கழுதைக்கும் கற்பூர வாசனைதெரியும்

 

எலே, இந்தக் கழுதய ஏமாத்தனும்னு நினைக்கிறானா? பிச்சுப்புடுவேன் பிச்சு!, நீ போய் அவன இழுத்தாம்லே, பணத்தை வாங்கிட்டு இந்தா அந்தா’னுட்டு இழுத்துகிட்டு திரியறான், பேசுன பேச்சு பிரகாரம் நடக்காத பய, அவனையெல்லாம் இழுத்து வெச்சு..கடினமான வார்த்தைகளை வீசினார்.அண்ணாச்சியின் வசவுகள் எனக்கு புதிதல்ல!

நான் அவரிடம் கணக்குபுள்ளையாக வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது,இந்த ஐந்து வருடங்களில் அவருடைய குணநலன்கள் எனக்கு அத்துப்படி, தொழிலில் கறார், ஓப்பந்த தொழில்களின் நெழிவு சுழிவுகளை, விரல் நுனியில் வைத்திருப்பார், யார் யாரை எங்கு பிடித்தால் வேலை நடக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பவர்.இந்தக்கட்டிட வேலைக்கு தரை கடினமாக இருப்பதால் டிரில்லிங் முறையில் துளையிட்டு வேலை செய்ய வேண்டும், இந்த வேலைக்கு நன்குதெரிந்தவர்கள் செய்தால்தான் வேலை வேகமாகவும், விரைவிலும் நடக்கும்.

அதற்காக இவர்களுக்கு மேஸ்திரி போன்று ஒருவன் இருப்பான். அவனிடம் அண்ணாச்சி பதினந்தாயிரம் அட்வான்ஸ் ஆக கொடுத்திருந்தார். நாளையே வேலை தொடங்குவதாக கூறிச்சென்றவன் இரண்டு மூன்று நாட்களாக போக்கு காட்டிக்கொண்டிருக்கிறான்.

பொதுவாக இந்த மாதிரி பெரிய முதலாளிகளிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டால் இழுத்தடிக்கமாட்டார்கள், அதுவும் அண்ணாச்சி போன்றவர்களிடம் இப்படி செய்வது என்பது பெரிய ஆச்சர்யம்தான்.என்னுடைய அனுபவத்தின்படி அவரை விட்டு நாம் தள்ளி சென்று விட வேண்டும், அவரது கோபம் தானாக அடங்கிவிடும்.

எப்படியோ அண்ணாச்சியின் ஆட்கள் அவனை பிடித்து கொண்டு வந்து விட்டார்கள்.எலே கூறு கெட்ட பயலே, ஆளைகூட்டிட்டு வர்றேன்னு பதினைஞ்சாயிரம் வாங்கிட்டு போன!,இந்தக்கழுதைய ஏமாத்தனும்னு நினைச்சுட்டியாடா? இந்தக்கழுதய ஏமாத்திட்டு எங்கடா நீ ஓட முடியும்?நாளைக்காலையில நீ ஆளுகளோட வர்றே, ஏமாத்த நினைச்சியோ உன்னை எங்கிருந்தாலும் புடிச்சி இழுத்துட்டு வந்து மரத்துல கட்டி வச்சு தோலை உறிச்சுடுவேன்,நாளைக்கு கண்டிப்பா வந்துர்றேன், அவன் விட்டால் போதுமென ஓட்டம் பிடித்தான்.

அண்ணாச்சி செய்தாலும் செய்வார், அவரை பொருத்தவரை வேலை செய்பவனுக்கு கூலி தாராளமாகத்தருவார்.ஆனால் ஏமாற்றினான் என்றுதெரிந்தால் முடிந்தவரை அவ்னை விலக்கிவிட முயற்சிப்பார்.சாம்,பேத, தான, தண்ட, என்பது போல கடைசி ஆயுதத்தை,இறுதியில்தான் எடுப்பார்.அதைப்பார்த்த அனுபவமும் எனக்கு உண்டு, ஒருவனை கட்டி வைத்து அடித்ததையும் அதன் பின் அவனுக்கு உடல் நிலை சரியாகும் வரை இவர்தான் சோறு போட்டார் என்பதும் வேறு விசயம். அந்த ஊழியர்களுக்கு அண்ணாச்சி கண்டிப்பான தகப்பன், முதலாளி எல்லாம்.

அவர் தன்னை கழுதை கழுதை என சொல்லிக்கொள்வதற்கு கூட ஒரு கதை உண்டு!. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் உள்ள பள்ளியில் இவரை படிக்க வைக்க இவர் அப்பா படாத பாடுபட்டுக்கொண்டிருக்க, வாத்தியார் ஒரு நாள் வேடிக்கையாக எலேய்,நீ கழுதயாட்டம்ல,அதுக்குத்தான் கற்பூர வாசனைதெரியாது, ஆனா நல்ல உழைக்கும்டே, நீ உங்கப்பனுக்கு
நல்லா உழைச்சுப்போடத்தான் லாயக்கு, ஆனா படிக்கிற விசயம் உனக்கு கற்பூர வாசம்தான்லே என்று கிண்டலடித்திருக்கிறார்.

அதைக்கேட்டு ரோசப்பட்டு எழுந்த அண்ணாச்சி ஆமா சார், நான் கழுதைதான், எனக்கு படிக்கிற வாசம்னா என்னான்னு தெரியாது, என்று சொல்லிவிட்டு வந்தவர்தான், அதற்குப்பின் அவர் அப்பா எவ்வளவோ சொல்லியும் பள்ளிக்கு போக மறுத்துவிட்டார், கொஞ்சம் பணம் கொடு நான் அசலூர்ல போய் பொழைச்சுக்காட்டறேன் என்று இங்கு வந்தவர் தான் கல்லுடைத்து, மண் சுமந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று பெரிய ஒப்பந்த்க்காரர் ஆகிவிட்டார். இருந்தாலும் அவருக்கு படிப்பு வரவில்லை என்பது ஒரு குறையாகவேதெரிந்ததால் தன்னை கழுதை கழுதை என்று சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார்.

மறு நாள் வேலை செய்ய ஆட்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள், அண்ணாச்சியும் வந்து உட்கார்ந்திருந்தார்.நான், மேஸ்திரி, இருவரும் இவருடைய மன நிலையை குறித்த பயத்தில் இருந்தோம்,நேரம் ஆக ஆக இவர் முகம் செம்மை படர ஆரம்பித்தது.

தூரத்தில் ஒரு பெண் ஓட்டமும் நடையுமாக வருவதுதெரிந்தது, விரு விருவென வந்தவள் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியின் கால்களில் விழுந்து ஐயா! என் வீட்டுக்காரரை மன்னிச்சுருங்கயா, இவள் விழுந்ததை கண்ட அண்ணாச்சி சடாரென் எழுந்து தள்ளிப்போய் முகத்தை திருப்பி நின்றுகொண்டார்.

உன் புருசனுக்கு நீ வக்காலத்து வாங்கிட்டு வந்திருக்கியா? அவன் உன்னை விட்டு ஒளிஞ்சிக்கிட்டானா, எச்சக்கலை… என்று கெட்டவார்த்தைகளை வீசினார்.

ஐயா என் வீட்டுக்காரர் செய்தது தப்புத்தாய்யா!எங்களுக்கு வேற வழி தெரியலயா,நீங்க கொடுத்த பணத்தை எங்க பொண்ணுக்கு பா£ட்சைக்கு கடைசி நாளுங்கறதுன்னால அப்படியே கொண்டு போய் கட்டிட்டம்யா, ஒரு வாரம் டைம் கொடுங்கய்யா, அது வரைக்கும் நானும் என் புருசனும் இங்கேயே வேலை செய்யறோம்யா, எங்களை ஓண்ணும் செஞ்சுடாதீங்கய்யா,

இப்ப என் முன்னாடி வந்து நிக்காத போயிடு, அண்ணாச்சியின் குரல் உயரத்தொடங்க, அவ்ர் சுபாவம்தெரிந்த நான் அந்த பெண்ணிடம் இப்ப நீ கிளம்பு என்று கிளப்பிவிட்டேன். அவள் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

ஐந்து நிமிடங்கள் ஓடியது, அண்ணாச்சி மெல்ல மேஸ்திரியிடம் திரும்பி நம்ம சுப்பனையும்,சண்முகத்தையும் டிரில்லிங் வேலைக்கு கூட்டி வர சொல்லிடுங்க, அப்புறம் இந்த பொண்ணையும் அவள் புருசனையும் வேலைக்கு வர வேணாம்னு சொல்லிடுங்க, ஒரு வாரம், இல்ல ஒரு மாசம் ஆனாலும் பணத்தை விரட்டி வாங்கிடுங்க.

ஏன்னா படிப்புக்குத்தான்னாலும் அடுத்தவன் பணத்தை எடுத்து கொடுத்தது தப்புன்னு அப்பத்தான் அவனுக்கு புரியும்.

‘படிப்பு” என்றவுடன் அவர் கோபம் தணிந்திருந்ததையும்,ஆனாலும் படிப்பு என்றாலும் தவறு தவறுதான் என்று அவரின் கருத்து எனக்கு ஒரு பழமொழியை மாற்றி சொல்ல தோன்றியது

“கழுதைக்கும்தெரியும் கற்பூர வாசனை” 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அந்த தோட்டத்தில் ஏராளமான காய்கறிகள்,பழங்கள் காய்த்து இருந்தன. ஒரு பக்கம் கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,தக்காளி, பாகற்காய், போனறவைகளும், மறு புறம் ஆங்கில வகை காய்கறிகளான பீட்ரூட், நூல்கோல், காலி பிளவர், போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் அன்னாசி, எலுமிச்சை,பிளம்ஸ், போன்ற பழ ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க,ஏங்க சத்தம் கேட்டு கண்விழித்த பாபுவுக்கு முன் அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு போய் மூஞ்சிய கழுவிட்டு வந்து பேப்பரை படிச்சுட்டு இந்த காப்பிய குடிங்க, என்று அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு சென்றாள். இவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அக்காவின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நலம் விசாரிப்புக்கள் முடிந்தவுடன், அக்கா மாமாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவரு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு,பக்கத்துல ஒரு "பிளாட்" விலைக்கு வருது வாங்கிப்போடுங்க, அப்படீன்னா மாட்டேங்கறாரு! அக்கா என்னிடம் சொன்னதும் நான் அவளுக்கு ஆதரவாய் பேசுவேன் என ...
மேலும் கதையை படிக்க...
வளைந்து வளைந்து செல்லும் அந்த மலைச்சரிவில் அநாயசமாய் காரை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேசின் திறமை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பிரமிப்பை தந்து கொண்டிருக்கலாம். ஆனால் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவனின் மனமோ பெளர்ணமி நிலவின் ஈர்ப்பில் கொந்தளித்து கொண்டிருக்கும் கடலின் நிலையில் ...
மேலும் கதையை படிக்க...
அடர்ந்த கானகத்தில் உள்ள ஒற்றயடி பாதையில் நடு இரவில் நிலா வெளிச்சத்தில் குதிரை ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இரவிலும், குதிரையின் மீது அமர்ந்திருந்தவன் விழிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தவாறே, கடிவாளத்தை கையில் பிடித்த வண்ணம் குதிரையின் அசைவுகளை ...
மேலும் கதையை படிக்க...
எலுமிச்சம்பழத்தின் ஆசை
ஏக்கம்
ஆகாயத்தில் வாழ நினைப்பவர்கள்
மகேசும் பாபுவும்
முடி துறந்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW