கண் விழித்தார் பெருமாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 17,884 
 

பெருமாள் கண் விழித்தால் பிரளயம் ஏற்படும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தினம் தான் இன்று.

பெருமாள் கண் விழிக்கிறார், மிகவும் கடினமாக இருக்கிறது போலும். பல ஆண்டுகளாக சேர்ந்தே இருந்த இமைகள் இரண்டும் பிரிய மனம் இல்லாமல் பட்டாம்பூச்சி சிறகை விரிப்பது போல படபடகிறது. சாதாரண மின் விளக்கின் ஒளி கூட கதிரவனின் ஒளி போல அவர் கண்களில் கூசுகிறது. மீண்டும் ஒரு முறை பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு வேறு. ஒரு வழியாக கண்களை கசக்கி கொண்டு பார்க்கிறார், மங்கலான பார்வையோ இருக்கும் இடத்தை காட்ட மறுக்கிறது.

பூமி வேகமாக சுற்றுகிறது என்று நினைத்து கொண்டு தன் கட்டில் பிடியை பிடித்தவாறு கால்களை ஊன்ற முயல்கிறார், ஆனால் தன் தலைதான் சுற்றுகிறது என்று தெரிந்து மீண்டும் அமர முயலும் போது கால்கள் நடுங்குகிறது, விழப்போகும் தன்னை தாங்கி பிடிக்கும் நபரை பார்த்ததும், தீவிர யோசனையோடு பெருமூச்சை தள்ளாமையுடன் ஊதிய படி “அப்பா…!!” என்று அழைக்கிறார் பெருமாள்.

“இல்லை அண்ணா..!! நான் உன் தம்பி ஜெகன்!” என்று அந்த நடுத்தர வயதுக்காரர் கூறியதும் உடல் மெதுவாக அதிர ஆரம்பித்தது பெருமாளுக்கு.

இதெல்லாம் என்ன ? எதுவும் புரியவில்லை. வழி தவறி எங்கோ வந்துவிட்டவன் போல குழம்பினார். ஏதோ கனவு இது என்று தோன்றியது. தன் தந்தை வயதில் ஜெகனை பார்த்ததும் திகிலிழும் , சந்தேகத்திலும் அலைக்கழிக்கபட்டவராக அப்படியே அமர்ந்து பெருமூச்சுடன் தலை குனிந்தார். அண்ணனின் கைகளை இருகப்பற்றிக்கொண்டான் ஜெகன். அவனின் குரல் தளதளத்தது “”அண்ணா… 25 ஆண்டுகளுக்கு பிறகு நீங்க கோமாள இருந்து கண் திறக்கிறீங்க…!!”

பெருமாளுக்கு விளைந்த அதிர்ச்சியினால் பயமும், அழுகையும் வந்தது. வாழ்வின் வெறுமையை முதன் முறையாக உணர்ந்தார். கால சுவற்றை 25 ஆண்டுகளுக்கு முன்னால் எட்டி பார்த்தால் 27 வயதான பெருமாள் என்னும் இளம் இஸ்ரோ விஞ்ஞானியின் கனவுகளும், சாதனையும் தெரிந்தது, அதன் மிக அருகில் இறுதியாக அவர் சந்தித்த கார் விபத்து தெளிவாக தெரிந்தது.

அன்று கோமாவில் மூடிய பெருமாளின் கண்கள் இன்று 2038’ம் ஆண்டில்தான் திறந்திருக்க வேண்டும். சூறாவளி காற்றில் சிக்கி சிதைந்து எங்கோ வீசப்பட்ட காகிதம் போல பெருமாளின் வாழ்வு அந்த விபத்தினால் வெறுமை பெற்றது.

“அண்ணா…!! அறையை விட்டு வெளியே வாங்க , நம்ம குடும்பத்தை பார்ப்போம்..!!” என்று நினைவு படத்துவது போல சொன்னான் ஜெகன்.

ஜெகனுடன் அறையை விட்டு வெளியே வந்த போது அந்த வீட்டின் கட்டுமானம் அவருக்கு ஆச்சிரியம் அளித்தது. அங்கு இருந்த விளக்குகள் , வீட்டு உபயோக பொருட்கள் எல்லாமே அவருக்கு பிரமிப்பை ஊட்டின.

ஜெகன் தன் மனைவி தீபா மற்றும் மகன் கிரனை அறிமுகம் செய்தான். மாலையோடு சுவற்றில் தொங்கும் பெற்றோரின் புகைப்படமும் பெருமாளின் கண்களில் விழுந்து உள்ளுர மனதை பதைபதைத்தது.

“25 ஆண்டுகளாக இந்த அறையில் தான் இருந்தேனா ஜெகன்?” என்றார் பெருமாள்.

“விபத்து நடந்த அன்று முதல் ஐ.ப்.ஸ் மருத்துவமனையில் தான் 6 மாதம் இருந்தீங்க. பிறகு வீட்டுக்கு கூட்டி வந்தோம். 2 வருடம் எந்த மாற்றமும் இல்லை. கருணை கொலைக்கு விண்ணப்பித்தோம், அனால் அதே மருத்துவமனையில் மாணவர்களுக்கு கோமா வகுப்பு எடுக்க மாதிரி தேவை பட்டதால் உங்களை அங்கே வைத்து கொண்டு உங்கள் பராமரிப்பையும் பார்த்து கொண்டார்கள். இவ்வளவு வருடமும் அங்கே தான் இருந்தீர்கள், அவ்வபோது நாங்கள் வந்து உங்களை பார்த்து விட்டு செல்வோம். போன வாரம் உங்கள் உடலில் ஏற்பட்ட அசைவும், முனேற்றமும் நம்பிக்கை தர வீட்டுக்கு கூட்டி வந்தோம்” என்று தெளிவான குரலில் சொல்லிவிட்டு பெருமாளின் முகத்தை தீர்க்கமாக பார்த்தான் ஜெகன்.

“” ரொம்ப நன்றி ஜெகன்….!!’ என்று ஜெகனின் உள்ளங்கையில் தன் கையை பதித்தார் பெருமாள்.

“குடிக்க தண்ணீர் வேண்டும்…!” என்று பெருமாள் கேட்டதும் ஜெகனும், தீபாவும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தத்துடன் புன்னகை செய்து கொண்டனர். “தண்ணி கொண்டு வா..” என்று தீபாவிடம் சொல்லி விட்டு பெருமாளை பார்த்து “இப்போ தமிழ்நாடு நெறைய மாறிடிச்சு… கேட்டா உங்களுக்கு தலை சுற்றும்” என்று ஆரம்பித்தான் ஜெகன்.

“தண்ணீர் குடிச்சதும் சொலுங்க..” என்று விஷயத்தை வெட்டினால் தீபா.
பெருமாள் தண்ணீர் பாட்டில் முழுவதும் குடித்து விட்டு சோபாவில் அமர்ந்து கொண்டார்.ஜெகன் குடும்பத்துடன் பெருமாள் அருகே உள்ள டின்னிங் சேரில் அமர்ந்து கொண்டான். “வெளியே எங்கயாவது போகலாமா?” என்று கேட்டார் பெருமாள்.

தற்போது தமிழ்நாடு இருக்கும் நிலைமையை அண்ணனிடம் கூற வேண்டும் என்று முடிவுடம் பெருமாளை பார்த்தான் ஜெகன். தனது வியப்பை மீறிய கவலையை அவனால் வெளிபடுத்தாமல் இருக்க முடியவில்லை. “இந்த 25 வருடங்களில் விஞ்ஞானம், நாகரீகம், தொழில்நுட்பம் என்று நாம் எட்டாத வளர்ச்சி இல்லை, இப்போ நம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?” என்றான் ஜெகன்.

ஒரு காரணமும் இல்லாமல் மக்கள் தொகை பற்றிய கேள்வியால் குழம்பி போனார் பெருமாள். ஏதோ பேரழிவு ஏற்பட்டதோ என்ற அதிர்ச்சியும், பயமும் அவருக்கு உண்டாயிற்று. “ஹ்ம்ம்… அப்போ தமிழ்நாட்டில் 7 கோடி இருந்தது, இப்போ 10-15 கோடி இருக்குமா?” என்று கேட்டார் பெருமாள்.

“இப்போ தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் கம்மியான பேர் தான் இருக்கோம்…!!”

ஒரு கணத்தில் பெருமாளுக்கு ஓடிய கற்பனைகள் என்னென்ன..!!! உலக போரா?, அல்லது நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றமா அல்லது புதிய தொற்று நோயா?மறுகணம் செயல்லற்றவனாய் அதிர்வோடு ஜெகனை விழித்து பார்த்தார்.

“தண்ணீர் பஞ்சம்…!!”

நீண்ட மௌனம், அந்த மௌனம் பெருமாளை அழுத்தி மூச்சு திணறசெய்தபடி கவிந்திருந்தது.

“2013’ல அதாவது 25 வருஷம் முன்னாடி தண்ணீர் பஞ்சம் எப்படி இருந்தது? ஞாபகம் இருக்கா அண்ணா” என்றான் ஜெகன்.

“தண்ணீர் பஞ்சம் இருந்தது, பெருசா இல்லையே… மினரல் வாட்டர் காசு குடுத்து வாங்கினோம், கிராமங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாம அங்கங்க 1,2 விவசாயிங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க. மழை சரியா வரல, பக்கத்துக்கு ஸ்டேட்’ம் தண்ணீர் தரல…”

“வேற.. மீடியால என்ன சொன்னங்க..?”

“மழை நீரை சேகரிக்க சொன்னாங்க, மரம் வளர்க சொன்னாங்க, காடுகளை அழிச்சு ரியல் எஸ்டேட் பண்ண வேணாம்னு எச்சரிச்சாங்க” என்று அவசரமாய் முடித்தார் பெருமாள்.

ஜெகன் பலவீனமாய் புன்னகை பூத்தான். “அதை காது கொடுத்து கேட்காமல் விட்டதால் தான் தமிழ்நாடு இன்று பாலைவனமாய் மாறிவிட்டது. 2030 பிறகு தொடங்கிய கடும் வறட்சியில் அழிந்து கொண்டே போகிறது தமிழ்நாடு. அன்று மழை நீரை சேகரிக்கவோ, மரம் வளர்க்கவோ யாருக்கும் நேரம் இல்லை..!! இன்றோ மழையும் இல்லை, மரம் வளர நிலத்தடி நீரும் இல்லை. தமிழ்நாட்டை முன்னேற்ற வந்த தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் தாரைவார்க்கபட்டது. அவன் அப்பனும், சுப்பனும் போட்டி போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டான்” மேலும் தொடர்ந்தான் ஜெகன். “ஒரு கார் உற்பத்திக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீரும், ஒரு கோழி வளர 50 லிட்டர் தண்ணீரும் தேவை பட்டது. பல தொழிற்சாலைகளும் கழிவுகளை நிலத்தடியில் புதைத்து எஞ்சிய நீரை விஷமாகி விட்டன…! கடல் நீர் சுத்திகரிப்பு பணியும் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் யாராலும் 80 சதவீதம் மேல் கடல்நீரை குடிநீர் தன்மைக்கு மாற்ற முடியவில்லை” என்று தளதளத்தான் ஜெகன்.

உலுக்கப்பட்டவன் போல உடல் அதிர்ந்தார் பெருமாள். ஒரு கணம் மூச்சு சிக்கி கொள்வது போலிருந்தது, மெலிதான பீதியுடன் ஜெகனை பார்த்து “இப்போ நிலைமை தான் என்ன?”

“பக்கத்துக்கு மாநிலங்களிலும் இதே நிலை தான், இப்போ இங்கே வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபட்டு தண்ணீர் பல டாலர் விலைக்கு விற்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த கடைசி 10 ஆண்டுகளில் வாழ்கிறோம், தண்ணீர் பஞ்சத்தில் இறந்தவர்கள் போக பல குடும்பங்கள் வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்து விட்டன. இந்த ஆண்டு இறுதியில் நாமும் இந்த நாட்டை விட்டு வெளியேறுவது தவிர வேறு வழி இல்லை..!!.” என்ற ஜெகனின் குரல் எழுந்து தாழ்ந்தது.

உறைந்து போன பெருமாளுக்கு தலை கீழ் கவிழ்ந்து விட்டது போலிருந்தது. “நாம் அன்று செய்த தவறை எண்ணி துடித்தார், தண்ணீர் தேசத்தின் அவலத்தை காலம் கடந்து அறிந்து ஒன்றும் பயன் இல்லை “என்று மூழ்கி கொண்டு இருப்பவன் போல காற்றுக்காக தவித்தார்.

பெருமாளாகிய நான் கண் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *