கனவுகளும், நிஜங்களும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,667 
 

தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, “டக்டக்’ என்று திருத்தமாக பதில் கூறினான். 1,200 ரூபாய் ஸ்டைபண்டாக ஒரு ஆண்டு பெற்று, பயிற்சி பெற அரசாங்கம் அளித்துள்ள வாய்ப்பின் கீழ், நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த அந்த, கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவனின் ஆர்வமும், திறமையும் எனக்குப் பிடித்திருந்தது.
அவன், அந்த ஓராண்டு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டான். திருநீர்மலைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில், மளிகைக் கடை வைத்திருக்கும் ஒருவரின் மகன் தெய்வசிகாமணி.
உதவித்தொகை, கடன், அது – இது என்று, ஆயிரம் வழிகளில் பணம் திரட்டி, பொறியியல்துறை பட்டம் பெற்று வெளிவந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினரில், அவனும் ஒருவன்.
அவன் படித்து பட்டம் பெற்ற கல்லூரி, ஆயிரம் கல்லூரிகளில் ஒன்று தான். ஆனால், தெய்வசிகாமணியின் சுறுசுறுப்பும், ஆர்வமும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தது.
கனவுகளும், நிஜங்களும்!ஒரு ஆண்டு காலம் எங்கள் பிரிவில் வேலை பார்த்தபோது, தெய்வசிகாமணி வலுவில் வேலை தேடிச் சென்று செய்வான். யார் எந்த வேலை சொன்னா<லும் மறுக்காமல், மலர்ந்த முகத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படுவான். தானே வந்து சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வான். துடிப்பான இளைஞன். ஆனால், அவனை ஒரு ஆண்டு தாண்டி, தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ள எங்களுக்கு வழியில்லாததால், வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்து விட்டோம். அவ்வப்போது வந்து, என்னை பார்த்து விட்டுப் போவான். ஒரு முறை வந்த போது, "என்ன செய்து கொண்டிருக்கிறாய் சிகாமணி?' என்று கேட்டேன். "எங்க ஊரில்தான் சார் இருக்கிறேன். அப்பாவுக்குக் கடையில் ஒத்தாசை செய்வதுடன், இரண்டு, மூன்று நண்பர்களாகச் சேர்ந்து, பக்கத்து ஊரில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியிலிருந்து, தண்ணீர் கொண்டு போய் சைக்கிள் வண்டியில், சப்ளை செய்கிறோம்...' என்றான் சற்று வருத்தத்துடன். "பரவாயில்லையே...' என்றேன் நான். "என்ன சார் பரவாயில்லை... அப்பா, ஏண்டா இன்ஜினியரிங் படித்து விட்டு தண்ணியடிக்கற வேலை செய்றன்னு, அலுத்துக்கிறார் சார்...' என்றான். நான் சிரித்தபடி, "நீ அந்த மாதிரி "தண்ணி'யடிக்கிற அயோக்கிய சிகாமணியாக இல்லாமல், வீடுகளுக்கு உபகாரமாக தண்ணியடிக்கிற தெய்வசிகாமணியாகத் தானே இருக்கிறாய்... உங்கப்பா சந்தோஷப்பட வேண்டும்...' என்றேன். அவனும் சிரித்தான். பின், "நான் மேல படிக்கலாம்ன்னு பார்க்கறேன் சார். "கேட்' பரீட்சைக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். "கேட்' மார்க் நன்றாக இருந்தால், உதவித் தொகை கிடைக்குமே சார்... அதோடு எம்.டெக்., டிகிரி வேறு கிடைக்கும்...' என்றான். "நல்லது தான். செய்...' என்றேன். சொன்னது போலவே, சிகாமணி, "கேட்' பாஸ் செய்து, எம்.டெக்., பெட்ரோலியம் இன்ஜினியரிங்கில் சேர்ந்தான். பாட சம்பந்தமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, அவ்வப்போது வருவான். "எனக்கு இந்த சப்ஜெட் ரொம்பப் பிடிச்சிருக்கு சார்... நான் எம்.டெக்., முடித்ததும் பி.எச்.டி., பண்ணலாம்ன்னு இருக்கிறேன்...' என்றான் மிகுந்த மகிழ்ச்சியுடன். "ஜமாய்!' என்றேன் நான். ஆனால், அவனுடைய எம்.டெக்., முடியும் தருணத்தில், ஒருநாள் என்னைப் பார்க்க வந்தபோது, அவன் பேச்சில் சிறிய மாற்றம் தெரிந்தது. "என்ன சிகாமணி... போன முறை பார்த்த போது, உன்னுடைய எம்.டெக்., ப்ராஜக்டின் தொடர்ச்சியாகவே டாக்டரேட் பண்ணலாம் என்று சொன்னாயே... அது எந்த நிலையில் உள்ளது?' என்று கேட்டேன். சிகாமணி சற்று நேரம் மவுனமாக இருந்தான். "சார்... எனக்கு உங்க அட்வைஸ் வேணும்...' என்றான். "என்ன?' "நான் போன தடவை சொன்னது வாஸ்தவம் தான். ஐ.ஐ.டி., யில் அந்த புரொபசர் எனக்கு நிச்சயம் பெலோஷிப் தருகிறேன் என்கிறார் சார்... ஆனால், நான் கிளாசில் முதல் என்பதால், காம்பஸ் இன்டர்வ்யூவில் என்னை ஐ.டி., கம்பெனியில் வேலைக்கு தேர்ந்தெடுத்து இருக்கின்றனர்...' "அடி சக்கை... எந்த கம்பெனி?' என்று கேட்டேன். ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, "போஸ்டிங் கூட சென்னையில்தான் சார்... சம்பளம் மாசம் இருபத்தி ஐந்து கே...' என்றான். "அடடே... குட்!' என்றேன். "அது தான் சார் சங்கடமாக இருக்கிறது. அப்பா உடல்நிலை முன்போல இல்லை. கடை பிசினஸ் சரியாகப் போகவில்லை. தங்கச்சி கல்யாணம், அப்பாவுக்கு வைத்தியம், தவிர குடும்பச் செலவு என்று, பணம் தேவையாக இருக்கிறது...' என்றான் சிகாமணி சங்கடத்துடன். நான் அமைதியாக இருந்தேன். "ஆராய்ச்சி பண்ணப் போனால், இவ்வளவு பணம் வராது சார்...' என்றான் வருத்தத்துடன். "வாஸ்தவம் தான். அதோடு கிட்டத்தட்ட ஐந்து வருஷம் நீ உழைக்க வேண்டும்; அதே குறைந்த உதவித் தொகைக்கு. உன் குடும்ப நிலை இடம் தருமா?' என்றேன். "சான்சே கிடையாது சார்...' "இரண்டு வருஷமாவது வேலை பார்த்து, கொஞ்சம் பணம் சேர்த்து, தங்கச்சி கல்யாணத்தை முடிக்கணும் சார். வேற வழியில்லை...' என்றான். "செய்!' என்றேன் புன்னகையுடன். இதற்குப் பின் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்துத்தான் சிகாமணி என்னைப் பார்க்க வந்தான். பூசினாற்போல் பருத்து இருந்தான். நன்றாக டிரஸ் செய்து கொண்டிருந்தான். முகத்தில் பளபளப்பு இருந்தது. ""வா சிகாமணி... எப்படியிருக்கு ஐ.டி., வேலை?'' ""நல்லாயிருக்கு சார்... ஆனால், நான் படித்த பாடத்திற்கும், செய்கிற வேலைக்கும், துளிகூட சம்பந்தமில்லை... நான் செய்யறதெல்லாம் முழுக்க முழுக்க, "பாங்கிங்' சம்பந்தப்பட்டது!'' ""ஹும்... அது தெரிந்த விஷயம்தான்?'' ""நானே இன்ட்ரஸ்ட் க்ரியேட் செய்து விட்டேன் சார். தங்கச்சிக்கு போன மாசம் கல்யாணம் செய்து வச்சாச்சு...'' என்றான். ""அட... இத்தனை சீக்கிரமாகவா?'' என்றேன் ஆச்சரியத்துடன். ""ஆமாம் சார்... எங்களுக்கு இருந்த கொஞ்சம் நிலத்தையும், கடையையும் விற்று விட்டோம்... அந்த ஏரியாவுக்குப் பக்கத்தில், ஏதோ ஒரு பெரிய ப்ளாட் ப்ரொமோட்டர் நிலத்தை வாங்கி, டெவலப் செய்கிறார். அதனால், எங்கள் நிலத்துக்கு நல்ல விலை கிடைத்தது. அதோடு, நானும் கொஞ்சம் கடன் வாங்கினேன் சார்,'' என்றான் சிகாமணி. ""ம்... பரவாயில்லையே?'' சிகாமணி சிரித்துக் கொண்டே, ""அதோட எனக்கும் வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க சார்...'' ""அப்படிப் போடு'' என்றேன் சிரித்தபடி. சிகாமணி திடீரென்று மவுனமானான். ""ஆனால், மனசுல ஒரு வருத்தம் இருக்கு சார்... நான் படித்த இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நல்ல பெயர் வாங்கணும்ன்னு எம்.டெக்., படிக்கறப்போ ஒரு கனவு இருந்தது. இன்றும் கூட இருக்கு சார்,'' என்றான் கொஞ்சம் சீரியசாக. நான் புன்னகை செய்தேன். ""குடும்பஸ்தனாக ஆனப்பறம் ரிசர்ச் செய்யலாம்ன்னு பார்க்கறயா? அது கொஞ்சம் கஷ்டமே தம்பி,'' என்றேன். ""உண்மைதான் சார்,'' என்றபடி கிளம்பினான் தெய்வசிகாமணி. அவன் சொன்னபடி அடுத்த ஆறு மாதத்தில் அவனுடைய திருமண அழைப்பிதழை அகமும், முகமும் மலர என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான். பெரிய சைசில், ஜிகினாக்கள் மின்ன, அமர்க்களமாக இருந்தது கல்யாணப் பத்திரிகை. ""வாழ்த்துகள் சிகாமணி... பெண் என்ன செய்கிறாள்?'' ""மாமா பொண்ணுதான் சார்... எம்.எஸ்சி., முடிச்சிட்டு, ஊர்ல இருக்கற ஒரு ஸ்கூல்ல டீச்சராக இருக்கா... ஒரு விஷயம் தெரியுமா சார்?'' என்றான் சிகாமணி. ""என்ன விஷயம்?'' ""என் மனைவியாகப் போறவளுக்கும் ரிசர்ச் செய்து, டாக்டர் பட்டம் வாங்கணும்ன்னு ஆசை இருந்ததாம்.'' ""ஓ... அப்படியா?'' ""ஆமாம் சார்... ஆனா, என் கனவுக்கும், அவள் கனவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு!'' ""என்னது அது?'' ""அவ வேணும்ன்னா, இப்பக்கூட பார்ட் டைம் முறைல ஏதாவது ஒரு யூனிவர்சிடில, பி.எச்டி., பண்ணலாம். ஏன்னா அவ படிச்ச கெமிஸ்ட்ரி சப்ஜக்ட்டில் டீச்சராகத்தான் இருக்கா... ஆனா, நான் தான் முழுசா வேற துறைக்குப் போய் விட்டேன்,'' என்றான். ""வருத்தப்படறியா?'' ""வருத்தம்ன்னு இல்ல சார்... ஒரு சின்ன ஏக்கம்; கனவுகளுக்கும், நிஜங்களுக்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்பட்டு விடுகிறது...'' ""அது தான் வாழ்க்கை சிகாமணி... நீ சந்தோஷமாகத்தானே இருக்கே?'' என்றேன் நான். ""நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கேன். வாழ்க்கையின் முக்கிய பாடம், சந்தர்ப்பங்களுடன் எப்படி சமரசம் செய்து கொள்வது என்பதுதான் என்று நினைக்கிறேன்,'' என்றான் சிரித்தபடி. நான், சிகாமணியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். ""என்ன சார் பாக்கறீங்க... இந்தப் பொடியன் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறானேன்னு தானே?'' ""சே...சே... அப்படியெல்லாம் இல்லை. இன்றைய சமூகம் ஒரு ஆர்வமுள்ள விஞ்ஞானியை இழந்து விட்டதா, இல்லை ஒரு புத்திசாலியான, யதார்த்தவாதியான இளைஞனை உருவாக்கி விட்டதா என யோசித்துக் கொண்டிருந் தேன்,'' என்றேன். ""இரண்டுமே தான் சார்,'' என்றான் புன்னகையுடன். புத்திசாலிப் பையன்! - அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *