கெட்ட வார்த்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 24,742 
 

Warning: Strong Sexual/Abuse Dialogue. நிறைய கேட்ட வார்த்தைகள் இக்கதையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

கல்லூரியில் சேர்ந்திருந்த புதிதில் உடன் படிக்கும் நண்பர்களை மச்சான் மாப்பிள்ளை என்றழைக்கக்கூட எனக்கு வாய் வராது.பள்ளியிலிருந்து,தயிர் சாத அந்தஸ்தை மட்டும் கடந்த ஒரு அரை வேக்காடாகத்தான் நான் வெளியேறியிருந்தேன்.(என்னை விட மட்டமாக இன்னமும் பருப்பு சாதமாகவே காலத்தை கழிப்பவர்களும் எங்களிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்). ஆனால் வளரும் தலைமுறையினரிடையே இந்த சப்பைத்தனம் துளியும் இருக்காதென தெளிவாக அறிய முடிகிறது.

நேற்று கல்லூரியின் பின் வாசல் பக்கம் நண்பனுக்காய் காத்துக் கொண்டிருந்த போது இரண்டு பொடிப் பயல்களை பார்த்தேன். இருவரும் பார்ப்பதற்கு ஒன்பதாவது படிக்கும் மாணவர்களைப் போல் இருந்தார்கள். அதிலொருவன் படு ஆவேசமான குரலில்”அந்த தெவடியாப் பையன் சுரேஷ் மட்டுந்தான் மச்சான் உயிர எடுக்கிறான். அவன் மட்டுந் தனியா சிக்கட்டும். கல்லாலயே அடிச்சு மண்டைய பொளக்குறேன் ” என்று கடன் கொடுத்த வட்டிக்காரன் மாதிரி கண்டமேனிக்கு விட்டு ஏறிக்கொண்டிருந்தான். கூட இருந்தவனையும் சும்மா சொல்லக்கூடாது. அவனும் ஆள் பயங்கர கடுப்பில்தான் இருந்தான் போலிருக்கிறது. “ஆமா மாப்ள அந்த பன்னாடையாலத்தான் எல்லா எழவும்” என்று பதிலுக்கு அவன் பங்கை சூடாக ஊற்றிக்கொண்டிருந்தான்.தொடர்ந்து மிகுந்த அறச்சீற்றத்தோடு பேசியபடி(சுரேஷ் ஒரு கேக்கூ,ஒரு லூசுக்கூ) அவர்கள் என்னைத் தாண்டி போவதை கண்கொட்டாது பார்த்துக் கொண்டேயிருந்தேன்.என்னுடைய யூகம் சரியாக இருப்பின், சுரேஷ் என்கிறவர் அவர்களின் கணக்கு ஆசிரியராகவோ அல்லது வேதியியல் ஆசிரியராகவோ இருக்கவேண்டும்.

அந்த சுரேஷிற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதால் அவரை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துக் கொள்ள எந்த தேவையுமில்லை.நான் சொல்ல வந்தது அந்த பயல் பயன்படுத்திய கெட்ட வார்த்தைப் பற்றி. இந்த வயதிலேயே தெவடியா பையன் என்றெல்லாம் பேசுகிற அளவிற்கு அவனுக்கு தைரியம் வாய்த்திருக்கிறது. பின்நவீனத்துவ சமூகத்தில் பிள்ளைகள் எப்படியெல்லாம் கெட்டுப் போகிறார்கள் பாருங்கள் என்று முதுகை சொறிந்துக் கொண்டு பேசுகிற அளவிற்கு நானொன்றும் உத்தம மயிரில்லை. ஒருவேளை நீங்க அந்த மாதிரியான கோஷ்டியை சேர்ந்தவர் என்றால் தயவு செய்து இந்த கதையை தொடர்ந்து படிக்காதீர்கள். உங்களுடையே சங்காத்தமே எனக்கு வேண்டாம். கதையை தொடர்வதைப் பார்த்தால் நீங்களும் என்னைப் போன்ற திருட்டுக்கூனாத் தான் போலிருக்கிறது. இருக்கட்டும். விஷயம் என்னவென்றால், அவனைப் பார்த்ததும் சட்டென்று எனக்கு என்னுடைய நினைவே பரிதாபமாய் மனதுள் வந்துப் போனது.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடிக்கிற வரையிலும்கூட நான் பேசிய மோசமான கெட்ட வார்த்தை என்பது மயிரு புடுங்கி என்பதாகத்தான் இருந்தது.நம் இளையத் தளபதி அப்பொழுதே தனது திரைப்படங்களில் “பாடு” என்றெல்லாம் கத்தி வசனம் பேசி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.இப்படி உப்பு சப்பில்லாமல் உருண்டுக் கொண்டிருந்த வாழ்க்கையில் ஏகத்திற்கும் ஞானப்பழங்களை அம்பாரமாய் வழங்கி, எனது அறிவுக்கண்ணை அகலமாய் திறந்து வைத்தது என்னுடைய கல்லூரி நண்பர்களே. அப்படியே அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கம் மாதிரி பேசப்பேச தீராத கெட்ட வார்த்தைகளை அவர்கள் தங்களது சேகரிப்பில் பத்திரமாய் வைத்திருந்தார்கள்.

வெங்கட் என்றொருவன் இருக்கிறான். மனிதன் தங்கமானவன்.நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு காலையில் கல்லூரிக்கு வந்தானென்றால் பார்ப்பதற்கே அவ்வளவு பாந்தமாக இருக்கும். சாயுங்காலம் பார்த்தால்கூட சட்டையில் ஒரு மடிப்பு கசங்கியிருக்காது.இவை யாவற்றையும் விட முக்கியமானது அவனது சொற்பிரயோகங்கள். சராசரியாக ஒரு வரிக்கு இரண்டிலிருந்து நான்கு தடவைவரை புண்டை என்கிற வார்த்தையை சேர்த்துக் கொள்வான். வகுப்பிற்குள் நுழைந்ததும் பையை பயபக்தியோடு பெஞ்சில் வைத்துவிட்டு, முன்னால் இருக்கிற என்னிடம், “என்ன படிப்பு புண்ட, சீக்கிரம் வந்துட்ட,இந்த புண்டயிலலாம் கரெக்டா இருப்பியே??சரி,எந்த புண்ட பீரியட் ஃபர்ஸ்ட்?” என்று கேட்பான்.இதில் நான் எந்த புண்டைக்கு முதலில் பதில் சொல்வதென்று தெரியாமல் கேனையன் மாதிரி விழித்துக் கொண்டிருப்பேன்.

இந்த கெட்ட வார்த்தையை எல்லாம் முதலில் கேட்டப்போது நான் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவை வெகு இயல்பாக பேச்சு வழக்கோடு இசைந்து போய்விட்டன.கல்லூரிகளை பொருத்த வரையில் மதிய உணவு இடைவேளை என்பது ரணக் கொடூரமான ஒரு நேரம்.சாப்பாட்டிற்காக தெரு நாய்கள் மாதிரி நாங்கள் அடித்து மாண்டுக் கொண்டிருப்போம்.விசேஷமாய்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரணப் புலி சாதத்திற்கெல்லாம் சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும். அவனவன் தனது டிபன் பாக்ஸை பாதுகாத்துக் கொள்வது என்பது இருட்டு வழியில் தனியாக பணத்தோடு போவது மாதிரிதான். எங்கிருந்து எவன் தாவி வருவான் என்றே கணிக்கமுடியாது. இதில் ஒருத்தன் மட்டும் எதையாவது தனியாக தின்றுத் தொலைத்து விட்டான் என்றால் அவ்வளவுதான். ஒரேடியாக ஓத்துட்டான் மச்சான் என்று ஒரு கூட்டமே சப்தமாக கத்தியலறும்.

ஒரு நாள் வீட்டில் ஆசையாய் பையன் சாப்பிட்டு வளரட்டும் என்று முட்டைக் கட்டிக் கொடுத்திருந்தார்கள். மதியம் வரை பொறுமையாய் இருக்காமல் காலை இடைவெளியின் போதே ஏதோ ஆர்வத்தில் அதை எடுத்து முழுங்கிவிட்டேன். போன நொடி வரை எங்கிருந்தானோ தெரியவில்லை,திடீரென்று கிராஃபிக்ஸில் முளைத்து வந்த கடவுள் மாதிரி என் முன்னே தரிசனம் கொடுத்தான் அரவிந்த். இந்த இடத்தில் அவனுடைய உடல்மொழியை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நான் சாப்பிட்டது என்னவோ ஒரு மூன்றரை ரூபாய் பெருமானமுள்ள முட்டை, அதற்கு அவன் காட்டில் கரடியிடம் நண்பனை தனியாக மாட்டி விட்டு மரமேறிய சோமுவை முறைப்பது மாதிரி மேலும் கீழுமென நான்கு முறை என்மேல் நிர்கதியான கண்களை மேயவிட்டான்.அவனது அடுத்த செயல்தான் உச்சக்கட்டம். கீழ்ஸ்தாயியிலிருந்து குரலெழுப்பி-நல்ல குரல்வளம் அவனுக்கு. கட்சிக் கூட்டங்களில் வாழ்க என்று குரல் கொடுப்பதற்காகவே நேர்ந்துவிட்ட தொண்டை- மச்சான் முட்டையை தனியா ஓத்துட்டான்டா என்று கதறினான்.(சத்தியமாகவே கதறத்தான் செய்தான்). அந்த குரல் நிறைவடையும்போது பத்து பதினைந்து துணைக் குரல்கள் உடன் சேர்ந்திருந்தன.

இந்த வார்த்தைகளோடு அதிகம் பரிச்சயம் ஏற்பட்டிராத காலமது.(அதானே, பிறக்கும்போதே ஓத்தா,ங்கொம்மா என்ற படியேவா பிறக்கிறோம்??).ஓத்துட்டான் என்பதை அவ்வளவு சத்தமாக கேட்டதும் எனக்கு முந்தைய நாள் பார்த்த பிட்டு படத்தின் உடலசைவுகளெல்லாம் ஞாபகத்திற்கு வர என்னுடைய புலன்கள் சடுதியில் புல்லரித்து விறைந்துக் கொண்டன. இதற்கிடையே மனதிற்குள் மின்னல் வெட்டாய் முட்டையின் காட்சி வடிவம் வேறு.இதற்கு பிறகு வாழ்க்கையில் முட்டை சாப்பிடும்போது பிட்டு படத்தை நினைக்காமல் இருக்க முடியுமா இல்லை பிட்டு படம் பார்க்கும்போதுதான் முட்டையை நினைக்காமல் இருக்க முடியுமா?ஆனால் அரவிந்திற்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை.

பொய் சொல்வதற்கும், ஏமாற்று வேலை செய்வதற்கும்கூட புளியந்தோப்பு அகராதியில் ஓத்துட்டான் என்றுதான் இருக்கும் போல. அதையே கொஞ்சம் மெருகேற்றி மூலக்கடை பாஷையில் சொன்னால் பச்சை ஓல் ஓத்துட்டான்.நம்முடைய தமிழ் மொழி எத்தனை வார்த்தைகளை,அவற்றில் திரிபுறும் எத்தனை அர்த்தங்களை கஷ்டப்பட்டு செரித்துக் கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்கிறது என்பதை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு தெவடியா என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். காலங்காலமாக இது பெண் பாலைக் குறிக்கின்ற சொல்லாகத்தானே பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியவன் ஜகதீஷ்.அவனுக்கு கோபம் வந்தால் ஆத்திரத்தில் உதிர்க்கும் முதல் சொல் “நாறத் தெவடியா” தான்.பால் மற்றும் திணை பேதங்களின்றி ஆண்கள்,பெண்கள்,மிருகங்கள்,பட்சிகள் என எல்லோருமே அல்லது யாவுமே தெவடியாவாக இருக்கக்கூடிய சாத்தியங்களை பலமாக நிறுவும் ஆற்றல் அவனுக்கு இருக்கிறது.அதிலும் அவன் தெவடியா என்று சொல்வதை காதுக் குளிர கேட்பதே ஒரு அற்புதமான ஆன்மீக அனுபவம். ராகமெடுத்து தெவடிய்ய்யாஆஆஆ என்று அவன் திட்டும்போது சரஸ்வதியே அவன் நாக்கில்தான் குடியிருக்கிறார் என்று நினைக்க தோன்றும்.

இவனிடம் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு வார்த்தையில் மட்டும் திட்டிவிட்டு போவதென்கிற பேச்சே அவன் வழக்கில் கிடையாது.திட்ட ஆரம்பித்தான் என்றால் மடையில் இருந்து நீர் கொட்டுவது மாதிரி நீரின் போக்கில் நாம் அலைவுற வேண்டியதுதான். “ஊர் மேயப்போன நாறத் தெவடியா கிறுக்குக்கூதி” என தொடங்கி இறுதியில் “நாலு வாட்டி வந்துட்டு போடா” என்று அவன் அர்ச்சனையை முடிப்பதற்குள் நமக்கு மூச்சிரைத்து வாயில் நுரைத் தள்ளிவிடும்.அநாயசமான மொழிப் புலமையும் உண்டு என்பதால் வார்த்தை பற்றாக்குறையே இல்லாமல் புதுப்புது வார்த்தைகளால் திட்டுவான். கவித்துவமான சொல்லாடலும் உண்டு. லவடேகபால் என்பது லவடா முண்டை என்றும் திருட்டு முண்டை என்பது திருட்டு கபால் என்றும் உருமாற்றம் அடையும். கெட்டவார்த்தைகளை கையாள்வதற்கான ரசவாதத்தை எங்கேயாவது படித்தானா என்று தெரியவில்லை.

அதீத கோபத்திற்கும் சந்தோஷத்திற்கும்தான் கெட்ட வார்த்தைகள் பேசவேண்டும் என்பதில்லை. வெகு சாதாரணமாக பேசும்போதே கெட்ட வார்த்தைகள் பிற வார்த்தைகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. பஃப்ஸுக்கு பத்து ரூபாய் கொடு மச்சான் என்றால் ம்ஹீம்.. ஊம்புறியா மச்சான் என்றுதான் பதில் சொல்வான் ராஜேஷ்.உண்மையில் அவன் சொல்வதை கேட்கும்போது அது கெட்ட வார்த்தை மாதிரியே இருக்காது. பர்ஸ வீட்ல வச்சிட்டேன் மச்சான் என்று சொல்லும் தொனியில்தான் இருக்கும்.

வேற யாராவது கேட்டால் வெட்டுக் குத்தே ஆகும் வகை கெட்ட வார்த்தைகள் எல்லாம் பசங்களிடையே பிரயோகமாகும்போது மட்டும் தங்கள் உண்மை பொருளை இழந்து பயங்கர சிரிப்பாக மாறிவிடுகின்றன. இதனாலேயே ஒரு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் இருக்கும்போதும் ஏதாவது ஏடாகூடமாக உளறி வைக்க அதிகம் வாய்ப்பு உண்டாகிவிடுகிறது. அன்றைக்கு அப்படித்தான் வீட்டிற்கு சித்தப்பா வந்திருந்தார். வந்தவர் அவர் பாட்டிற்கு அமைதியாய் போயிருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னிடம் படிப்பு பற்றி விசாரனை கேள்விகள் கேட்டு ஒழுங்காக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்க ஆரம்பித்துவிட்டார். அந்த மயிரு புண்டையெல்லாம் எங்களுக்கு தெரியும் என்று வார்த்தைகள் நுனிநாக்கு வரை வந்துவிட்டன.நல்லவேளை சித்தாப்பாவிற்கு ராகு இல்லாதததால் தப்பித்தார். இல்லையென்றால் தன் வாழ்நாளின் ஆகச் சிறந்த மொக்கையை என்னிடம் வாங்கும் துர்பாக்கியத்தை அடைந்திருப்பார்.

சந்தோஷ் என்றொரு நண்பன் இருக்கிறான்.தர்மபுரி பக்கத்து ஊரை சேர்ந்தவன். அவன் தான் எனக்கு கண்டாரவொளி என்கிற வார்த்தையை அறிமுகம் செய்தவன். தினேஷ் சார் என்னவோ சொன்னதற்கு – என்ன சொல்லியிருக்க போகிறார் ரெக்கார்ட் எழுது என்றிருப்பார் – அந்த கண்டாரவொளி சொல்லுவானாமாம் நான் அந்த கூதி மயிரை கேக்கனுமாம் என்று என்னிடம் வந்து கோபமாக பேசினான். எனக்கு முகம் சட்டென்று பிரகாசமாகிவிட்டது.புதிதாய் ஒரு கெட்ட வார்த்தை என்றதும் மனதுக்குள் ஜிவ்வென்றிருந்தது.அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம்கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. பொருள் தெரிந்து என்ன இலக்கிய மயிரா எழுதாப் போகிறோம்? தொடர்ந்து நான் அதை என் பேச்சு மொழியில் உபயோகப்படுத்த அப்படியே அது என் நண்பர்களிடையே பரவி பெரும்பாலானவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. (கெட்ட விஷயங்கள் தான் என்றில்லை.கெட்ட வார்த்தைகளும்கூட எளிதில் பரவிவிடும்).

ஒருநாள் காலையில் வெங்கட் அதிசயமாக சட்டை கசங்கியபடி கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். படு வேகமாய் என்னை நோக்கி வந்தவன், ஓத்தா புண்டை அந்த கண்டாரவொளி புண்டைக்கு என்னடா அர்த்தம் என்று கர்ஜித்தான்.அப்பொழுதுதான் கவனித்தேன் வெங்கட்டுக்கு ஒரு பக்கம் கன்னம் பழுத்திருந்தது.பேருந்தில் வரும்போது யாரோ ஒருத்தன் இவன் காலை மிதித்து விட்டிருக்கிறான். இவன் போனால் போகிறதென்று பொத்திக் கொண்டிருந்திருக்கலாம்.ஆனால் விதியை நாம் என்ன பண்ண முடியும்? கண்டாரவொளி கண்ணையென்ன கழுத்துலயா வச்சிருக்க (இதில் மோனை எழவு வேறு) என்று எகிறியிருக்கான். அவ்வளவுதான், செவில் திரும்பிவிட்டது. கன்னத்தில் கை வைத்து உட்காந்திருந்தவனை பார்க்கவே பரிதாபமாகத்தான் இருக்கிறது என்றாலும் ஒரு வலுவான கெட்ட வார்த்தையை கற்றுக் கொண்டதில் சின்னதாக நமட்டு சந்தோஷமும் மனதிற்குள் எட்டிப் பார்க்கிறது.

சமயங்களில் சமூக மேன்மைக் கருதி கெட்ட வார்த்தையே பேசக்கூடாது என்று சபதமெல்லாம் எடுப்பேன். ஆனால் அப்பொழுதுதான் தர்ம சங்கடங்களாய் வந்து சேரும். அப்புறம் அதிகமான கெட்ட வார்த்தைகளை பேச நேர்ந்துவிடும். அப்படியுமொரு நாள் விடாமல் முயன்று பார்த்துவிடுவது என்று முடிவு பண்ணி அரவிந்திடம் பந்தயம் வைத்தேன்,நாள் முழுக்க கெட்ட வார்த்தைகள் பேசு போவதில்லையென.என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை என்கிற அளவிற்கு ஒரு கெட்ட வார்த்தைக் கூட பேசாமல் முக்கால்வாசி பொழுதை கழித்து விட்டிருந்தேன்.கெட்ட வார்த்தையே பேசாமல் சாந்தசொரூபியாக உருக்கொண்டபோது ஒரு கை முறிந்தாற்போல்தான் இருந்தது.என்றாலும் மனம் தளராதிருந்தேன். கடைசியில் பந்தயம் முடிகிற நொடியில் ஆனந்தம் முற்றிப் போக “பார்த்தலே அசிங்கமாவே பேசலை என் புளுத்தி” என்று வசனம் பேசித் தொலைத்துவிட்டேன்.அன்றைக்குப் பிறகு இது மாதிரி எந்த விபரீத பந்தயங்கள் பக்கமும் மறந்தும் தலை வைப்பதில்லை.

வந்ததிலிருந்தே கவனித்துக் கொண்டுதானிருந்தேன்.ஜகதீஷ் ஒரு மாதிரி சோகமாகவே இருந்தான். என்னக் காரணமென்று தெரியவில்லை. அவனை கேட்பதற்கும் என்னவோ போலிருந்தது. அப்புறம் ராஜேஷ் வந்து விஷயத்தை சொன்னான்.அவன் காதலித்த யாஸ்மினை வேற துறையை சேர்ந்த பையன் எவனோ உஷார் செய்துவிட்டானாம்.இத்தனைக்கும் உஷார் செய்தவன் ஜகதீஷுடன் ஒரே பள்ளியில்தான் படித்திருக்கிறான். கவிழ்ந்த கப்பலோடு சேர்ந்து தானும் மூழ்குகிற மாதிரியான முக பாவனையிலிருந்த ஜகதீஷை பார்க்கவே ரொம்பவும் பாவமாய் இருந்தது. சரி அவனை சமாதானம் செய்வோம் என்று பிரயாசைப்பட்டு நானும் முகத்தை எதையோ பறிகொடுத்தவன் மாதிரி வைத்துக் கொண்டு அவனருகே சென்றேன்.ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டேனே தவிர என்ன சொல்லி அவனை ஆற்றுப்படுத்துவதென என ஒரு வழியும் தெரிந்தபாடில்லை.அவனோ எழவு செய்தி கேட்டவன் மாதிரி அதிர்ந்து போய் அசையாமல் உட்கார்ந்திருக்கிறான்.

அப்பொழுதுதான் வழக்கம்போல் எங்கிருந்தோ தாவிக் குதித்து வந்து சேர்ந்தான் அரவிந்த். செம கோபமான கண்களோடு ஜகதீஷிடம் சென்று மச்சான் எந்த பொட்ட பையனோ உன் ஆளை ஓத்துட்டானாமேடா என்று ஆவசேமாக பேசினான். எப்பொழுதுமே அரவிந்த் இப்படி ஓத்துட்டான் வகை வார்த்தைகளை சேர்த்துக் கொண்டுதான் பேசுவான் என்றாலும் இந்த இடத்தில் அவன் அதை பிரயோகித்திருக்க வேண்டாம். பின்ன,காதலியை வேற ஒருத்தன் மடக்கிவிட்ட சோகத்தில் இருப்பவனிடம் போய் உன் ஆளை எவனோ ஓத்துவிட்டானாமே என்று கேட்டால் ஆத்திரம் தலைக்கேறாது? ஜகதீஷுக்கு ஏகத்திற்கும் கோபம் ஏறியது.

அரவிந்தின் சட்டையை பிடித்து பளாரென்று ஒரு அறை விட்டான். அரவிந்திற்கு என்ன ஏதென்றே புரியாமல் இருந்திருக்கவேண்டும்.சில நொடிகளுக்கு பேய் முழி விழித்துவிட்டு சட்டென்று வலியை உணர்ந்தவனாய் ஜகதீஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். பதிலுக்கு அவன் மறுபடியும் இவனை அடிக்க, இவன் திரும்பவும் அவனை அடிக்க என இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட ஆரம்பித்தார்கள்.இவையெல்லாம் நான் சூழலை கிரகிப்பதற்குள்ளாகவே கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டிருந்தன.அப்புறம் பயங்கரமாக பாடுப்பட்டு ஒரு வழியாக அவர்கள் இருவரையும் விலக்கி பிரிப்பதற்குள் போதும் போதுமென்றாகிப் போனது.

ஜகதீஷை தனியே விட்டுவிட்டு அரவிந்தை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தேன். அரவிந்த் செம காண்டில் இருந்தான்.ஆறுதல் சொல்லப் போன என்னை ஏன் அவன் அடிக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாய் கேட்டான்.நான் பொறுமையாக அவன் சொன்ன வார்த்தையின் நேரடி அர்த்தத்தை விளக்க ஆரம்பித்தேன். அவனுடைய வாழ்நாளில் முதல்முறையாக ஓத்துட்டான் என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தையே அப்பொழுதுதான் உணர்கிறவன் போல் சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தான்.அவனுள் குற்றவுணர்ச்சி எழுந்திருக்க வேண்டும். மச்சான் நான் போய் அவன்கிட்ட சாரி கேக்குறேன்டா என்றபடி என்னையும் இழுத்துக் கொண்டு ஜகதீஷை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.இப்பொழுது வேண்டாம் கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்பொழுதே மன்னிப்பு கேட்டால்தான் ஆனது என்கிற வேகத்தில் அவன் செயல்பட்டான்.

ஜகதீஷிடம் இன்னமும் கோபம் வற்றியிருக்கவில்லை.நாங்கள் வருவதைப் பார்த்ததும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். நான் மெதுவாக அரவிந்திடம் மச்சான் வாயை அடக்கி பேசு என்று எச்சரிக்கை செய்து,அவர்களிடமிருந்து சிறிது இடைவெளிவிட்டு நகர்ந்து நின்றுக் கொண்டேன்.

ஜகதீஷின் கைகளை ஆதுரமாக பிடித்துக் கொண்டு அரவிந்த் பேச ஆரம்பித்தான். “மச்சான் சத்தியமா நான் வெளயாட்டுக்கு பேசலைடா..கலாய்க்கனும்னுந் எதுவும் சொல்லலை பார்த்துக்க… உனக்காக பேசனும்னுதான்டா வந்தேன்.செம கடுப்புலதான் அந்த வார்த்தை எனக்கே தெரியாம வாயில இருந்து வந்துடுச்சு.அதுவும் உனக்காகத்தான்டா… த்தா ஏதோவொரு தெவடியா பையன் உன் ஆளை ஓத்துட்டான்னதும் வெறியாடுச்சு மச்சான்”

கெட்டது குடியென்று நான் தலையில் அடித்துக் கொண்டேன். மறுபடியும் அந்த கிறுக்குக்கூ அரவிந்திற்கு தான் என்ன சொல்கிறோம் என்பதே உரைக்கவில்லை.திரும்பவும் சண்டை வரப்போகிறது என்று பயந்து நான் என்னையே ஆய்த்தப் படுத்திக் கொண்டேன். அடித்துக் கொண்டார்கள் என்றால் பிரித்துவிட தயார் நிலையில் இருக்க வேண்டும் இல்லையா?

ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. மாறாக ஜகதீஷ் தழுதழுத்த குரலில்,”ஆமாம் மச்சான் அந்த தெவடியா பையன் அவளை ஓத்துட்டு போய்ட்டான்டா..”என்றபடி அரவிந்தை இறுக கட்டிபிடித்துக் கொண்டான். அவனது கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *