கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 9,274 
 

இது வரை இப்படி ஒரு இன்ஸ்பெக்டரை எங்கள் சி.ஐ.டி. காலனியும் அதைச் சுற்றி உள்ள ஏரியாக்களும் கண்டது இல்லை. தீனதயாள் வெறும் ஐந்தரை அடி உயரம்தான். ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ சத்யராஜைக் கொஞ்சம் குள்ளமாக நேரில் பார்ப்பதுபோல இருப்பார். பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாதத்துக்குள் மொத்த ஏரியாவையுமே தன் கஸ்டடிக்குள் கொண்டுவந்துவிட்டார். பசங்க கும்பலாக டீ குடிக்கக் கூடாது, தெருவில் கூட்டமாக நிற்கக் கூடாது, கோயில் திண்ணையில் கேரம் ஆடக் கூடாது, ஃபுட்போர்டு அடிக்கக் கூடாது, ஃபங்க் வைக்கக் கூடாது… இருந்தால் கத்தரிக்கோலில் அவரே வெட்டிவிடுவார். குறிப்பாக, தப்பு செய்தவனைக் காப்பாற்ற வட்டம், பகுதி என்று எந்தக் கட்சிக்காரனும் ஸ்டேஷன் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது. 144 தடை உத்தரவு அமலில் இல்லாமல் அமலாகி இருந்தது. ஏரியா அமைதியாக இருந்தது!

பெண்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஃபுட்போர்டு அடிப்பதும், ரன்னிங்கில் ஓடி வந்து ஏறுவதும் எங்கள் பகுதியின் தினசரி சாகசங்கள். சர்க்கஸ் வீரர்களின் சாகசங்களை மிஞ்சும் எங்கள் அண்ணன்களின் பஸ் பயணங்களுக்கு, தீனதயாள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஃபுட்போர்டு அடித்துவரும் இளைஞர்கள் அடையாறு சிக்னல் பஸ் ஸ்டாண்டில் நையப்புடைக்கப்பட்டார்கள். ஒரு வாரத்துக்குப் பின் ஃபுட்போர்டு அடிப்பது அறவே நின்றுவிட்டது.

நம்ம பசங்க சத்யா ஸ்டுடியோ பஸ் ஸ்டாண்ட் வரை ஃபுட்போர்டு அடித்துக்கொண்டுவந்து, அடுத்து வர இருக்கும் அடையாறு சிக்னல் பஸ் ஸ்டாப்புக்கு முன்பாக பஸ் படிக்கட்டில் நிற்காமல் உள்ளே சென்று விடுவார்கள். பஸ் படிக்கட்டுகள் காலியாக இருக்கும். பஸ் ஸ்டாப்பில் தீனதயாளும் அவர் டீமும் காத்திருந்து ஏமாந்து வெறுங்கையோடு ஸ்டேஷன் செல்வார்கள்!

”மச்சி… மச்சி… அவன்

மூஞ்சப் பாரேன்… யாரையும் புடிக்க முடியலேனு எவ்ளோ காண்டா இருக்கு?”

”பச்ச, இந்த ஐடியாவக் குடுத்தது நானு!”

”மச்சி, ஒருவேள… நாளைக்கு சத்யா ஸ்டியோகிட்ட நின்னா என்னடா பண்றது?”

”அவரு என்னிக்குமே அங்க நிக்க முடியாது. ஏன்னா, அவரு லிமிட் இதோட ஓவரு.”

”சூப்பர் மச்சி.”

தீனாவை ஏமாற்றிய சந்தோஷத்தில் பஸ் தினம் தினம் களை கட்டியது.

”ஐயா, இனி ஒருத்தனும் ஃபுட்போர்டு அடிக்க மாட்டா னுங்க. ஐயாவோட அடி அப்படி. எல்லாப் பயலும் திருந்திட்டானுங்க.”

”இல்ல கதிரேசா… அடிக்குத் திருந்துற கூட்டம் இல்ல நம்ம ஆளுங்க.”

சரியாக ஒரு வாரத்துக்குப் பின் ஃபுட்போர்டு அடிக்காமல், ஃபுட்போர்டு அடித்தார்கள் என்று குற்றம்சாட்டி, தினந்தோறும் 10 முதல் 15 இளைஞர்கள் அதே அடையாறு சிக்னல் பஸ் ஸ்டாப்பில் தடியடி வாங்குவது வாடிக்கையானது.

”பச்ச… எப்டிடா தெரியும் இவன்களுக்கு? கரிக்ட்டா ஃபுட்போர்டு அட்ச்சவன்களை மட்டும் அலேக்காக் கீழ எறக்கி இப்படிக் குமுர்றானுங்க?”

”நம்மகூடவே யாராவது மஃப்டில வருவாங்கடா. இனி, ஃபுட்போர்டு வேலைக் காவது மச்சி.”

”சார், இந்த மாசம் ஸ்டேஷ னரில இங்க்தான் சார் அதிகமா வாங்கியிருக்கோம்!”

”இனி, கூடக் கொஞ்சம் தண்ணி கலந்துக்கச் சொல்லு கதிரேசா.”

சத்யா ஸ்டுடியோ பஸ் ஸ்டாண்டில் மஃப்டியில் இரு போலீஸார் நிற்கவைக்கப்பட் டார்கள். இருவர் கையிலும் இங்க் பேனா. பஸ் புறப்படும்போது படிக்கட்டுகளில் தொங் கும் பசங்க மீது அவர்களுக்குத் தெரியாமல், சட்டையில் இங்க் தெளிப்பதுதான் அவர்களுக் கான வேலை. பஸ் அடையாறு சிக்னலைத் தொட்டவுடன், இங்க் கறை சட்டை எல்லாம், ஃபுட்போர்டு தடைச் சட்டத் தின்படி, கீழே இறக்கப்பட்டு, தீனாவின் ஆட்களால் நன்கு கவனிக்கப்பட்டார்கள்.

”உங்க ஐடியா நல்லா வொர்க்- அவுட் ஆகுது சார்!”

தனி ஆளாக டிராஃபிக்கை ஒழுங்குபடுத்துவது, கர்ப்பிணிகள் வெயிலில் நடந்து சென்றால், அவர்களைத் திட்டி ஆட்டோவில் ஏற்றிவிட்டு அதற்குப் பணம் கொடுப்பது, வயதான பெரியவர்களுக்கு ஜீப்பில் லிஃப்ட் கொடுப்பது என வழக்கத்துக்கு மாறான போலீஸாக இருந்தார் தீனா. அவர் மீது பசங்களுக்குப் பயமும் பெரியவர்களுக்கும் பெண்களுக்கும் மரியாதை யும் அதிகமாக இருந்தது.

சி.ஐ.டி. காலனியின் ஏழு தெரு மக்களை பிள்ளையாரும் கருமாரி அம்மனும் இரண் டாகப் பிரித்து இருந்தார்கள். நாலு தெரு மக்கள் கருமாரி அம்மன் கோயில் சார்பாக வும், மூன்று தெரு மக்கள் பிள்ளையார் கோயில் சார்பாகவும் பிரிந்து நின்று வருடத் துக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரு விழாக்களில் சிறிய அளவில் சண்டையிட்டுக்கொள்வார்கள். பின் பெரியவர்கள் சமாதானம் செய்துவைப்பார்கள்.

நடக்கப்போகும் பெரும் கலவரத்துக்கு, கோயில் நிர்வாகிகளின் பெயர்கள் சாதியோடு பொறிக்கப்பட்டு இருக்கும் சிறிய கல்வெட்டு, காரணமாக அமையப்போகிறது என்பதை பிள்ளையார் பக்கம் இருப்பவர் கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

சாதிய அடையாளங்களோடுதான் நாம் பார்க்கப்படுகிறோம். இது கோயில் பிரச்னை இல்லை. சாதிப் பிரச்னை என உணர்ந்த இளைஞர்கள் சிலர், பழிவாங்க நேரம்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பெயர் பொறித்த கல்வெட்டை நீக்குவது தொடர்பான ஊர்ப் பொதுக் கூட்டம் பிள்ளை யார் கோயில் வாசலில் இரவு 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊரே கூடி இருந்தது. தீனா அழைக்காமலேயே கோயில் அருகே தன் ஜீப்போடு நின்றிருந்தார்.

போதையில் இருந்த ஒருவர், ”இது எங்க ஊர்ப் பிரச்னை. நாங்களே பேசித் தீர்த்துப்போம். போலீஸ்காரனுக்கு இங்கே என்ன வேலை?” என்று எகிற, ஒட்டுமொத்தக் கூட்டமும், ”ஆமாம்… போலீஸ் எதுக்கு இங்க? போங்க இந்த எடத்தவிட்டு” என அவரை வெளியேற்றியது.

முதலில் அமைதியாகத் தொடங்கிய கூட்டம், பின் கூச்சலும் குழப்பமுமாக மாறி, யார் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் போய்க் கொண்டு இருந்தது. இப்படியே விட்டால் கைகலப்பு ஏற்படும் என உணர்ந்த பெரியவர் ஒருவர் கூட்டத்தைக் கலைக்க முயல, எங்கிருந்தோ வந்த பாதி செங்கல், ‘ஐயா’ என அழைக்கப்படும் அம்மன் கோயில் அறங் காவலர் முகத்தில் விழுந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட அவர் மயக்கமாகிச் சரிய… தொடங்கியது யுத்தம்!

இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என முன்கூட்டியே கணித்திருந்த இளைஞர் பட்டாளம், பிள்ளையார் கோயிலைச் சுற்றி லும் உருட்டுக் கட்டைகளையும் கத்திகளை யும் மறைத்து வைத்திருந்தது. இப்போது எல்லோர் கைளிலும் தடிகள். அண்ணன் தம்பிகளாகப் பழகியவர்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். வண்டிகள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பிள்ளையார் கோயில் அமைந்திருந்த ஆறாவது தெரு போர்க் களமாகக் காட்சியளித்தது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்களை விடுத்து அனைவரும் தாக்குதலுக்கு உள்ளனார்கள்.

இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் வெட்டிச் சாய்க்கப்பட்ட முருங்கை மரங்களில் இருந்து, காய்களையும் கீரைகளையும் தன் வீட்டுக்காக உடைத்துக்கொண்டு இருந்தார் எங்களால் ‘தலைவா’ என அன்போடு அழைக்கப்படும் ஆறுமுகம்.

”தம்பி, சண்டைய விட்டுருங்கப்பா… ப்ளீஸ்ப்பா…” எனச் சொன்ன இரண்டு பக்கத்துக்கும் பொதுவான மகாலிங்கம், ராஜி அண்ணனின் அசிங்கமான திட்டால் கூனிக் குறுகிப்போய்விட்டார்.

அர்ஜுனன், மோகன், டப்பு, செட்டி அண்ணன்கள் பிள்ளையார் கோயில் தலைவரை வெட்டுவதற்காக ஓடினார்கள். கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போதே தீனா தன்னுடன் வெறும் ஐந்து போலீஸ்காரர்களை வைத்துக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களைக் கைதுசெய்து ஸ்டேஷனில் வைத்திருந்தார்.

முதல்முறையாக எங்கள் பகுதிக்குள் சைரன் சத்தத்தில் ஜீப் சுற்றிக்கொண்டே இருந்தது. ஏழு தெருக்களும் பதற்றத்தில் இருந்தன. எங்கள் தெருக்களில் உள்ள வீடுகளில் நிறையப் பேர் தஞ்சம் அடைந்துஇருந்தார்கள்.

இரவு 12 மணிக்கு புகாரி மணி அண்ணன் வந்து, ”எல்லோரும் ஸ்டேஷனுக்கு வாங்க… நம்ம ஆட்களைப் புடிச்சிட்டுப் போய்ட்டானுங்க. நியாயம் கேட்போம்” எனச் சொல்ல… அவர் தலைமையில் 50 பேர் புறப்பட்டுச் சென்றோம்.

ஸ்டேஷனுக்கு இரண்டு கேட்டுகள் உண்டு. முதல் கேட்டின் எதிர்த் திசையில் தீனாவின் அறை. அங்கிருந்து பார்த்தால் ரோடு வரை நன்கு தெரியும். நாங்கள் வருவதை தீனா பார்த்துவிட்டார். நாங்கள் அனைவரும் எம் தற்காலிகத் தலைவர் புகாரி மணியின் பின்னே அணிவகுத்து நின்றோம்.

”கத்துங்கடா” என்று அவர் கட்டளைஇட்டதும், ”என்னன்னு கத்தணும்?” எனச் சிலர் கேட்க, ”போலீஸ் அராஜகம் ஒழிக!” என்றார்.

கும்பலும் ”போலீஸ் அராஜகம் ஒழிக!” எனத் திருப்பிச் சொன்னது.

”போலீஸ் அராஜகம் ஒழிக!”

”போலீஸ் அராஜகம் ஒழிக!”

தீனா எங்களிடம் வந்து, ”வாங்க தம்பி களா… உள்ள வந்து பேசுவோம். எதுக்கு இப்படி வெளியில இருந்து சத்தம் போட் டுட்டு இருக்கீங்க?” என அன்பாகச் சொன்னார். நாங்கள் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே நின்றோம். அடுத்த கேட்டின் வழியாக வந்து, எங்கள் பின்னால் சுற்றி நின்றுகொண்டு இருந்த போலீஸ்காரர் களைக் கவனிக்காமல்.

திடீர் என தீனா, புகாரி மணி அண்ணனின் சட்டையைப் பிடித்து இழுத்து, ”நீதான கத்துன ஃபர்ஸ்ட்டு… ‘போலீஸ் அராஜகம் ஒழிக’னு… லத்தி சார்ஜ்” என்றார்.

கூட்டம் கலைந்தது. அடித்தவர்கள் ஓர் அறையில் ஜட்டியோடு நிறுத்திவைக்கப்பட்டார்கள். அடி வாங்கியவர்கள் கட்டுகளோடும் பேண்டேஜ்களோடும் வராந்தா வில் உட்காரவைக்கப்பட்டார்கள். உள்ளே ஜட்டிகள் பற்றி எல்லப்பன் அண்ணன் ஜோக் அடித்துக்கொண்டு இருந்தார்.

இரவு 1 மணிக்கு எங்கள் ஊர் சிங்கம் ‘சுப்ரமணி’ என்ட்ரி.

(சுப்ரமணி சிறு குறிப்பு: போலீஸ் ஸ்டேஷன்களில் மாட்டிக்கொண்ட ஒருவரை வெளியே யாராலும் எடுக்க முடியாத நிலை வரும்போது, எல்லோரும் அந்த தெய்வத்திடம்தான் முறையிடுவார்கள். அவர் ஸ்டேஷன் வந்தால், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் மேட்டர் ஓவர். எப்போதும் வெள்ளை உடைதான்.)

உள்ளே இருந்தவர்கள் எல்லாம்

தெய்வத்தை நேரில் பார்த்த சந்தோஷத்தில்… ”ஏய்! சுப்ரமணி வன்ட்டார்… எங்கண்ணன் சுப்ரமணி வன்ட்டார்” என்று எகிறி எகிறிக் குதித்தனர்.

”இன்ஸ்பெக்டர் சார்… இன்ஸ்பெக்டர் சார்…”

”யாருய்யா நீ..?”

”எங்க ஆட்கள நீங்க…”

”நீ மொதல்ல அவங்ககூட உள்ள போய் நில்லு.”

கூட்டம் மொத்தமாக, ”சுப்ரமணின்னா, சுப்ரமணின்னா…” எனப் பதற…

”அதான் வன்ட்டேன்ல…. பாத்துக்குறேன்… எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.”

”ஏன், துரை ஒயிட் அண்டு ஒயிட்லதான இருப்பாரா? கதிரேசா… அவனையும் ஜட்டியோட நிக்க வை!”

”சார், நான் யார்னு தெரியாம…”

”வாயை மூடுடா… இல்லே…”

பிரச்னை வந்தா எல்லோரும் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. அந்த தெய்வத்துக்கே பிரச்னை வந்தா?

வரிசையாக எல்லோரையும் அடித்துக்கொண்டு இருந்த தீனா,

”கதிரேசா, யாருய்யா இவன்?”

”சார், இவன்தான் சார்… யாரை அந்த ஏரியாவுல இருந்து புடிச்சுட்டு வந்தாலும், ‘நான் சீஃப் செக்ரெட்ரி வீட்ல இருக்கேன். சீஃப் செக்ரெட்ரி வீட்ல இருக்கேன்’னு

சொல்லிட்டுப் பைசா கொடுக்காம கூட்டிட்டுப் போய்டுவான் சார்.”

”சீஃப் செக்ரெட்ரி வீட்ல என்னவா இருக்க?”

”டிரைவர் சார்…” எனச் சொல்ல… பளார் என விழுந்தது அறை. மொத்தக் கூட்டமும் ஆடிப்போனது.

பக்கத்தில் இருந்த எல்லப்பன் அண்ணனிடம் சுப்ரமணி சொன்னாராம்… ‘நான் அவன் நம்பர நோட் பண்ணிட்டேன்டா’னு. சுப்ரமணி அண்ணன் வாங்கிய அடியை நினைச்சு, பாதிப் பேருக்கு அடி வாங்கின வலியே தெரியாமப்போச்சாம்.

அதிகாலை 3 மணிக்கு மேல் இரு தரப்புப் பெரியவர்களிடத்திலும் தீனா பேசினார்.

”இப்போ நினைச்சாக்கூட பாதி ஊரை ரிமாண்ட் பண்ண முடியும். வெளிய வர கொறைஞ்சது ஒரு வருஷம் ஆகும். பட், நான் அதைப் பண்ண மாட்டேன். உன் பேரு என்ன?”

”பன்னீர் சார்…”

”நீதானே பிள்ளையார் கோயில்ல, அந்த கல்வெட்டைப் பொதச்ச? பேருதான் மணக்குது. வாழ்ற வாழ்க்கை நாத்தம். நீ ரோட்ல கோயில் கட்டினதுக்கே உன்னைத் தூக்கி உள்ளவைக்கணும். ரோட்ல கோயில் கட்டுனியே, உன் ஏரியாவுல, ஒரு ஸ்கூல் இல்லியேனு உனக்குக் கவலை இருக்கா? இதுல சாதி பேர்ல கல்வெட்டு. சாமிக்கு ஏதுய்யா சாதி? மொத்தமே ஏழு தெரு. 800 ஜனம். சந்தோஷமா இருக்கறதுக்குத்தானே சாமி. நீங்க என்னடான்னா? சரி, நீ போய் மொத வேலையா அந்தக் கல்வெட்ட ஒடச்சுப் போடுற… சரியா? உன் கையால உடைக்கணும். பெரிய ராஜராஜன் பரம்பரை… கல்வெட்டு வெக்கிறாரு. அப்புறம் அம்மன் கோயில் நிர்வாகி, பெரியவர் அண்ணாமலை, உனக்கு என் அப்பன் வயசு, அதனால் உன்னைச் சும்மாவிடுறேன். சின்னப் பசங்களத் தூண்டிவிட்டு நீ பாட்டுக்கு வீட்ல போய் ஒளிஞ்சிக்கிட்ட இல்ல!”

”ஐயா… இல்லய்யா…”

”என்ன நொள்ளய்யா? காயம் பட்டவங் களுக்கு உன் கோயில் பணத்துல இருந்து செலவுக்குக் காசு குடு. சின்னப் பசங்கள கத்திக்குப் பதில் பேனா புடிக்கச் சொல்லிக் கொடுங்க. இப்பவும் கத்தி எடுத்து வெட்டினதுக்கு, கட்டையால அடிச்சதுக்கு, ஸ்டேஷன்ல மறியல் பண்ணதுக்குனு ஆயிரம் கேஸ் போட முடியும் என்னால. நீங்க நெனைக்குற மாதிரி இல்ல ஜெயில் வாழ்க்கை. பசங்க பாழாப்போயிடுவாங்க. இந்தச் சின்ன விஷச் செடி, பகையோட வளர்ந்து உங்க தலைமுறையையே மொத்தமா அழிச்சுப்புடும். இதை இப்பவே கிள்ளி எறிங்க. இனி அம்மன், பிள்ளையார் கோயில் திருவிழாக்களை மொத்த ஊரும் ஒண்ணா சேர்ந்துதான் நடத்தணும். சரியா? நான் சொன்னதை அப்படியே எழுதி மொத்த ஊரும் கையெழுத்துப் போடுங்க!”

”நான் அவனை விட மாட்டேன். விடவே மாட்டேன். ஹோம் செக்ரெட்ரி ஆபீஸ்ல பேசியாச்சு. பேப்பர் ரெடி ஆகிட்டு இருக்கு” எனப் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார் சுப்ரமணி அண்ணன்!

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *