கலை பித்தன்

 

“இந்த படம் மட்டும் வெளியில வந்து ஓடிடுச்சுன்னா, முதல்ல இவளை வேலைய விட்டு நிக்க சொல்லிடுவேன்” சொல்லிக்கொண்டிருந்தார் மாமன் முருகேசன்

கேட்டுக்கொண்டிருந்த முருகனுக்கு சலிப்பாக இருந்தது. பின்ன என்ன? இதோடு நாற்பதாவது தடவையாக சொல்கிறார். அங்கே இவரின் வைத்திய செலவுக்கு அக்கா யாரிடமெல்லாமோ கையேந்திக்கொண்டிருக்கிறாள்.

நகைய வச்சு கடன் வாங்கலாமென்றாலும் எதாவது இருந்தால்தானே. பெரிய கலை சேவை செய்கிறாராம். அக்காளை கட்டி கொடுக்கும்போதே இந்த அப்பன் விசாரிச்சிருக்கணும். ம்..அவரை சொல்லி என்ன பிரயோசனம், பொண்ணை கொடுக்கும்போது சொந்தமா பேக்கரி வச்சிருந்தாரே, ஒரே பையன், காடு தோட்டம் இல்லையின்னாலும், அவங்க அப்பன், ஆத்தா, இரண்டு பேரும் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருந்தாங்க. அப்பவெல்லாம் கோயமுத்தூருல மில்லுல வேலையின்னா கவர்ன்மெண்ட் வேலைய விட மதிப்பு. பையனுக்கு வேற சொந்த பிசினசு. நல்ல சம்பந்தம், பிடிச்சு போட்டுட்டாங்க. இரண்டு பெத்த பின்னாடி இவரு மனசுக்குள்ள இருந்த கலை ஆர்வம் பொங்கி வெளிய வந்திடுச்சாம். அக்கா கிட்ட அப்படித்தான் சொல்லி சென்னைக்கு போனாரு.

அங்க போய் நாய் படாத பட்டுட்டு, அக்காகிட்ட ஏதாவது பணம் அனுப்புன்னு கெஞ்சவும், அக்கா ஏதோ பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா போய் சம்பாரிச்சு பணத்தை அனுப்பிச்சா. அவரு அக்கா காசுல கலை சேவை செய்யறதுக்கு போராடிட்டு இருந்தாரு.இப்ப ஆஸ்பிடல்ல வந்து படுத்தாச்சு. நினைக்கும்போதே முருகனுக்கு வயிறு எரிந்தது.

முருகனின் கவலை நியாயமானதுதான். அக்காவிடம் ஒவ்வொரு முறையும் சண்டையிட்டு கொண்டிருக்கிறான். மாமாவை வர சொல்லு என்று. இவள் விட்டேத்தியாய் சிரிப்பாள். கரையோரமா இருக்கும்போது இழுத்து போட்டுருக்கணும், இப்ப நடு கடலுக்குள்ள போன மனுசனை என்ன பண்ண சொல்றே.

நியாயம்தான், சினிமா வாய்ப்பை தேடி தேடி அலுத்து இவரோடு இன்னும் இரண்டு மூன்று பேர்கள் கூட்டணி வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்து விட்டனர். அதை பற்றி மாமா அக்காவுக்கு இப்படி கடிதம் எழுதுகிறார்

கடைசியில் ஜெயித்து விட்டேன் காமாட்சி. எனக்கு அருமையான ஒரு வாய்ப்பு வந்து விட்டது. கேட்டால் நம்ப மாட்டாய், ஒரு படத்துக்கு என்னை “டைரக்டராக” ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அக்காவுக்கு ஒரே மகிழ்ச்சி, அப்பாடி இந்த மனுசனுக்கு ஒரு வழியா வாய்ப்பு கிடைச்சுடுச்சு. என்று வீட்டாரிடம் வந்து சொல்லி சொல்லி மாய்ந்து போனாள். முருகன் படிப்பு ஏறாமல் மில் வேலைக்கு சென்று கொண்டிருந்தான். அவனுக்கு அக்கா எப்படியோ சந்தோசமாய் இருந்தால் போதும் என்று மட்டுமே சிந்திக்க முடிந்தது. அப்பனுக்கும் அம்மாளுக்கும் இதை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், மாமாவின் கலை சேவையால் அக்கா படும் துன்பங்களை கண்ணார கண்டு கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அக்காவின் புன்னகை முகமே கொஞ்சம் சந்தோசத்தை கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒரு வாரம் கழித்து வந்த மாமா அப்பொழுதுதான் உண்மையை மெல்ல அவிழ்த்தார் “என்னை டைரக்டராக மட்டுமில்லாமல் இந்த படத்துக்கு புரொடியுஸ் பண்றதுல பார்ட்னரா இருக்க சொல்றாங்க. என்று இழுத்தார். கேள்விக்கணையாய் அக்கா இவரை பார்த்தாள். இந்த பேக்கரிய வித்து அதுல வர்ற பணத்தை இதுல போடலாமுன்னு இருக்கேன்.

அக்காவுக்கு மூச்சே நின்று விட்டது. கொஞ்சம் நியாயமான வேலைக்கார்ர்களால் ஓடிக்கொண்டிருக்கும் பேக்கரியால் இவர்களால் கொஞ்சம் நிம்மதியாக சாப்பிட முடிகிறது. அதையும் இந்த ஆள் தொலைக்க திட்டமிடுகிறான். என்ன சொல்வது இந்த ஆளிடம்?எதுவும் சொல்ல முடியாமல் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றாள்.

பேக்கரி தொலைக்கப்பட்டது.அந்த பணத்தில் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்தது.காமிரா மேனிலிருந்து உதவியாளர்கள் வரைக்கும், மற்றும் நடிகர்களும், நடிகைகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு அட்வான்ஸ் தொகைகளை கொடுத்தனர்.

அதற்கு அக்காவுக்கு இவர் எழுதிய கடிதம் “என்னுடைய இலட்சியத்தில்ஒரு மைல் கல்லை எட்டி விட்டேன்” அடுத்த மைல் கல்லை நோக்கி என் பயணம் சென்று கொண்டிருக்கிறது. இங்கு கொஞ்சம் பணம் தட்டுப்பாடு, உன்னுடைய நகைகளை வைத்து நான்கு இலட்சங்களை அனுப்பி வைத்தால், உதவியாக இருக்கும். கவலைப்படாதே. இத்தனையும் உனக்கு இரட்டிப்பாய் செய்து மகிழவே என் மனம் விரும்புகிறது.

இப்படி எதுகை மோனையாய் எழுதி அக்காவை வசப்படுத்துவதில் மிகுந்த திறமைசாலியாய் இருந்தார். இவளும் எல்லா நகைகளையும் வைத்து நான்குக்கு ஐந்தாகவே அனுப்பி வைத்தாள். இவரைப்போலவே கூட இருந்த நான்கைந்து பேரும் இதே போல் வீட்டாரை கசக்கி பிழிந்த பணத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்க பட்டது.

அடுத்து, அடுத்து, என்று ஒவ்வொன்றாய் விற்கப்பட முருகன் அக்காவிடம் வந்து சண்டையிட்டு கொண்டிருந்தான்.ஒரு வழியாய் படம் முடிக்கும்போது இவர்கள் குடும்பம் அன்றாடங்காய்ச்சியாகும் நிலைமைக்கு வந்திருந்தது

அக்காவின் குடும்பம் இப்பொழுது முழுக்க முழுக்க காமாட்சியின் பெற்றோர்களிடமே வந்து விட்டது. இவர் எப்பொழுதாவது வருவார். யாரும் இவரை ஏன் வருகிறாய்? என்று கேட்பதுமில்லை, ஏன் போகிறாய்? என்று கேட்பதும் இல்லை, .அக்காதான் பேச்சு கொடுத்து கவனிப்பாள்.

ஆயிற்று படத்தை வெளியிட மீண்டும் பணம் கேட்டு அக்காவிடம் நச்சரிக்க அவள் முருகனை கெஞ்சி கூத்தாடி அவன் பேரில் இருந்த நிலத்தையும் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளினாள்.

அடுத்து இவர்கள் ஜாதி தலைவர்களை வரவழைத்து ஒரு விழாவாக நடத்தி படத்தை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வந்து நச்சரித்த பொழுது இவன் பொங்கி விட்டான். இவ்வளவு கஷ்டப்படறியே, நம்ம ஜாதி தலைவருங்களாவது இவருக்கு நல்லது சொல்லியிருக்கலாமுல்லை.

இவனின் பேச்சு எடுபடவேயில்லை. ஜாதி தலைவர்களை வரவழைத்து பெரிய விழாவாக நடத்தி அவர்களும் “நம் இனத்தவன், அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று மேடையில் முழங்கி விட்டு கிளம்பி விட்டனர்.

அப்பொழுதே இது ஒரு குறிப்பிட்ட ஜாதி படம் என்று பேச்சு அடிபடவும், அதை மறுக்க, விளம்பரங்கள் போதாதாலும் படம் வெளி வந்த வேகத்தில் சென்று மறைந்து விட்டது.

“இந்த படம் மட்டும் வெளியில வந்து ஓடிடுச்சுன்னா, இவளை வேலையை விட்டு நிக்க சொல்லிடுவேன்” சொல்லிக்கொண்டிருந்தார் மாமா

“இவருக்கு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிடுச்சு” அவர் இன்னும் படம் வெளியவே வரலை அப்படீங்கற நினைப்புலயே இருக்கறாரு. கொஞ்ச நாள் ஆகும் சரி பண்ணிடலாம்’

இவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்த நோயாளியை பார்க்க சென்று கொண்டிருந்தார் டாக்டர். 

தொடர்புடைய சிறுகதைகள்
"சரி என் கல்யாணத்துக்காவது வருவியா மாட்டியா? கேட்ட கனகாவின் கண்களை உற்று நோக்கிய ஆனந்த மூர்த்தி சொல்ல முடியாது, அந்த நேரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தது. அது சரி உன் இஷ்டம் நான் கிளம்புகிறேன் எழுந்தாள் கனகா. ...
மேலும் கதையை படிக்க...
எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க அவசியம் என்ன? இது எல்லாம் யாருடைய கைங்கர்யம், தெய்வங்களா நம் தலை மீது கை வைத்து நம்மை போர் புரிய ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி இரண்டு இருக்கும். அந்த தெரு விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த ஏரியாவே ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. வாகனங்களின் நடமாட்டம் கூட இல்லை. பாதையை ஒட்டி பங்களாக்கள் ...
மேலும் கதையை படிக்க...
சட்டென கண்விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு ! புரண்டு படுத்தான், தூக்கம் தொடர மறுத்தது. வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான், பலன் பூஜ்யம் தான். இதற்கு மேல் படுப்பதில் லாபமில்லை, மெல்ல எழுந்தவன் நடந்து சென்று விளக்கை எரிய ...
மேலும் கதையை படிக்க...
அந்த காலத்திலே இப்ப இருக்கற மாதிரி ரேடியோ, டி.வி, இன்டெர்னெட், இதுக எல்லாம் எதுவுமில்லாத ஒரு வசந்த காலம் இருந்துச்சு (கொஞ்சம் பேர் ஒத்துக்க மாட்டீங்க) அப்பவெல்லாம் முகம் பாத்துத்தான் பேசணும், பழகணும், இப்ப கணக்கா ஆளு தெரியாம, அவன் ஆணா பொண்ணான்னு ...
மேலும் கதையை படிக்க...
ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும்
போர்
திருட வந்தவன்
இடமாறு தோற்றப்பிழை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)