Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கறை

 

“அதெப்படிய்யா! எப்படி அவரை கறை படியாத கரம்னு சொல்லறீங்க? கொஞ்சம் நம்பும் படியா சொல்லுங்க!” வருவாய்த்துறை அமைச்சர் ஆச்சரியப்பட்டார். எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

தொண்டர் நெளிந்தார். “ஆமாங்கய்யா! நிசந்தாங்க. நம்ம எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு ரொம்ப நல்ல பெயருங்க. அவ்வளவு நேர்மையாம்.. நம்ம கட்சி தொண்டர்கள், வட்ட மாவட்ட செயலாளர் நடுவிலே அவருக்கு நல்ல செல்வாக்குங்க”

“அப்படியா! யாரு அவரு? எனக்கு தெரியலியே! இருக்கட்டும், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். சரி, அப்போ, அவரை கூப்பிடுங்க, நான் பேசிட்டு சொல்றேன். முதல்வர் கிட்டே சொல்லி அவருக்கு ஏதாவது ஒரு வாரியம் தருவோம். தேர்தல் வேறே வருது. மக்கள் மத்தியிலே நல்ல பேர் எடுக்க உதவியா இருக்கும்”

இவர்கள் பேச்சில் அடிபட்ட சதாசிவம் நாற்பத்தி ஐந்து வயது எம்.எல்.ஏ. ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்து. பின்னர் அரசியலில் குதித்தவர். கடமை, கண்டிப்புக்கு பெயரெடுத்தவர்.

வருவாய்த்துறை அமைச்சரின் சிபாரிசினால், எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கப் பட்டது. பொறுப்பெடுத்த சில நாட்களிலேயே அவரது நிர்வாகத்திறமையும், கண்டிப்பும் அனைவரையும் கவர்ந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார் என்ற சேதி முதல்வர் காதுக்கும் போனது.

கொஞ்ச நாள் கழித்து, முதல்வருக்கும் சதாசிவத்திடம் நம்பிக்கை வந்து விட்டது. சதாசிவம் ரொம்ப நம்பிக்கையான கையென தோன்றியது. அவருக்கு, முக்கிய பொறுப்புகள் கொடுக்க ஆரம்பித்தார். இரண்டு வருடத்திலேயே , மின் வாரிய அமைச்சர் பதவி சதாசிவத்தின் கைக்கு வந்தது.

சதாசிவம் மிகத்திறமையாக பணி புரிய ஆரம்பித்தார். ஐந்து வருடங்கள் உருண்டோடின. இடையே தேர்தலும் வந்து போய் விட்டது. இப்போது சதாசிவம், முதல்வரின் வலது கரமாகிவிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக , உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

ஒருநாள், முதல்வரிடம் சதாசிவம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்.

முதல்வர் சொன்னார் “ ஏன் சதாசிவம், இந்த கறுப்புப் பணத்தை ஒழிக்க என்ன பண்ணலாம்?”

சதாசிவம் சொன்னார்: “ஐயா! தவறாக நினைக்க வேண்டாம்! நம்ப அமைச்சர்களில் ஒரு சிலர் தவறான வழியில் நிறைய கறுப்புப்பணம் சேர்த்து வைத்திருப்பதாக வதந்தி வருகிறது. அது பற்றி ஆராய வேண்டும்.”

‘அப்படியா ! நான் கூட கேள்விப் பட்டேன். ஏன் இப்படி பண்றாங்க? நாமே இப்படி பண்ணலாமா? மத்திய அரசு வேறே லோக் பால் சட்டம், கறுப்பு பணம் ரெய்ட் அப்படின்னு புதுசு புதுசா கொண்டு வராங்க. சி பி ஐ, இன்கம் டாக்ஸ் வந்து நம்ம தலைவர்களை பிடிக்கறதுக்கு முன்னாடி, நாமே அவங்களை பிடிச்சு கட்சியை விட்டு துரத்திடலாம். சதாசிவம், நீங்க இது பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுங்க. நான் நடவடிக்கை எடுக்கறேன் .”

“நிச்சயமா ஐயா! இதிலே நம்ம மூத்த அமைச்சர்கள் ஒன்று இரண்டு பேர் சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு தோணுது. நிச்சயமா தெரியலே. இவங்க எப்படி கறுப்பு பணத்தை பதுக்கறாங்க, எந்த வங்கி இவங்க கறுப்பு பணத்தை சலவை பண்ணி வெள்ளையா மாத்தறாங்க போன்ற விஷயங்களை கண்டுபிடிச்சி வெளிலே கொண்டு வரணும்னா, மத்திய அரசு உதவி வேணுமே! இது விஷயமா ஆராய எனக்கு இன்னும் அதிகாரம் வேணும். அதுக்கு உங்க உதவி தேவை ஐயா” – வினயமாக கேட்டார் சதாசிவம்.

“கட்டாயம் சதாசிவம். நான் உங்களுக்கு முழு அதிகாரம் தரேன். வெளிலே கொண்டு வாங்க. நம்ம கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கும். நீங்க வங்கிகள் கணக்கு பற்றி தெரிஞ்சுக்க வசதியா மத்திய அரசின் சிபிஐ, ஆர்.பி.ஐ. அதிகாரிகளின் உதவிக்கு உடனே ஏற்பாடு பண்றேன். மத்திய அரசு ஆட்சி, நம்ம கட்சி தானே! காதும் காதும் வெச்சா மாதிரி காரியம் பண்ணுங்க. குட் லக்.” விடை கொடுத்தனுப்பினார் முதல்வர்.

****

சதாசிவம் முழு மூச்சில் செயலில் இறங்கினார். மத்திய அரசின் அதிகாரிகளின் உதவியோடு, சந்தேகத்துக்கிடமான வங்கிகளை, முக்கியமாக, சில வெளி நாட்டு வங்கிகளை கண் காணிக்க பணித்தார்.

ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி, வேறு வேறு பெயர்களில் தனது ஆட்களை அனுப்பி, வங்கிகளுக்கு படையெடுத்து , மறைமுகமாக, கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

****

இரண்டு மாதம் கழித்து:

முதல்வர் சதாசிவத்தை கூப்பிட்டார்.

“என்ன ஆச்சு சதாசிவம், ஏதாவது பிடி பட்டதா? யார் யார் சிக்கினார்கள்?”- உள்ளே நுழைந்ததும், நுழையாததுமாக, முதல்வரின் கேள்விக் கணை.

“ஒன்றும் சரியாக மாட்ட வில்லை ஐயா. இத்தனைக்கும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடுகிறேன். பெரிய அளவில் ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால், தலைவரே, ஒரு நல்ல சேதி. எனக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. வெளி நாட்டு வங்கி ‘கான்டிரஸ்ட் பேங்க்” கிளையில், நமது அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள், பெரிய தொழில் அதிபர்களின் கணக்கு வழக்கு, கோடிக்கணக்கில் நடப்பதாக செய்தி. அங்கே ஏதோ தில்லு முல்லு செய்து, கருப்பை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கிறார்களாம்.”

“அப்படியா?”.

“ ஆமாம் ஐயா. பத்து நாளாக, மத்திய அரசு , என் அதிகாரிகள் எல்லாம், அங்கே தணிக்கையின் பெயரில், விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் விவரம் கிடைத்திருக்கிறது. நான் நேரில் போய் உண்மையை வரவழைக்கிறேன். இரண்டு நாளில் உங்களிற்கு நல்ல சேதி சொல்கிறேன்”

“ரொம்ப நல்லது சதாசிவம். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்” – விடை கொடுத்தார் முதல்வர்.

***

அடுத்த நாள், சதாசிவம், மும்பையிலுள்ள கான்டிரஸ்ட் வங்கியின் தலைமை காரியாலயத்திற்கு விஜயம் செய்தார். அங்கிருந்த தனது சிபிஐ மற்றும் தணிக்கை அதிகாரிகளுடன் தனித்தனியே பேசினார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக, அவர் மட்டும், நேராக வங்கியின் தலைமை அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார்.

“நான் மினிஸ்டர் சதாசிவம். எனக்கு எல்லாம் தெரியும். எங்க அதிகாரிகள் எனக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க. நீங்கள் சொல்லுங்க! இங்கே எங்க அமைச்சர்கள் யாரெல்லாம் கணக்கு வைத்திருக்காங்க?எத்தனை கோடி ரூபாய்?’”- கொஞ்சம் கோபமாக கேட்டார்.

“சே! சே! அப்படி எதுவும் கிடையாதே!” – வங்கி அதிகாரி தீர்மானமாக மறுத்தார்.

“இதோ பாருங்க! இப்போ நீங்க எனக்கு இங்கே கறுப்பு கணக்கு வைத்திருக்கும் அமைச்சர்கள் பெயரை, அவங்க பினாமி பெயர்களை சொல்லலைன்னா, உங்களை பிடிச்சு ஜெயிலில் போட்டுடுவேன். என்னோட அதிகாரம் என்னன்னு தெரியும் இல்லையா உங்களுக்கு?” – சதாசிவம் கடுகடுவென்று கேட்டார்.

“மினிஸ்டர் சார், நீங்க என்ன பண்ணினாலும், நான் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுவும் தெரியாது.”- அதிகாரி

“இதோ பாருங்க! நீங்க தவறு செய்யரவங்களுக்கு துணை போகறீங்க. இது ஒரு பெரிய குற்றம் தெரியுமா? உண்மையை சொல்லுங்க. நீங்க , அரசியல்வாதிகள் பெயர் சொன்னால், நான் நிச்சயம் உங்கள் பதவி உயர்வுக்கு ஏற்பாடு பண்றேன். உங்கள் முழு பாதுகாப்புக்கு நான் காரண்டி. சொல்லலைன்னா, உங்களுக்கு பத்து வருடம் கடுங்காவல் உறுதி’”

“இதோ பாருங்க மினிஸ்டர் சார், திரும்பவும் சொல்றேன். நீங்க சொல்லறா மாதிரி இங்கே எதுவும் கிடையாது” – வங்கி அதிகாரி ஆணித்தரமாக மறுத்தார்.

சதாசிவத்திற்கு கோபம் கொப்பளித்தது. “ நீங்க பொய் சொல்லறீங்க. எங்க அமைச்சர்கள் உங்க கிட்டே கணக்கு வெச்சிருக்காங்க. எனக்கு நல்லா தெரியும். இதோ என் கிட்டே லிஸ்ட். இப்போ சொல்லுங்க. சொல்லறீங்களா, இல்லே என்கவுண்டேர்லே உங்களை போட்டு தள்ள ஏற்பாடு பண்ணவா?” சதாசிவம் மிரட்டினார். தனது பாக்கெட்டில் கையை விட்டார்.

“என் உயிரே போனாலும், நான் எதுவும் சொல்ல முடியாது மினிஸ்டர் சார்”- வெளிறிய முகத்துடன் வங்கி அதிகாரி சொன்னார்.

“கடைசியா கேக்கிறேன்! அப்போ யார் கேட்டாலும் எந்த தகவலும் கொடுக்க முடியாது?” – சதாசிவம்

“யார் பற்றியும் எந்த தகவலும் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை மினிஸ்டர் சார். சாரி” – அதிகாரி.

” ம். அப்படியா !”சதாசிவம் இரண்டு நிமிஷம் யோசனை பண்ணினார்.

“சரி! அப்படின்னா, உங்க வங்கியிலே எனக்கும் கணக்கு ஒன்று தொடங்கணும். என்கிட்டே நம்பர் டூ பணம் கிட்டதட்ட ஐநூறு கோடி இருக்கு. ரொம்ப கஷ்டப் பட்டு சம்பாதித்தது. சொல்லுங்க, கணக்கு தொடங்க, என்னன்ன பண்ணனும்?”- என்றார் சதாசிவம், பாக்கெட்டிலிருந்து தனது பேனாவை எடுத்தபடியே.

****

ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு சதாசிவம், வங்கி அதிகாரியின் அறையிலிருந்து வெளியே வந்தார். முதல்வருக்கு போன் செய்தார். “ஐயா! நான் சதாசிவம் பேசறேன்’

“சொல்லுங்க சதாசிவம், எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா?”

“பேசினேன் ஐயா. நான் நாளை நேரே வந்து சொல்லட்டுமா ஐயா? ”

“பரவாயில்லே. யாரும் இங்கே இல்லே. இப்பவே சொல்லுங்க சதாசிவம்.”

“ஐயா! நம்ம அமைச்சர்கள் பேரிலே இருக்கும் கறுப்பு பணம், ஊழல் புகார் எதுவும் உண்மையில்லீங்க. நான் நல்லா விசாரிச்சுட்டேன். இந்த வங்கியிலே புகாருக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ”

முதல்வர் சொன்னார். “அது எனக்கும் தெரியும் சதாசிவம். ஐந்து நிமிடம் முன்னாடி தான் போன் வந்தது.”

“அப்படியா?” சதாசிவம், ஆச்சரியமாக.

“ஆமா! சிபிஐ கிட்டேயிருந்து தான். வங்கி அதிகாரி அறையில் நீங்க பேசினது எல்லாம் அவங்க ரகசியமாக வீடியோவிலே பதிவு பண்ணியிருக்காங்க. இப்போ உங்களைத்தான் , ஊழல் புகாரிலே கைது பண்ணப் போறாங்க. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். தெரியாது? என்னோட அனுமதியின் பேரில், சிபிஐ, உங்களை பிடிக்க போட்ட திட்டம் தான் இது.”

வாசலில் கண்டிப்புக்கும், கறாருக்கும் பேர் போன சதாசிவத்தை கைது பண்ண, போலிஸ் நின்று கொண்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. விவசாயக் குடும்பம். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு நிறுவனம் கூட இவனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருஷ அனுபவம் கேக்கிற காலம் இது. ஆனாலும், ...
மேலும் கதையை படிக்க...
‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் அருகே. லிங்கம் தனது ஆட்டோவை நிறுத்தினான். “என்னய்யா! ரெட் சிக்னல் ஜம்ப் பண்றே! வண்டியை ஓரம் கட்டு”- போலீஸ் காரர் அதட்டினார். “அவசரம் சார், சாரி சார் ! “- ...
மேலும் கதையை படிக்க...
சென்னை. திருவல்லிக்கேணி. வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள். தனத்திற்கு இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான். மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
வருடம் 2013 சென்னை : பருவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர். பருவா! ஆரம்பிக்கலாமா?” பருவா தலையசைத்தார். யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் ...
மேலும் கதையை படிக்க...
கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். அதில் ஒன்று. நேரம் காலை 7.30 மணி. கோபி தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. ...
மேலும் கதையை படிக்க...
விவேகம்
லஞ்சம் பொறுக்குதில்லையே !
அவள் அப்படித்தான் !
இளமை இதோ! இதோ!!
வேண்டாத வேலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)