கெட்டாலும் மேன் மக்கள்

 

மனித உடல்களாலும்,மண்டையை உடைக்கும் சத்தங்களாலும்ஆன ஒரு மாபெரும் மலைப்பாம்பு மாதிரி இருந்த அந்த தெருவிலிருந்து ஒரு வழியாக வெளியே வந்தோம்.

“சே! மனுஷன் வருவானா இந்த தெருவுக்கு? என்ன கூட்டம், என்ன கூட்டம்!”

ராம் யுத்தகளத்திலிருந்து வந்தவர் போல இருந்தார் . நானும் அதை விட பயங்கரமான தோற்றத்தில்தான் இருந்திருப்பேன் என்று தோன்றியது.,ஆனாலும் அதை நம்ப விரும்பவில்லை.

“வராங்களே!” என்றேன்.

“என்ன! திரும்பி ஷாப்பிங் வருவேன்கிறாயா?” பல்லைக் கடித்தார்.

“இல்ல, இல்ல, எப்படித்தான் வராங்களோன்னு உங்களோடு சேந்து நானும் ஆச்சரியப் படறேன்”.

“நான் ஆச்சரியப் படலை, எரிச்சல் படறேன்”.

“Ok ok I stand corrected”.

“சரி சரி சீக்கிரம் வா!நம்ம பிரகஸ்பதி காரை ஊருக்கு வெளியிலேயே நிறுத்தி இருக்கப் போறான். அவனுக்கு உலகமே காலியா இருந்தாலும் பார்க்கிங்கே கிடைக்காது, இந்த இடத்திலே இன்னும் விசேஷம், எங்கே இருக்கானோ”.

நீங்க ஊகித்தது சரிதான் .இவர் பிரகஸ்பதி என்று குறிப்பிட்டது,எங்கள் டிரைவரைத்தான். செல்ஃபோனை உபயோகித்து,பல விதமான மொழிகளில் ,பல விதமான ஸ்தாயிகளில்பேசி, வாய்க்கு உள்ளேயும் ,வெளியேயும் முணுமுணுத்து அவன்இருக்கும் இடத்தை ஒரு வகையாக ஊகித்து ,அப்போதும் திக்திக்தான், சரியாகத்தான் சொன்னானா என்று.ஒரு அரை கிலோமீட்டர் நடந்து ஒரு வழியாகவந்து சேர்ந்தோம்.

நல்ல வேளை ! உலக அதிசயமாக கார் பார்க்கிங் அவ்வளவு நெரிசலாக இல்லை.

“அம்மா,அம்மா ஹேர் பின் வாங்கிங்கம்மா”.

ஒரு ஏழு ,எட்டு வயது பையன்,வெளி மாநிலத்திலிருந்து, அந்த மாநகரத்துக்கு புலம் பெயர்ந்த,குடும்பத்தை சேர்ந்தவன் எனத்தோன்றியது. அழுக்கு படிந்த தங்கச் சிலை மாதிரி இருந்தான் .பெரிய கண்களும்,நெற்றியில் விழும் கற்றை முடியும், சின்ன ரோஜா இதழுமாய்.

“வேண்டாம் பா!என் தலைக்கெல்லாம் ஹேர் பின் சரி வராது”.

“ப்ளீஸ் ! ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணாவது வாங்குங்கம்மா”.

“இல்லப்பா எனக்கு உபயோகப்படாது”.

இவர் கவனம் டிரைவரோடு பேசுவதிலும்,வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை அடுக்குவதிலும் இருந்ததால், இதை கவனிக்கவில்லை.

“ஒண்ணேஒண்ணு, ஒண்ணே ஒண்ணும்மா”.

சுற்றிச்சுற்றி வந்தான்.

காருக்குள் உட்கார்ந்தவாறே, ” விட மாட்டேங்கறயே! சரி! பின்னை நீயே வச்சுக்கோ, எனக்கு வேணாம், இந்தா இந்த அஞ்சு ரூபாய எடுத்துக்கோ!”

“நீங்க சும்மா கொடுக்கற காசு ஒண்ணும் எனக்கு வேணாம்” மென்மையாக ஆனால் அழுத்தமாய் அவன் குரல்.

சடக்கென்று நிமிர்ந்தேன். ஒன்றை ஒன்று விழுங்கும் பாம்புகளாய் எங்கள் பார்வைகள். அவன் கண்களில் ஒரு வலி, ஒரு கோபம், ஒரு கேள்வி, ஒரு சவால். அவன் ஏழ்மை அவனை பிச்சைக்காரனாக்க தயங்காது என்று என்னை நினைக்கத்தூண்டியது எது?வாழ்க்கையின் சௌகரியமான தளங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே இலட்சிய வாத நடைமுறை சாத்தியம் என்று நான் ஏன் நினைத்தேன்?.

அன்று ஈசன் முதுகில் பட்ட அடி பொய், இன்று என் முதுகில் விழுவது மெய் என்பது போல, என்னுள் மின்னலாய் ஒரு வலி கிளை பிரிந்து, உடலெங்கும் எரிந்தது.

“ஸாரி! எனக்கு ஒரு டஜன் ஹேர் பின் கொடு! என்ன விலை?”

” 10 ரூபாய் ,அம்மா!”

பணத்தை எடுத்துக் கொண்டே, ” உன் பேர் என்ன?”.

“லக்ஷ்மண்”

“பரத்தும், சத்ருகன்னும், வீட்ல இருக்காங்களா?”.

“ஐய்! உங்களுக்கு எப்படி தெரியும்?” முகம் முழுக்க கண்ணாக, சிரிப்பாக மலரந்தான். அந்த நிமிஷத்தில், அவன் அத்தனை நேரமாக அணிந்திருந்த பெரிய மனித முகமூடியை கழட்டி விட்டு மீண்டும் குழந்தையானான்.

நான் “அதான் மாஜிக்”, கண்ணைச் சிமிட்டிச் சிரித்தேன்.

“ராம் எங்கே?”.

திருப்பி அந்த கண்ணும், உதடும் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பால் ஒளியிட்டான்.

“அவன் அந்த சைடில விக்க போயிருக்கான்”.

“நேரம் ஆகலை,வீட்டுக்குப்போக?”.

“இதோ, அவனோட போக போறேன்” குதித்துக் கொண்டே இருட்டில் ஓடி மறைந்தான்.

“ரொம்ப தாங்ஸ்”

இருட்டிற்குள் தூரத்தில் குரல் தேய்ந்து கரைந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த ப்ரசித்தி பெற்ற கோவிலின் அவ்வளவாக ப்ராதான்யமாக இல்லாத கோபுர வாசல் அருகே பஸ் எங்களை இறக்கி விட்டு சென்றது.கோவில்களுக்கு உரித்தான கடைகள் எதுவும் இல்லாமல் ஒரு பழைய இரும்பு கடை,ஜெராக்ஸ் கடை,எலக்டிரிகல் சாமன்கள் கடை, ஸ்டேஷனரி கடை என்று பல பட்டரையாக ...
மேலும் கதையை படிக்க...
என் அம்மா ரொம்ப நன்றாக சமைப்பாள் . அம்மா செய்த ரவா தோசை , அடை மாதிரி நான் எங்கேயும் எப்போதும் சாப்பிட்டது இல்லை என்று சொன்னால் பொய்யோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது எங்களின்அபிப்ராயம் மட்டும் இல்லை, எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களைப் பற்றின ஆவணப் படம் என்று ஞாபகம். கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து ...
மேலும் கதையை படிக்க...
சிதம்பரம்
என்பும் உரியர் பிறர்க்கு
சக்ர வியூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)