கூல வாணிகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 6,883 
 

பூஞ்சையான தேகம் அவனுக்கு. ராஜ்வீர் என்ற குலப்பெயர் கூடவே ஒட்டிக் கொண்டாலும் சேட்டு என்றுதான் அவன் பெட்டிக்கடைக்கு வரும் அனைவராலும் அழைக்கப்பட்டான். குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து பஞ்சம் பிழைக்க இந்த ஊருக்கு வந்து வேரூன்றி விருட்சமான பல வடகத்திகாரர்கள் மத்தியில் நரேஷ்ராஜ்வீர் மட்டும் இன்னமும் பஞ்சத்தில் அடிபட்டவனைப் போலவே இருக்கிறான்.

செவ்வாய்ப்பேட்டையின் விளிம்பிலுள்ள ஒரு பெரியவணிக வளாகத்தின் வடகிழக்கு மூலையில் பத்துக்கு ஏழடி என்ற விஸ்தீரணத்தில் அவன் பெட்டிக்கடை. எண்ணெய், கிரீஸ் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பழைய சைக்கிளில் இரண்டு பெரிய கித்தான் பைகளில் தினமும் காலை பத்துமணிக்கு சரக்குகளுடன் வருவான். சிகரெட் பெட்டிகள், பாண் வகைகள், ஷாம்பூ பாக்கட்டுகள், கார,இனிப்பு வகைகள், கொசுவர்த்திசுருள், மிட்டாய், என அதிக பளுவுடன்கூடிய இரண்டு கித்தான் பைகளை முன்னால் உள்ள ஹாண்டில்பாரில் தொங்கவிட்டுக் கொண்டு, கெண்டைக்கால்கள் வலிக்க கிச்சிப்பாளயத்திலிருந்து செவ்வாய்ப்பேட்டை வரை சைக்கிள் மிதித்துக் கொண்டு வருவான்.

வளாகம் இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளது. முதல்பகுதியில் பெரிய பெரிய ஷோரூம்கள் .பிறகு ஒரு சிறிய நடை. பின்புறத்திலுள்ள பகுதியில் முதல்பகுதிக்கு இணையாகக் கடைகள் .நரேஷின் கடை இரண்டாம்கட்டில் அமைந்திருந்தது. ரோட்டிலிருந்து உள்ளடங்கிய கடை என்பதால் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை நிறைய இருக்கும். இதுபோன்ற பெட்டிக்கடைகளின் ஈசான மூலைரகசியம் அதன் உள்ளடங்கிய அமைப்பாக இருக்குமோ?

மிட்டாய் என்றால் பலதினுசு மிட்டாய். தூத்பேடா எனப்படும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளே ஏழெட்டு இருக்கும்.” இது நல்லா இருக்கும் பைங்க் சார் “ என்று அவன் உண்ணக்கொடுக்கும் இனிப்புகள் நல்ல ருசியாக இருக்கும். இதுபோன்ற வடநாட்டினரின் இனிப்புவகைகளின் ருசி நம் நாக்கில் நிரந்தரமாகி பல வருஷங்கள் ஆகிவிட்டாலும் ராஜ்வீர் கொண்டுவரும் இனிப்பயுகளின் ருசியில் ஒரு அசல்தன்மை தெரியும்.

“ நான் ஒரு ஷோஆத்மி மட்டும்தான். என் பின்னாலே என் மொத்த குடும்பமும் ஒழைக்குது .என் பீவி, ரெண்டு தங்கச்சிங்க,பிதாஜி,மாதாஜி, சோட்டா பைய்யான்னு அல்லாரும் ராத்திரி பதினோருமணி வரை உழைச்சாத்தான் காலையில நான் இங்க வந்து சிரிச்சுகிட்டு மிட்டாய் விக்க முடியும். “ என்பான். பகல்நேர வெயிலின் கடுமையில் மேற்சட்டை கழற்றப்பட்டு வெள்ளைபனியனில் எண்ணும்விதமான நசிந்த மார்பெலும்புகள் வெளித்தெரிய நிற்கும் இவன் எப்படி தன்னை ஒரு ஷோபெர்சன் என்று சொல்லிக் கொள்கிறான் என்று ஆச்சரியப்படுவேன்.

“ இருபது வருஷமா எங்கூர் மண்ணில் இருக்கியே உன்னால் நல்லா தமிழ் பேச முடியாதா நரேஷ் ? “ என்பேன். அதற்கும் அவனுடைய ஷோ-பெர்சன் பிராண்ட் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பான். அந்தச் சிரிப்பில் கூட குஜராத் வாசனை அடிக்கும்.

“ பொறந்தது,இஸ்கூல் படிச்சது அல்லாம் குஜராத்தில குஜராத்தில. பீஸ் வயசுல குஜராத் வுட்டு பிதாஜிகூட பானிபூரி செய்ய இந்த ஊர் மேலே வந்தேன். இஸ்கூலு படிப்புதானே நாக்கு மேல வரும் ? மேரா பேட்டா அச்சா தமில் பேசுவான். அவன் இஸ்கூல் இங்கதானே படிக்கிறான் ? அதான். “

அனைத்துத் தகப்பன்மார்களின் கனிந்த கனவாய் நரேஷ்ராஜ்வீருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த ஊருக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவன். பெற்றோரின் பராமரிப்பு, இரண்டு தங்கைகளின் திருமணம்,பிள்ளைகளின் படிப்பு இவற்றிற்கு இந்தச் சின்னஞ்சிறு பெட்டிக்கடையிலிருந்து எவ்வளவுதான் அள்ள முடியும்? வெயிலிலும், மழையிலும் துருவேறிப்போன சைக்கிளைத் தவிர அவனிடம் சொத்து எதுவுமில்லை. அவ்வப்போது வாங்கும் கந்துக் கடனும் அதன் ராட்சஷ வட்டியும் அவனுடைய முகத்தில் கவலைரேகைகளை ஓடவிட்டபடி இருக்கும். ஷோ-பெர்சனின் செயற்கை புன்னகையைத் தவிர இயல்பான சிரிப்பை அவன் முகத்தில் பார்க்க முடியாது.

“ எப்பல்லாம் நீ வாய் விட்டு சிரிப்ப நரேஷ் ? “ என்பேன். அவன் வாயை அவ்வப்போது எனக்குக் கிண்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

“ ரெண்டு தபா பைங்க் சார். பெகலே தீவாளிக்கு. நாம நல்ல சொக்கா எடுத்துக்கிறோமோ இல்லியோ என் பசங்களுக்கு புதுசு எடுத்து கொடுப்பேன். புது கபடா வாங்கி கொடுக்குற அன்னிக்கு என் பேட்டி என் காலை கட்டிக்கிட்டு இஷ்டமா சிரிக்கும் பாருங்க அப்ப கித்னா ஷோக்கா இருக்கும் தெரியுமா? “

தூசி விழாமலே என் கண்கள் கலங்கும்.

“ இன்னொரு தபா எப்போ ? “ நான் விடாமல் கேட்பேன்.

“ தசரா சமயம் எங்க குஜராத்திக்காரங்க பூரா பேத்தையும் பாக்கிறப்ப . “ என்பான்.

நரேஷ்ராஜ்வீர் போன்றவர்கள் புலம்பெயர்ந்து தாங்கள் வசிக்கும் இடங்களில் சமாஜங்களும்,சங்கங்களும் அமைத்துக் கொள்வது பெரிய அதிசயமில்லைதான். ஆனால் மார்வாடி என்றும் சேட்டு என்றும் அறியப்படும் வடநாட்டினரின் எண்ணிக்கை எங்கள் ஊரில் சற்று அதிகம்தான். மரவள்ளிக் கிழங்கின் மாவு மொத்தமும் குஜராத், மகாராஷ்டிரப் பகுதிகளுக்கு அனுப்படுவது ஒரு காரணம். எங்கள் மண்ணில் தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகளுக்கும் வடநாட்டில் நல்ல சந்தை உள்ளதும் ஒரு காரணம். எனவே குஜராத்திக்காரர்களின் நவராத்திரி கொண்டாட்டங்கள் அமர்க்களமாக இருக்கும். ஐந்துரோடு பகுதியில் அவர்களுடைய பிரத்தியேக மண்டபத்தில் தாண்டியா ராஸ் எனப்படும் கோலாட்டம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் .சோலி,காக்ரா,சிற்றாடையில் பெண்களும், ஷெர்வாணி குர்தாவில் ஆண்களுமாய் மொத்த குஜராத்திகளும் கூடுவார்கள்.

“ தாண்டியா ராஸில் என்னை அடிச்சுக்க ஆளே இந்த ஊர் மேலே இல்லை.” என்றபோது அவன் கண்களில் புன்னகைமின்னல் ஒன்று ஓடி மறைந்தது..

“ நீ இந்த ஆட்டத்தில் நிபுணனா ? “ என்றேன்.

“ நிபுணன் நஹி. நல்லா ஆடுவேன். டான்ஸ் கலையாக இருப்பதற்கும் தொழிலாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கு பைங்க் சார். என்னுடைய தாண்டியா ராஸ் பரிசுத்தமானது. ஹிருதயம் மேலே இருந்து வருது. ஒன்றரைமணிநேரம் ஆடினாலும் டயர்ட் ஆக மாட்டேன். சிரிச்சுகிட்டே ஆடுவேன். நெறைய ப்ரேஸ் வாங்கியிருக்கிறேன். இந்த ஊர்லே எங்க குஜராத்தி ஜனங்களுக்கு செகரெட்டரி ஒருத்தர் இருக்காரு. மோதிலால்னு பேரு. ஆத்தூர் போற வழியிலே பெருசா குச்சி கிளங்குமாவு பாக்டரி வச்சிருக்காரே….. “ என்றான்.

“ சொல்லு சொல்லு மோதிலால் எங்க பேங்க் வாடிக்கையாளர்தான். “ என்று நான் குறுக்கிட்டேன்.

“ அவரு பையன் கிஷோர். என்வயசுதான் அவனுக்கும் . நாற்பத்திமூணு. ஷோக்கா இருப்பான். பெரிய பெரிய டான்ஸ் மாஸ்டர் கிட்டே அல்லாம் டான்ஸ் கத்துகிட்டு வந்திருக்கான். அவனால் கூட பூர்த்தியா என்னோட தாண்டியா ராஸ் ஆடமுடியாது.” “என்றான். அவன் அவ்வாறு சொல்லும்போது தாண்டியா ஆட்டத்தின் சிறப்பே விடாமல் ஆடுவதுதான் என்பது எனக்கு அப்பொழுது புரியவில்லை.

இனத்தோடு இனம் சேர்வதும் இழைவதும் இயற்கை. தடுக்க முடியாது.

காலியான இடங்களில் புது புது கடைகளும், நிறுவனங்களும் வரத் தொடங்கின.எங்கள் வங்கிக் கிளையையும் சேர்த்து மொத்தம் நான்கு வங்கிக்கிளைகள் படர்ந்தன. நவீன மோஸ்தர்களில் புதுப்புது நிறுவனங்கள் தங்கள் வெளித்தோற்றத்தால் வணிக வளாகத்தை மிரட்டிக் கொண்டிருந்தது. இரண்டு நிதிநிறுவனங்கள், ஒரு பங்கு பரிவர்த்தன கடை,காலணிக் கடை, இரண்டு மருந்துக் கடைகள் என்று புதிது புதிதாக கடைகள் முளைத்தாலும் மொத்த வளாகத்திற்கு நரேஷ் ராஜ்வீரின் பீடாக்கடை ஒன்றுதான் ஒரே பெட்டிக்கடை. எனவே மொத்தகும்பலும் அவன் கடையில் கூடி வளாகத்தின் இரண்டாம் கட்டை புகைமண்டலமாக மாற்றிக் கொண்டிருந்தன.

“ உன் கடைக்குவந்து ரெண்டு நிமிஷம் நின்னா போதும் சிகரட் கூட பிடிக்க வேணாம் நுரையீரல் பாழாப் போயிடும்.” என்பேன். நரேன் சிரிப்பான்.

தசரா பண்டிகையின்போது பத்து தினங்களிலும் ஓரிரு முறைதான் நரேஷ்ராஜ்வீரைப் பார்க்கமுடிந்தது. அவனுடைய வயசான தகப்பனார்தான் கடையைத் திறந்து வியாபாரம் செய்தார். சிலநாட்கள் வரவே மாட்டார். எங்களுக்கு சரஸ்வதிபூஜை,விஜயதசமி என இருதினம் வங்கி விடுப்பு உண்டு. இம்முறை ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்துகொண்டதால் தொடர்ந்து மூன்று தினங்கள் விடுப்பு. திடீரென ஒருநாள் ராஜ்வீர் முளைத்தான். “ பைங்க் சார். மூணுநாள் லீவுதானே விஜய்தஸ்மிக்கு குஜராத்தி கல்யாணமண்டபம் மேலே தாண்டியாராஸ் பார்க்க வாங்க. “ என்று அழைப்பு விடுத்தான். நானும் மறுக்கவில்லை.

தாண்டியா ஆட்டத்தின் அரங்கு மண்டபத்தின் நடுக்கூடத்தில் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்தது.. குஜராத்தைச் சேர்ந்த ஆண் பெண் இருபாலரும் தங்களது பிரத்தியேக வடநாட்டு உடைகளில் ஒன்றரை அடி நீளத்தில் பலவித வர்ணம் பூசப்பட்தும் ஜிகினா அலங்காரங்களுடனும் கூடிய மெல்லிய மூங்கில்கோல்களுடன் சுழன்று சுழன்று ஆடியவண்ணம் இருந்தனர்.பாடலின் தாளம் விறுவிறுப்புடன் மிரட்டிக் கொண்டிருந்தது. மேளத்தின் உச்சகட்ட ஒலி அரங்கை அதிரச் செய்துகொண்டிருந்தது. வடக்கிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடகர்கள் தாளத்திற்கேற்ப பாவங்களையும், குரலையும் ஏற்றி இறக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். ஓர் ஒட்டுமொத்த உற்சாகம் அனைவரிடமும் தொற்றிக் கொண்டதுபோல தெரிந்தது. வேடிக்கை பார்ப்பவர்களையும் ஆட வைக்கும் சூழல் இருந்தாலும், அந்த நடனத்திற்கென்று ஒரு தனி இலக்கணம் கால் அசைவுகளிலும், அடைவுகளிலும் அவ்வளவு எளிதாக ஆடக்கூடிய நடனம் அதுவல்ல என்பதை கூறிக் கொண்டிருந்தது.நேரம் செல்ல செல்ல பாடலின் வேகமும் சுழற்சியும் அதிகரித்தன. பெரும்பாலவர்களால் தொடர்ந்து ஆட முடியாமல் போனது. தாளம் லயம் மாறாமல் ஆடுவதோடு சக்தி குறையாமல் இறுதிவரை ஆடுவது என்பது தாண்டியா ஆட்டவிதிகளில் ஒன்றாக இருந்தது.

நரேஷ்ராஜ்வீர் மிகப்பிரமாதமாக ஆடிக்கொண்டிருந்தான். அவனுடன் ஆடிய பலரும் அவனுடைய இடைவிடாத ஆட்டத்தின் வேகத்தைப் பார்த்து வியந்து அவனுக்கு ஒரு சலாம் செய்துவிட்டு விலகியவண்ணம் இருந்தனர். இறுதிவரை நரேஷ் முகத்தில் இருந்த புன்னகை மாறவே இல்லை.கோலாட்டத்தின் அசைவுக்கும், கால்களின் சுழற்சிக்கும் கண்களுக்குப் புலப்படாத இயைபு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. கிஷோர்லால் மட்டும்தான் தனது பருமனான உடலையும் மீறி ராஜ்வீரின் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தான். இருவர் உடலிலும் வியர்வை ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இருவரது முகத்திலும் குங்குமம் வியர்வையில் நனைந்து சிவப்பு ரேகைகலாக நெற்றியில் பரவிக் கொண்டிருந்தன.மேற்சட்டைகள் வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தன. நரேஷின் முகத்தில் தன் இனம் சேரும் கர்வம் புன்னகை பூக்களாய் வெடித்து சிதறியது. இறுதிவரையில் அவனுடன் ஈடுகொடுக்க முடியாமல் கிஷோர்லால் விலகிக் கொள்ள இந்தமுறையும் சிறந்த ஆட்டக்காரனாக நரேஷ்ராஜ்வீரே அறிவிக்கப்பட்டான்.

“ பிரமாதம் நரேஷ் “ என்றேன் ஆட்டடம் முடிந்ததும். நரேஷ் அவனுடைய பிரத்தியேக சிரிப்புடன் என் அருகில் வந்தான். “ ஆவோ பைய்யா “ என்று கிஷோர்லாலை என் அருகில் அழைத்து அறிமுகப்படுத்தினான். கிஷோர்லால் உயரமும் பருமனுமாக கோதுமை நிறத்துடன் கண்களில் வியாபார வில்லத்தனம் மின்ன ஒரு ஹிந்தி ஹீரோ போல என்னை வணங்கினான்.

கிஷோரும் நரேஷும் குஜராத்திக்காரர்கள்தாம். ஆனால் உருவத்திலும், வனப்பிலும், சமூக அந்தஸ்திலும் எவ்வளவு பேதம் ? இனம், குழு குறித்த ஐயங்கள் எனக்குள் பெரிய ரகளையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

அதன்பிறகு இரண்டு முறை அந்தக் கிஷோர்லாலுடன் நரேஷ்ராஜ்வீரைப் பார்க்க நேரிட்டது.முதல்முறை கிஷோர்லாலுடன் ஒரு பெரிய காரில் நரேஷ் வந்து இறங்கினான். “ என்ன சேட்டு கார் வாங்கினதை சொல்லவே இல்லியே ? “ என்று கிண்டல் செய்தேன்.கிஷோர்லால் தான் தொடங்குவதற்கான பங்குபரிவர்த்தனக் கிளைக்கு அந்த வளாகத்தில் இடம் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான். இதுபோன்ற வணிக வளாகங்களில் வாடகைக்கு இடம் பிடிப்பது என்பது தனக்கு பெரியவிஷயமில்லை எனவும், ஒரு காசோலையை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் மொத்த வணிக வளாகத்தையும் தன்னால் வாங்கி விட முடியும் என்று பேசிய அவனுடைய த்வனி எனக்குப் பிடிக்கவில்லை. கூடவந்த நரேஷும் கிஷோர்லாலின் குடும்ப வியாபாரத்தின் பட்டியல் என்று ஒன்றை சமர்ப்பித்தான். சேகோ மாவு வியாபாரம், டைல்ஸ் வியாபாரம், மின்சாதனப் பொருட்களின் விற்பனை என்று கிஷோர்லாலின் மொத்தக் குடும்பமும் எங்கள் ஊரில் ஆழமாக வேர் ஊன்றியிருப்பது அவன் கொடுத்த பட்டியலிலிருந்து தெரியவந்தது.

இரண்டாவதுமுறை அவனை கிஷோருடன் பார்ப்பதற்கு முன்னர் கிஷோரை நான் அந்த வணிக வளாகத்தின் மேலாளரும், ஒரு சிவில் என்ஜினியரும்,வணிகவளாக சொந்தக்காரரான ஒரு அரசியல்வாதியின் கையாளுமான செந்திலுடன் பார்க்க நேரிட்டது. செந்திலை இவ்வளவு விவரித்தது போதும் அவனுடைய குணாதிசயங்களைக் கூற. ஒரு தேயிலைத் தோட்டத்து கண்காணியின் குணங்கள் நிறைந்தவன்.

“ மொத்த பில்டிங்கிலும் 16 க்குப் 16 சைஸ் ஹால் ரெண்டு பீடாக் கடைக்கு பக்கத்தில வருது. வாஸ்து பிரகாரம் என் கடை ஈசான மூலையில் இருக்கணும். ஆனா அந்த பான் ஷாப் ஈசான மூலையில் இருக்கு. பெரிய பேஜார். ட்வென்டிஃபோர் அவர்சும் சிகரெட் ஸ்மேல்லும், புகைய்ம் இருந்துச்சுன்னா என் கஸ்டமர்ஸ் ஃபீல் பண்ண மாட்டாங்க? செந்தில் நீ இன்னா பண்ணுவியோ தெரியாது அந்த பீடா கடையை தூக்கு. “ என செந்திலிடம் கிஷோர் ஆவேசமாகப் பேசிக் கொன்றயுந்ததை நான் கேட்க நேரிட்டேன்.

“ ஆனா பத்துக்கு ஏழு அளவுள்ள இடம் இந்த காம்ப்ளக்சில் வேற எங்கியும் இல்லை சேட். பாவம் நரேஷ் எங்கே போவான் ? “ என்ற செந்திலின் குரலில் நரேஷ்மேல் ஒரு போலி பரிதாபம் மட்டுமே தெரிந்தது.

“ போலோ பிபைக் சார். சோட்டா நரேன் கித்னா வாடகை தறானோ அதை போல டபுள் வாடகை இந்த கிஷோர்லால் தர்றான். எனக்கு அந்த நார்த் ஈஸ்ட் ஸ்பேஸ் வேணும்.” என்றான் அழுத்தமாக. செந்திலின் நரேஷ் மீதான பரிதாபத்திற்கு அர்த்தம் புரிந்தது.

அதன்பிறகே ஆட்டம் ஆரம்பமானது. நரேஷை கூப்பிட்டு கடையை எடுக்க சொன்னார்கள். நரேஷ் மறுத்தான். உரியமுறையில் பல ஆயிரங்கள் முன்பணமாகக் கொடுத்து பிராமிசரி நோட்டில் முறையாக ஒப்பந்தம் போட்டு வாடகைக்கு வந்திருப்பதால் தன்னால் கடையை மாற்றிக் கொள்ள முடியாது என்றான். அவனுடன் தர்மம் துணையாக நின்றது. சிலநாட்களில் அவன் கடையில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பான் முதலியவற்றை விற்பதாக சில அதிகாரிகளும் காவல்துறையினரும் மிரட்டிவிட்டு போனார்கள். ஒருநாள் அவன் கடைப்பொருட்கள் வெளிநடையில் வீசப்பட்டன. சில குண்டர்கள் நரேஷ் இல்லாத சமயம் அவன் தந்தையையும் சிறுபெண்ணையும் மிரட்டிவிட்டுச் சென்றனர். துர்நாற்றம் வீசும் செத்த நாய் ஒன்று அவன் கடைமுன்பாக முதல்நாள் இரவு வீசப்பட்டுக் கிடந்தது மறுநாள் வளாகமே நாறியது. அவன் கடைக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்திற்கும் முறையான காரணங்கள் சொல்லப்பட்டன.

அடுத்தமுறை நரேஷை கிஷோருடன் பார்த்தபோது இருவர்நடுவிலும் இணைத்துநின்ற நட்புப் பாலம் பாதியில் அறுந்து தொங்கிப் போயிருந்தது.பழைய ராஜ்கபூர் நடித்த கருப்பு வெள்ளை திரைப்படங்களில் வருவது போன்று நியாயம் சைக்கிளிலும், பணபலம் ஏ.ஸி காரிலும் எதிர்கொண்டன. நரேஷ்ராஜ்வீர் கிஷோர்லாலைப் பார்த்து பேசிய குஜராத்தி பாஷையின் ஒரு அட்சரம் கூட எனக்குப் புரியவில்லை. ஆனால் அதன் பாவங்களில் நரேஷின் உள்ளக்கிடக்கை தெளிவாகத் தெரிந்தது. ச்சீ போ என்ற வார்த்தைக்கு ஈடான ஒரு சொல்லை உச்சரித்தபோது இனி எந்த தாண்டியாராசிலும் நரேஷ்ராஜ்வீரை கிஷோர்லால் ஜெயிக்கமுடியாது என்பதுமட்டும் புரிந்தது.

வழக்கம் போல பணம் வென்றது. சூது கவ்வியதும் தர்மம் மண்ணைக் கவ்வியது.

இரண்டுவாரம் நரேஷ் கடைக்கு வரவில்லை. கடையில் உள்ள பொருட்களை எப்போது எடுத்து சென்றான் என்று தெரியவில்லை.இரண்டே வாரங்களில் அவன் கடையின் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டு கிஷோர்லால் துவங்கவிருக்கும் அதிநவீன பங்குபரிவர்த்தனை கடையுடன் இணைக்கப்பட்டது. நரேஷ் கடையின் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அவனைக் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. நானும் வங்கி அரையாண்டு கணக்கு வேலைப்பளுவில் மும்முரமாக இருந்துவிட்டேன்.

பத்துநாட்கள் கழிந்து இந்தக் கூத்தெல்லாம் நடந்துமுடிந்தபின்னர் ஒருநாள் ஆறுக்கு ஆறு அடி நிலமும் அகலுமும் , பத்தடி நீளமும்உள்ள இரும்புப்பெட்டி ஒன்று வளாகத்தின் முன்பு வந்து இறங்கியது. வளாகத்தின் இரண்டு மூலைகளிலும் தாராளமாக வெற்றிடம் இருந்தது. வலதுபக்கம் இருந்த வெற்றிடத்தில் வளாகத்தின் கடைகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இடப்பக்கம் இருந்த வெளி வெட்டவெளியாகவே இருந்தது. அந்த வெட்டவெளியில் பெட்டியை நிறுவினார்கள். உடன் நரேஷ்ராஜ்வீர் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். முழுவதும் மலிவுவிலை நீலவண்ணம் பூசப்பட்டிருந்த பெட்டி.சமன் செய்யப்படாத தரையில் பெட்டிக்கு அடியில் கற்களும் கட்டைகளும் அண்டக் கொடுக்கப்பட்டன. நரேஷ் ராஜ்வீர் போன்ற பூஞ்சையான தேகம் படைத்தவர்களால் மட்டும் உள்ளே நுழையக்கூடிய வகையில் ஒரு சிறு நுழைவுப்பகுதி பக்கவாட்டில் இருந்தது. வெயில் மழை இவற்றிற்கு பாதுகாப்பு அளிக்காத பெட்டி. அந்தப் பெட்டியில் அவனுடைய வழக்கமான கண்ணாடி சீசாக்களை அடுக்கி வைத்து நரேஷ்ராஜ்வீர் தனது வியாபாரத்தை தொடங்கினான். மன்னர்காலத்தில் மட்டுமில்லை இப்போதுகூட யானைக்கும் பானைக்கும் சரியானது.

“ சும்மா கடை வியாபாரம் பண்ணலே பைங்க் சார். மாசம் ஆயிரத்து இருநூறு ரூபாய் வாடகை தர்றான் ராஜ்வீர்.அம்பதாயிரம் ரூபா அட்வான்ஸ். அட்வான்ஸ் கொடுக்க வாங்கின கடனே இன்னும் அடையல. துரத்திட்டானுங்க. காரணம் கேட்டா இது சிகரெட் கடையாம். குட்கா விக்கிறேனாம். இந்தக் கடையில் வந்து கிஷோர்லால் பான் போட்டிருக்கான். சிகரெட் புடிச்சிருக்கான். அப்பல்லாம் இது சிகரெட் கடை இல்லியாமா ? “ என்றான்

நான் பக் என்று சிரித்து விட்டேன்.

“ க்யா சாப் ? ஏன் சிரிக்கிற ? “ என்றான்.

“ நீ இல்லியாமான்னு கேட்ட பாரு. அது முழுக்க முழுக்க சேலத்துக்காரர்களின் பேச்சு வழக்கு. ஊரு விட்டு நாடு விட்டு வந்த உனக்கு இந்த ஊரு பாஷை ஒட்டிகிச்சு பாரு” என்றேன்.

“ தண்ணி சோறு இல்லாம வவுத்துப் பொளப்புக்குன்னு வந்தோம். வறுமை கழுத்த புடிச்சு தள்ளிச்சு. ஒரு தபா ஊரு விட்டு வந்தாச்சு. போவுற இடம்தான் நம்ம இடம். அந்த மனுசங்கதான் நம்ம மனுசங்க.” என்றான்.

பழந்தமிழ்க் கிழவி ஔவையாரைப் பற்றி நரேஷ் ராஜ்வீர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“ அப்போ அந்தக் கிஷோர்லால் யாரு மனுசங்க? “ என்றேன்.

“ உனுக்கு எப்பவும் கிண்டல்தான் பைங்க் சார் “ என்றான் நரேஷ்.

பேங்க் என்ற வார்த்தையை ‘பைங்க் ‘ என உச்சரிக்கும்போது எழும் குஜராத்திக்காரகளின் உச்சரிப்பு த்வனியை அவனால் மாற்றிக் கொள்ள முடியாது என்பது மட்டும் புரிந்தது.

– அக்டோபர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *