கசிவு

 

சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பு, சென்னையின் புறநகரை ஒட்டியிருந்தது. அமெரிக்காவின் “பெண்டகனை’ நினைவூட்டும் அளவுக்குப் பெரிதாக இல்லையென்றாலும், உயரத்தால் பாதிக்குப் பாதி இல்லையென்றாலும், அந்த மாடலில் உருவாகியிருந்தது அந்தக் காலனி.

பலதரப்பட்ட பிரிவினரும் அங்கு குடியிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் திட்டிக்கொண்டதற்குக் காரணமே அங்கு மூன்று நாள் தொடர்ந்து கனமழையால் காலனி வெள்ளக் காடாகி இருந்ததுதான். ஒருவரை ஒருவர் திட்டுவதற்குப் பெரிதான விஷயம் ஒன்றுமில்லை. ஒரு சிறிய பிரச்னைதான்! என்றாலும் அதனைப் பூதாகரமாகப் பெரிதுபடுத்தியிருந்தனர். ஒரே கூச்சலும் குழப்பமும் தொடர்ந்தது.

இத்தனைக்கும் காரணம் ஐந்தாவது மாடிக் கழிப்பறைக் குழாயில் ஏற்பட்ட கசிவுதான்!

அண்மையில் பெய்திருந்த கனமழையும், கழிப்பறைக் குழாய்க்கசிவும் சங்கமமாகி, காலனியை உண்டு இல்லை என்று பார்த்து விட்டது. காலனியைச் சுற்றிச் சாக்கடைத் தண்ணீர் தேங்கி இருந்தது. அது வீசிய துர்நாற்றம் அரசியலைவிட மோசமாக இருந்தது.

அப்படி ஓர் துர்நாற்றத்தை அங்கு குடியிருப்போர் இப்போதுதான் அனுபவிக்கின்றனர். பணத்தை லட்சம் லட்சமாய்க் கொட்டிக்கொடுத்து அந்த குடியிருப்பில் குடியேறிதற்கு ஒருவரையொருவர் நொந்து கொண்டார்கள்.

அந்தக் காலனியின் நூற்றியிருபத்தைந்து குடியிருப்புகள். மொத்த வீடுகளுக்க துர்நாற்றம் பொதுவுடைமையாகியது. கசிவால் காலனி முழுக்கச் சகித்துக்கொள்ள முடியாமல் அப்படி ஓர் நாற்றம். தனிமனிதனில், குடும்பத்தில், அரசியலில், ஊரில், நாட்டில் இருப்பனவற்றோடு அதனைச் சம்பந்தப்படுத்த முடியாதுதான். அவற்றை எல்லாம் தாண்டி எல்லை கடந்து பரவியிருந்தது சாக்கடைச் சங்கமம். ஒரு கசிவால் குடியிருப்போரின் அன்றாட வாழ்க்கையை மூன்று நாட்களாகப் புரட்டிப்போட்டிருந்தது.

“”கசமாலம்! கழிடைங்க! சீ…சீ… நாத்தம் வயித்த புடுங்குது. குடலே வெளியிலே வந்துடும் போலிருக்கே…”
- இப்படி சொல்லிவிட்டுச் சாக்கடையைப் பார்த்து எச்சிலைக் காறி உமிழ்ந்தபடியே சென்றாள் ஒருத்தி. அவள் குடியிருப்பபின் சொந்தக்காரி அல்ல. ஒரு பெரிய வீட்டின் வேலைக்காரி.

“காலனியலே இருக்கறவாளுக்குக் கொஞ்சம்கூட சுத்த பத்தம் தெரியலே… இதெ கேக்கிறவா யாரும் இல்லையா?’

- இரண்டாவது மாடியில் வசித்து வரும் சுமதி மாமியின் அங்கலாய்ப்பு.

“”என்ன பீப்புள் இவங்க. கொஞ்சம் கூட டீசண்டா இல்லே… இந்தஃபில்தி அட்மாஸ்பியரை எப்படி போஸ் பண்றது? ஹெல்த் பாயிண்ட் ஆஃப் வியூல்ல திங்க் பண்ணவேண்டாமா?”

- துர்நாற்றத்தில் கலந்து இருக்கும் கலக்கல் போலவே ஆங்கிலமும் தமிழும் கலந்து தங்கீலீசில் பேசியது வயது எழுபத்தைந்தைத் தாண்டிய மேல்தட்டு வர்க்கம் ஒன்று.

“கார்ப்பரேஷனுக்குத் தகவல் கொடுத்தாச்சு. இன்னும் அவர்கள் வந்தபாடில்லை. என்னய்யா.. கார்ப்பரேஷன் ஆளுங்க… இத்தனைக்கும் மினிஸ்டரோட பி.ஏ. இரண்டு பேர் இந்தக் காலனியிலே குடியிருக்காங்க!

- காலனியிலிருந்தே திருவாளர் பொதுஜனம் ராதாகிருஷ்ணனின் குரல் உச்சஸ்தாசியியில் ஆரோகணமாக ஒலித்தது.

கார்ப்பரேஷன் ஆட்கள் மூவர் வந்தனர். கழிவுநீர்க் கிணற்றைச் சுத்தப்படுத்தும் கருவி வருவதற்குத் தாமதமானது. வந்த கருவியில் ஏதோ கோளாறு. அதனை அங்கேயே விட்டுவிட்டுச் சட சட என்று கயிற்றைப் பிடித்துக்கொண்டு குழாயில் இறங்கிவிட்டான் கிருஷ்ணன். மேலே கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தான் ராகவன்.

கிருஷ்ணனுக்கு ஒன்றும் பிடிபடாமல் போகவே ராகவன் இறங்க வேண்டியதாயிற்று. அவனுக்குப் பாதி தூரம் கீழே இறங்கியதும் மூச்சு முட்டியது. திணறியபடியே மேலே வந்துவிட்டான். அவனைக் கயிற்றால் இழுக்க வேண்டியதாயிருந்தது. அவன் கிணற்றிலிருந்து மேலே வந்ததும் கண்கள் இருண்டுவிட, திடீரென்ற மயங்கி விழுந்தான். அப்படியே சாய்ந்தவன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

கூட்டம் கூடிவிட்டது. அவனைப் பார்த்துக் கொஞ்சமும் அங்கிருந்தோர் இரக்கப்பட்டதாய்த் தெரியவில்லை. அவர்களுக்குக் காலனியைச் சுற்றிக் கடல்போலத் தேங்கியிருக்கும் கழிவு நீர் அகற்றப்படவேண்டும் என்பதுதான் பெரிதாக இருந்ததே ஒழிய, ராகவனைப் பற்றி கவலைப்படவில்லை. அந்த அளவுக்கு அவர்களிடம் மனிதநேயம் மரித்துப்போயிருந்தது.

காலனிவாசிகள் பேச்சு இன்னும் ஓய்ந்தபாடில்லை.
காலனியில் குடியிருப்போர் சிலர் மினிஸ்டர் பி.ஏ. இருக்கும் குடியிருப்புக்கு ஒரு குழுவாகச் சென்றனர். தாங்கள் எழுதி வைத்திருந்த கோரிக்கையை அவர்களிடம் தந்தனர்.
“”நாங்க இங்க வந்து இரண்டு மாதம் தானே ஆவுது. இனிமேதான் இதெ கவனிக்கணும். எங்களுக்கே தெரியுது காலனியிலே இப்படி ஒரு துர்நாற்றம்… எங்களாலேயே சகிக்கமுடியலே… ஆகட்டும் சரி செஞ்சிடலாம்”- மினிஸ்டர் பி.ஏ. இருவருமே இப்படி ஒரு சேரப் பதிலளித்தனர்.

நிலைமை இன்னும் மோசமாகிப் போனது. காரணம். கனமழை இன்றும் தொடர்ந்ததுதான். காலனியின் கழிவு நீர் மட்டுமின்றிச் சுற்றுப்புறத்தில் இருந்த வாய்க்காலில் ஓடிய நீரும் அங்கு கலந்து சங்கமமாகி அந்தக் காலனியை ஒரு குட்டித் தீவு போல ஆக்கியிருந்தது. ஐந்து நாட்களாகியும் கழிவு நீர் வெளியேறவில்லை. கழிப்பறைக் கசிவு வந்து கொண்டுதான் இருந்தது. தேங்கியிருக்கும் அசுத்த நீரையும் வெளியேற்ற இயலவில்லை. சாக்கடை எங்கே அடைத்துக் கொண்டிருக்கிறது என்பது இன்னும் யாருக்கும் புலப்படாமல் இருந்தது.
சந்தோஷ் காலனி, கழிவு நீர் காலனியாகவே காட்சியளிக்கத் தொடங்கியது. அங்கு குடியிருப்போர்க்கு அது வசதிக்கேற்ற வடிகாலாகவும் இருந்தது. கண்டதையும் மாடியிலிருந்தவாறே சாக்கடைப் பக்கம் வீசி எறிவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது. “டிஸ்கஸ் த்ரோ’ வைத்தால் ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களையும் அந்தக் காலனிப் பெண்களே தட்டிச் செல்வார்கள். அழுகிப்போன காய்கறிகள், கடித்துப்போட்ட இறைச்சித் துண்டுகள் இவைகளைப் “பாலீத்தீன்’ பைகளில் அடைத்து வீட்டுக்குள் இருந்தபடியே எறிய அவர்களுக்கு வசதியாக இருந்தது.

துர்நாற்றம் நாலாபுறத்தும் நீக்கமற்ற நிறைந்திருந்தது. மழைநீரும், கழிவு நீரும் அந்தக் காலனியில் அத்வைதமாகக் கலந்திருந்தது. நீக்கமற நிறைந்திருந்த நீர்ப்பரப்பு, கடலோடு கலந்துவிட்டது போல அப்படி ஓர் சங்கமம். சந்தோஷ் காலனியை ஒரு திரிவேணி சங்கமமாக ஆக்கியது. தண்ணீரில் மிதக்கும் ஒருநட்சத்திர ஓட்டலைப் போல கம்பீரமாகக் காட்சி அளித்தது காலனி. இரண்டாம், மூன்றாம் மாடிகளில் இருந்தோர் கரை தட்டிய கப்பலைப் போல கரையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இரண்டாம் மாடியில் குடியிருந்த சிலருக்கு விஷக்காய்ச்சல். அது மெல்ல மெல்ல குடியிருப்புப் பகுதிகளில் பரவியதோடு மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. கான்வெண்டில் படிக்கும் சிறுவர்களைப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அதுமுடக்கிப்போட்டது.

காலனியைக்கொசுக்களுக்கும், டாக்டர்களுக்கும் உரிய சீசனாக ஆக்கியிருந்தது. நோய் தீவிரமாகப் பரவவே, மருத்துவக் கழகம் அந்த சீசனில் வந்த நோய்க்கு என்ன பெயர் வைப்பது எனத் திணறியது. புயலுக்கு “ஜல்’ என்று பெயர் வைப்பதற்கு ஒரு குழு அமைத்ததுபோல, இதற்கும் ஒரு பெயர் வைப்பதென தில்லியில் உள்ள மருத்துவக்கழகம் கூடியது. முடை நாற்றத்திலிருந்து உற்பத்தியாகும் ஒருவகை பூச்சிதான் இதற்குக் காரணம் என்று டாக்டர்கள் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். சிக்குன்குன்யா என்பதுபோல, இதற்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அந்த நோயின் பெயரை மருத்துவக் கழகம் அங்கீகரிக்க, நலத்துறை அமைச்சர் அந்த நோயின் பெயரை “பைப்பிலோனியா’ என்று முன்மொழிந்தார். “பிரஸ்’ மீட்டிலும் கலந்து கொண்டு அந்தப்பெயரை மீண்டும் அங்கீகரித்தார். பிரபல பத்திரிகைகள் அப்பெயரைப் பிரபலப்படுத்தின. சந்தோஷ் காலனி பைப் உடைந்து, சாக்கடையால் இந்நோய் இங்கு முதன்முதலில் தோன்றியதால், “பைப்பிலோனியா’ – பெயர் அமர்க்களப்பட்டது. காலனி மக்களுக்கும் அது பெருமையாக இருந்தது.

சந்தோஷ் காலனியில் இப்போது துர்நாற்றம் அறவே இல்லை. ஒரு வாரமாகப்பெய்த பேய் மழை அந்தக் காலனியைப் படு சுத்தமாக்கியிருந்தது. அந்த அசுத்த நீரை, தண்ணீரே அடித்துச் சென்று கடலோடு கலக்கச் செய்தது. காலனிப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அது தன் போக்கில் எல்லா அசுத்தங்களையும் சுமந்துகொண்டு கடலை நோக்கித் “தேமே’ என்று போய்க் கொண்டிருந்தது.

ஆனாலும், அந்தக்காலனியில் மட்டும் எங்கோ ஓர் இடத்தில் எப்படியோ கசிவு இருந்துகொண்டுதான் இருக்கிறது. எங்கிருந்து வருகிறது என்பது மட்டும் இன்னும் அந்தக் காலனி மக்களுக்குப் பிடிபடவே இல்லை.

- இராம.குருநாதன் (நவம்பர் 2010) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாணவி அபி நான்கு மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை.. குடும்பம் பதறித் துடித்தது. அப்பா பஸ் நிலையத்துக்கு ஓடினார். அண்ணன் பாடசாலைக்கு ஓடினான். அதிபரை விசாரித்தான்.. ஆசிரியர்களை விசாரித்தான்.. அவர்கள் “ரெண்டு மணிக்கே பாடசாலை விட்டாச்சே..” என்று கைகளை விரித்தார்கள். அண்ணன் திரும்பி ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகம் பரபரப்பாக இருந்தது. டெஸ்பாட்ச் ரங்கசாமி சாரை இன்னும் காணோம். தினத்தந்தியை விடவும் செய்திகளை முந்தித்தருவதற்கு அவரால்தான் முடியும். அழகு நெல்லைத்தமிழில் அவர் சொல்லும் செய்திகளைக் கேட்கவே ஒரு ரசிகர் பட்டாளம் அலுவலகத்தில் உண்டு. “ வேய் அக்கோண்ட்ஸ் அண்ணாச்சி, இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
இப்போது அவனுக்கு அந்த மௌனத்தவிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. சாமத்தில் எழுந்து பாத்றூம் போகும்போது கண்ணாடியில் நரைக்க ஆரம்பித்திருக்கும் தலையை எதிர்ப்படுகையில் , கொஞ்சம் அதிகமாக கடையில் சாமான்களை வாங்கிவிட்டு அவற்றைத் தனியாக வீட்டுக்கு எடுத்துச்செல்;லும்போது மூச்சிரைக்கையில், இதன்ன வாலிபம் விடைபெறுவதை உணரும் ...
மேலும் கதையை படிக்க...
கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை அவர் கழுத்தில் போட்டபோது என் இதயமே வெடித்து விடும் போலானது. பெருகியிருக்கும் அந்த நெரிசலில் தெரிந்த, தெரியாத எல்லா சோக ...
மேலும் கதையை படிக்க...
என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
பாக்கு வெட்டி
வாய்மையே வெல்லும்
அந்தி மயங்க முன்னான பொழுதுகளில்
செய்வினை, செயப்பாட்டு வினை
ஒரு நாள்… மறு நாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)