கற்பில்லாதவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 9,630 
 

“60 வயதுடையவன் 7 வயதுள்ள பள்ளி மாணவியை பாலியல் பலத்காரம் செய்தான்” என அன்றைய நாளின் செய்தியைப் படித்துவிட்டு ராமன் கொதித்துப்படைந்தான்.

“இவனுங்கயேல்லாம் நடுரோட்டில் நிக்கவச்சு சுட்டுத் தள்ளனும்” என்று தன் கூட இருந்தவர்களிடம் சொல்லினான்.

“ஆமாண்ணே நீங்க சொல்வது சரிதான்னே” என்றார்கள் ராமனுடன். எப்போதும் சுற்றியே இருக்கும் அடிப்போடிகள்.

அவன், அந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்கத்தின் முக்கிய பிரிதிநிதி, எப்போதும் தன் ஜாதி அடையாளம் கொண்ட, கரை வேட்டியே கட்டுவான். அவன் தோளில் இருக்கும் துண்டும், அவன் அந்த குறிபிட்ட சாதியை சேர்ந்தவன்தான் என்று அடையாளம் காட்டும். அவன் சாதியில் இருந்துதான், ஒரு அரசியல் காட்சியே பிறந்தது. அது சாதி ஓட்டுக்காகவே வாழ்கிறது. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ஜாதி கூட்டம் கூட்டுவது, தன் ஜாதிகாரன் பெண்ணையோ, பையனையோ கீழ் சாதியில் உள்ளவர்கள் காதலித்தால், அவர்களை உலுக்கி எடுத்து, அந்த காதலை நிர்மூலமாக்குவது மற்றும் இவன் சாதிகாரங்க வீட்டின் பல கௌருவ கொலைகளுக்கு உடைந்தையாக இருப்பது. இது போல மகா கேவலமான பொதுத் தொண்டாற்றுவதுதான் அவனின் முழு நேர தொழிலாக இருந்தது.

அவன், மனைவி புனிதா ஒரு கிராமத்து பெண். அவளை கல்யாணம் செய்து எட்டு வருடம் மேல் ஆகிறது. இரண்டு ஆண் குழந்தைகள். புனிதா, இவனுடன் கல்யாணம் ஆன ஆரம்பகாலத்தில் ஒரு வெகுளிப் பெண்ணாகத்தான் இருந்தாள். அவளின் வெகுளித்தனமே, அவன் எப்போதும் வெளியே விளையாட வசதியாக இருந்தது. சில இரவுகள் வீட்டிற்கே வரமாட்டான். கேட்டால் மழுப்பலான பதிலே சொல்லுவான். அவள் வெகுளிதனதிற்கு ஒரு உதாரணமும் சொல்லலாம்.

அன்று ஒரு நாள் அவள் அவனிடம்,

“ஏங்க பீச்சுன்னு எதோ ஒன்னு சொல்ராங்கலே.. அங்கு தண்ணி அதிகமா இருக்குமாம்லே..அத நான் பார்கனும் என்னை அங்கு கூட்டிட்டு போங்களேன்..” என்றாள்.

அதற்கு அவன் சொல்லுவான்:

சயிந்திரம் 6 மணிக்கேல்லாம் பீச்ச பூட்டிடுவாங்க.. எனக்கு காலையில் இருந்து சாயிந்திரம் வரைக்கும் சாதி சங்க ஆபிஸ்ல வேலை இருக்கு. நைட்டுக்கு எனக்கு மட்டும் வெளியே தனியா வேலை இருக்கு. இதெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. உன்ன எங்கையும் கூட்டிக்கொண்டு போகவும் முடியாது வேலைய பாரு..” என்பான்.

அவளின் அப்பாவித்தனம் இவனுக்கு எப்போதும் சாதகமாக இருந்தது. அவன், புனிதாவை மனைவியாக பார்காமல் ஒரு வேலைகாரியாகத்தான் பார்த்தான்.

அவனின் துணிமணியேல்லாம் அவள்தான் துவைப்பாள். அதில் லிப்ஸ்டிக் கரை, குங்கும கரை என இருக்கும். இதையேல்லாம் பார்த்து அவள் அப்பாவியாக கேட்பாள்.

“ஏங்க இது என்ன சிவப்பு கலர்ல கரை படிஞ்சிருக்கு” என்பாள். அதற்கு அவன்,

“ஓ..! அதுவா, அது தக்காளி கரை” என்று சொல்லி சாமாளிப்பான்.

அவள் புத்திசாலிப் பெண்ணாக இருந்தால் இப்படி கேட்டிருப்பாள். “அது எந்த தக்காளியின் கரை..” என்று. ஆனால் பாவம் அவள், அவன் எதை சொன்னாலும் ஏன், ஏதற்கு என்று கேட்காமலே நம்பிவிடுவாள். அவளின் அப்பாவித்தனம் அவனுக்கு எப்போதும் சாதமாகவே இருந்தது.

ஆனா, புனிதா இப்போது ஒரளவுக்கு எழுத படிக்க தெரிந்துக்கொண்டாள். மற்றும் அவள் அந்த பகுதியின் மகளிர் சுய உதவி குழுத்தலைவியும் கூட… அவள், கணவன் மேல் சந்தேகம் இல்லாமல்தான் குடும்பம் நடத்தினாள். இவள் மகளிர் சுய உதவிக் குழு தலைவியாய் இருப்பதால் மற்ற பெண்களின் பிரச்சனைகளை அவள் கேட்டு நன்கு உணர ஆரம்பித்தாள்.

இவள் வீட்டெதிரே அந்த பெண்ணின் வீடும் இருந்தது. அவள் புதியதாக அந்த வீட்டில் வாடகைக்கு குடி வந்தவள். சில நாட்களில் அப்பெண்ணும் புனிதாவின் மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கதினராக ஆனாள். அவளுக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. அவளிடம் எந்த பிரச்சனையும் இல்லை. அவள் புருசனுக்கே பிரச்சனை. இதை எல்லாம் புனிதாவிடம் அவள் வேதனைப்பட்டே சொல்லுவாள். புனிதா, இதை ஒரு முறை தன் கணவனின் இன்னொரு முகம் அறியாமல் அந்த பெண்ணைப் பற்றிச் சொல்லிவிட்டாள். அன்றிலிருந்தே அப்பெண்ணை, அவன், நெஞ்சில் கொஞ்சி விளையாட ஆரம்பித்தான். அவளை தாயாக்க..!

இவன் ஒவ்வொரு முறை வெளியே கிளம்பும் போதெல்லாம் அப்பெண்ணை இவன் நோட்டம் விடுவான். இவன் பல நாளாய் நோட்டம் விட்டதை அன்று ஒரு நாள் அவள் ஏதேச்சையாக பார்த்துவிட்டாள். பார்த்த இரண்டு பார்வைகளும் இருவருக்குள்ளும் பற்றிக் கொள்ள.. காமத் தீ வேகமாக எரிய ஆரம்பித்தது. அவளின் கைப்பேசி எண்ணை எப்படியோ அவன் தெரிந்துக் கொண்டான். அவளிடம் பேசவும் ஆரம்பித்தான்.

இவன் பேர்தான் ராமனே தவிர, இவன் செய்யும் லீலைகள் எல்லாம் கிருஷ்ண லீலைகள்…!

அந்த எதிர் வீட்டு பெண்ணின் கணவன் மாதத்தில் அதிக நாட்கள் நைட் ஷிப்ட் வேலைக்கே செல்வான். கைப்பேசியிலே அவன், அவளிடம் பேசிய சரசம், ஒரு நாள் இரவு, அவள் வீட்டில் அது சமரசம் ஆகியது. ஈறுடலாக…!

அவன், அவளிடம் செல்லும் போது ஊர் அடங்கிய பின்பே செல்வான். அப்போது புனிதாவும் நன்றாக தூங்கிப் போவாள். தான் கட்டிய சாதிக் கரைக்கொண்ட வேட்டியை தலைக்கு மேல் முக்காடிட்டே, பூனை மாதிரி, பதுங்கி, பதுங்கி செல்வான். அவன், ஊரில பெரிய மனுசன் என்று பேர் வாங்கிவிட்டான்.

ராமன், பெண்ணியத்தை பற்றி மேடையில் பிரமாதமாக பேசுவான். ஆனால் அவனின் திரைமரைவு சல்லாபம் வெளியே பல பேருக்கு தெரியாது. இராமனின் சமாச்சாரம் எல்லாம் இரவிலே முடிந்துவிடும்.

அன்று ஒரு நாள் புனிதா அவன் சட்டையை துவைக்கும் போது சட்டையில் வித்தியாசமாக மைக்கரை இருந்தது. இவளுக்கு அவன் மேல் சந்தேகம் வந்தது.

“அவள் மட்டுமே கண்களில் மை வைப்பாள். ஒரு வேலை அவளாக இருக்குமோ..!” என்று எதிர்வீட்டு பெண்ணை நினைத்தாள்.

அன்று ஒரு நாள் இரவு புனிதா, தூங்குவது போல் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். அவன் புனிதா தூங்கிவிட்டாள் என நினைத்து வீட்டின் கதவை மெல்ல திறந்தான். கதவு திறக்கும் சத்தம் புனிதாவுக்கும் கேட்டது. இவள், சிறிது நேரம் கழித்து வெளியே வந்துப்பார்த்தாள். அந்த எதிர்வீட்டு ஜன்னலின் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அது சிறிது நேரத்தில் அணைந்துவிட்டது. இவள், வீட்டில் காத்திருந்தாள். நேரம் இரவு மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. இப்போது கதவு மெல்ல திறக்கும் சத்தம் கேட்டது. அவள் கதவை பார்த்தாள். அவன்தான் உள்ளே வருகிறான். விளக்கை போடுகிறான். அங்கு புனிதா உட்கார்ந்துக் கொண்டிருகிறாள். அவன் திடுக்கிட்டான். அவன் சட்டையில் அதே மைக் கரை, அவன் தலையில் மல்லிகை பூவின் சில உதிரிகள்.

அவன், புனிதாவைப் பார்த்து,

“என்ன புனிதா, தூங்காத ஏன் இருட்டுல உட்கார்ந்து இருக்க..!” என்று உள்ளுக்குள் உதறலுடன் அவன் கேட்டான். அதற்கு அவள்,

“நீங்க எங்க போயிட்டு வரிங்க..” என்றாள்.

“வயிறு சரியில்ல.. அதான் டாய்லட்டுக்கு போயிட்டு வரேன்”

“எங்க நம்ம வீட்டு டாய்லெட்டுக்கா.. இல்ல எதிர் வீட்டு டாய்லெட்டுக்கா.. அது உங்களுக்கு அசிங்கமா தெரியல…” என்று அவள் கேட்டதும் சுருக்கென்றது அவனுக்கு, ஆனால், சுதாரித்துக்கொண்டான்.

இவளுக்கு விசயம் தெரிந்துவிட்டது போல என்பதை மட்டும் உணர்ந்தான்.

“இப்ப நான் உங்கள ஒன்றே ஒன்று கேட்கலாமா.?” என்றாள்.

“இவள் என்ன அப்படி கேட்டுட போறாள்..” என நினைத்து.

“ஆ.. என்ன கேட்கனும் சொல்லு” என்றான் திமிரிருடன்..

“இப்ப நீங்க செய்தது போல நான் செய்தால் என்ன செய்திருப்பிங்க..” என்றாள்.

“..ம்ம் உன்ன வெட்டியே போட்டிருப்பேன்” என்றான்.

“இப்ப சொல்லுங்க.. நான் உங்கள என்ன செய்யட்டும்” என்று அவள் சொன்னதும், அவன் பதில் எதுவும் சொல்லாம் அவளை வெறித்துப் பார்த்துகொண்டிருந்தான். அவனால் எதுவும் பேச முடியவில்லை

மேலும் அவள் சொன்னாள்:

“புனிதா என்ற பெயர் வைச்சதால நான் மட்டும் உங்களுக்கு புனிதமா இருக்கனும்ன்னு… ஆனா, ராமன்னு பெயர் வைச்ச நீங்க ஏகபத்தினி விரதனா இருக்கமாட்டிங்க… ஆனா, பொம்பளையான நாங்க மட்டும் உங்க பார்வைக்கு சீதையா இருக்கனும். சந்தேகம் வந்தா, எங்க கற்பைக் சோதிக்க தீயில இறக்க வைக்க்க் கூட தயங்க மாட்டிங்க இல்லையா.. ஆனால், நீங்க மட்டும் வெளியே துள்ளி விளையாடுவிங்க.. அது என்ன.? கற்பு பெண்களுக்கு மட்டும் காலம், காலமாய் கற்பிக்கபட்ட சுயநலம்..? நீங்க தோளுள போடுற துண்டுக்குதான் சாதி பார்பிங்களா.. ஏன் அவிழ்க்கும் வேட்டிக்கு பார்க்கமாட்டிங்களா…?! ஒருவேலை சாதி, பொம்பளைங்க கூட படுக்க போக மட்டும் விதிவிலக்கா…? அதற்கு கீழ் சாதி, மேல் சாதி என்ற பாகுப்படேல்லாம் கிடையாதா…” என்று அவள் பேசப் பேச அவன் தலையில் இடியே விழுந்தது போல உறைந்து போனான்.

இவளா இப்படி பேசுவது..! என்று திகைப்புடன் கூனிக் குறுகி கேட்டுக்கொண்டே நின்றான்.

அவளின் பேச்சால் அவன் வெட்கித் தலைகுனிந்தான். பதில் ஏதும் சொல்லமுடியாமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தான். பொழுதும் புலர்ந்துவிட்டது. இன்னும் எழுந்திருக்கவே இல்லை. புனிதா அந்த எதிர்வீட்டு பெண்ணிடம் போனாள்.

“நீ என் வாழ்வை கெடுகிற, உன் புருசனின் நம்பிக்கையும் கெடுகிற.. இனிமேல் இது தொடர்ந்தால் உன் கணவனிடம் சொல்லவும் நான் தயங்கமாட்டேன்.” என்று சத்தம் போட்டு வந்தாள்.

சில நாட்களிலே அந்த எதிர் வீட்டு பெண், வீட்டை காலி செய்துக் கொண்டு போனாள். இவள் ஒருவித நிம்மதி பெரு மூச்சு விட்டாள். கணவனின் மேல் சிறிது சிறிதாக நம்பிக்கை கொண்டாள் ஏனென்றால் இப்போது சட்டையில் எந்த மைக்கரையும் இருப்பதில்லை..

அன்று பண்டிகை நாள் வீட்டில் தொலைக்காட்சியில் நடிகர் சிவக்குமாரின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் சிவக்குமாரிடம் ஒரு பெண் கேட்கிறாள்:

“எப்படி நீங்க உங்க இரண்டு பிள்ளைகளையும் ஒழுக்கமாக வளர்திருக்கிங்க..” என்று.

அதற்கு அவர்,

“முதலில் நீங்க ஒழுக்கமாக இருங்க.. பின் உங்க பிள்ளைகளும் உங்களைப் பார்த்து ஒழுக்கமா வளரும்” என்றார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ராமுக்கு நெஞ்சைச் சுருக் என்று, தைத்தது போல இருந்தது. அவன் குழந்தைகளைப் பார்த்தான். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தது. புனிதாவை பார்தான், புனிதா, இவனைப் பார்த்தாள். பின் நமட்டு சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்புக்கான காரணமும் இவன் அறிந்ததுதான். இவள் முன்போல அப்பாவி பெண் இல்லை, என்பதையும் மட்டும் உணர்ந்தான்.

அவன் உணரும் பொழுதே, அவன் அருகில் இருந்த கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி, வந்தது. அதில், “ஹாய் டியர்…” என்றிருந்தது. அதைப் பார்த்து, அவன் மெல்ல சிரித்தான்.

கற்பில்லாதவன், இப்போது நடிகர் சிவக்குமார் சொன்னதையும் மறந்துவிட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *