Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கல்லூரி நினைவுகள்

 

யாரோ பொட்டுப்பட்டாசை தரையில் போட்டு ஷூவால் தேய்த்து வெடிக்கும் சப்தம் கேட்டது, உடனே பாடம் நடத்திக்கொண்டிருந்த லெக்சரர் சரவணன் திரும்பிப் பார்த்து சப்தம் வந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்.

“யார்ரா இப்படி பண்ணது?” அவர் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே இன்னொரு பக்கத்திலிருந்து அதே போல் சப்தம் கேட்டது. அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க மீண்டும் இந்தப்பக்கம் வெடிக்கும் சப்தம். இவர்களையெல்லாம் திருத்த முடியாதுன்னு திரும்பி கரும்பலகைக்கு நடக்க யத்தனிக்கு நாலைந்து இடங்களிலிருந்து அந்தச் சப்தம் வந்தது.

அவர் தான் கையில் வைத்திருந்த சாக்பீஸை கரும்பலகையில் வீசியெறிந்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் படித்த கல்லூரியில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பொழுது இந்தச் சம்பவம் தான் முதலில் நினைவில் வந்தது. என் வாழ்நாளில் நான் படித்த ஒரேயொரு கல்லூரி என்றபோதிலும், அது என் மனதில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. பல சமயங்களில் இதை நினைத்து நான் வருந்தியிருக்கிறேன். பலர் தங்கள் கல்லூரி நினைவுகளைப்பற்றி கதைகதையாய்ச் சொல்லும் பொழுது எனக்கு தோன்றியிருக்கிறது ஏன் நமக்கு மட்டும் இதுபோன்ற ஒரு அற்புதமான எண்ணம் நம் கல்லூரியைப்பற்றி இல்லையென்று.

அப்படியொன்றும் என் கல்லூரி வாழ்க்கை மோசமானதில்லை, ஆனாலும் என் அடிமனதில் ஒட்டாமல் போனது, இப்பொழுது கூட என் அம்மாவின் வேண்டுதலுக்காக வந்திருக்கிறேன். 12ம் வகுப்பு முடிந்து நான் வாங்கிய மதிப்பெண் காரணமாக இந்தக்கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. ஒரு வகையில் இந்தக்கல்லூரியின் செயலாளர் என் அம்மா வழித்தாத்தாவிற்கு கொஞ்சம் வேண்டப்பட்டவர். அதனால் சுலபமாக உள்நுழைந்துவிட்டேன். இன்று கணிப்பொறித்துறையில் வேலைப்பார்த்து வந்தாலும் என் மனதில் இந்தக் கல்லூரி அதற்கு எந்தவிஷயத்திலும் உதவவில்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

அம்மாதான் கண்டிப்பாய் சொல்லியிருந்தார்கள், இந்தவருட விடுமுறையில் ஒரு நாள் நிச்சயமாக கல்லூரி செயலாளரைப்போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று. நானும் நல்லப்பிள்ளையாய் ஸ்வீட் எல்லாம் வாங்கிக்கொண்டு கல்லூரியின் செயலாளரைப் பார்க்கவந்திருந்தேன். அந்த அம்மையாருக்கு என்னைப்பார்த்ததும் ஆச்சர்யம், எனக்கும் தான். அவர்கள் என்னை நினைவில் வைத்திருந்தது.

“வணக்கம் மேடம்.”

“ஏய் நீ மோகன் தானே, எப்புடியிருக்க, புனேவுல வேலைப்பார்க்கறதா உங்க தாத்தா சொன்னாரு. வேலையெல்லாம் நல்லாயிருக்கா?” அவர் கேட்டுவிட்டு மேலும் கீழுமாய் என்னைப்பார்த்தார்.

“ரொம்ப சூப்பராயிருக்கு மேடம், நீங்க நல்லாயிருக்கீங்களா, காலேஜ் எப்படியிருக்கு?” அவர்களிடம் இப்படி நான் இதற்கு முன்னால் பேசியதில்லை, பார்த்தாலே பயப்படுவேன் பேசுவதாவது ம்ஹும். எல்லாம் என் வேலை கொடுத்திருந்த தைரியமும் அந்தஸ்தும்தான் இப்படி சாதாரணமாகவாவது பேசுவதற்கு.

கல்லூரி மாறாமல் அப்படியே இருந்தது, எங்கள் காலத்தில் வைத்த சில செடிகள் தற்பொழுது மரங்களாய் மாறியிருந்ததைத்தவிர அதிகமாய் ஒன்றும் வித்தியாசமில்லை.

“மோகன் நீ எனக்கு ஒரு உதவி செய்யணுமே?” செயலாளர் கேட்க,

“சொல்லுங்க மேடம். என்னால முடிஞ்சா நிச்சயமா பண்றேன்.” வாய் பேசினாலும் அவங்க என்ன கேக்கப்போறாங்கன்னு மனசு கணக்குப்போடத் தொடங்கியது. டொனேஷன் அது இதுன்னு கேட்டுறபோறாங்கன்னு பயம் வேற.

“இல்ல, நம்ம புள்ளைங்களுக்கு இப்பயிருக்குற வேலை வாய்ப்பைப்பத்தி, என்ன படிச்சால் வேலை கெடைக்குங்குறதப்பத்தி கொஞ்சம் சொல்றியா?”

எனக்கு இதற்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை, இதுக்குத்தான் அம்மாகிட்ட அப்பவே சொன்னேன் நான் கல்லூரிக்கு போகமாட்டேன்னு, என் வாழ்க்கையிலேயே நான் வெறுக்குற ஒரு விஷயம் லெக்சர் கொடுக்குறது. ஆனா இப்ப கல்லூரி மாணவர்கள் மத்தியில் லெக்சர் கொடுக்கணுமா அப்படின்னு யோசிச்சேன். சரி வந்துட்டோம் கொடுத்துட்டு போயிருவோம்னு நினைச்சு,

“சரி அதுதான் உங்க விருப்பம்னா செஞ்சுறலாம் மேடம்.”

சொல்லிமுடித்த கையோடு நேராய் என்னை அழைத்துக்கொண்டு மூன்றாம் ஆண்டு கணிப்பொறியறிவியல் வகுப்பிற்கு அழைத்துச்சென்றார். அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த லெக்சரர் செயலாளர் வருவதைப்பார்த்து வெளியில் வந்தார். அவரிடம் சுருக்கமயாய் விஷயத்தை சொன்னார். அந்த லெக்சரரை நான் இதற்கு முன்னால் பார்த்ததில்லை, புதியவராய் இருக்கலாம்.

பின்னர் வகுப்பிற்குள் நுழைந்தவர் நேராய் மாணவர்களிடம்,

“ஸ்டுடண்ட்ஸ், இவரு மோகன்தாஸ் நம்ம காலேஜில் தான் படிச்சாரு. இப்ப புனேல ஒரு பெரிய கம்பெனியில வேலை பார்க்கறாரு. நான் கேட்டுக்கிட்டதுக்காக உங்கக்கிட்ட இப்ப இந்தத்துறையில இருக்கிற டெவலப்மெண்ட்ஸ் பத்தி, எம்ளாய்ன்மெண்ட் பத்தி சொல்வாரு. ஒரு முக்கியமான விஷயம் ஆளு ரொம்ப அதிகமா பேசமாட்டாரு அதனால விஷயத்தை நீங்கத்தான் கேட்டு வாங்கணும்.

இன்னும் ஞாபகமிருக்கு இவரு இதே கிளாஸில் படிக்கிறப்போ, இவரு கூடப்படிச்சது ஒரு ரௌடி குரூப். ரௌடி குரூப்னா எங்களால கூட கண்ட்ரோல் பண்ண முடியாத அளவிற்கு பிரச்சனை பண்ணினவங்க. அந்தப் பசங்க பண்ணின பிரச்சனைகளால இவர மாதிரி நல்லா படிக்கிற பசங்கள் நேரடியா பாதிக்கப்பட்டிருக்காங்க. பாதிநாள் இவங்களுக்கு கிளாஸே நடக்காது ஒரே பிரச்சனைதான். இருந்தாலும் இன்னிக்கும் இவங்க கிளாஸ்ஸ படிச்ச நல்ல பசங்க எல்லாம் வாழ்க்கையில நல்ல நிலைமையில இருக்காங்க.

ஒரு சூழ்நிலையில யூனிவர்ஸிட்டியில் சொல்லி, இவங்க வகுப்பையே கல்லூரியிலிருந்து நீக்கி அத்தனை பேரையும் வேற காலேஜூக்கு மாத்திரலமான்னு நானும் சேர்மேனும் யோசிச்சோம். ஆனால் இவரை மாதிரி நல்ல பசங்க வாழ்க்கையும் பாதிக்கப்படும்னு தான் அப்படி செய்யலை. இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா, இவரு படிச்ச சமயத்தில இருந்த லெக்சரர்ஸை விட இப்ப இருக்கிறவங்க நிறையப்படிச்சவங்க, நீங்க இப்ப அனுபவிக்கிற பிரச்சனையை விட இவங்க அதிகமா பிரச்சனையை அனுபவிச்சங்க, ஆனாலும் இவங்க பக்கத்திலிருந்து எங்களுக்கு நல்ல பீட்பேக்ஸ்தான் வந்திருந்தது.

இப்பக்கூட பாருங்க, வருஷத்துக்கு ஒரு தடவைதான் வீட்டிற்கே வரும் இவர், நம்ம காலேஜை பார்க்கிறதுக்காக இங்க வந்திருக்கார். அதனால இந்த ஆப்பர்சூனிட்டியை நீங்க நல்லா உபயோகப்படுத்திக்கணும்.”

செயலாளர் இப்படி சொல்லச்சொல்ல எனக்கு பழங்கால ஞாபகங்கள் வரத்தொடங்கின. அந்த காலத்தில மத்த பசங்க லெக்சரர்ஸ்ஸை ஒம்பிழுத்தாங்கன்னு நாங்க இவர்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினா எங்களைத்தான் திட்டுவார் இவரு. நாங்களும் ஆரம்பத்தில் சொல்லிச்சொல்லி பார்த்துட்டு பின்னாடி விட்டுட்டோம். ஏகக்கோபமாய் வரும் எங்களுக்கு, லெக்சரர்ஸ்ஸை கெட்ட வார்த்தை சொல்லிதிட்றது, லேப் அட்டண்டரை கையைப்பிடித்து இழுத்தது அதனால் வந்த பிரச்சனையில் கிளாஸையே பெஞ்சை எடுத்துவிட்டு தரையில் உட்காரச் சொன்னது தண்டனையாய்.

நாங்கள் ஆறுபேர் மட்டும் உட்கார மாட்டோம் என்று சொல்ல இவர்தான் வந்து கண்டிப்பாய் உட்காரச்சொன்னது. அன்றைக்கு விட்டதுதான் மனதை இன்னும் இந்தக் கல்லூரியைப்பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாமல் போனது. எங்களுக்கு நாங்கள் எவ்வளவுதான் படித்தாலும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என்றவருத்தம் இருந்தது. இன்னிக்கு செயலாளர் சொன்ன பிறகுதான் புரிந்தது அவர்கள் சூழ்நிலையும் அவர் சொல்லியிருந்தபடி எங்கள் வகுப்பை கல்லூரியிலிருந்து எடுத்து யூனிவர்ஸிட்டியில் இணைத்திருந்தால் நாங்கள் எப்பாடுபட்டிருந்தாலும் இந்தநிலைக்கு வந்திருக்க முடியாது. ஒரு வேளை எங்கள் கல்லூரியைப்பற்றி நான் கொண்டிருந்த அவமதிப்பிற்கு செயலாளர் நாங்கள் நன்றாய்ப் படித்தும், எங்களைக் கண்டுகொள்ளாதது போல் இருந்ததுதான் காரணமா என்று யோசிக்கத் தொடங்கினேன்.

அவர் சொல்லிவிட்டு என்னிடம் வகுப்பைக் கொடுத்துவிட்டு வெளியேறினார். பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டார். நான் ஆரம்பித்தேன்,

“ஸ்டுடண்ட்ஸ் மேடம் கொஞ்சம் அதிகமா என்னைப்பத்தி சொல்லிட்டு போறாங்க. அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, நான் உங்களுக்கு பாடமெல்லாம் எடுக்கமாட்டேன். முதல்ல உங்கக்கிட்ட சில கேள்விகள் அப்புறம் நீங்க என்கிட்ட கேள்விகள் எதுவும் இருந்தால் கேட்கலாம்.”

சொல்லிவிட்டு,

“உங்கள்ல யாரு இந்த வகுப்பில் முதல் இடத்தில் இருக்குறது கையைத் தூக்குங்க பார்க்கலாம்.” நான் கேட்டதும்,

முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் முதலில் கையைத் தூக்கினாள், கொஞ்ச நேரத்திலேயே கடைசிபெஞ்சிலிருந்து ஒரு பையனும் கையைத்தூக்கினான். இந்தச் செயலால் வகுப்பறை கொஞ்சம் சிரித்தது. எனக்கும் புரிந்தது.

“சரி இதுவரைக்கும் அரியரே இல்லாம பாஸ் பண்ணினவங்க எத்தனை பேர்?”

ஆறேழு பேரும் கடைசி பெஞ்ச் பையனும் கைகளைத் தூக்கினார்கள்.

அதன்பிறகு எங்கள் வேலைசம்மந்தமான தற்போதைய நிலவரத்தையும் வேலைவாய்ப்பைப்பற்றியும் பத்துநிமிடங்களில் சுருங்கச்சொல்லிவிட்டு,

“இப்ப உங்க நேரம், உங்களுக்கு ஏதாவது கேள்வியிருந்தா கேட்கலாம்.” நான் சொன்னதும் தான் தாமதம். அந்த கடைசிபெஞ்ச் பையன் எழுந்து,

“ஏங்க நீங்க படிச்சப்பையும் கேன்டீன்ல சாப்பாடு இப்படித்தான் இருக்குங்களா?”

அவன் கேட்டது எனக்கு நிச்சயமாய் சிரிப்பை வரவழைக்கவில்லை என்றாலும் எல்லா சமயங்களிலும் இதுபோன்ற மாணவர்கள் இருக்கிறார்கள், நம்மைப்போன்ற மாணவர்களும் இருக்கிறார்கள், கல்லூரியும் இருக்கிறது, செயலாளரும் இருக்கிறார் என்ற எண்ணம் தான் வந்தது. எதனால் கொஞ்சம் கொஞ்சமாய் கல்லூரியைப்பற்றிய என் இருண்டக்கருத்துக்கள் மாறும் நானும் இன்னும் சில காலத்தில் என் கல்லூரியைப்பற்றிய கதைகளை மற்றவர்களிடம் சொல்வேன் என்ற நம்பிக்கையும் வந்தது. அப்படி சொல்லும் பொழுது அந்த பொட்டுப்பட்டாசு நிகழ்ச்சியைத்தான் முதலில் சொல்ல வேண்டும் என் நினைத்த பொழுது சிரிப்புத்தான்வந்தது.

- குந்தவை வந்தியத்தேவன் [kundavai@gmail.com] – டிசம்பர் 2005 

தொடர்புடைய சிறுகதைகள்
கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…” “பேரே இல்லை…” “பேரே இல்லையா…” “பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு” “மனுஷங்களாவது இருப்பாங்களா” “ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா… வாய்ப்பிருக்கலாம்” “துறவிகள்…” “சாமியார்க வந்து சேர்ர எடம்கற எண்ணத்திலெ கேக்கறையா.” “எங்காச்சும் போய் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை வாயில் அடைத்தால் தாகம் எடுக்காமல் என்ன செய்யும்? கண்ட இடத்தில், அசந்தர்ப்பமான இடத்தில் எல்லாம் இந்தத் தொந்தரவுதான். காப்பி, கலர் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் ...
மேலும் கதையை படிக்க...
முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் 'கா..கா' என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்று ...
மேலும் கதையை படிக்க...
பிரபல்யம் வாய்ந்த அந்த ஆண்கள் கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் திகழ்ந்தது. ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து பல மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள். தேசியரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களையும் அந்தக் கல்லூரி உருவாக்கியிருந்தது. மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் ...
மேலும் கதையை படிக்க...
தீவு
நம்பிக்கை
இரு கலைஞர்கள்
அண்டங்காக்கை
‘ராக்கிங்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)