காதம்பரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 6,203 
 

சரயு நதி ஏராளமான தண்ணீருடன் சுழித்துக்கொண்டு ஓடியது. சரயு கங்கை ஆற்றின் ஒரு கிளை நதி.

இந்தியாவின் உத்தரகாண்டம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஊடாகப் பாயும் ஒரு பிரம்மாண்ட நதி, சரயு நதி. இந்த பிரம்மாண்ட நதியைப் பற்றி பண்டைய வேதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த நதி ககாரா மற்றும் சாரதா ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகி பிரவாகமெடுக்கிறது. சாரதா நதி இந்திய நேப்பாள எல்லையை உருவாக்குகிறது. தற்போதைய பிரபலமான சுப்ரீம்கோர்ட் அயோத்தி நகரம் சரயு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அன்று ராமரின் பிறந்த நாளான ராம நவமி. பகவான் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று நம்பப் படுகிறது. ஆதலால் அயோத்தி நகரமே அல்லோலப்பட்டது. சரயு நதியில் ஏராளமானோர் இறங்கி புனித நீராடினர். ராமர் இந்த உலக வாழ்வை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தபோது இந்த சரயு நதியில்தான் இறங்கி தன்னை மாய்த்துக் கொண்டார் என்றும் நம்பப்படுகிறது.

என்றும் இல்லாமல் நதியில் அன்று வெள்ளம் பெருக்கெடுத்தோடியது…

அயோத்தியின் சரயு நதிக்கரையோரம் இருந்த தன் பெரிய வீட்டின் ஜன்னல் வழியாக நதியில் ஆரவாரித்துக் குளிக்கும் கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் முப்பத்தியாறு வயதான பெண்மணி காதம்பரி. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. ஈரப்பத வாசனை தூக்கலாக இருந்தது.

அப்போது தூரத்தில் வெள்ளத்தின் நடுவில் ஒரு சிறிய பையன் தலை மூழ்கித் தண்ணீரில் தத்தளிப்பதை காதம்பரி பார்த்தாள். அவன் உதவிகேட்டு அலறிக் கொண்டிருந்தான். நீந்தத் தெரியாமல் நதியில் மூழ்கி அவன் அந்த ஓலக் குரலை எழுப்புகிறான் என்பதை உணர்ந்த காதம்பரி, துடித்து எழுந்து தன் வீட்டைப் பற்றிய சிந்தனை இல்லாது, அதைத் திறந்து போட்டபடி சரயு நதிக் கரையோரம் வெகு வேகமாக ஓடினாள். அப்படி ஓடும்போது அவளும் “உதவி உதவி” என்று கத்திக்கொண்டே ஓடினாள்…

காதம்பரி அயோத்தியில் பாரம்பரியமிக்க மிகவும் மரியாதையான குடும்பம். அவள் இரண்டு குழந்தைகளின் தாய்.

சரயு நதியின் வெள்ளப் போக்கு கட்டுக் கடங்காமல் அதி தீவிரமாக இருந்தது. அந்தத் தீவிர வெள்ள ஓட்டத்தில் நிச்சயமாக அந்தப் பையன் மூழ்கி இறந்து விடுவான் என்பதை நொடியில் உணர்ந்து கொண்ட காதம்பரி, சற்றும் தயங்காமல் நதியில் குதித்து அந்தப் பையனை நோக்கி நீந்த ஆரம்பித்தாள். அவனை நெருங்கிவிட்ட காதம்பரி அவன் தலை மயிரைப் பிடித்துக் கொண்டாள். அவனை இழுத்துக்கொண்டு கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தாள்.

ஆனால், அப்போதுதான் அவன் தந்தையும் அந்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருப்பதையும், அவரையும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் அவள் உணர்ந்து கொண்டாள்.

என்ன செய்வது என்று தெரியவில்லை…

காதம்பரி சிறுதும் தயங்காமல் தன் புடவையை அவிழ்த்தாள். அந்த மனிதரின் இடுப்பில் புடவையைக் கட்டினாள். மிகவும் கஷ்டப்பட்டு அவரை அந்தப் புடவையின் உதவியுடன் பாதி தூரம் இழுத்துக்கொண்டு வந்தாள். அவர் அப்போதே சுய நினைவை இழந்திருந்தார். அதே சமயம் அவரது சகோதரன் விரைவாக நீந்தி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். முதலில் பையனை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு செல்லுமாறு காதம்பரி சொல்ல, அப்படியே பையனை பத்திரமாகக் கரைக்கு கொண்டு சேர்த்த அவர், நீச்சல் தெரிந்த இன்னும் பலருடன் காதம்பரிக்கு உதவ விரைந்து வந்தார்.

சிறுவனின் தந்தையும் காப்பாற்றப் பட்டார்.

கரையோரத்தில் ஏகப்பட்ட கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தினர் அனைவரும் காதம்பரியை மிகவும் மரியாதையுடன் நோக்கினர். அங்கிருந்த சில பெண்கள் காதம்பரியை கட்டிப் பிடித்துக்கொண்டு நன்றி சொல்லி அழுதனர். காப்பாற்றப்பட்ட இருவரும் பின்னர் பத்திரமாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இது போன்று ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இந்தியாவில் தொன்று தொட்டு ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கின்றன.

ஒருவர் ஆபத்தில் தவிக்கும்போது தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் உதவிக்குக் குதிக்கின்றனர். அப்படிப்பட்டவர்தான் காதம்பரி.

பொன்னையும், பொருளையும், புகழையும் எதிர் பார்க்காதவர்கள் இவர்கள். அதிலும் காதம்பரி நிலைமையை நன்கு உணர்ந்து, தன் மானத்தையும் பொருட் படுத்தாமல் ஆபத்கால தர்மத்தை அனுசரித்து, தன் புடவையை அவிழ்த்து இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.

இந்திய நாடு எப்படிப்பட்ட மேலான தியாக உள்ளங்களைக் கொண்டுள்ளது என்பதை ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நிருபித்துக் கொண்டே இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.

வாழ்வும் சாவும் ஒருமுறைதான். நாம் எப்படி பிறருக்கு உதவியாக வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *