கௌரவித்திருக்கிறார்களாமே’, தொலைக்காட்சியில் மகளிர் தினத்தன்று பார்த்தேன், உன் பேட்டியின் நேரம் கூடப்போட்டிருந்தார்கள், அதுவே பக்கத்துவீட்டு அக்கா கூப்பிட்டு, ‘வா வந்து பார் இன்று மகளிர் தினம் பெண்கள் எப்படியெல்லாம் புயலாகவும். புலியாகவும் சீறி தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கும் சமுக அவலங்களைத் தட்டிக் கேட்டு நீதி கிடைக்கும் வரை ஓயாமல் போராடுகிறார்கள் என்று’, அதனால்தான் காலையில் உன்னைப் பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆனந்த அதிர்ச்சியே ஏற்பட்டது, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்குடி.

எப்படி……,நீ இப்படி?

வாஸ்தவம்தான், அனு எப்பவுமே கைதட்டல் கேஸ்தான், வளமான குரல் அவளுக்கு. இருந்தாலும் ‘நீராரும் கடலுடுத்த’ குருப்பில் பாடக்கூட கூச்சப்படுவாள், *ஏண்டி பள்ளி நாட்களில் மேடையேறவே கூச்சப்பட்ட என் *அனுவா* இன்று இப்படி ஒரு சாதனைப் பெண்மணியாக? விருதுக்கே பெருமை சேர்ப்பவளாக எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடி? ……

இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டனர், காலச்சக்கரம் தான் தன் சுழற்சியில் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது?மனிதர்களின் குணங்களில். உணர்வுகளில். செயல்களில். எண்ணங்களில் நம்ப முடியாத மாற்றங்கள்?

சூர்ய பாரதிதான் முதலில் கண்களை இமைத்து *அனுஷா உன்னுடைய இந்த மாற்றமும் வளர்ச்சியும் உயர்வும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன, உன்னைப் போன்ற ஒரு பயந்தாங்கொள்ளியால் எப்படி இவ்வளவு பெரிய சிகரத்தை எட்ட முடிந்தது? மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள், அவள் கண்களில் அதீத ஆவலும் ஆச்சர்யமும், பொறுமை பொறுமை என் தோழியே1 சொல்கிறேன், இது எல்லாவற்றிற்கும் அடிப்படையே நீதானேடி.

என்னது?…,நானா?…என்ன உளறுகிறாய்?.

உளறவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன், நாம் இருவரும் எட்டாவது படிக்கும் போது *குடி* ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் கெடுக்கும் என்பதை சிவசங்கரியின் ‘ஒரு மனிதனின் கதை’ நாவலின் தியாகு முலமும், ராஜகிரண் நடித்த திரைப்படம் முலமும் திருக்குறள்களை மேற்கோள் காட்டியும் பேசியதை என் மனது அப்படியே பதிவு செய்து கொண்டது, நான் சிறுவயதிலிருந்தே நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவள் என்பது உனக்குத் தெரியும், நான் என் அன்றன்று பயந்தவைகளைப் பற்றிப் பதிவுசெய்யும் போது உன்னுடைய பங்களிப்புகளையும் சேர்த்துதான் பதிவு செய்துவந்துள்ளேன், நீ பேசிய சிறந்த பேச்சுகளை அடிக்கோடிட்டு (வண்ண வண்ணப் பேனாக்களில்) வைத்திருக்கிறேன், பத்தாம் வகுப்பில் படிக்கும் போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கிடையேயான போட்டி ஒன்றில் ‘பெண்ணின் உயர்வு’ பற்றிப் பேசும் பொழுது பாரதியாரின் ‘பெண்முரசு* பாட்டிலிருந்து பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில முடர் நல்ல மாதரறிவைக் கெடுத்தார்’ என்று மறக்க முடியுமா?. அது மட்டுமா?. பெண்மை பற்றியும் பெண் விடுதலைக் கும்மியிலிருந்தும் பெண் விடுதலையிலிருந்தும் நீ மேடையில் மேற்கோள்களாகக் காட்டி பேசியபோதெல்லாம் மீசையில்லாத பெண் பாரதி போலத்தான் நீ என் கண்களுக்குத் தெரிந்தாயடி.

அவள் பேசப்பேச பொங்கிவரும் விம்மலை அடக்கமுடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் சூர்யா.

அனுஷா அதைக்கூட கவனிக்காமல் மேலே தொடர்கிறாள்,

நம்முடைய ப்ளஸ்டு அரையாண்டுத் தேர்வுகளுக்கு முன்னால் காந்தி ஜயந்திக்காக மாநில அளவில் நடந்த பேச்சுப் போட்டி நினைவிருக்கிறதா? அதாண்டி சிறைக்கைதிகளுக்கு முன்னால் இறுதிச்சுற்றுப் போட்டி நடந்ததே அதில் நீ காந்திஜியின் சுயசரிதை பற்றிப் பேசும் போது அவர் சிகரெட் பிடிப்பதற்காக வீட்டிலிருந்தே நகையைத் திருடியதையும் பின்பு மனம் மாறி தன் அப்பாவுக்குக் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டதையும் கூறி ‘யாரும் இங்கே கடவுளோ ஞானியோ கிடையாது, தவறை உணர்ந்து திருந்தியவனே மனிதன், அவனே தன் மேன்மையான செயல்களால் கடவுளுக்குச் சமமாகப் போற்றப்படுகிறான், இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகி யாரென்று தெரியுமா? முன்னாள் கொள்ளைக்காரன், தகாத செயல்களைச் செய்து மக்களைத் துன்புறுத்தியவன்தான், உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரியவள் அல்லள், இருந்தாலும் என்னுடைய ஆசான்கள் எனக்குப் போதித்ததையும் படித்த புத்தகங்களாலும் எனக்குத் தெரிந்தவற்றை இச்சபையில் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், ‘நீ பேசிமுடித்தவுடன் கைதிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்களே! அதோடு நின்றதா அதன் தொடர்ச்சியாக ஒரு வாரம் கழித்து நம் பள்ளிக்கு வந்த ஒருவர் உன்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறி நீயும் அவரைச் சந்தித்த போது. ‘தாயீ…,நீங்க சின்னப்புள்ளையா இருந்தாலும் என் வாள்கைல வெளக்கேத்தி வச்சுட்டீங்க…….,காந்தி பொறந்த நாளன்னைக்கு என்ன ரிலீஸ் பண்ணுனாங்க, நா ஒண்ணும் நல்லவனில்ல,தெனங் குடிச்சிட்டு வந்து பொஞ்சாதியை அடிச்சு மெதிச்சு கொடுமை பண்ணுனேன். புள்ளங்களயும் போட்டு அடிப்பேன், ஒரு தபா எ நாலு வயசுப் புள்ளய காலால மெதிச்சதுல கால் முறிஞ்சி போச்சு இது பொறுக்க முடியாம எம்பொஞ்சாதி புகார் குடுத்துடுச்சு’ மெய்யாலு சொல்றேன் தாயீ நீ வந்து பேசுற வரக்கும் எம் மனசுல மறுபடியும் என் பளைய பழக்கத்த தொடரோணும், என்னை செயில்ல அடைச்ச அந்த சிறுக்கி மு……,ய சும்மா வுடக்கூடாதுன்னதான் கறுவிகினே இருந்தேன், ஆனா ஒம்பேச்சு என்ன மனுசனா மாத்திடிச்சு, நா இப்ப திருந்திட்டேன், என்ன இருந்தாலும் நேரில் பாத்து சொல்லோணுன்னுதான் வந்தேன் தாயீ’, என்று வெட்கத்தோடு சிரித்த மாரிச்சாமியின் கருத்த முகம் இன்றும் அப்படியே நிழலாடுகிறதே!.

என்னால் உன் இந்தக் கோலத்தைக் காண நெஞ்சு பொறுக்கவில்லையடி…….என்று ஆவேசம் வந்தவள்போல அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

ஒரு நிமிடம் போல அமைதியாக அவளை அனுமதித்தவள் தன் தோளை அழுத்திக் கொண்டிருக்கும் அவள் கைகளை மெதுவாக விலக்கினாள், பின் மிக மிக நிதானமாகப் பேசத் தொடங்கினாள், ‘அனு பேசுவதற்கு எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் நாம் வாழத்தொடங்கும்போதுதான் அதில் உள்ள கஸ்ட நஸ்டங்கள் தெரியவரும், எனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதென்று தெரியவில்லை.

‘போதும் நிறுத்துடி……,நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம், பேனாவாலும் பேச்சாலும் எத்தனையோ சமுக அவலங்களுக்கு என்கவுன்டர் செய்த காரிகையே’ என்று நாங்கள் உனக்கு அப்பவே போஸ்டர் அடிச்சோமேடி!. உன்னை ஒரு ஓபராய் வின்ஃபரே அளவுக்குக் கற்பனை பண்ணி வைத்திருந்தேனே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமடி, இன்று நான் இப்படி ஒரு போராளியாக சேவகியாக கைவிடப்பட்ட மனிதர்களுக்காக அவர்களுடைய வளமான எதிர்காலத்திற்காக பாடுபடுகிறேன் என்றால், அதற்கெல்லாம் நீதாண்டி காரணம்!.

என்னடி புருவத்தை இந்த நெளி நெளிக்கிற? புரியும் படி சொல்றேன் கேளுடி!

பதின்பருவத்தில் பார்க்கும் காட்சிகளும் சேரும் சேர்க்கைகளும் கேட்கும் பேச்சுகளும் ஆழ்மனம் வரை ஊடுருவி விதையாக வேருன்றி ஆலமரம் போல் விழுது பரப்பி அவ்வப்போது நம்மை அசைத்து சமயத்தில் காற்றால் அடித்தும் எழுப்புகின்றன, அதன் எதிர் விளைவுதான் சமுகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் டானிக், “கற்றலின் கேட்டலே நன்று”. ”செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்பார்கள் அது என் விஷயத்தில் உண்மையாகிவிட்டது, அதற்காக இதற்கெல்லாம் அஸ்திவாரமாக இருந்த உன்னை இப்படியே விட்டுவிட்டுவிட மாட்டேன், உன்னை மீண்டும் மீசை இல்லாத பெண் பாரதியாக உருவாக்குவேன், இது உறுதி என்று சூர்யபாரதியின் கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

அதில் தன் கைக்கு மட்டுமான பிடிமானமின்றி, வாழ்க்கைக்கும் பிடிமானம் கிடைத்தது போல் உணர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *