கணிதப்புலியும் கடைசி வகுப்பும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 6,830 
 

‘ஜரீத் மாஸ்டர்’ என்ற பெயரைக் கேட்டால் எப்படியான ஒருவர் உங்கள் மனக்கண்ணில் தோன்றுவார்? சர்க்கஸ் கொட்டகைகளிலே கட்டுமஸ்தான உடலுடன் கையில் சவுக்குடன் நிற்கும் ரிங் மாஸ்டர் உங்களுக்கு நினைவு வந்தால் நீங்கள் வெளியூர் ஆசாமி என்பது உத்தரவாதம்.

நிஜமான ஜரீத் மாஸ்டர் எங்கள் வகுப்பு கணிதபாட ஆசிரியர். பாடசாலை அதிபரின் வலது கரமும் கூட. ஆனால் காற்று சற்றுப் பலமாக வீசினால் போதும், பறந்துவிடுவாரோ என்று சந்தேகிக்கத்தக்க மெல்லிய உடல்வாகு அவருக்கு. சாதாரண 13 சைஸ் டைட் சேர்ட் கூட அவருக்கு ‘பேகி’ ஸ்டைலிலேதான் இருக்கும். அவரது இடுப்பிலே ட்ரவுசர் வழுகாமல் இருப்பதை எட்டாவது அதிசயமாய் ஆக்கினால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

தூக்கிப்படிய வாரிய தலைமுடியும் தொங்கு மீசையும் புகைத்த சிகரட்டுகளின் வரலாறு கூறும் தடித்த கரிய உதடுகளுடன் கூடிய சற்று நீளமான முகம் அவருக்கு. அவரது கண்களிலே தன்னை விட்டால் ஊருக்குள் கெட்டிக்காரன் யாருமில்லை என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் திமிர் பிடித்த மனிதனுக்குரிய ஒருவித ஏளனம் எப்போதும் குடிகொண்டிருக்கும்.

சரி, அவர் எப்படி இருந்தாலென்ன, நாம் விடயத்திற்கு வரலாம்.

இன்று ஜரீத் மாஸ்டருக்கு அவர் தனது வாழ்க்கையில் மறக்கவே முடியாத பாடம் ஒன்றைப் படிப்பிப்பது என்ற தீர்மானத்தோடுதான் நானும் எனது நண்பன் நஸீரும் இன்றைய மாலை வகுப்புக்கு வந்திருக்கின்றோம்.

இந்த வருடம் க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்குப் பாடசாலை மூலம் தோற்றும் எங்களுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னமே பாடசாலையில் வைத்து அனுமதி அட்டைகளை வழங்கி விட்டிருந்தார்கள். அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பொதுப்பரீட்சைக்கு முன்பு எங்கள் ‘கணிதப்புலி’ ஜரீத் மாஸ்டர் நடாத்தப்போகும் கடைசி மாலை வகுப்புதான் இது.

எப்போதும் முன்வரிசையிலே அமரும் நானும் நஸீரும் வழமைக்கு மாறாக வகுப்பறை வாசலை ஒட்டியிருந்த கடைசி வாங்கில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் எங்கள் சக மாணவ நண்பர்களுக்கு விடயம் லேசாகப் புரிந்து விட்டது. அவர்களிலே சிலர் பயந்தாலும் ஏதோ நடக்கப்போவதை அறிந்து அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர். அடிக்கடி வாசலை உற்றுப்பார்த்தபடி பதற்றமாக இருந்தார்கள். வகுப்புப் பெண்பிள்ளைகள் மட்டும் எதுவும் புரியாமல் எங்கள் இருவரையும் காண்பித்து தங்களுக்குள் ஏதோ சொல்லிச் சிரித்தார்கள்.

‘சிரிங்கடி..சிரிங்கடி! இன்னும் கொஞ்ச நேரத்தில நடக்கப்போறதைப் பார்க்கத்தானேடி போறீங்க… பார்த்துப்போட்டு நிண்டு சிரிங்களேண்டி பார்ப்போம்’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டே ஜரீத் மாஸ்டர் வந்து சேரும்வரை காத்திருந்தோம்.

எவ்வளவுதான் இயல்பாக இருக்க முயற்சித்தும் எங்களால் அப்படி இருக்க முடியாமல் வியர்த்துக் கொட்டியது. நாங்கள் செய்யப்போகும் காரியத்தை நினைத்து லேசான பயம் அடிவயிற்றைப் பிசைந்தாலும் அதிலுள்ள நியாயம் துணிவு தந்து கொண்டிருந்தது. இன்று நடக்கப்போகும் சம்பவம் இதுவரை ஜரீத் மாஸ்டரால் அவமானப்பட்ட மாணவர்கள் சார்பாகவும் இனிமேல் அவமானப்படக் காத்திருக்கும் எத்தனையோ மாணவர்களின் நலனுக்காகவும் நாங்கள் அவருக்கு வழங்கும் பரிசு – தியாகச் சமர்ப்பணம்!

இத்தனை கால பாடசாலை வாழ்க்கையில் ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களாகிய எங்களுக்கு அவர் புரிந்துகொண்டிருக்கும் அவமானப்படுத்தல்ளையெல்லாம் உங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது.

ஜரீத் மாஸ்டரின் அவமானப்படுத்தல்கள் இரண்டு விதமானவை.

ஒன்று தன்னிடம் படிக்கும் மாணவன் கணிதத்திலே குறைவாக இருந்தால் ஏசி அவமானப்படுத்துவார். மாறாக, அவன் மிகவும் திறமை காட்டினாலோ அவனை மட்டந்தட்டியே கொல்வார். அவரின் சுடுவார்த்தைகளிலிருந்து தப்பிப்பதானால் ஒன்றில் சராசரியான திறமையுடன் ‘ஐயா நீங்கள் சொல்வது மட்டும்தான் சரி’ என்று சலாம் போட்டுக்கொண்டு இருக்க வேண்டும் அல்லது அப்படி இருப்பதாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவர் ஒரு கணக்கைப் படிப்பித்தால் அதை அவருடைய முறையில் செய்தால் மட்டுமே சரியென்பார். வேறுயாரிடமாவது கேட்டுப் படித்து புதிய முறைகளுக்கூடாக செய்து வந்தால் கொப்பியைத் தூக்கி முகத்தில் வீசியடிப்பார்.

‘ம்ஹும்.. நீங்கல்லாம் படிச்சு…’ என்று ஆரம்பித்து ஒரு நக்கல் பார்வை பார்ப்பார். அதற்கே தாரளமாய்ச் சாகலாம். ‘டேய், இந்தப் புது மெதட்டுல செய்யிறாக்களுக்கு ஒண்ணு சொல்றேன் கேளுங்கடா.. அதை சொல்லித் தந்தவனொளுக்கிட்டேயே போய்ப் படிங்கடா! இஞ்ச வராதிங்கடா!’ என்று கத்துவார். அதற்காக வகுப்புக்கு வராமல் விட்டோமென்றால் அதிபரிடம் மாட்டிவிட்டு காலைக் கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்துவார்.

அவருடைய காலத்தில் அவர் கணித பாடத்தில் மிகத்திறமையான மாணவராக இருந்தவராம். கணிதப் போட்டிகளிலே நிறையப் பரிசுகள் பெற்றவராம் என்று பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.. ஆனால் இந்தக் கணிதப்புலி இன்றுள்ள தலைமுறையின் அறிவு வளர்ச்சியையும் மாற்றுத் திறனையும் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் வாய்ப்புத் தராமல் வரட்டுப் பிடிவாதத்தில் உழன்று கொண்டிருந்ததை என்னவென்பது?

எங்கள் பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற பல திறமையான இளம் கணித ஆசிரியர்கள் வந்திருந்தும் அவர்களுக்கு வழிவிடாமல் பிடிவாதமாக இருந்தார் அவர். இங்கு எத்தனை கணித ஆசிரியர்கள் வந்தாலும் ஒவ்வொரு வருடமும் க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு அவர்தான் கற்பிக்க வேண்டும் என்பதை ஓர் எழுதாச் சட்டமாகவே வைத்துக் கொண்டிருந்தார்.

எங்கள் பாடசாலை அதிபரும் அவருடைய காலத்து மனிதர் என்பதால் ஓஎல் வகுப்பை ஜரீத் மாஸ்டரிடமே ஒப்படைத்து விடுவார். நாங்கள் பத்தாம் தரத்தில் சித்தியடைந்து ஓஎல் வகுப்புக்கு வந்ததும் இதையறிந்து உசாராகி விட்டோம். ஏற்கனவே ஒருவருடம் எட்டாம் வகுப்பில் இந்தக் கணிதப்புலியிடம் நாங்கள்; பட்டபாடு இன்னும் எங்கள் மனதில் நீங்காத வடுவாக இன்னும் இருக்கின்றது. இந்த அனுபவத்தின் காரணத்தால் ஜரீத் மாஸ்டரிடம் படிப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளிலே எங்களுக்கு கற்பித்துவந்தவரான மற்றொரு கணித ஆசிரியர் முனாஸ் ஸேரிடமே தொடர்ந்து படிக்கின்றோம் என்று நாங்கள் எவ்வளவு கூறியும் அதிபர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாங்கள் பிடிவாதமாக இருந்தும் முனாஸ் ஸேர் வெளியூரிலிருந்து வந்து கற்பிபிப்பவர், அவரால் மாலைநேர வகுப்புகளெல்லாம் எடுக்க முடியாது என்ற ஒரே காரணத்தை வைத்து பாடசாலைக்கு அருகிலேயே வசிக்கும் உள்ளுர்வாசியான ஜரீத் மாஸ்டர் எங்களை வென்று விட்டார்.

ஜரீத் மாஸ்டர் கணிதம் கற்பிக்கும்போது வளர்ந்த மாணவர்;களின் தன்மானத்தை எப்படியெல்லாம் காயப்படுத்துவார் என்பது பற்றிய எங்கள் புகார்களை அன்றைய காலத்து அதிபர்களும் பெற்றவர்களும் ஏனோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியே காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தது அந்தக் கிழட்டுப்புலி. கடந்த பதினொரு மாதகாலத்தில் அவரது நக்கல்களும் நையாண்டிகளும் எங்களுக்குப் பழகிப்போனாலும் கூட சில விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது.

‘டேய் மச்சுக்குட்டி அசாம், இஞ்ச வாடா!’ ‘டேய் சம்புராக்காட ரமீஸ், இதென்னடா எழுதி வச்சிருக்கா?’ ‘கொத்திமுடாட பெயல் இஞ்ச வாங்க வாப்பா!’ ‘கரீப் ஐயாட சம்ரி…எழும்புங்க ராசா’ ‘கஹார்ர தறுதலை வாடா இஞ்ச’

இப்படியெல்லாம் பெண் மாணவிகளின் முன்னே எங்களது தாய் – தகப்பனது பெயர்களை தனது பாணியிலே நக்கலாக இணைத்து அவமானப்படுத்தித்தான் கூப்பிடுவார். அதாவது உள்ளுரிலுள்ள எங்கள் பெற்றோர்களில் பலர் அவரது பாடசாலைக்காலத்து சமவயதுத் தோழர்களாம். அந்த உரிமையில்தான் அப்படி அழைப்பதாக பலரும் சொல்வார்கள். ஆனால் அதைத்தான் எங்களிலே பலருக்கும் அறவே பிடிப்பதில்லை. இதனால் பலருக்கு கணிதம் என்றாலே வெறுப்புத் தட்டிவிட்டது.

‘இவருக்கு என்னடா பண்ணலாம்?’

ஒவ்வாரு வெள்ளிக்கிழமை மாலையிலும் முற்றவெளியிலே வழமையாக நடக்கும் கால்பந்தாட்டத்தை அடுத்து ஜ. பா. ச. (ஜரீத் மாஸ்டரினால் பாதிக்கப்பட்டோர் சங்கம்) கூட்டத்தில் வகுப்பு நண்பர்கள் ஒன்றுகூடி பலமுறை இந்த வினாவை எழுப்பியிருக்கின்றோம்.

‘அவர்ர சைக்கிள் டயருக்கு ரெண்டுக்கும் ஊசியால பத்து பதினைஞ்சு பெச் அடிப்பண்டா!’ என்பான் நஸீர். அவன்தான் எங்கள் வகுப்புக்கே தலைவன் போல செயல்படுபவன். நல்ல கட்டுமஸ்தான் உடலும் துணிவும் உள்ளவன். அதேவேளை படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல கெட்டிக்காரனும் கூட. அவனுக்கு ஜரீத் மாஸ்டர் வைத்திருக்கும் பெயர் ‘கப்பார்ர தெறிச்சது’. கப்பார் என்பது நஸீரின் வாப்பா. பெரிய பள்ளிவாசல் தலைவர்.

‘போடா இவனே! அவருதான் சைக்கிளை க்ளாசுக்கே கொண்டு வரமாட்டாரே. தூரப்போறண்டா மட்டுந்தான் வெளியிலயே எடுப்பாரு!’ என்ற லாபீரை ‘பூவரம்பாத்தாட பெயல்’ என்றுதான் விளிப்பார் எங்கள் கணிதப் புலி.

‘ஏண்டா! இப்பிடிச் செஞ்சா என்ன…? பள்ளிவாசல் ஓடைக்குள்ள நல்ல இருட்டு.. இஸாவுக்கு பள்ளிக்கு வருவாரு மச்சான். ஒளிச்சிருந்து கல்லால மண்டைய ஒடைப்போம்’ என்பான் ஜவாத். அவன் கொஞ்சம் முரடன். ‘கிரிமினல் ஜவாத்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

‘ போடா நீயும் ஒன்ட ஐடியாவும்! அதெல்லாம் பொலீஸ் கேஸாயிடும். வேற ஏதாவது ஐடியா சொல்லுங்கடா’

‘இவர்ர பின்னேரக் கிளாஸை எல்லாருமாச் சேர்ந்து கட் அடிப்போம். அப்ப அதிபர் காரணத்தைக் கேப்பாருதானே.. அப்ப சொல்லுவோம் இப்பிடி எங்களை அவமானப்படுத்த வேணாமென்டது அப்பிடியாவது வெளங்கட்டும்..’ என்பேன் நான்.

‘நம்ம எவ்வளவு சொன்னாலும் இவளொள் பொட்டையொள் அவர்ர பாடத்துக்கு போவாளொள்றா’

‘வேணுமென்டா நம்ம ரினோஸாவை மட்டும் நிப்பாட்டலாம்..’

‘என்னது.. ‘நம்ம ரினோஸா’வா? ஓஹோ! அப்பிடிப் போவுதா விசயம்?’ என்று என்னைக் கலாய்பான் சரீன்.

‘டேய், அதுக்குள்ள நீ இதைச் சொருவாத. நம்ம இல்லாம பொட்டையொளை மட்டும் வச்சு எப்பிடிரா அவரு படிப்பிக்கிறது?’

‘நம்மளும் இல்லாட்டி அவளொளுக்கு நல்ல சந்தோசமா படிப்பிப்பான்டா, அந்த ஆள்’

‘அதில்லடா மாடு! நம்மல்லாரும் போவாமவுட்டா நாலைஞ்சு பேருக்கு பட்டப் பேர் சொல்லி படிப்பிக்காட்டி அவருக்கு கணக்கு செமிக்காதடா மச்சான்’

உடனே எல்லாரும் சத்தமாகச் சிரிப்போம்.

‘டேய், எப்பிடியும் ஏஎல் படிக்க மெத்ஸ் ரிசல்ட் வேணுண்டா.. புதிசா வந்த நம்ம வசீம் ஸேருக்கிட்ட டியூசன் போகலான்டா. புது மெதட்டுல நல்ல லேசாப் படிச்சுத் தருவாரு. அடிக்கயும் மாட்டாராம், என்னடா சொல்றீங்க?’

‘அதுக்கு நம்ம வாப்பாமார் வுடணுமே. இவரைப்பத்திக் குறை சொன்னா ஏதோ நம்மள்ளதான் பிழை. மாஸ்டர் நல்ல கண்டிப்பாத்தான் இருக்காரு என்டு நெனைக்கிறாங்கடா..’

கடந்த பதினொரு மாதங்களும் இப்படியேதான் ஒவ்வொரு தடவையும் எல்லாம் பேசிவிட்டு தீர்மானம் ஏதுமின்றிக் கலைவதுதான் ஜ.பா.ச வின் வழமையாக இருந்து வந்தது.

ஆனால் கடைசியாக இரண்டு தினங்களுக்கு முன்பு முற்றவெளியில் நடந்த ஒரு மாலைச் சந்திப்பில்தான் பரீட்சை அனுமதி அட்டைகள் கையில் கிடைத்துவிட்ட தைரியத்திலே எங்கள் கணிதப்புலிக்கு பாடம் ஒன்று படிப்பிப்பது என்ற உறுதியான தீர்மானமொன்றை நிறைவேற்றினோம்.

அதைச் செயல்படுத்தும் பொறுப்பு நான், நஸீர் மற்றும் சரீன் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

000

எதிர்பார்த்தது போலவே பத்து நிமிடத்தில் பாடசாலைக்கு முன்புற வாயிலிலே நிற்கும் பெரிய நிழல்வாகை மரத்தின் நிழலினூடாக ஜரீத் மாஸ்டரும் அதிபரும் ஒன்றாக நடந்து வருவது தெரிந்தது. பாடசாலை வாயிலில் அதிபரிடம் விடைபெற்று அவர் மட்டும் எங்களை நோக்கி படியேறி வந்தார்.

அவர் அருகிலே வரவர எல்லோருக்கும் ‘திக்… திக்’ என்றிருந்தது. வகுப்பில் என்றுமேயில்லாத ஓர் அசாதாரண அமைதி நிலவியது. வகுப்புக்குள் நுழைய வந்தவர் என்ன நினைத்தாரோ சட்டெனத் திரும்பி மீண்டும் நொக்ஸ் புளியமரத்தடியிலே யாருடனோ கதைத்துக்கொண்டு நின்றிருந்த அதிபரிடம் சென்று ஏதோ சொல்லிக்கொண்டு நின்றார். அந்த இடைவெளிக்குள் என்னையும் நஸீரையும் ஒன்றாக வெளியே தள்ளிக்கொண்டு ஒரு மூலையில் கொண்டு ஒதுக்கினான் சரீன்.

‘என்னடா சரீன் ஏதும் சிக்கலா?’

‘ அதெல்லாம் ஒண்ணுமில்ல! வந்து.. நான் ஒண்ணு சொல்லுவேன் ஆத்திரப்படாமக் கேளுங்கடா. டேய், இன்னைக்கு மட்டுந்தானடா இவர்ர வகுப்பு.. பேசாம இதை வுட்டுருவோமாடா?’ என்று கேட்டான். அவன் குரல் லேசாக நடுங்கியது.

‘ஏன்டா ஒனக்குப் பயமாரிக்கா..? நாங்கதானடா செய்யப்போறோம். நீ வேணுமெண்டா நல்ல புள்ளயாட்டம் இருந்து எல்லாம் முடிய வாயேன்’ என்றேன் குத்தலாக.

‘நேத்து முத்தவெளியில வச்சு எப்பிடி பெரிய வீரனாட்டம் இவன் கதைச்சான் பாத்தியாடா..? கோழைப்பயல்’ என்றான் கோபத்தோடு நஸீர்.

‘யார்ரா கோழை..? அதில்லடா, இனி இவருக்கும் நம்மளுக்கும் சம்பந்தமில்லைதானே. ஓஎல் எக்ஸாமுக்கு போற நேரத்துல விசாரணை அது இதுண்டு அலையேலாடா.. பேசாம வுட்டுத்தொலைப்போம் என்டுதான் சொல்ல வந்தேன்’

‘எத்தின தரண்டா ஒன்ட, என்ட, இவன்ட, மத்தப்பேர்ர உம்மா வாப்பாவை இழுத்து ஏசியிரிக்காரு.. எப்பிடிரா சும்மா இருக்கிறது?’

‘அப்படியெண்டா சரிடா, யோசிக்கவே வேணாம் செய்வோம். சாமான்லாம் எங்கடா.. கொண்டு வந்தீங்களா?’ என்றான் சரீன் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன்.

‘நீ எல்லாருக்கிட்டயும் ப்ளானைச் சொன்னியா? ஏதும் சிக்கலில்லையே..?’ என்று கேட்டோம்;.

‘அவரு யார்ர பட்டப்பெயரைச் சொல்றாரோ அவன் எழும்பி அவரோட எதிர்த்து வாய்போடணும்.. அந்த வாக்குவாதம் நடந்திட்டிருக்கக்கொள்ள நம்ம எல்லாரும் எழும்பி வேலையைக்காட்றோம். இதானே.. அதெல்லாம் க்ளீனாச் சொல்லியாச்சு. அதுசரி, நீ சாமானக் கொண்டு வந்திருக்கியா…?’

‘ஆங்! என்ட மேசையில இருக்க பேக்குக்குள்ள இருக்கு. மொத்தம் 27. நீ போய்க் கெதியா ரெண்டு மூணை மட்டும் எங்களுக்கு வைச்சிப்போட்டு மத்ததையெல்லாம் ஆளுக்கொண்ணா கையில வச்சிருக்கட்டும் குடு. நீயும் எடு.. பொட்டைகளுக்கு வேணாம்.. அதுகளுக்கு இப்ப தெரியவும் வேணாம்.. கவனமா எடு சரியா?’

‘டேய் சரீன் இஞ்ச பார், யார்ர பட்டப்பெயரைச் மொதச் சொல்றாரோ அவனை மட்டும் எழும்பி விசயத்தைப் பாக்கச் சொல்லு. மத்ததை நாங்க பாத்துக்கிறோம். நீ சொதப்பி வுட்டுறாத!’ என்றான் நஸீர் அவனை நம்பாத பார்வையுடன்.

‘சரிசரி நா உள்ள போறேன்! நீங்க பின்னால வாங்கடா’

சரீன் உள்ளே போய் சிறிது நேரத்திலே நாங்களும் வகுப்புக்குள்ளே போய் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் ஜரீத் மாஸ்டர் மீண்டும் உள்ளே வர எல்லோரும் எழுந்து நின்று ஸலாம் சொன்னோம்.

‘அஸ்ஸலாமு அலைக்கும் ஸேர்!’

‘வஅலைக்கும் ஸலாம். சரி, எல்லாரும் எக்ஸாமுக்குப் போகப்போறிங்க… இவ்வளவு நாளும் கஸ்டப்பட்டு பாடம் நடத்தினந்தானே… அதனால இன்டைக்கு நம்ம கொஞ்சம் பேசுவோம். சரியா…?!’ என்றார் அதிரடியாக.

நாங்கள் ஒருவரையொருவர் குழப்பமாகப் பார்த்துக் கொண்டோம்.

‘பிள்ளைகள் நீங்க ஸலாம் சொன்னீங்கதானே. அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க பாப்பம்?’

நாங்கள் ஒருவரும் பதில் பேசவில்லை. பெண்பிள்ளைகள் மட்டும் ஏதோ முனகினார்கள்.

‘அறபுல அப்படியென்டா.. ‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்று கருத்து. அதுசரி பிள்ளைகள், ‘சாந்தி’ என்டா என்ன?’

‘ம், ஒன்ட கள்ளப் பொஞ்சாதி’ என்று கிசுகிசுத்த குரலில் ‘கிரிமினல்’ ஜவாத் கறுவியது காதில் லேசாய் விழ எல்லோரும் சிரிப்பைக் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டோம்.

‘சாந்தி என்டா.. அமைதி. மனஅமைதி.. மனிசனுக்கு மனதில அமைதி முக்கியம்தானே.. அது இருந்தாத்தான் படிக்கலாம்.. வேலைசெய்யலாம்.. சம்பாதிக்கலாம்.. எதையாவது கண்டுபுடிக்கலாம். அதுமட்டுமில்ல..’

‘ம்ம்! ஒண்ட மண்டையையும் ஒடைக்கலாம்’ – ஜவாத்

‘ஏய் என்னடா நடக்குது இஞ்ச?’ என்று பார்வையாலேயே சரீனிடம் கேட்டேன்;. அவன் தனக்கும் புரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கினான்.

‘… அதனாலதான் நம்ம ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதற்கு முந்திக்கொள்ளுங்கள் என்று…’

‘என்னடா இது, மச்சான்புள்ள ஜமாத்துல போய் வந்த மாதிரியிருக்கு.. நல்லாத்தானடா இருந்தாரு.. மத்தியானம் ஏதும் வித்தியாசமான கறியோட சாப்பிட்டிருப்பாரோ?’ என்று மெதுவாகக் கேட்டான் நஸீர்.

இப்படியே ஐந்துநிமிடம் பத்துநிமிடமாகி.. பத்துநிமிடம் கால்மணியாகி கால்மணி அரை மணியாகிக் கொண்டிருந்ததே தவிர எங்கள் கணிதப்புலி தனது போதனையை விடுவதாக இல்லை. எனக்கு ஒரே யோசனையாக இருந்தது.

‘மச்சான் நஸீர் நெலமை பொழையாப் போவுது. என்னடா செய்வோம்..?’ என்று கேட்டேன்.

‘டேய், மாஸ்டர் நம்மட ப்ளானை மோப்பம் புடிச்சிட்டாரென்டுதான் நெனைக்கிறன். இவன் சரீன்ட வேலைதான் இது! இன்டைக்கு அவனை..?’ என்று கொதித்தான் நஸீர்.

‘ மச்சான் நஸீர், அவசரப்படாதடா! அவன் சொல்லியிருக்க மாட்டான். இது வேற என்னமோ நடக்கப்போவுது என்டு என்ட மனஞ் சொல்லுது. சரி, நான் ஒரு ஐடியாச் சொல்றேன் கேளு. ஒன்ட மெட்ஸ் கொப்பி வச்சிருக்கியா?’

‘ஓ! இருக்கு.. ஏன்டா?’

‘எதுவுங் கேக்காத.. நீ, சொணங்காம ஒன்ட மெட்ஸ் கொப்பிய எடுத்திக்கிட்டு டக்கென்டு அவருக்கிட்டப்போய் ஏதாவது டவுட் கேளு… வேணுமெண்டே ஆளைக் கொழப்பியடி..! எப்படியும் ஒனக்கு ஏசுவாரு.. மத்ததை நான் பாக்கிறண்டா.. சரியா? போ! போ!’ என்று அவனை அவசரப்படுத்தினேன்.

என்னுடைய மனக்கணிப்புச் சரியாகவே இருந்தது. ஆனால், நேரம்தான் பிந்திவிட்டது.

ஆம், நஸீர் மெத்ஸ் கொப்பியை எடுத்துக்கொண்டு எழுந்த அதேவேளை அதிபர், ஊர்ப் பெரிய பள்ளிவாசல் தலைவர், அரபிக்கல்லூரி ஹஸரத் உட்பட வெள்ளை ஆடை, தாடி, தொப்பிகளுடன் இன்னும் சில மதப்பிரமுகர்களும் எங்கள் வகுப்பறையை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம்.

வாப்பாவைக் கண்டதும் நஸீர் வெலவெலத்துப்போய் சட்டென அமர்ந்துவிட்டான். ஜரீத் மாஸ்டரின் போதனை தொடர்ந்து கொண்டேயிருந்தது.

‘…ஆகவே நாமெல்லாரும் இன்றைக்கு நமது பரீட்சையிலே நல்லபடியான பெறுபேறுகளைப் பெறுவதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ பிரார்த்தனை புரிவோம். சரிதானே?… அஸ்ஸலாமு அலைக்கும்! வாங்க ஹஸரத், மௌலவி எல்லாரும் உள்ள வாங்க.. சேர் நீங்களும் வாங்க..’ என்று அவர்களை எழுந்து நின்று வரவேற்றார் எங்கள் ஜரீத் மாஸ்டர். வேறுவழியின்றி நாங்களும் எழுந்து வரவேற்றுவிட்டு அமர்ந்தோம்.

வந்தவர்கள் எல்லோரும் எங்கள் முன்னே அரைவட்டமாய் அமர்ந்திருக்க அதிபரின் சிறு அறிமுக உரைக்குப் பின்னர் துஆ பிரார்த்தனை ஆரம்பமானது.

‘பிள்ளைகளே! எல்லோரும் எழுந்து நின்று இருகரங்களையும் தோள்களுக்கு நேரே உயர்த்தி ஒன்றாகச் சேர்த்துப்பிடித்து வல்ல இறைவனிடம் பிரார்த்தனை புரிவோம்.. யாரப்பனா…’ என்று வேண்டி துஆவை ஆரம்பித்தார் ஹஸரத் அவர்கள்.

அவர் கேட்டுக்கொண்டபடி நாங்கள் ஒவ்வொருவரும் இருகைகளையும் தோள்களுக்கு நேரே உயர்த்தி ஒன்றாகச் சேர்த்துப்பிடித்துப் பிரார்த்தனை புரிய நினைத்தபோதிலும் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டிருந்த அந்த அழுகல் முட்டைகளை எங்கே எப்படி வைத்திருப்பது என்பதுதான் புரியவில்லை.

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *