கருவறை வாசனை

 

நதிப்பிரவாகமாக சிந்தனை ஓட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. சில வேளைகளில் இப்படி அமைந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஞாபக அடுக்குகளிலிருந்து மேலெழும்பும்.

பேனா நகர மறுக்கிறது. சிந்தனை ஓட்டம் மட்டும் நின்றபாடில்லை. காதலித்தவளை அடிக்கடி இந்த மனம் சீண்டிப்பார்க்கிறது. பெண்களுக்கு இருமனமாக இருக்க வேண்டும்.

கண்பார்த்து சிரித்ததையும், அவனை நினைத்தவுடன் நாணத்தால் முகம் சிவந்ததையும் எளிதாக மறந்து விடுகிறாள். மறந்து விடுகிறாள் என்பது சரியாகாது. அந்த மனத்தை புறந்தள்ளி கொண்டவனை இன்னொரு மனத்தின் சிம்மாசனத்தில் அமர்த்திவிடுகிறாள்.

பெண்ணால் தான் சிவன் பித்தனாகி இருப்பான். கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவன் தான்.

பள்ளியின் நீலநிற தாவணியும் வெள்ளை ரவிக்கையும் அவளுக்கு பொருத்தமாயிருக்கும். கலர் என்றால் அப்படியொரு கலர். இவன் கறுப்பு அரூபி.

இப்போது தான் அரூபி என்று நினைத்துக் கொள்கிறானே தவிர, அப்போது அப்படியில்லை. இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் போது இவன் கால் பூமியில் இருக்காது.

இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள். குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாளோ. என் நினைவுகளை குழி தோண்டி புதைத்திருப்பாள்.

பெண்கள் அன்பை நிராகரித்து பணத்தையே பெரிதென மதிக்கிறார்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு எங்கிருந்து ஏற்பட்டிருக்கும். அரசனின் அந்தப்புர நாயகிகளெல்லாம் அரசனின் அழகுக்காகவா அவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள்.

இராமாயண காலத்திலேயே சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக இருந்தால் தான் சுயம்வரத்திலேயே பங்கேற்க முடியும்.

காதல் புனிதமானது தான். ஆனாலும் மன அழுக்கு காதலையும் விட்டு வைக்கவில்லை. தங்க நகைகள் மீது பெண்கள் ஏன் பேயாய் அலைகிறார்கள் என எனக்குப் புரியவில்லை.

இவனுக்கு வக்கிருந்தால் வாங்கித் தந்திருப்பான். இப்படி எழுதிக் கொண்டிருக்க மாட்டான்.

இப்போது காதலை நேரில் சொல்ல தைரியம் இல்லாதவர்கள். செல்போனில் மெசேஜ் அனுப்பிவிடுகிறார்கள். அன்று அப்படியா?

சினிமாவின் பாதிப்பு இளசுகளிடம் இன்று கொஞ்சம் அதிகமாய்த்தான் இருக்கிறது. அன்று அப்படி அல்ல.

என் காலத்தில் காதலை கடிதம் சுமந்தது மாதிரி, இன்று காற்று சுமக்கிறது. எத்தனை பேர்களின் காதல் காற்றலைகளில் அலைந்து கொண்டிருக்கிறதோ?

எழுத உட்கார்ந்த நேரமே சரியில்லை. இந்த காதல் வேதாளம் இப்படி தோளில் அமர்ந்து கொண்டு கேள்வி மேல் கேட்டு இம்சைப்படுத்துகிறது.

எல்லாரையும் போல என் முதல் கவிதையும் காதலியை வர்ணித்து எழுதப்பட்டது தான். காதலைவிட பைத்தியக்காரத்தனம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது.

எழுதி பிச்சை கேட்டது போதும் நாலுகாசு சம்பாதிக்க வழியைப் பாரு இது என் வீட்டுக்காரி. கல்யாணச் சந்தையில் பெண் தன் எடைக்கு நிகராக அவனிடம் பணம் இருக்கிறதா எனப் பார்க்கிறாள்.

அதுசரி இதை ஏன் நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். பணத்தை எங்கே தேடுவேனென்று ஏற்கனவே கேட்டாகிவிட்டதல்லவா?

எழுத்தை நம்பி வாழ்வதென்பது தற்கொலைக்குச் சமமானது. எழுதிப் பிழைக்கிறவர்களுக்கு சினிமாவின் தயவு அவசியமாய் தேவைப்படுது. ஆனா அங்க எழுதறவனை நிஜார கழட்டிட்டுத்தான் ஆடவிடறாங்க.

இந்த நினைவுக்கு கப்பம் கட்ட வேண்டியதில்லை. அதனால் தான் அவளையே நினைத்துக் கொண்டுள்ளது. சித்தர்கள் சொல்லித் வைத்ததற்கெல்லாம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை கொடுத்துக் கெடுக்கிறான் சிவன் என்று தான் சொல்வேன். உடலைப் பேணுவதிலேயே வாழ்நாளை செலவழிக்கிறோம். இறுதி ஊர்வலத்துக்குக் கூட குளிப்பாட்டித் தான் கூட்டிச் செல்கிறார்கள்.

இந்தக் காற்றையும் விலைகொடுத்து வாங்க வேண்டிய காலம் வரலாம். அலைந்து கொண்டிருக்கிற மனம் ஆன்மாவில் லயிப்பதைத்தான் உறக்கம் என்கிறோமோ?

மூளை நரம்புகள் விண்ணென்று தெரிக்கிறது. காபி அருந்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் எழுத்து யாருக்கு பிரயோஜனமாகும். எழுதுவதற்கு பேப்பர், பேனா வாங்க வேண்டியிருக்கிறதே அவனுக்கு பிரயோஜனமாகாதா என்ன.

இரவின் ரகசியம் சிவனுக்கு மட்டும் தான் தெரியும். அழகானவர்களின் மண்டையோட்டினை பார்த்து தான் அவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறான்.

காலவெள்ளம் எவ்வளவு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமா என யோசிக்க வேண்டியிருக்கிறது.

கைநோகிறது பேனா நகரமாட்டேன் என்கிறது. நினைவுக் கிணற்றில் தூர் வாரினால் இன்னும் என்னென்ன அகப்படுமோ?

கண்களை மெல்ல மூடினேன். நினைவு அலைகள் மட்டும் எழும்பியபடியே இருந்தது. சமீபகாலமாக மனதில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடப் போகிறதென்று பயம் கவ்விக் கொள்கிறது.

ஒரு நூறு வருடத்துக்கு முன் பிறந்திருக்கக் கூடாதா என ஏக்கமாக உள்ளது. தடுக்கி விழுந்தவனை வியாதி வந்து படுக்க வைத்தது. உடல் பெரும் சுமையாக இருக்கிறது. உறக்கத்துக்கு மனம் ஏங்கித் தவிக்கிறது.

காரணமில்லாமல் காரியமில்லை செய்த பாவத்துக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்துவிடுகிறது. காலில் குத்தியிருந்தால் பிடுங்கிவிடலாம் மனதில் குத்திய முள்ளை என்ன செய்வது.

காலம் தாழ்ந்துதான் நான் விழித்துக் கொண்டேன். அப்போது நிம்மதி என்னைவிட்டு தொலைந்து போயிருந்தது. இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

அன்பு செலுத்த யாருமில்லாதபோது மனிதன் அனாதையைப் போல் உணருகிறான். ஏற்கனவே பேதலித்துப் போன மனதை காலமும் பயமுறுத்துகிறது.

நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மரணத்திற்குப்பின் வாழ்வு இருந்தால் எனக்கு அது கொடியதாகத்தான் இருக்கும். மாம்சம் சாம்பலாக வேண்டும். நினைவு சூன்யமாக வேண்டும்.

ஒவ்வொன்றாக என் கையைவிட்டு போய்க் கொண்டிருக்கிறது. நம்பிக்கையின் ஆணிவேரையே வாழ்க்கை அசைத்துப் பார்க்கிறது. உறவுகள் எத்தனை காலத்துக்கு நம் கூடவே இருக்கும்.

மனிதனின் கையாலாகாத தனத்தை கடவுள் உணர்த்திக் கொண்டே இருக்கிறான். அவனிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்துக் கொள்கிறான்.

அம்மாவின் கருவறை கொடுத்த நிம்மதியை வேறெங்கே தேடுவேன். தாயின் அன்புக்கு நிகரானது இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

இப்போது ஏன் என் நினைவு அம்மாவை வட்டமிடுகிறது எனத் தெரியவில்லை. இன்னும் அவள் என்னை சுமந்து கொண்டுதான் இருக்கிறாள்.

அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. இந்த உலகத்தில் என்னைத் தன்னந்தனியாக விட்டுவிட அவளுக்கு இஷ்டமிருக்காது.

பெண் என்ற வட்டத்துக்குள் தான் இன்று வரை என் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டுள்ளது. விடை தெரியாத புதிராகத்தான் விடிகிறது பொழுதுகள்.

இயேசு சிலுவை சுமந்து போது மேரிக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன். தனது மகனுக்கு தன் கையால் காரியம் செய்வது இறப்பை விடக் கொடுமையானதல்லவா? சுழன்றடிக்கும் வாழ்க்கைப் புயல் யாரை எங்கு கொண்டு சேர்க்கும் என யாருக்குத் தெரியும்? 

தொடர்புடைய சிறுகதைகள்
சேதுப்பிள்ளை சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது அவருக்கு. இந்த சாம்பார் ருசிக்காக ஹோட்டல் நடத்தரவனுக்கு கோயில் கட்டலாம் என்ற ரகம் அவர். காபியையும் சாப்பிட்டு கும்பகர்ணன் மாதிரி ...
மேலும் கதையை படிக்க...
மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் ...
மேலும் கதையை படிக்க...
வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் ...
மேலும் கதையை படிக்க...
வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர் ...
மேலும் கதையை படிக்க...
பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே விழுந்து டொப் என்ற சத்தத்தை எழுப்பியது;எழுந்து போய் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.எழுந்து தினசரிக்குள் மூளையை ...
மேலும் கதையை படிக்க...
மேடை
பிச்சை
கூடு
கடிதம்
வெண்மேகம்

கருவறை வாசனை மீது ஒரு கருத்து

  1. Selvam says:

    நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)