கால்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 7,293 
 

பப்பு அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தவாறு பிறகால் நடந்தான். அரையிலிருந்து நழுவி விழும் களிசானை இழுத்துஇ இழுத்துப் பிடித்தான். நடந்துகொண்டே சிணுங்கிச் சிணுங்கி அழுதான். அழுகைச் சத்தம் அம்மாவிற்குக் கேட்கவில்லையோ என நினைத்து இடையிடையே சுருதியைக் கூட்டி அழுது காட்டினான்.

அம்மா பேசாமல் விறு விறு என நடந்தாள். அவளது தலையில் ஒரு பெட்டி இருந்தது. ஒரு கை பெட்டியைப் பிடித்திருந்தது. மறு கையை அடிக்கடி பின்னே அசைத்துஇ பப்புவை தன்னோடு சுறுக்காக வருமாறு அழைத்துக்கொண்டே சென்றாள்.

பப்புவுக்குச் சுறுக்காக நடக்க முடியவில்லை. கால்கள் பலமில்லாதவை போலிருந்தன. அம்மாவின் நடையைப் பிடிப்பதற்காக இடையிடையே மெல்ல ஓடினான். ஓடியபொழுது முழங்கால்களுக்குக் கீழ் தழும்பியது. சிணுக்கமெடுத்து அழுதான்.. இன்றைக்கு அழுது அடம்பிடித்தென்றாலும் சோறு சாப்பிட வேண்டுமென்று பப்பு தீர்மானித்துவிட்டான்.

சோற்றைக் கண்டு ரொம்ப நாளாயிற்று. பத்து நாட்களுக்கு மேலிருக்கும். தினமும் அவனுக்குச் சோறு சாப்பிடவேண்டும் போலிருக்கிறது. அந்திக்கு வந்து சோறு ஆக்கித் தரலாம்… என்றுதான் அம்மா எப்போதும் சொல்லுவாள். ஆனால்இ அம்மாவிற்கு சோலி முடிந்து வீட்டிற்கு வர இருட்டிவிடும்.  அப்புறம் சோறு கிடையாது. சோறு ஆக்க அரிசி இல்லை என்று சொல்லுவாள். அரிசி வாங்கச் சல்லி போதாது. சோற்றுக்குக் கறி ஆக்கணும். உப்புஇ புளிஇ கொச்சிக்காய்த் தூள்… இவற்றுக்கெல்லாம் கையிலுள்ளதைச் செலவு செய்தால் மறுநாள் வியாபாரத்துக்கு முதல் கிடையாது. வியாபாரம் முடிந்து வரும்பொழுது அம்மா பாண் வாங்கி வருவாள். பப்புவிற்கு ஒரு துண்டு…. அவளுக்கு ஒரு துண்டுஇ பிளேன் டீ! சரியாக வயிறு நிறையாமலே தூக்கத்துக்கும் போவான். அப்புறம்… தூக்கத்தில் பசிக்கும். சோறு சாப்பிடுவது போலக் கனவு வரும். உளத்தி… உளத்திப் படுப்பான். பசிஇ விடியப்புறமாகவே எழுப்பிவிடும். சிணுங்கத் தொடங்குவான். அம்மா பாணோ.. பணிசோ வேண்டிக் கொடுப்பாள். தினமும் இதே கதைதான். வயிறு நிரம்பாமல் அழுகிறது.

பசிக்கும்போது சோறு சாப்பிட்டால் எவ்வளவு சோக்காக இருக்கும்! மெத்தென அவிந்த சோற்றை அள்ளி வாயில் வைக்கும்பொழுதே பசி ஆறுவது போலிருக்கும். விருப்பமான கறியோடு குழைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியாக இருக்கும். பால் சொதியும் ஊற்றிப் பிசைந்து அள்ளி வாயில் போட்டுஇ விரல்களைச் சூப்பிச் சூப்பிச் சாப்பிட்டலாம்.

ஆனால்… இப்பொழுது பாண் கிடைத்தாலும் பப்பு சாப்பிடுவதற்கு தயாராகத்தான் இருந்தான். என்ன கிடைத்தாலும் சரி.. அரை வயிற்றை நிரப்பிவிட்டாலும் போதும்.

அம்மா நடந்து சந்தியை அண்மித்தாள். இரண்டு வீதிகள் புள்ளடி போலக் குறுக்கிட்டுச் செல்லும் சந்தி. வீதிகளிரண்டும் பல நகரங்களைத் தொடுப்பதால்… இது வாகனப் போக்குவரத்துக்கள்இ சன நடமாட்டம் அதிகமான இடம். புள்ளடியின் விரிகோணப் பகுதியில் பஸ் நிலையமும்இ எதிர்த்தாற்போல் மரக்கறிச்சந்தை… மீன்சந்தை ஆகியனவும் அமைந்திருக்கின்றன. வீதியின் மற்ற மருங்குகள் மூலை முடக்குகளெல்லாம்இ கடைகள்…. சேலைக்கடைஇ புத்தகக்கடைஇ தேநீர்க்கடைஇ சாப்பாட்டுக்கடைஇ பலசரக்குக்கடை… இப்படி எல்லாவிதமான கடைகளுடனும் அவள் தலையில் சுமந்து வந்த பெட்டிக்கடையும் போட்டி போடுகிறது.

பஸ் நிலையத்துக்கு அண்மையாகப் பெட்டியை இறக்கிவைத்தாள். சப்புப் பலகையில் செய்யப்பட்ட சதுரப்பெட்டி. நாலு மூலைகளிலும் நீட்டிக் கொண்டிருந்த ஓரடி நீளமான கால்களில் இப்போது ஒரு குட்டி மேசையைப்போல பெட்டி நின்றது. பெட்டியின் மூடியைத் திறந்துஇ வெற்றிலைச் சுருள்களையும்இ ஒரு சட்டியுடன் கச்சான் கடலைப் பையையும் வெளியே எடுத்தாள். வெற்றிலைச் சுருள்களைப் பெட்டியின் மேல் செய்யப்பட்டுள்ள இடுக்குகளில் அடுக்கிவிட்டு… கடலையை ஐம்பது சதம்இ ஒரு ரூபாய்க்குரிய கடதாசிச் சுருள்களில் நிறைத்து வைத்தாள். பின்னர் சிணுங்கிக்கொண்டிருக்கும் பப்புவைத் திரும்பிப் பார்த்தாள்.

பப்புவின் முகம்இ கழுவாத மூஞ்சியாட்டம் வாடிப்போயிருந்தது. உயிரியக்கம் இல்லாதவன்போல அனுங்கினான். அவனது கை களிசானைப் பிடித்துக்கொண்டிருந்தது. நல்ல அளவாகத் தைக்கப்பட்ட களிசான் பெரிதாகிய ரகசியம் அவளறியாததல்ல. இழுத்து அணைத்து அவன் முதுகைத் தடவினான்.

”இண்ணைக்கு எப்படியாச்சும் சோறு தின்னலாம்!”

அவன் பறித்து விலகினான்:

‘போ!….. நீ…. பொய்யி!”

பப்பு அடம்பிடிப்பதைக் கனிவோடு பார்த்தாள். இரக்கத்தைச் சிரிப்பாக வெளிக்காட்டினாள். திரும்பவும் இழுத்து அணைத்தாள்.

பப்பு அம்மாவின் முதுகிலே சாய்ந்துகொண்டு மறுபக்கமாகத் திரும்பி இருந்தான். இரவில் நுளம்பு கடித்துச் சொறிந்ததினால் ஏற்பட்ட நகக் காயங்களில் இலையான் மொய்த்தது. இலையான்களை அடித்தவாறு கடிபட்ட இடங்களைச் சொறிந்தான். இரத்தம் கசியச் சிணுங்கினான்.

அம்மா வழியை வழியைப் பார்த்தாள். ஒரு வழியுமில்லை. ஏதாவது வியாபாரம் நடந்தால்தான் பப்புவுக்குப் பாண் என்றாலும் வாங்கிக் கொடுக்கலாம். காலையில் கடலை விற்பனையாகாது. பத்துப் பதினொரு மணியாக வேண்டும். சந்தை நாட்களெனில் காலையில் வெற்றிலை விற்பனையாகும். இன்று சந்தை கூடாத நாள்… பணப்புளக்கம் இன்னும் இல்லை… என்ன செய்யலாம்?

மாணிக்கம் தனது காரைக் கொண்டுவந்து வழக்கமாக விடும் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான். சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டுஇ டிக்கியைத் திறந்து வாளியை வெளியே எடுத்தான். கிணற்றடிக்குப் போய் தண்ணீர் கொண்டுவந்து காரைக் கழுவத் தொடங்கினான்.

அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா?

இடைசுகம் அவசரத்துக்கு அவள் மாணிக்கத்திடம் கைமாறியிருக்கிறாள். அப்படி ஒன்றிரண்டு என வாங்கிஇ பத்துப் பதினைந்துக்கு மேலாகிவிட்ட கடனையே இன்னும் திருப்பியபாடில்லை. மேலும் மேலும் எப்படிக் கேட்பது என துணுக்குற்றவாறு இருந்துவிட்டு… எழுந்தாள். பப்புவும் எழுந்து அம்மாவுடன் போனான்.

‘மாணிக்கத் தம்பி…!” குரல் கொடுத்தாள்.

‘….. சல்லி…. ரெண்டு ரூபா கொடுக்கேலுமா?…. அந்திக்குத் திருப்பிடுவன்!”

மாணிக்கம் கார் கழுவுவதை விட்டு நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான்.

‘என்னணை…. பகிடி விடுறியே..?”

‘இல்ல தம்பி!…… பப்பு பசியில…. அழறான்… ஒரு வழியும் தோணலை….”

‘ஆச்சி! நானும் உன்னை மாதிரித்தானணை… நீ அந்தப் பெட்டியைக் கொண்டு வந்து வைச்சிட்டு நிக்கிற மாதிரித்தான் நான் இந்தக் காரைக் கொண்டுவந்து விட்டிட்டு நிக்கிறன்… இனி ஏதாவது சவாரி கொத்தினால்தான்… என்ர கையிலையும் காசு பிளங்கும். நீ நம்புறியோ தெரியாது… கையிலை ஒரு சதமும் இல்லை… காலமை பிள்ளையளின்ரை பாடு என்னவோ தெரியாது… நான் விட்டிட்டு வந்திட்டன்.”

‘இல்லை தம்பி…. எனக்குத் தெரியாமலா?…. என்ன செய்ய….. கடவுள் நம்மளை வருத்தணும்னு நெனைக்கிறார்.”

பப்பு ஏமாற்றத்துடன் அம்மாவைப் பார்த்தான். அம்மாவின் கண்கள் கலங்கியிருப்பதுபோல் தெரிந்தது. அம்மா அதைக் காட்டிக்கொள்ளாமல் மறுபக்கம் திரும்பினாள். பப்பு எட்டி அம்மாவின் முகத்தைப் பார்த்தான். கண்களிலிருந்து கண்ணீர் சொட்டிட்டு விழுந்தது.

அந்தக் கணத்தில் பப்புவுக்கும் நிஜமான அழுகை நெஞ்சிலிருந்து பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் அழவில்லை. நெஞ்சிலிருந்து கிளர்ந்துவந்த குமுறலை அடக்கினான்.

‘உன்ரை அப்பன் இருந்தார்னா….. இந்தக் கொடுமையில்லை….” என அம்மா அவனது கன்னத்தைத் தடவிக்கொடுத்தாள். அப்பொழுது குபுக்கென கண்ணீர் வழிந்து அம்மாவின் கையை நனைத்தது…

‘என்ன பப்பு அழறியா?”

அவன் பதில் பேசவில்லை. அப்பாவின் நினைவு பப்புவின் நெஞ்சை வந்து அடைத்துக்கொண்டது. அண்ணன்மார் நினைவில் வந்தார்கள்…

‘பப்பு…! பப்பநாதா!…..” என அப்பா செல்லம் பொழிய அழைப்பது இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது. வயல்வேலை ஒழிந்து ராவில் வீட்டுக்கு வரும் பொழுதுகளில் அவர் அவனையே அழைத்துக்கொண்டு வருவார். அவர் நடந்து வருவது கண்களுக்குள் தெரிகிறது. ஆனால் அவர் இனி அப்படி நிஜமாக வரமாட்டார்.

அப்பொழுது ஷபாவற்குளம்| என்னும் கிராமத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்பாவும்இ அம்மாவும்இ அண்ணன்மார் இருவரும் அங்கு ஒரு வயலில் வேலை செய்தார்கள். குடிசையும் அங்கே இருந்தது. மூணு வருடங்களுக்கு முன்னரென… பப்புவுக்கு நினைவிருக்கிறது. அவ்விடத்தைச் சுற்றி வளைத்த ஆமிக்காரர்கள் அண்ணன்மார் இருவரையும்… மற்ற இளைஞர்களோடு சேர்த்துக் கொண்டுபோனார்கள். அந்த இடியிலிருந்து மீள முதலே….. அடுத்த இடி… ஆறோ ஏழு மாதங்களுக்கு முன்னர்… வயல் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவையும் சுட்டுப் போட்டார்கள். அம்மா பப்புவையும் இழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடினாள். இரவோடு இரவாக… காடுகளுக்கூடாக ஓடிஇ பிரதான வீதிக்கு வந்துஇ காலையில் அவ்வீதியால் வந்த லொறிக்காரரிடம் கையெடுத்துக் கும்பிட்டு…. ஷகிளிநொச்சி| வந்து சேர்ந்தார்கள். அகதிகள் முகாம்! சில நாட்களிலேயே சாப்பாட்டுச் சாமான்களுக்காக அகதிகளுக்குக் கொடுத்த கூப்பன்துண்டை அரசாங்கம் நிறுத்தி…. பழைய இடங்களுக்குப் போகும்படி சொன்னது. ஆனால் உயிர் போனாலும் இனி அந்தப் பக்கம் போறதில்லை என அம்மா அவனை யாழ்ப்பாணப் பக்கம் கூட்டி வந்தாள். தொடர்ந்தும் அகதிகள் முகாமில் இருப்பதைவிடஇ நிரந்தரமாக ஏதாவது வழி பார்க்கவேண்டுமென ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினாள். ஏதாவது வேலை தேடலாம். அவ்வப்போதைக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும்.. ஆனால் வேலை கிடைக்கவில்லை. இப்படியே வாழ்க்கை பூராவும் சீவிக்கேலுமா…. என அம்மாஇ சவர்க்காரப் பெட்டியில் மேஜை செய்துஇ வெற்றிலை…. கடலை வியாபாரத்தை ஆரம்பித்தாள் – சொந்தக்கால்கள்.

‘என்ரை குஞ்சை… எப்படியாச்சும் காப்பாற்றுவன்..” அம்மா அடிக்கடி இப்படிச் சொல்லுவாள். அது இவனுக்கு ஒருவித தைரியத்தை… பயம் மறந்து ஆறுதலை ஏற்படுத்துவதைப் பப்பு நினைத்துப் பார்த்தான். நல்லகாலம்இ அன்றைக்கு அம்மா வயலுக்குப் போகவில்லை. போயிருந்தால் கால்களைப்போல இன்று தன்னைச் சுமந்துகொண்டிருக்கும் அம்மாவையும் இழந்திருப்பான்.

அம்மா இரண்டு கடலைச் சுருளை எடுத்து பப்புவிடம் கொடுத்தாள். அதைக் கையிலெடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

‘கடல…. கடல…”

காலை இயங்கத் தொடங்கிவிட்டது. மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள். ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகரித்தது. சைக்கிள்கள் இங்குமங்குமாகப் பறந்தன. பெற்றோல் விற்பவர்கள் வீதியோரத்தில் மேசையை வைத்துப் போத்தல்களில் பெற்றோலை நிரப்பி அடுக்கினார்கள்… கார்கள் ஓடத் தொடங்கின.

‘கடல…. கடல….”

பஸ்ஸிற்காக வந்து காத்துநிற்கும் பயணிகள்… வேலைக்குப் போகும் உத்தியோகத்தர்கள்இ பாடசாலைப் பிள்ளைகள்..

பப்புவின் கண்கள் அசையாது நிலைத்தன. அவ்விடத்திலேயே நின்றான். பாடசாலைப் பிள்ளைகளின் பளிச்செனும் உடைகள்! அழகாக அடுக்கப்பட்ட புத்தகங்கள்…. புத்தகப் பைகள்! நல்ல கறுப்புஇ வெள்ளைச் சப்பாத்துக்கள்!

ஸ்கூலுக்குப் போன நாட்கள் பப்புவுக்கு நினைவில் வந்தன. அப்பொழுது அவனது கால்களுக்கு ஒரு செருப்புத்தன்னும் இருக்கவில்லை. தொலைவிலுள்ள பாடசாலைக்கு ஏனைய சிறுவர்களுடன் காட்டுப் பாதைக@டாக நடந்து செல்வான். அவர்கள் ஏறிச்செல்ல பஸ் வராது. திரும்ப வரும்போது நடுவெய்யில்… ரோட்டுச் சூடு உள்ளங்கால்களை அள்ளும்.  ரோட்டு ஓரமாக உள்ள புற்களின்மேல் கால்களை வைத்து நிற்பான். எரிவு ஆறியதும் நடப்பான். அப்பொழுதெல்லாம்இ இப்படித் தனக்கும் சப்பாத்து இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று நினைத்தான்..

ஆனால் அதுஇ பரவாயில்லைப் போலிருந்தது. பப்புவுக்கு அப்போ அப்பா இருந்தார்இ சாப்பாட்டுப் பிரச்சினை என ஒன்றிருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. காலையில் எழுந்தால் சாப்பாடும் கிடைத்தது. ஸ்கூலுக்குப் போய் வந்தால் சாப்பாடு கிடைத்தது. விளையாடித் திரிந்துவிட்டு வந்தால் சாப்பாடு கிடைத்தது.

பள்ளிப் பிள்ளைகள் பப்புவைப் பார்த்துச் சிரித்தார்கள். அவன் குனிந்து பார்த்துவிட்டுஇ களிசானை இழுத்துப் பிடித்துக்கொண்டு அப்பால் நடந்தான்.

‘கடல….. கடல…”

பஸ் நிலையத்திலிருந்து இறங்கிஇ கார்கள் விடப்பட்டிருக்கும் பக்கமாக நடந்தான். மாணிக்கம் மறுபடியும் தனது காரைத் துடைத்துக்கொண்டு நின்றான். பழனி பக்கத்தில் நின்றான். முருகேசுவும்இ கிளியும் தங்கள் கார்களுக்குள் படுத்திருந்தார்கள். நாலு கார்கள் வரிசையாக அடுக்கிவிடப்பட்டிருந்தன. ஷஹயரிங்| கிடைக்கும்பொழுது போய்விட்டு வந்து அதே மாதிரி காரைப் பார்க் பண்ணுவார்கள். ஒருமுறை போனாலே நிறையக் காசு கிடைக்கும் போலிருக்கிறது. இப்படிக் கடலை விற்றுக் கொண்டு திரியத் தேவையில்லை. பழனியைப் பார்த்தால் மூத்த அண்ணனைப் பார்க்குமாப் போலிருக்கு. அண்ணன் இருந்தால் இப்போ சிலசமயம் கார் ஓடப் பழகியிருப்பான். தனக்கு ஒரு தொல்லையுமிருக்காது… வளர்ந்த பிறகு தானும் ஒரு கார் வேண்ட வேண்டுமென பப்பு நினைத்தான். அம்மாவுக்குக் க~;டமிருக்காது. இவர்களைப் போல உழைக்கலாம். அம்மா ஆக்கித்தருவா. நிரம்பச் சாப்பிடலாம். ஆனால் வளர்வதற்கு இன்னும் எவ்வளவு காலங்கள் ஆகுமோ…!

பப்புவுக்கு அலுப்படித்தது. கடலைச் சுருள்களைக் கொண்டுவந்து பெட்டியின் மேற்போட்டு விட்டு அம்மாவின் பக்கத்தில் சுருண்டு படுத்தான். அவனை உறக்கம் தழுவிக்கொண்டது.

‘பப்பு!….. பப்பநாதா!…..” அம்மா அவனை எழுப்பினாள்.. “எந்திரு!”

பப்பு எழுந்து சோம்பல் முறித்தான்.

‘இந்தா!…. போயி….. பாணு வாங்கிக்கிணு வா…”

மறுகதை பேசாமல் அம்மா கொடுத்த காசை வேண்டிக்கொண்டு நடந்தான்.

சாப்பாட்டுக் கடைக்குள் பப்பு நுழைந்தபொழுது உள்ளே ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனது கால்கள் சற்றும் தாமதியாது விறுக்கென உள்ளே சென்றன.

மேஜையின் முன் மூன்று நான்கு பேர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் முன்னால் வாழையிலையில் போடப்பட்டிருக்கும் சோற்றைஇ தங்களுடைய பெரிய கைகளால் குழைத்து… நல்ல பிடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நிமிர்ந்து கிமிர்ந்து பார்க்காமல்இ மூச்சைப் பிடித்துக்கொண்டு உள்ளே தள்ளினார்கள். வாளியில் சாம்பாற்றைக் கொண்டுவந்துஇ கரண்டியால் துளாவி ஊற்றியதும்இ இலையை வளைத்துப் பிடித்து சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டார்கள்.

‘டேய்!….. இந்தப் பொடியன் உதிலை… நிண்டு என்ன செய்யிறான்?” காசு மேஜையில் இருப்பவர் உள்ளே குரல் கொடுத்தார். உள்ளேயிருந்து ஒருவன் வந்து… பப்புவைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக்கொண்டு போனான்.

‘பாணு…. பாணு!” பப்பு அவனை நிமிர்ந்து பார்த்து காசை நீட்டினான்.

வெளியே தள்ளிவிட்டுப் போகஇ திரும்பவும் வந்து மேஜையில் காசை வைத்தான். சாப்பிட்ட பின்னர் உள்ளேயிருந்து காசு மேஜைக்கு வந்தவர்களின் வண்டி (வயிறு) அவனது தலையில் முட்டியது. திரும்பிப் பார்த்தான் பப்பு…. சிலரின் வண்டியைத் தூக்க இன்னொரு ஆள் தேவைப்படும் போலிருந்தது!

பிளேன் டீயையும்இ பாணையும் எடுத்துக்கொண்டு அம்மாவிடம் நடந்தான். இரண்டாகப் பிரித்து ஒரு துண்டை அம்மாவிடம் கொடுத்தான்.

சாப்பாடு ஆகியதும்இ கடலைச் சுருள்களை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

‘கடல…. கடல…”

கால்கள் போனபோக்கில் நடந்தன. நிறையச் சனங்கள் அங்குமிங்குமாக நடந்து திரிந்தார்கள். பப்புவுக்கு ஒருவரையுமே தெரியவில்லை… நல்ல உன்னிப்பாக ஒவ்வொரு முகங்களையும் பார்த்தான். தான் தனியாக விடப்பட்டதைப் போலக் கவலை மேலிட்டது. தனது அக்கம் பக்கத்துச் சனங்கள்… சினேகிதச் சிறுவர்களையெல்லாம் நினைத்துப் பார்த்தான். அவர்கள் இப்போ எங்கேயோ தெரியாது. விம்மல் பொங்கிப் பொங்கி வந்து நெஞ்சுக்குள்ளேயே அடங்கிக்கொண்டிருந்தது. இடம் வலம் தெரியாத இடத்தில் தான் நடப்பதைப் போல உணர்ந்தான்.

கார்களுக்கு அண்மையாக வந்தபொழுது கார் வேண்டுவதாக எண்ணியது நினைவில் வந்தது. கிட்டச் சென்று ஒவ்வொரு கார்களாகப் பார்த்தான். பெரிய பெரிய முழிகளைப் போன்ற அவற்றின் முகங்களிலிருக்கும் லைட்டுக்களைத் தடவினான். மாணிக்கத்தின் கார் மற்றவற்றை விடப் பழசாக இருந்தது. பல இடங்களில் பெயின்ற் பொருக்கு வெடித்திருந்தது. மெல்லிய தோலைப்போல உரிந்திருக்கும் பெயின்ற் துகள்களை நகத்தைக் கொடுத்துப் பிய்த்தான்.

‘டே டேய்…. போ!….” என மாணிக்கம் பப்புவைப் பார்த்துச் சீறினான். பப்பு போகாமல் நின்றான். ‘பெரிய திறம் கார்.. உக்கல்..” என மாணிக்கத்துக்கு நெளிப்புக் காட’டினான்.

அப்பொழுது மாணிக்கத்தின் மகன் போலிருக்கிறது.. வீட்டிலிருந்து வந்தான்.

‘அம்மா காசு வேட்டியரட்டாம்!” என மாணிக்கத்திடம் கேட்டான். மாணிக்கம் மற்ற ட்றைவர்களிடம் கைமாற்றாகக் கேட்டுப் பார்த்தான்.. கிடைக்கவில்லை.

‘ராவைக்குக் கொண்டு வாறன்…. போ!” என மகனிடம் சொன்னான் மாணிக்கம்.

பப்புவுக்கு மாணிக்கத்தைப் பார்க்கக் கவலையாக இருந்தது. மாணிக்கத்திடம் காசு இல்லைப் போலிருக்கு. ஷஏதாவது சவாரி கொத்தினால்தான் கையில் காசு பிளங்கும்| என மாணிக்கம் காலையில் சொன்னது நினைவில் வந்தது. அது உண்மைதான். காசு இல்லாதபடியால்தான் அவனது கார்கூட உக்கலாக இருக்கிறது. இன்று முழுக்க கார் அவ்விடத்திலேயே நிற்கிறது. தான் தூக்கமாக இருந்தபொழுது ஒருவேளை ஹயரிங் போயிருக்கமாட்டானோ என்று நினைத்தான். இருக்காது…. கார் ஓடியிருந்தால் அவனிடம் காசு இருந்திருக்கும். ஷஅப்படியென்றால்…. மாணிக்கம் சாப்பிட்டதோ தெரியாது.| மூன்று நாலு மணியாகிறது. காலையிலும் சாப்பிடாமல் எப்படி இவ்வளவு நேரமும் இருப்பது…

‘ஏன்? மணிக்கண்ணே! நீங்க இன்னும் சாப்பிடல்லியா?”

மாணிக்கத்தின் முகம் திரும்பி…. ஒருவித கோணலாக மாறிக்கொண்டு வந்தது..

‘போடா!….  போ!…. இவர் பெரிய ஆள்! கேக்க வந்திட்டார்!”

அடடே! இரக்கப்படுவதற்குக்கூட ஒருவித தகுதிவேண்டும் போலிருக்கே!

பப்பு விலகிச் சென்றான். கடலைச் சுருள்களை விற்றுஇ விற்று வந்த சல்லியை அம்மாவிடம் கொடுத்தான்.

கால்கள் ஓய்வின்றி நடந்தன.

அந்திப் பொழுது வந்தது.

மாணிக்கம் ஆறாவது தடவையாக தனது காரைத் துடைத்துக் கொண்டிருந்தான். பப்புவுக்குச் சிரிப்பாக இருந்தது…. ஷஇந்த ஆளுக்கு விசர்!|

‘மாணிக்கண்ணனைப் பார்த்தியா?…. எத்தனை தடவ காரைத் தொடைக்கிறது!” என அம்மாவிடம் காட்டினான்.

‘அவனுக்கு வேற வேலையில்லை” என்று அம்மா பப்புவுக்குச் சொன்னாள். இவ்வாறு இடையிடையே காரைத் துடைத்துத் தனது சோம்பலைத் தீர்க்கிறானோஇ அல்லது பொழுதைப் போக்கிறானோ என்பது தெரியாது.

பொழுது போய்விட்டதுதான்.

பஸ் நிலையத்தில் சன நடமாட்டம் குறையத் தொடங்கியது. பப்பு அம்மாவின் முதுகில் சாய்ந்திருந்தான்.

‘பப்பு!”

அவன் இந்த உலகத்தில் இல்லை – தனது கார் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்துகொண்டிருந்தான்.

‘இந்தா! கடையிலே போயிஇ சோறு வாங்கிக்கிணு வா!”

‘நெஜம்மாகவா!”

ஸ்விச் போட்டது போலப் பப்புவின் முகம் டக்கென ஒளிர்ந்து பிரகாசித்தது. மலர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தான்… இல்லை…. அம்மா தன்னோடு விளையாடுகிறாளா!

அம்மா அவனிடம் காசைக் கொடுத்தாள். கடலையைப் பெட்டியுள் கொட்டிவிட்டுச் சட்டியையும் கொடுத்தாள்.

பப்பு எய்த அம்புபோலப் பறந்தான்.

சட்டியை இரு கைகளாலும் பிடித்து ஸ்ரெயரிங் போலத் திருப்பித்…. திருப்பி…. ‘ர்….ர்ர்ர்….ர்ர்..’ அவனது கார் ஓடியது.

கார் நேராகச் சாப்பாட்டுக் கடைக்குள் போய் நின்றது. ‘போம்! போம்!” ஹோர்ண் அடித்தது.

ஹோர்ண் சத்தத்தில் கடைக்கார் அவனை விசித்திரமாக பார்த்தார்.

அவரது பார்வையை அலட்சியம் செய்தவாறே மேஜையில் காசை வைத்தான்.

‘சோறு தாங்க..!”

‘இவனுக்கு ஒரு பார்சல் சோறு கொடு” என அவர் உள்ளே குரல் கொடுத்தார்.

பப்பு உள்ளே போய் சட்டியைக் கொடுத்தான். சட்டியில் சோற்றையும்இ கறியையும் நிரப்பிக் கொடுத்ததும் பக்குவமாகத் தன்  இரு கைகளாலும் தூக்கி வந்தான்.

வெளியே வந்ததும் தனது காரை ஸ்ராட் செய்தான்.

‘ர்….ர்ர்ர்….ர்ர்….”

நல்ல அழகாக ஸ்ரியரிங்கைச் சுழற்றி வெட்டினான். அந்தமாதிரி லாவகமாக கையைச் சுழற்றி அபிநயித்தான். திருப்பிக்கொண்டு மாணிக்கத்தின் காருக்கு அண்மையில் போனான். நிறுத்தி…. ரிவேஸ் எடுத்தான். ஒரு கார் மட்டும் போகக்கூடிய இடைவெளியில்.. அவனது கால்கள் காரின் ரயரைப் போல உருண்டன.

‘டே…. டேய்…! அங்காலை போ!” காருக்குள்ளிருந்தவாறே மாணிக்கம் கத்தினான். பப்பு எதையும் கேட்கத் தயாராயில்லை. ஒரு பிறேக் போட்டுக் குலுக்கி நின்று…. பின்னர் மெல்ல மெல்ல றிவேஸ்… எடுத்தான்.

‘டடிங்..!’

பெற்றோலைப் போத்தலுடன் வெளியே வைத்துவிட்டுஇ காரினுள் ஏதோ செய்துகொண்டிருந்த மாணிக்கம் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான். போத்தல் பப்புவின் காலிற் தட்டுப்பட்டு…. பெற்றோல் முழுவதும் நிலத்தில் சிந்தியிருந்தது.

ஒரே பாய்ச்சல்….

பப்பு ஓடுவதற்கு எத்தனிக்க –

மாணிக்கம் கையைச் சோரவிட்டு விளாசினான்.

நல்ல அறை. பப்பு நிலைகுலைந்து விழுந்தான்.

சோறு முழுவதும் நிலத்தில் சிதறி… மண்ணோடு கலந்தது.

‘அம்மா….!”

பப்பு மூச்சடங்கி அலறினான்.

ரோட்டில் படுத்திருந்த ஒரு அகதி நாய் சோற்றைக் கண்டதும் எழுந்து ஓடி வந்தது.

பப்பு அதற்கு முந்திக்கொண்டு எழுந்து சோற்றைக் கூட்டிஅள்ளிச் சட்டியில் போடத் தொடங்கினான். அழுது…. அழுது…. சோறு முழுவதையம் அவன் அள்ளும்வரை அந்த நாய் அவனையே பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றது.

– சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது – 1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *