Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காலத்தின் வலிகள்?

 

அலுவலக சுவரில் நாட்காட்டி வார இறுதியை அண்மித்து, வியாழக்கிழமையைக் காட்டியபடி மின்காற்றாடியின் கட்டளைக்கு ஏற்ப ஆடியவண்ணம் இருந்தது. வியாழக்கிழமையாக இருந்தாலும் மக்கள் தத்தமது தேவைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு வந்துசென்று கொண்டிருந்தனர். ஆயுதப்போர் முடிவடைந்த பின்னர், அரசஅலுவலகமான எமது அலுவலகத்துக்கு மக்கள் வந்துசெல்வது அதிகமாகிக் கொன்டிருக்கிறது. சொத்துக்களுக்கான வரிகள், வியாபார அனுமதிகள், சொத்துப்பெயர் மாற்றங்கள் என பலவிதமான தேவைகளின் பொருட்டு மக்கள் எம்மை நோக்கி வரத்தொடங்கியிருக்கின்றனர். புதிய வீடுகள், புதிய வியாபாரங்கள், அதிலும் எமது புதிய கலாச்சாரமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வங்கிக் கடனை பெறுவததற்காகவே கூடுதலானோர் மேற்படி விடயங்களில் ஆர்வங்காட்டி வந்துகொண்டிருந்தனர்.

முழுவதுமாக தனது வேலைகளில் மூழ்கியிருந்த முரளியை, “சிவசூரியகுமார்” என்ற அந்த நீண்ட பெயர் நிமிர்ந்து பார்க்க வைத்தது. பார்த்த உடனேயே அந்தக்கண்கள், தான் சிறுவயது முதல் பார்த்த அந்த சினேகிதமான அந்தக்கண்கள் முரளியை அவனையறியாமலேயே கேட்க வைத்தது, “நீங்க மயிலிட்டி குமார்தானே!” மெலிந்த தேகமும் வாழ்வின் ஓரத்துக்கே ஓடி விரக்தியடைந்த அந்த முகமும் தனக்குத் தெரிந்த அந்த சிவசூரியகுமாராக இருக்குமோ என்று உற்றுப்பார்த்தபடி கேட்டான் முரளி. கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்னரான பாடசாலை நட்பு.

முரளியின் சந்தேகம் கலந்த ஆனால் சினேகமான அந்தக்குரல் குமாரை இவன் யார் என கேள்விக்குறியுடன் நோக்கியபடி ஓம் என வைத்தது. “நான் முரளிஇ விக்ரோறியாவில படிச்ச”  குமாரின் முகத்தில் ஓடிய குழப்பங்களை முரளியின் பதிலானது முடிவுறுத்தியது. அதன் பயனாக அவனின் முகம் தாயைக்கண்ட குழந்தையின் முகத்தினைப்போல் மலர்ந்து பின் சுருங்கியது காரணம் கடந்த சில வருடங்களாக அவன் சமூகத்திடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் அவனின் முகத்தினை வலுக்கட்டாயமாக சுருங்க வைத்தன.
ஞாபகமில்லையோ? என்ற முரளியின் கேள்வியை ஓரு விதமான சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட குமார், ம்… ஞாபகமிருக்கிறது. நண்பர்களை மறக்க முடியுமோ? நீங்க… ? நீண்ட கால தொடர்பின்மையோ அல்லது ஏதோ ஒரு அனுபவமோ குமாரை தனது நண்பனை “நீங்க” போட்டு உரையாட தூண்டியது. டேய் என்னடா நீங்க, வாங்க என்று கொண்டு… என்றவாறு எழும்பிய முரளி பக்கத்தில் இருந்த தனது சக உத்தியோத்தர்களுக்கு என்னுடைய நண்பன் இவன் என அறிமுகப்படுத்தியவாறு குமாரை அலுவலகத்துக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்தான்.

எவ்வளவு காலம் சந்தித்து! 2009 இற்கு பிறகு அடிக்கடி உன்னைப்பற்றி யோசிப்பதுண்டு. பலரிடம் விசாரித்தும் பார்த்தனான் ஆனால் ஒருத்தரும் சரியான விபரம் தரவில்லை. இருக்கிறியோ இல்லையோ என்றுகூடத் தெரியாதிருந்தது. இப்ப கண்டதுமதான்; பெரிய நிம்மதிடா… சொல்லு, இப்ப எங்க இருக்கிறாய்? யாருடன் இருக்கிறாய்? ஏன்ன செய்கிறாய்? என்னடா கோலமிது? முரளியின் அடுக்கடுக்கான கேள்விகள் தனக்கு பழக்கப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் குமாரினால் அலட்சியப்படுத்தமுடியாதிருந்தது முரளியின் முகத்தில் தெரிந்த நட்பினால்.

இருக்கிறேன். கலியாணம் கட்டிட்டேன், ஒரு மகள், லொறி டிரைவராக வேலை. இந்தக் கோலம் காலம் தந்தது. ஆனால் மக்கள் கதைக்கிறார்கள் பல நாடுகள் ஒன்று சேர்ந்து தந்தது என்று. அண்ணை இங்கு இருக்கும் வரை எல்லாம் நன்றாகதான் இருந்தது. பிறகு உனக்குத் தெரியும்தானே தடுப்புக்குப்போய் வெளியில் வந்தபின் எல்லாமே தலைகீழாகப் போய்விட்டது. குமார் இவ்வளவு தூரம் எவரிடமும் சமீபமாக கதைத்ததில்லை. இவ்வளவு விடயத்தையும் ஒரேதடவையில் கூறியதுகூட குமாருக்கே ஆச்சரியத்தைத் தந்தது.

பிறந்ததில் இருந்து அறிவு தெரிந்த நாள்வரை போராட்ட வாழ்க்கைக்கு பழகியதால் அதுவே சரியான முடிவு நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு என்றுணர்ந்ததினாலும், சரியான தலைமையாக அண்ணை இருந்ததினாலும் அண்ணையின் பாதையில் எல்லோரும் பயனித்துக்கொண்டிருந்த காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் தெரிவு அண்ணையுடன் பயனிப்பதாக அமைந்திருந்த நேரத்தில், பாடசாலை இடைவேளையில், டேய் நான் இயக்கத்துக்கு போகப்போகிறேன்! என்று கூறிய ஈசனைப்பார்த்து, மாணவர்கள் எல்லோரும் சிரிக்க, நீ போய் என்ன செய்யப்போகிறாய்? வெங்காயம் உரிக்கத்தான் விடுவார்கள், என்று குமார் கூறவும் மீண்டும் சிரிப்பொலி எழ.. நான் வெங்காயம் உரிக்கிற வேலையை செய்தால் இப்ப வெங்காயம் உரிக்கிறவன் சண்டைக்கு போகமுடியும்தானே என்ற ஈசனின் வார்த்தை அவனின் உறுதியை எல்லோருக்கும் அழுத்தமாக உணர்த்த சிரிப்புகள் போய் மௌனம் குடிகொண்டது.

நான் வரவில்லை அம்மா அப்பாவை விட்டு என்னால் இருக்கமுடியாது என்று கூறிய முரளியை பார்த்த ஈசன் டேய் உங்களை ஒருத்தரையும் நான் என்னோட வரச்சொல்லவில்லை. நீங்க படியுங்கள் எல்லோரும் போராடினால் நாடுகிடைத்த பின் அதை ஆள ஆட்கள் தேவை. ஆனால் படிக்கிதை ஒழுங்கா எமது சமூகத்தை வளர்க்கிற மாதிரி, எமது பாரம்பரிய கலைகளை வளர்க்கிற மாதிரி பிரயோகக் கல்வியாக படியுங்கடா.. எனக்கூறிய ஈசனின் வார்த்தைகளனின் பெறுமதியை அந்த வயதில் நண்பர்கள் பலரால் விளங்கிகொள்ளமுடியவில்லை, சிலருக்கு ஓரளவுக்கு விளங்கியமாதிரியும் இருந்தது. ஒரு சிலருக்கே விளங்கியது. இதனால் நண்பர்கள் மத்தியில் மௌனம் மேலும் அழுத்தமாக ஏற்பட அந்த அழுத்தத்தினை உடைத்தது குமார் எனப்படுகின்ற சிவசூரியகுமாரின் வார்த்தைகள்.

சிவசூரியகுமார் மயிலிட்டியை சேர்ந்தவன் இடப்பெயர்வின் காரணமாக தற்காலிகமாக கல்விகற்க  எமது கல்லூரியில சேர்ந்தவன்;. செல்லடியில் தந்தை இறக்க தாயுடனும் சகோதரிகளுடனும் சுழிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பாடசாலைக்கு வந்தது முதல் அவனது கெட்டித்தனத்தாலும் கல்வியில் அவன் காட்டும் ஆர்வத்தினாலும் ஆசிரியர் முதல் மாணவர் உள்ளம்வரை  இடம்பிடித்தவன். அப்படியானவன் ஈசனின் வார்த்தைகளை ஆமோதித்து கூறியது எல்லோரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியது. அதைவிட இறுதியாக குமார் கூறிய வார்த்தைகள் நானும் ஈசனுடன் போகிறேன். வீட்டுக்காரர் கேட்டா சொல்லுங்க எங்கள் குடும்பத்துக்காக மட்டுமல்ல தமிழர்களின் வாழ்வுக்காக செல்கிறோம் என்று. பாடசாலை மணி ஒழிக்க எல்லோரும் பலவிதமான சிந்தனைகளுடன் பலவிதமான விவாதங்களுடன் வகுப்பறைக்கு சென்றனர்.

அன்று இருளத் தொடங்கிய நேரம் முரளியின் வீட்டுக்கு குமாரின் தங்கை சைக்கிளில் வரும்போதே, முரளியின் இதயம் படபடவென அடிக்க தொடங்கியிருந்தது. வழமையாகவே முரளியின் தங்கையிடம் வருபவள்தான் ஆனால் இன்று இந்த நேரம் வருகிறாள் என்றால்? வழமையாக வீட்டுக்கு வந்தால் நேரே தங்கையிடம் செல்பவள். இன்று நேரே என்னிடம் வர உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. முரளி அண்ணா, அண்ணா இன்னும் வீட்டுக்கு வரவில்லை அம்மா உங்களிட்ட பார்த்துவரச்சொன்னவா, அண்ணாவைக் கண்டனீங்களோ? இந்தக் கேள்விக்கு பதில் என்னவென்று சொல்வது நினைக்க நினைக்க முரளியின் தலை சுற்றுவது போலிருந்தது. காம்பில போய் பார்த்தனீங்களே? வாய் குழற நா தடுமாற கூறிய வார்த்தைகளின் கனதி குமாரின் தங்கையின் பலத்த அழுகையிலேயே தெரிந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள் இருந்தவர்கள் அயல் என வீட்டில் மக்கள் கூட விடயம் காட்டுத் தீ போல் குமார், ஈசனின் வீடு எல்லாம் பரவிட்டது.

இரு குடும்பங்களும் பல இடங்கள் அலைந்து ஒருமாதிரயாகி பிள்ளைகளைக் கண்டுபிடித்தனர். ஆனால் அங்கிருந்தவர்கள் அம்மா பிள்ளைகளோட கதையுங்கோ அவை விருப்பப்பட்டால் கூட்டிட்டுப் போங்கோ… என்று கூற, ஆவலாக பிள்ளைகளைப்பார்த்த பெற்றோரை தீர்க்கமாக பார்த்த பிள்ளைகள் நாங்கள் போகிற பாதை சரியான பாதை எங்களைத்தடுக்க வேண்டாம். தயவு செய்து போய்வாருங்கள் சிறிது காலத்துக்கு பிறகு நாங்கள் வந்து பார்க்கின்றோம் என்றவர்களை எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் உடன்வர சம்மதிக்காததால், அழுது அழுது வற்றிய கண்களுடன் நிற்கும்பொழுது, பிறிதொரு வாகனம் வர அதில் ஏறிச் சென்றனர் பிள்ளைகள்.

வழமைபோல் சிறிதுகாலம் இவர்களது கதைபேசிய ஊர் பின் மறந்து போய் இருந்த வேளையில் சரியாக ஒருவருடம் கழித்து ஈசன் ஊர் வந்தான் வந்தவனிடம் குமாரைப்பற்றி கேட்க அவன் வேற இடம் நீண்டநாடகளாக சந்திக்கவில்லை. அம்மாவைப் பார்க்க வந்தனான் என்று கூறி சென்றவனை பின்னர்  சந்திக்கமுடியாது போனது..

காலம் தன் கடமையைச் சரிவர செய்ததன் பலனாக ஆண்டுகள் பல கடந்து செல்ல, போரின் போக்குகளும் மாறியிருந்தது. உள்நாட்டுப்போர் என்ற நிலை மாறி உலகநாடுகளின் விருப்புவெறுப்புகளுக்கு ஏற்ப போரின் நிலை மாறியிருந்தது. இறுதியில் பல அவிழ்க்க முடியாத முடிச்சுகளுடன் ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்தது. ஏராளமான இறப்புக்கள், அங்கவீனங்கள், விதவைகள், அநாதைகள், காணாமற்போனோர் என ஆயுதப்போர் தமிழர்களை வதைத்தது மட்டுமன்றி உள ரீதியிலும் மிக மோசமாக பாதிப்படையச் செய்திருந்தது. மீளமுடியாத துன்பியல் அனுபவங்களுடன் தமிழ்ச்சமூகம் சரியான தலைமையின்றி ஆயுதப்போராட்டத்தை வெறுத்து தனது இயல்புவாழ்க்கைக்கு அடியெடுத்திருந்த நிலையில்தான் மீளவும் குமாரினதும் முரளியினதும் சந்திப்பு ஏற்பட்டிருந்தது.

குமாரின் நிலையை இலகுவாக விளங்கிக்கொண்டான் முரளி. ஏனெனில் இந்நிலை குமாருக்கு மட்டுமல்ல பெரும்பாலான போராளிகளுக்கு ஏற்பட்டிருப்பதுதான். சரி இப்ப எங்கே இருக்கிறாய் சொல்லு? பின்னர் நான் வீட்டை வந்து என் வீட்டுக்கு கூட்டிச் செல்கின்றேன்.. இப்ப எதற்காக இங்கே வந்திருக்கின்றாய்? முரளியின் கேள்விகளைப் பார்த்து சிரித்தபடி பதில் கூறினான் குமார்.

முதலில் உனக்கு ஒரு நன்றி. ஏனென்றால் என்னைக்கண்ட சிலர் என்னுடன் கதைக்க தயங்கினார்கள் அல்லது பயப்பட்டார்கள். சிலர் சிரித்து கதைத்துப் போன் நம்பர் வேண்டினார்கள். ஆனால் இதுவரை யாரும் போன் எடுக்கவும் இல்லை கதைக்கவும் இல்லை. பல வேலைகளுக்கு முயற்சித்தும் “முன்னாள்” என்கின்ற அடைமொழி எங்களை முன்னேற விடவில்லை. நீ மட்டும்தான் வீட்டுக்கு வருவதாயும் உன் வீட்டுக்கு கூட்டிச்செல்வதாகவும் கூறியிருக்கின்றாய். இந்த அளவே போதும். என்றவனை இடைமறித்த முரளி நீ முதலில் வந்த விடயத்தை சொல் என்றான்.

வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ள பிரதேச சபையில் காணி எனது பெயரில் இருந்தால்தான் கிடைக்குமாம். மாமா சீதனமாக தந்தவர். அந்தக்காணியை எனது பெயருக்கு மாற்றத்தான் வந்திருக்கிறேன். நான்கு தரம் வந்து சென்றுவிட்டேன். இன்னும் வேலை முடியவில்லை. வருகிற வியாழக்கிழமைக்கு முன்  செய்து கொடுக்கவேண்டும். குமாரின் பேச்சில் தெரிந்தது, எரிச்சலா? அல்லது விரக்தியா? என்பதை உணரமுடியாதிருந்தது.

எல்லோருடைய சுதந்திரத்துக்காகவும்தான் நாங்கள் எங்களது படிப்பையும் இளமையையும் தொலைத்தோம். இப்போது பார்த்தால் நாங்கள் மட்டும்தான் சுதந்திரம் இல்லாமல் இருப்பது போலவும் மற்றவர்கள் சுதந்திரமா இருப்பது போலவும் தோன்றுகிறது. நாங்கள் மட்டும்தான் தோற்றது போல! மற்றவர்கள் எங்களைப் பரிதாபமா பார்க்கின்றார்கள். நாங்கள் உயிரைத் துச்சமென நினைத்தவர்கள் எங்களால் வாழ்கையில் வெற்றிபெறமுடியும் ஆனால் நீங்கள் காட்டும் அலட்சியம்தான்… என்றவனை இடைமறித்த குமார், அலட்சியமில்லை… சில அரச நடைமுறைகள் அவசரத்துக்கு சரிவராது, தற்துணிவுடன் செயற்படவும் எவரும் முன்வருவதில்லை.

ம.;ம்.ம் முரளி நீ சொல்வது சரி ஆனால், எங்கட நிர்வாகம் நடக்கும்பொழுது, இப்படியா நடந்தது? அப்பவும் தமிழர்கள்தானே பணிபுரிந்தார்கள்? பாரபட்சங்கள் எங்கே நடந்தது? அரசியல்வாதிகளுக்கு கும்பிடுகள் எங்கே? போதைவஸ்துக்கள் எங்கே? கற்பழிப்புக்கள், சிறுவர் துஸ்பிரயோகம் எங்கே? தவறி நடந்தாலும் கொடுக்கும் தண்டனையில்? தலைமையின் அருமை இப்பதான் விளங்குது. இப்ப இருக்கும் அரசியல்தலைவர்களுக்கு தெரிவதில்லை எல்லோராலும் தலைவராக முடியாது என்று. அவர்களுக்கு பின்னால் திரியும் இளைஞர்களுக்கும் தெரிவதில்லை. ஆனாலும், வேண்டாம் இனிமேலும் ஒரு அழிவைத் தரும் ஆயுதப்போராட்டம்.. நமது விதிப்படி நடப்பதைக் காண்போம். இன்றைய அரசு ஒரு தீர்வைத்தரும். என்ற குமாரின் வார்த்தைகளில் தெரிந்தது அவனது பட்டறிவும் நல்லாட்சி பற்றிய கனவும்.

இன்று எல்லாம் இழந்த நிலையில், அன்று நாம் எமக்குப்பின் நாட்டை நன்றாக ஆழுவார்கள் என்ற நம்பிக்கையில், நீங்க படியுங்க நாங்க போகிறோம் என்று சென்றவன் இன்று படித்தவர்களின் அசமந்த போக்கினையும் பணத்தினை நோக்காக கொண்ட தன்மைகளையும் பார்க்கும்போது. முரளியின் மனதில் பல கேள்விகள் எழுந்தன, எங்கு தப்பு நடந்தது? நடக்கிறது? எப்படி நடக்கிறதுது? எது எப்படியோ குமார் சொன்னதுபோல் இனி ஒரு அழிவு வேண்டாம் என்று நினைத்தவனுக்கு, குமாரின் வேலையை உடனே முடித்துக் கொடுப்பது என்ற தீர்மானத்துடன் குமாரிடம்,

குமார் நீ யோசிக்காம போ, நான் பார்த்து வியாழக்கிழமைக்குள் செய்து தருவிக்கின்றேன். நாங்கள் மாறவில்லை எங்களால் முடிந்தளவு வேகமாவும் சரியாகவும் செய்கின்றோம். சில அரச நடைமுறைகள் சிறிது காலம் தாழ்த்தும். என்ற முரளிக்கு, சரி சரி நீ சொன்னால் சரி நான் வருகின்றேன். வேலை முடிந்தால் போன் பண்ணுவாயா? என்றவனை நோக்கிய முரளி, இல்லை நான் வீட்டுக்கே வந்து சொல்கின்றேன் என்றான். இப்பொழுது குமாரின் முகம்  சற்று நட்புடன் மலர்ந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட தங்களின் சுகதுக்கங்களை பகிர்வதிலேயே குறியாக இருந்தனர். நானும் எவ்வளவு நேரந்தான் ஆச்சரியக்குறிகளையும் கேள்விக் குறிகளையும், சந்தோசரேகைகளையும், துக்கக்கோடுகளையும் முகத்தில் காட்டிய வண்ணமிருப்பது? ...
மேலும் கதையை படிக்க...
சந்திரனின் மனம் மிகுந்த குழப்ப நிலையில் இருந்தது. மனைவி பிள்ளைகளோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் புதிய உறவினர்களின் வருகையை. மனைவி, பிள்ளைகளுக்கு வருபவர்கள் புதிய உறவினர்கள். ஆனால் சந்திரனுக்கோ, அவர்கள் விடுபட்ட மிகப்பழைய உறவினர்கள். அவர்களின் வருகை சந்திரனுக்கு எவ்வித மகிழ்ச்சியையும் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் தேநீரை அருந்தியபடி வானொலியில் சூரியன் எப். எம். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கிரியின் ஞாபகம் வந்தது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஒன்றாக இருந்து படித்தது. கிரி நன்றாகப் படிக்கக் கூடியவன் இருந்தும் அவனது குடும்ப வறுமை அவனை நிழல்போல் துரத்தியபடி இருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
பின்னுக்குப் போங்க….. பின்னுக்குப் போ……., சரிஞ்சு நில்லணை, தம்பி உன்னைத்தான் நட்டமரம் மாதிரி நிற்காம பின்னுக்கா போ, பிறகு இறங்கி நின்று கதைக்கலாம்……. டிரைவர் சீற்றுக்கு பக்கத்தில் இருந்த குமாரின் சிந்தனைகளைக் குழப்பியது கொண்டக்ரரின் கத்தல்கள். தனது கிராமத்தில் இருந்து பேரூந்தில் ஏறும்போது ...
மேலும் கதையை படிக்க...
இருண்ட வானம் சிறிது வெளுக்கத்தொடங்கியிருந்தது. என்ன சனியன் பிடிச்ச மழை விடுறமாதிரிதெரியல என்று சினந்தபடி எழுந்தார் சைவப்பழமும் சிவதொண்டனுமாகிய சிவநேசன். சிவநேசனின் கோட்பாடு இது சிவபூமி. இங்கு வேறு மதங்கள் இருக்கக்கூடாது என்பதாகும். வேறு மதம் என்ன? சிவனின் பிள்ளைகளைத் தவிர ...
மேலும் கதையை படிக்க...
என்னதான் உங்க பிரச்சினை?
ஒட்டாத உறவுகள்!
பிணை வைத்தவன் நெஞ்சம்?
பின்னுக்குப் போங்க!
அன்பே சிவம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)