கடவுளின் உரை..!

 

மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களின் முன்னால் நகர்ந்துகொண்டிருந்தன!

கண் இமைக்கும் நேரங்களில் சிறகு முளைத்த வெள்ளைக் குதிரைகள் அவர்களைக் கடந்து போயின. வெற்றிப் பதாகைகளைச் சுமந்ததான புன்னகைகள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டன. கிரீடம் சூட்டப்பட்ட தலைகளுடன் தாம் அழகாயும் தனித்துவமாயும் இருப்பதான பிரமையில் அனைவரும் மௌனச் சிலிர்ப்போடு வரிசையாக நின்றிருந்தார்கள்!

தெருநாய்கள் பயத்துடன் சிரித்தபடியே நடந்தன. சிறுநரிகள் வீதியைக் குறுக்கறுக்கத் தயங்கி, மீண்டும் பற்றைகளுள் ஓடி மறைந்தன. வானத்தின் ஓரத்தில் முகில்களைத் துளைத்தெழுந்தோர் செஞ்சுடர் மின்னியது! அனைவர் மனசிற்குள்ளும் அசையா மணிகளின் ஓசை! கூடவே வெற்றி முரசுகள், வலம்புரிச்சங்குகள், தாரைகள் தப்பட்டைகளின் பெருமுழக்கம்!

அவர்கள் மீண்டும் மீண்டும் புதுப்புது அர்த்தங்களோடு ஒருவரையொருவர் பார்த்தார்கள். பல நூறு வருடங்களாய் காவித்திரியும், கனவுகளையும் காவியங்களையும் விரைவில் சுப முத்தாய்ப்பிட்டு, ஒரு வெற்றிப் பிரகடனத்தைத் தரிசிக்கப்போவதான, தீர்க்கமான நம்பிக்கையுடன் நீண்ட எதிர்காலத்திற்கான புதிய கனவுகளைக் காணத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

புதிய வாழ்வுக்கான பொன்னுலகம் ஒன்று உருவாகும் பேரழகு அவர்களின் கண்களில் போதையாய் இறங்கி யிருந்தது. தாம் பேசும் வார்த்தைகள் யாவும் தம்மைச் சுற்றி ஹம்சத்வனியிலும் மோகனத்திலும் இழைந்து வருவதாய் மனம் உருகிக்கொண்டிருந்தது!

நீண்ட வெள்ளை வேஷ்டிகளையும் மஞ்சள் சேலை களையும் அணிந்திருந்தவர்கள், மார்பில் குருசுகளெனத் தொங்கும் இலட்சியச் சின்னங்கள் தெரிய, ஒற்றைக் கைகளை அசைத்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

நகரகாவலர்களின் நடமாட்டம் நிறைந்த நகர்ப்புற வீதி, குறித்த நேரத்தை எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருந்தது. அதன் எல்லையில், அகன்ற நிலைப்படிகளோடு ஒட்டிய, வெள்ளிப்பூண்கள் தொங்கும் பெரிய கதவுகளின் பின்னால் பெருமண்டபம் நீண்டு கிடந்தது. சில்லென்ற அடர்ந்த குளிர்காற்று மண்டபத்தின் புறச்சூழலை நிறைத்திருந்தது. தேம்ஸ்நதியிலிருந்து ஒரு கிளையெனப் பிரிந்து வரும் ‘கலியன்ற் பொயின்ற் மரீனா’, அழகிய சிற்றாறாக விரிந்து, மண்டபத்தை ஒட்டிய நீளமான சிமெண்ட் தரையில் மோதி, முன்னும் பின்னுமாய் அலைந்து கொண்டிருந்தது. தடித்த வெள்ளிக்கம்பிகளினால் எல்லையிடப்பட்டிருந்த சிமெண்ட் தரையிலிருந்து மேலே ஏறும் அகன்ற நிலைப்படிகளின் முடிவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அலங்கார வாயிற்கதவுகள் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் கிளர்ச்சியுடன் நின்றிருந்தது!

வாயில் நிலைகளில், தோரணங்களும் மாலைகளும் அசைந்து கொண்டிருக்க, ரோஜாப் பூஞ்சாடிகளைக் கடந்து அவர்களில் பலரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.

வாயிலில் சிலர் அணிவகுப்புச் செய்யக் காத்திருப்பது போலவும் குறித்த பொழுதைக் காக்கும் காவலர்களைப் போலவும் நின்று கொண்டிருந்தார்கள்.

கடவுளிடமிருந்து வரும் கருத்தோலையை இங்கே காவிக்கொண்டு வருபவர் சர்வதேசத்திற்கான தமது சமாதானத் தூதுவர் எனப் பேசிக்கொண்டார்கள்.

இலேசான பரபரப்புடன் வாயிற்கதவுகள் திறபடத் தயாரானது!

“கடவுளின் தூதர் வருகிறார் . . .”

வாத்தியங்கள் சீராக முழங்குகின்றன. அனைவரும் அவரை அண்மித்துப் பார்க்கவும் ஆரத்தழுவவும் முயல்கிறார்கள். அவர் கைகளை அசைத்தவாறே புன்னகையை உதிர்த்தபடி மேடையின் பின்னால் மறைந்துபோகிறார்.

அவரின் வரவோடு கிளர்ந்தெழுந்த ஆனந்தப் பேரோசை அடங்க சிறிது நேரம் பிடித்தது! இனிவரப் போகும் நிமிடங்களனைத்தும் மிகப் பெறுமதியானதென அனைவரும் பேரமைதி பேணத் தொடங்கினார்கள். மேடையின் இருமருங்கும் தொங்கும் பெரிய திரைகளில் அற்புதமொன்று நிகழக் காத்திருப்பதாய் பல்லாயிரம் கண்களும் திரைகளை நோக்கத் தொடங்கியிருந்தன.

மண்டபத்திற்குள் உடனே நுழைந்துவிடவேண்டும் என்ற துடிப்பையும் தவிப்பையும் சுமந்தபடி, வெளியே பாதை நீளமாய் பல்லாயிரம் வாகனங்கள் தரிப்பிடம் தேடி வரிசையிட்டுக் காத்து நிற்கின்றன! வெள்ளையுடை அணிந்த காவலர்கள் வேகமாய்க் கைகளை அசைத்து அசைத்து . . . பாதைகளை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

கல்லறைகளும் வணக்கத் தூபிகளும் காவிய நாயகர்களின் வீரத்தைப் பறைசாற்றும் புகைப்படங்களும் ஓவியங்களும் மண்டபத்தின் மேடையைச் சூழ ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. வலதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்ந்த கொடிக்கம்பத்தில், ஒரு இனத்தின், ஒரு இலட்சியத்தின், ஒரு கொள்கையின், உரிமைகளின், ஒரு ஆட்சியின் அடையாளமாய் வீறு கொண்டெழும் வேங்கைக்கொடியொன்று மேலெழுந்து பறக்கத் தயாராக இருந்தது.

இழப்புகளின் வலியும் இதயம் நிறைந்த துயரமும் அவற்றைத் துடைத்தெறிந்து விடுவதான நம்பிக்கையும் கலந்து உணர்ச்சிப் பெருக்காகி மண்டபமெங்கும் வெப்பப் பெருமூச்சால் நிறைந்திருந்தது!

பொழுது, நண்பகல் பன்னிரண்டு மணியைத் தொடத் தயாராக இருந்தபோது எல்லோரும் அமைதியாக இருக்கைகளை விட்டு எழுந்து நின்றார்கள். அனைவரது கைகளிலும் தீச்சட்டி! கணீரென்ற ஓசையுடன் அசையாமணியொன்று துயரப்பேரொலியை மண்டபமெங்கும் சிதறவிடுகிறது! அதன் எதிரொலி பலமடங்காகி, கல்லறைகளிலும் மானிட மனங்களிலும் மோதித் தெறிக்கிறது! மையத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் பூங்கொத்துகளுக்கு நடுவே இருந்த வட்டமான பெரிய தீச்சட்டியில் சுடர் பிரகாசமாய் எரியத் தொடங்கியிருந்தது. கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு, வேங்கை வீறுடன் பறக்கத் தொடங்கியிருந்தது. உயிரைப் பிழியும் கவிதை வரிகள், கரகரப்பிரியா இராகத்தில் குழைந்து தோய்ந்து மண்டபத்தைக் கண்ணீரால் நிறைக்கத் தொடங்கியது! எல்லோரும் கைகளில் சுடரும் ஒளியைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தார்கள். சிதறிவிழும் கண்ணீர்த்துளிகள் தீபத்துடன் கலந்து மின்னிக்கொண்டிருந்தன! மெய்சிலிர்க்கும் நிமிடங்களால் மண்டபம் கட்டிப் போடப்பட்டிருந்தது!

துயர் நிறைந்த நினைவுகளில் தோய்ந்திருந்த இதயங்களை அள்ளிச் சுமந்தபடி அசையாமணியோசை காற்றில் கரைந்து போக, சுடர்கள் மெதுவாக அணைக்கப்படுகின்றன. பொன்னும் மணிகளும் நிறைந்த வெள்ளிக் குடங்களை இருவர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். அதனை மேலும் நிரப்பி அனுப்பிவிடும் ஆவலில் பலரும் நெருக்கியடித்து தமது பங்களிப்பை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள்.

“தமிழரின் தாகம் . . . தமிழீழத் தாயகம் . . .”

உணர்ச்சி பொங்கும் இலட்சியப் பிரமா ணங்கள், தடித்த சுவர்களிலும் உயர்ந்த கூரைகளிலும் மண்டபத்தின் சுற்று வாயில் கதவுகளிலும் மோதி பெரிதாக எதிரொலித்தன!

வரலாற்றைச் சுமந்தபடி திரியும் கடவுளின் தூதர், புன்னகையோடு கைகளை அசைத்தவாறே மேடைக்கு வருகிறார். அருகில் மஞ்சள் சேலை அணிந்த வெள்ளைப் புறாவாக அவரின் துணைவி. பின்னால் துணைத்தூதர்கள். கடவுளின் உரையை வரவேற்கத் தயாராக மரியாதையுடன் அவர்கள் நின்றிருந்தார்கள்.

கல்லறைப் பூங்காவின் மையத்தில் பெருஞ்சுடர் இன்னமும் எரிந்தபடியே இருக்க அனைவரின் கவனமும் திரைகளை நோக்கித் திரும்பியிருந்தது. தரையெங்கும் உதிர்ந்து கிடந்த மஞ்சள் மலர்களின் மேல், சப்பாத்துக்களுடனும் குளிர் அங்கிகளுடனும் சிலர் அசையாமல் உறைந்துபோய் நின்றிருந்தார்கள். அனைவரின் காதுகளும் கூர்மையாகியிருந்தன. கண்கள் திரைகளில் நிலைத்திருந்தன.

சத்தியப்பிரமாண வரிகளோடு, மண்டபம் சூழ்ந்த திரைகளெங்கும் கடவுள் பிரசன்னமாகியிருந்தார்! வெற்றிக் களிப்பில் எழுந்த ஆனந்தக் கூச்சல், மண்டபத்தின் கூரைகளை இடித்துச் சென்றது. தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்களேதுமில்லாமல் கடவுள் ஒரு மனிதனாக நின்றிருந்தார்! கண்களில் கருணையும் உறுதியும் பொங்க, அவர் நேர்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.

“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! . . .”

கடவுளின் குரலைத் தவிர, அனைத்து ஒலிகளும் அடங்கிப் போயிருந்த அந்த நிமிடங்களில் மண்டபத்தின் தடித்த சுவர்களும் கதவுகளும் காதுகளைக் கூர்மையாக்கி நிற்பதென அசைவற்றிருந்தன!

உரையின் நடுநடுவே உணர்ச்சிப் பெருக்கில் கைகள் ஓங்கித் தட்டப்படுகின்றன! குதூகலிப்பில் பலம் கொண்ட மட்டும் மூச்சை உள்ளிழுத்து பின் வெளியில் தள்ளி பலரும் விசில் அடிக்கிறார்கள். எங்களுக்காக ஒருவர் இருக்கிறார் என்ற நெஞ்சார்ந்த ஆறுதலும் நாம் பலம் மிக்கவர்கள் என்ற ஒருமித்த நம்பிக்கையுணர்வும் இணைந்து அனைவரையும் நெஞ்சு நிமிர்த்தி உட்கார வைக்கிறது.

“இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும். . .
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே . .!”

நினைவுகளின் ஆழத்தில் பதிந்து போயிருக்கும் பாரதியாரின் உயிர்ப்பு நிறைந்த வரிகள், ஓங்கியொலிக்கும் முரசோசை போல் அனைவரது இதயங்களையும் அறைகிறது! உணர்வுகள் அவர்களையறியாமல் முறுக்கேறுகின்றன! எமனையும் எட்டி உதைக்கும் தைரியம் அவர்களின் உடல் முழுவதும் சூடாகப் பரவுகிறது!

சங்காரம் செய்து, அரக்கர்களை அழித்தொழித்து, ஒரு மீட்பராக அவர்களைக் காத்தருள்வதற்காய் இந்த உலகில் அவதரித்த கடவுளின் அவதார புருஷர் எதிரில் நின்று உரையாற்றியபடி இருக்கிறார். அவரின் உரை ஒரு ஆணியால் எழுதப்படும் சத்தியவாக்குப் போலவும் பெருந்தவமியற்றி வலிமை பெற்ற தவசிகளின் தீர்க்கதரிசனக் கூற்றுக்கள் போலவும் தொடர்ந்து கொண்டிருந்தது!

மண்டபத்தில் இருக்கைகள் அற்றவர்கள், பெருந்திரளின் பின்னாலிருக்கும் அகன்ற வாயில்களை அடைத்தபடி நின்றிருந்தார்கள். கூட்டத்தில் பூனைகளும் நாய்களும் பன்றிகளும் கழுகுகளும் பெருச்சாளிகளும் மனித முகமூடிகளுடன் புன்னகை சிந்திக்கொண்டு இருந்தார்கள். அவற்றின் காதுகளும் கைகளும் கூர்மையாக வேலை செய்து கொண்டிருந்தன. கடவுளின் உரையில் எவருக்கும் புரியாத புதிய தத்துவங்களை வரிக்குவரி கண்டுபிடித்துச் சாதனை புரியும் காரியங்களில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அவர்களுக்குமப்பால் சுதந் திரத்தை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நற்சிந்தனைகளைக் காவிக்கொண்டு திரிபவர்கள் சிலர் வசீகரப் புன்னகைகளை உதிர்த்தவாறே அறிவாளிகள் போல் ஒற்றைக் கால்களில் நின்று கொண்டிருந்தார்கள். அதீத பைத்தியக்காரரைப் பார்ப்பது போல் இருந்தது அவர்களின் பார்வை. அவர்களின் உதடுகள் எப்போதும் கேலி வார்த்தைகளை உதிர்க்கக் காத்திருந்தன. ஆனால் யாரும் அதற்கான சந்தர்ப்பத்தையோ அனுமதியையோ கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனாலும் அவர்களின் தத்துவங்களை எழுதுவதற்கு விளம்பரங்கள் நிறைந்த கவர்ச்சித் தளங்கள் பல தயாராகக் காத்திருந்தன.

கேலி வார்த்தைகளைச் செதுக்கி, அவர்களால் எதையும் எழுத முடியுமாயிருந்தது. தமக்குப் பிடிக்காதவற்றையும் பிடிக்காதவர்களையும் முரட்டு விலங்குகளாக்கி, மூர்க்கம் மிகுந்த அசுரர்களாக்கிச் சித்தரித்து விடுவதில் வல்லமை பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். யாரும் கேள்விகளேதும் கேட்டுவிட முடியாதபடியான மாயக் கருவிகளையும் வெள்ளைப் பல்லக்குகளையும் கண்கட்டுவித்தைகளையும் சொந்தமாக்கி வைத்திருக்கும், வலிய ஆட்சியாளர்களின் பின்கதவுகள் அவர்களிற்காக எப்பவும் திறந்துவிடப்பட்டிருந்தன! அடிமட்டச் சேவகர்கள் செய்யும் வேலைகளை அங்கே இவர்கள் கூச்சமின்றி செய்து கொண்டிருந்தார்கள். திட்டமிட்டு அளிக்கப்படும் விருந்துபசாரங்களிலும் கேளிக்கை களிலும் மயங்கி, தாய்வீட்டைக் கேலி செய்யும் கவிதைகளையும் கதைகளையும் அவர்கள் புனைந்து கொண்டிருந்தார்கள். போதை நிறைந்த நடனங்களால் எப்பவும் கட்டிப் போடப்பட்டிருந்தார்கள். பாவங்களுக்கான அனைத்து வகைத் தண்டனைகளும் மறுக்கப்பட்டிருந்த பளிங்கு மாளிகைகள் அவர்களுக்கு அவ்வப்போது பரிசில்களாக வழங்கப்பட்டன.

மண்டபத்தின் திரைகளில் பேருரை நிறைவுற்று, சரித்திரப் பரிணாமங்களும் மீட்பர்களின் சாகசங்களும் திகில் நிறைந்த ஆவணங்கள் போல வந்து போயின. நெடிய வரலாறு ஒன்றின் அடுத்த அத்தியாயத்திற்கான ஆரம்பக் கனவுகளைச் சுமந்தபடி, களி நடனங்களும் புனைவு நாடகங்களும் இசைப்பாடல்களுமாய் முடிவுறும் வரை மண்டபம் அதனுள் மூழ்கிப்போகிறது!

* * *

பின்னர் சில மழைக்காலங்கள் வந்து, அனைத்தையும் கடந்து போனது! அதன் பின்னர் ஒரு இளவேனிற் காலம் வந்தது! சமாதானப் புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகளும் பாட்டுப் பாடும் குயில்களும் மகிழ்வுடன் பறந்து திரிந்த, ஒரு கவர்ச்சியான இளவேனிற் காலம் அது!

இந்தக் காலம் இப்படித்தான் ஆகுமென்று யாரும் அறியாத ஒரு மாயப் பொழுதில், எவரும் விரும்பாத ஒரு ஈன வழியில் அது நடந்தேறியது! அப்படித்தான் நடக்கவேண்டுமென்று விரும்பியவர்கள் அதனை மகிழ்வோடு முன்னின்று நடத்தினார்கள்!

உழைப்பும் உயிர்த்தியாகமும் கலந்து, உதிரத்தால் செதுக்கி உருப்பெற்ற பொற்கோட்டை வாயிலினுள் சொல்லாமல் கொள்ளாமல் கண்பொத்தியடித்தது போல் மாயப் பிசாசுகள் புகுந்து கொண்டு ஊழிச்சதிராடின!

‘கடவுள் காப்பாற்றுவார்’ என்று மந்திர உச்சாடனம் மட்டும் செய்தபடி மல்லாக்காகப் படுத்துக் கிடந்தவர்களும் உழைக்கும் ஆர்வமின்றி, அரைத் தூக்கத்தில் பகற்கனாக்கள் கண்டு பின், திடுக்குற்று விழித்தெழுந்தவர்களும் ஒரு பிரளயத்தின் பின்னரான இருள் நிறைந்த கணமொன்றில் திரும்பிப் பார்த்தபோது கடவுள் தன் இருப்பிடத்தில் காணாமல் போயிருந்தார்!!!

கடவுளை நம்பினோர் சொன்னார்கள்:
“அருவமும் உருவமுமானவர் கடவுள்!
ஆதியும் அந்தமுமில்லாதவர்
கடவுள்!
எங்கும் நிறைந்தவர் கடவுள்!
எல்லாம் வல்லவர்
கடவுள்!

- நவம்பர் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
கனவுகள் இனிமையாக இருந்தன. மேகப் பொதிகளுனூடாய், பசும் புற்களின் மேலாய், வியர்வையின் வாடையற்ற வாசனைத் தரைகளின் வணணப்பூச்சுகளினிடையாய், சொர்க்கத்தின் கூரையைத் தொடுவதும் குதிப்பதுமாய் கனவுகள் மிதந்தன! மாலைக் குளிரின் சிலிர்ப்பும், நிலத்தின் அடியிலிருந்து வீசும் வெயிலின் கடுப்பும் ஆறாமல் உடலை இரண்டு படுத்திப் ...
மேலும் கதையை படிக்க...
அவர்கள் வாழ்ந்த நிலத்தின் பெரும்பகுதியைக் கடல் அணைத்திருந்தது! இந்து சமுத்திரத்திலிருந்து நிலத்தை நோக்கி நகரும் ஒடுங்கிய நீர்ப்பரப்பான பாக்கு நீரிணை அந்த நிலப்பகுதியின் ஓரங்களை எப்பவும் நனைத்தபடியே இருந்தது. அதன் ‘ஓ’வென்ற பேரிரைச்சலைக் கேட்டபடியே அப்பகுதியிலுள்ள அநேகம் பேர் விழித்துக்கொண்டார்கள். விரிந்து ...
மேலும் கதையை படிக்க...
இறக்கமான வளையில் தலையை மோதாமல், அவதானமாகக் குனிந்து, முற்றத்தில் இறங்கிய பொழுது ‘கிசுகிசு’வென்று மெல்லிய சிலிர்ப்பான காற்று உடலைத் தழுவியது! நிமிர்ந்த பொழுது, ஈரமண்ணில் நின்று கொண்டு மெதுவாகத் தலையசைக்கும் குளிர்ந்த பச்சை நிற வெண்காயத் தார்கள்! கொஞ்சம் எட்டிப் பார்த் ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட காலமாளிணித் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாளிணிப் பரபரப்பு! சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாளிணிக் கூடிப் பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்! சப்தங்கள் யாவும் ஓளிணிகிறபோது, பழையபடி ...
மேலும் கதையை படிக்க...
காற்று, மழை, மேகம், கடல், மலை, நதி, வயல் . . .என்று அழகான தரிசனங்களைச் சுமந்தபடி மென்மை யான மனிதமனங்களுடன் பின்னிப்பிணைந்து, நனைந்து நாளெல்லாம் முக்குளித்து எழுதுகின்றேன்! ஆயினும், திரும்பத் திரும்ப ஒன்றுவிடாமல் என்னால் சரியாகப் புரிய வைக்க முடியவில்லை! “வா, என்னோடு ...
மேலும் கதையை படிக்க...
காற்று
அவர்கள் இல்லாத தேசம்..!
தரிசு நிலத்து அரும்பு
முறியாத பனை!
யாசகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)