கழிவு நீரில் ஒளிரும் நிலவு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 9,526 
 

இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார்.
“”யெஸ்…”
“”சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.”
சங்கரலிங்கம் பெயரைக் கேட்டதும், மனதில் பரவசம் ஏற்பட்டது.
எதிரில் உட்கார்ந்து பிசினஸ் பேசிக் கொண்டிருந்த கிளையன்ட்டுகளிடம் எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு, “”உடனே கனெக்ட் பண்ணுங்க…” என்றார் ஆபரேட்டரிடம்.
அடுத்த நொடி, லைனில் ஒரு திடமான குரல்…
“”தம்பி சுந்தர்… நல்லா இருக்கீங்களா… என்னை நினைவிருக்கிறதா?”
கழிவு நீரில் ஒளிரும் நிலவு“”என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க… உங்களை எப்படி மறப்பேன். உங்கள் உருவத்தை என் மனசுல மாட்டி வச்சு, ஆராதனை பண்ணிகிட்டிருக்கேன் சார். சொல்லுங்க சார்… நான் என்ன செய்யணும்?”
“”எப்பவோ கொஞ்ச நாள் என்னோடு இருந்தீங்க… இன்னைக்கு பிசியான தொழிலதிபரா வளர்ந்த பின்னும், என்னை நினைவு வச்சிருக்கீங்களே…”
“”இன்னைக்கு வளர்ந்திருக்கேன்னாலும், அதற்கு அந்த நாளில், உங்களைப் போன்றவங்க செய்த உதவிகள் தானே சார் அடித்தளம்…”
“”நல்லது. நான் புதுசா, “சாதனைச் சிற்பிகள்’ன்னு பத்திரிகை ஆரம்பிச்சு நடத்திகிட்டிருக்கேன். பத்திரிகைக்கு உங்க பேட்டி வேணும்… பத்திரிகையை பார்த்திருப்பீங்க. வளரும் தொழிலதிபர்கள், வளர்ந்த தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகளை, கடந்து வந்த சோதனைகளை, எடுத்துக் கொண்ட முயற்சிகளை வெளியிட்டு, அவர்களை கவுரவிப்பதோடு, தொழில் முனைய ஆர்வமாக உள்ள இளம் சமுதாயத்துக்கு, ஒரு வழிகாட்டுதல் செய்யும் நோக்கத்தோடு இதழை நடத்தி வர்றேன். இந்த மாதம் உங்கள் பேட்டியை வெளியிட தீர்மானிச்சிருக்கோம்; அப்பாய்ன்மென்ட் வேணும்.”
“”உங்களுக்கு அந்த பார்மாலிட்டியே வேணாம் சார். எனி டைம் நீங்க வரலாம். என்னையே அங்கு வரச் சொன்னாலும் சரி.”
“”மாலை நான்கு மணிக்கு, மணிகண்டன்னு நம்ம நிருபரை அனுப்பி வைக்கிறேன்.”
“”சரி சார்… அப்படியே விளம்பர டேரிபும் கொடுத்து விடுங்க.”
அவர் மகிழ்ச்சியோடு, “”சரிங்க தம்பி…” என்றார்.
மாலை நாலு மணிக்கு, மற்ற அப்பாய்ன் மென்டுகளை கேன்சல் செய்துவிட்டு, நிருபர் மணிகண்டனுக்காக காத்திருந்தார்; நிருபரும் வந்தார்.
அவரைப் பார்த்ததும், என் உற்சாகம் வற்றிவிடும் போலிருந்தது.
பிசினஸ் மேகசின் ரிப்போர்ட்டர், கொஞ்சமாவது ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா? ஏதோ பஞ்சத்தில் அடிப்பட்டவர் போல பலவீன தோற்றம்; முகத்தில் சோர்வு. கடனே என வந்தவர் போல காணப்பட்டார்.
நான் பத்திரிகையில் வேலை பார்த்த போது, இன்டர்வியூ என்றால், சாப்பிட காசு இல்லாவிட்டாலும், வாடகைக்காவது சலவை டிரஸ் எடுத்து போட்டுக் கொண்டு போவேன்.
இன்டர்வியூ கொடுப்பவர் இருப்பிடத்துக்கு, பஸ்சிலோ, நடந்தோ தான் போவேன். சம்பந்தப்பட்டவரை பார்ப்பதற்கு முன், அந்த ஏரியா அருகில் இருக்கும் சலூனுக்கு போய், முகத்துக்கு தண்ணீர் ஸ்ப்ரே பண்ணி, கர்ச்சீப்பில் துடைத்து, பேப்பரில் மடித்து தயாராக வைத்திருக்கும் பவுடரை எடுத்து பூசி, தலைமுடி, மீசை கிருதா எல்லாவற்றையும் சீப்பால் சரி செய்து, உற்சாகப்படுத்திக் கொள்வேன்.
“என்ன தம்பி… பொண்ணு பார்க்கப் போறீயா… இல்ல சினிமா சான்ஸ் கேட்டுப் போறீயா?’ என்று சலூன் கடைக்காரர் கேட்பார்.
பேட்டி காண்கிறவர் உற்சாகமாக இருந்தால் தான், கொடுப்பவரும் உற்சாகமாக பேசுவார். தெருமுனையில் நிற்கும் ஆட்டோவில் பத்து ரூபாய் கொடுத்து, பந்தாவாக போய் வாசலில் இறங்குவேன்.
என் தோற்றம், வந்த விதம் பார்த்து, பேட்டி கொடுப்பவர் அசந்து விடுவார். போதாதென்று, ஆங்கிலத்தில் பேச்சை துவங்குவேன்… “அயம் சுந்தர்… ப்ரம் சங்கரலிங்கம் பப்ளிகேஷன்…’ என்பேன். அதற்கு மேல் தெரியாது… தமிழுக்குத் தாவி விடுவேன்.
“நல்ல சாமர்த்தியம், சமயோசிதம்… நல்லா வருவே…’ என்று சங்கரலிங்கம் மெச்சுவார்.
ஆள் பாதி, ஆடை பாதி என்று சும்மாவா சொன்னார்கள்.
வந்திருக்கும் நபரோ, தோற்றம் குறித்து எந்த அக்கறையும் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
அனுப்பி விடலாமா என நான் யோசித்த வேளையில்தான், இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்ற, எங்கே என யோசித்தேன். இப்போதுதான் நான் இந்த ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர். இந்த லைனுக்கு வருவதற்கு முன், சாப்பாட்டுக்காக, இருப்பிடத்துக்காக பல வேலைகள் பார்த்திருக்கிறேன். பில் கலெக்டர், வாட்ச்மேன், சர்வர், நிருபர், உதவி இயக்குனர் என விரல் விட்டு எண்ணிக் கொண்டே போகலாம்.
ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவோ நபர்கள் அறிமுகம். சில முகங்கள், நினைவில் நிற்கவில்லை; சில முகங்கள், சிறிது நாள் நினைவில் இருந்துவிட்டு, மறைந்து விட்டது. ஆனால், ஒரு சிலரை எப்போதும் மறக்காது. கெடுதல் செய்தவர்களை உடனுக்குடன் மறந்து விடுவேன்; நல்லது செய்தவர்களை மறந்தது கிடையாது.
அப்போது எனக்கு உதவிய பலரை, இப்போது, என் நிறுவனத்தில் வேலைக்கு வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவன் நான். இவர், ஏதோ ஒரு வகையில் எனக்கு உதவியிருக்கிறார் என்பதை மட்டும் மனம் சொன்னது.
நிருபரை உள்ளே அழைத்தேன்.
“”வாங்க மணிகண்டன்… உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க… காபி, டீ…”
“”பரவாயில்லை சார்…”
காபி சொல்லிவிட்டு, “”உங்களை எங்கோ பார்த்திருக்கேன்… எங்கேன்னு சரியா தெரியலை. என்னை எப்பவாவது பார்த்ததுண்டா? இதுக்கு முன்னால் நீங்கள் எங்கெங்கே வேலை பார்த்திருக்கீங்க?”
அவர் சிறு புன்கையுடன், “”உங்களை எங்கேயும் பார்க்கலை… சினிமா புரொடக்ஷன் கம்பெனியில வேலை பார்த்திருக்கேன்… டெலி சீரியல் ரைட்டர்கிட்ட உதவியாளரா இருந்திருக்கேன்… கிரானைட் ÷ஷா ரூம்ல புளோர் இன்சார்ஜ்… பைனான்ஸ் கம்பெனி… இப்படி நான்கைந்து இடத்துல. ஒவ்வொரு இடத்திலும், இரண்டு வருஷம், மூணு வருஷம்ன்னு வேலை பார்த்திருக்கேன்.”
அவர் பட்டியலிட்டதும், மின்னலாய் அவர் குறித்த விவரங்கள், மளமளவென்று மனத்திரையில் ஓடியது.
மணிகண்டன் திருவண்ணாமலை மாவட்டத்துக்காரர்; விவசாயக் குடும்பம். டிகிரி முடித்து, நிறைய கனவுகளோடு சென்னைக்கு வந்தவர். அவரை எதிர்பார்த்து, தம்பி, தங்கைகள் எதிர்காலத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்தனர்.
“ஒரு பெரிய வெற்றி… கணிசமான பணம். ஒரே நாளில் என் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துடணும். அது எதுன்னுதான் தேடிக்கிட்டிருக்கேன்…’ என்று, ஒரு மதியானப் பொழுதில், நான் வாட்ச்மேனாக வேலை பார்த்த ஓட்டலின் பக்கத்து காம்ப்வுண்டில் இயங்கி வந்த சினிமா கம்பெனியின் படிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார் மணி என்ற மணிகண்டன்.
அவ்வப்போது, மீதமாகும் டிபனை என்னிடம் கொடுத்து, என் பசியை தீர்த்தவர்.
குறைவான நாட்களே பழக்கம். ஆனாலும், பசி தீர்த்த பரமாத்மா!
அந்த சம்பவத்தை நினைவுபடுத்தினேன்.
“”அவரா நீங்கள்!” என வாய் பிளந்தார்.
“”என்னை விடவும் பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய திறமையும், அவசியமும் உள்ள உங்களை, சாதாரணமா பார்க்கிறேனே… பெரிய, பெரிய இடங்கள்ல இருந்திருக்கீங்க… ஏதாவது ஒன்றை பிடிச்சுகிட்டு மேலே வந்திருக்கக் கூடாதா…” என, என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
“”இடம் பெருசா இருந்தால் போதுமா…” என நிறுத்தினார்.
சிறிது காபியை குடித்துவிட்டு, “”மனசுக்கு ஒப்பலைன்னா எப்படி சார் ஒரு இடத்துல நிலைக்க முடியும். ரைட்டர்கிட்ட ரெண்டு வருஷம் இருந்தேன். வெளியில தான் நல்ல பேர். உள்ளே எல்லாம் உளுத்தல். உதவியாளர்களுக்கு காசே தர மாட்டார். ஒரு மொட்டை மாடி ரூம்ல அடைச்சு வைப்பார். மூளைய கசக்கிப் பிழிந்து ஐடியா கொடுப்போம்; சீன் பிடிப்போம். வசனம் முக்கால்வாசி நாங்கள் தான் எழுதுவோம். எங்களை சாப்ட்டிங்களான்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார்.
“”அவர் மட்டும், நேரம் தவறாம வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுந்ததும், அலங்காரம் பண்ணிகிட்டு வந்துடுவாரு… போதாதற்கு, கூடவே ஒரு குட்டி வேற… அசிஸ்டென்ட்ன்னு சொல்லிக்குவாரு…. பிடிக்கலை சார்… வந்துட்டேன். இப்போது அவர் எழுத்து எடுபடலை, கவனிச்சிங்களா…” என்றபோது, அவரிடம் சிறு சந்தோஷம் உண்டாவதை கவனித்தேன்.
“”அடுத்து நான் வேலை பார்த்த இடத்துல, ரெண்டு சீரியல், “ஓஹோ’ன்னு போச்சு. அங்கே, “டைரக்டர்’ன்னு சொல்லிக்கறவங்க பண்ற அலப்பரை தாங்க முடியாது. தவிர, சினிமா கம்பெனிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அட்டகாசம் நடக்குது…” என்று வாய் குமட்டினார்.
இன்னும் இரண்டு இடங்களைப் பற்றியும், ஏறக்குறைய ஒரே மாதிரியான அபிப்ராயத்தைத் தான் சொன்னார்.
கொஞ்சம் விட்டால், “இங்கே எல்லாம் அசிங்கம், அசிங்கம்… எனக்கு எதுவுமே வேண்டாம்… எனக்கு எதுவுமே பிடிக்கலை…’ என, முகத்தை கிழித்துக் கொள்வார் போலிருந்தது.
நான் நிதானமாக, “”ஓ.கே., மணிகண்டன்… ஒரே ஒரு கேள்வி… நீங்கள் வேலை பார்த்த இத்தனை இடங்களிலும், உங்களோடு வேலை பார்த்தவர்கள் ஒருத்தர் கூடவா முன்னேறி வரலை? எல்லாரும், உங்களைப் போல வெறுத்து ஓடி வந்துட்டாங்களா?”
“”அப்படி சொல்ல முடியாது.” சற்று யோசித்து, “”ரைட்டர்கிட்டருந்து வந்தவர், தனியா, சொந்தமா எழுதிகிட்டிருக்கார். இப்ப ஒரு புது சீரியல் ஓடிகிட்டிருக்கே, “பூங்குருவி’ன்னு… அதோட டைரக்டர், என் கூட வேலை பார்த்தவர் தான். கிரானைட் கடையிலிருந்து இரண்டு பேர், தனிக் கடை போட்டு நல்லாத் தான் இருக்காங்க.”
“”அவங்களும், உங்களைப் போல சூழ்நிலையில் இருந்து, சக்சஸ்புல்லா வெளிவந்தவங்க தானே… அவங்களுக்கெல்லாம் சாத்தியமான ஒண்ணு, உங்களுக்கு ஏன் சாத்தியமாகலை? இத்தனைக்கும், லட்சியத்தோடு சென்னை வந்த நீங்க, சில விஷயங்களை சகிச்சுகிட்டு, “நாம் இந்த தவறெல்லாம் செய்யக்கூடாது…’ன்னு தீர்மானிச்சு, தொழிலைக் கத்துகிட்டு முன்னேறாம, விட்டுட்டு விலகிப் போய்கிட்டிருந்தால், கடைசியில் நிற்க இடமில்லாமல் போகாதா?
“”ஒரு அரண்மனையைப் பார்க்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, நாம் அந்த அரண்மனையின் அழகையும், கம்பீரத்தையும் தான் பார்க்கணும். அங்குள்ள தர்பார், அந்தப்புரம், மாடங்கள், சாளரங்கள், உப்பரிகைகளை எல்லாம் ரசிக்கணும். அதை விட்டுட்டு, அங்கே ஓரத்தில் ஓடும் கழிவு நீரைப் பார்த்துட்டு… அரண்மனையே அசிங்கம்ன்னு யாராவது ஓடி வருவாங்களா…
“”கழிவு நீரில் கூட, பகல் நேரத்தில் சூரியனும், இரவு நேரத்தில் சந்திரனும் அழகாய் பிரதிபலிப்பதை கண்டு ரசிக்க முடியும். எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்.
“”அதனால, தயவு செய்து, உங்கள் பார்வையை, கண்ணோட்டத்தை மாத்திக்குங்க. போனவரை போகட்டும்… இனிமேலாவது விழிச்சுக்குங்க… காலமும், வாய்ப்புகளும் நிறையவே இருக்கு. இப்ப நீங்க வேலை செய்யற பத்திரிகையின் ஓனரைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அதைவிட எனக்கு நன்றாகவே தெரியும். நான் அவர்கிட்ட வேலை பார்த்திருக்கேன். அவர்கிட்டயும் சில வீக்னஸ் உண்டு; ஆனால், நல்ல மனிதர்.
“”திறமைசாலிகளை கைத் தூக்கி விடுவார். எனக்கும் நிறைய உதவி செய்திருக்கிறார். அதை நீங்களும் பயன்படுத்திக்குங்க. அடுத்த முறை பார்க்கும்போது, “அய்யோ’ன்னு பரிதாப்படறது போல இருக்கக் கூடாது. “அட!’ன்னு ஆச்சரியப்படறாப்ல இருக்கணும். சரியா?” என்றேன்.
பிறகு, சுருக்கமாக பேட்டி கொடுத்து, கையோடு விளம்பரமும் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
தொய்வாக உள்ளே வந்தவர், இப்போது நிமிர்ந்து, உற்சாகமாக நடந்து போவதைப் பார்க்கும்போது, என் மனதில் நம்பிக்கை பூ பூத்தது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *