ஓர் உதயத்தின் அஸ்தமனம்

 

பிரபல ‘பொன்னி’ வார இதழிலிருந்து தன் அலுவலக முகவரிக்கு வந்திருந்த கடிதத்தை அவன் அவசரமாகப் பிரித்துப் படித்தான்.

“அன்புடையீர், வணக்கம்.
தாங்கள் “பரிணாமத்தின் பரிமாணங்கள்” என்கிற தலைப்பில் எழுதி அனுப்பியிருந்த சிறுகதை பொன்னியில் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கூடிய விரைவில் அது பொன்னியில் பிரசுரமாகும்.

தொடர்ந்து தங்களுடைய இலக்கியப் படைப்புகளை எங்களுடைய பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம், ஆடலரசு, துணையாசிரியர்.”

படித்து முடிப்பதற்குள் மனதில் உற்சாகம் பொங்கி கண்களில் நீர் திரையிட்டது. அவனது முதல் சிறுகதைப் பிரவேசத்தை ஊர்ஜிதம் செய்த அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்தான். தன கண்களையே தன்னால் நம்ப முடியாதவனாய் திகைத்துப் போனான்.

இவனது முகத்தில் அதீத ஒளியைப் பார்த்த பக்கத்து சீட்டு ஜெயராமன், “என்னப்பா என்ன விஷயம், ஏதாவது லவ் லெட்டரா?” என்றான்.

“இல்ல ஜெய் இது அதவிட பெரிய விஷயம், என்னுடைய முதல் சிறுகதை பொன்னியில் பிரசுரமாகப் போகுது…” கடிதத்தை அவனிடம் காண்பித்தான்.

அலுவலகம் முழுவதும் விஷயம் பரவியது. “என்ன கதை, எப்போது வெளி வரும்?” என்ற கேள்விகளை அவனிடம் கேட்டுத் துளைத்தனர்.

“கதை பிரசுரமாவதற்கு முன் அதைப்பற்றி பிரஸ்தாபிப்பது அவ்வளவு நாகரீகமான செயல் அல்ல. இன்னும் இரண்டொரு வாரங்களில் வெளி வரலாம், பிரசுரமானதும் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்…” மனதில் உற்சாகம் கொப்புளிக்கச் சொன்னான்.

அலுவலக மேலாளர் தனது தனியறையில் அவனைத் தன் எதிரே அமர வைத்து, “யு கல்டிவேட் திஸ் குட் ஹாபிட், எழுதறதுங்கறது லேசான காரியமல்ல… நமது கற்பனைகள் எழுத்து வடிவத்தில் உருப்பெற்று, ஒரு சுவாரசியமான கதையாக பரிணமித்து அதை பிரபல பத்திரிக்கையும் அங்கீகரிப்பது என்றால் அது மிகப் பெரிய விஷயம்.. உன் எழுத்தில் புதிய மனிதர்களைப் படைத்து அவர்களை உன் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து கதைய நகர்த்துவது என்பது ஒரு சிறந்த கலை, சுகானுபவமான அற்புதம்..” என்று சொன்னபோது இவன் மிகவும் பூரித்துப் போனான்.

மதிய உணவு இடைவெளியின்போது அவன் மானசீகமாக காதலிக்கும் அக்கவுண்ட்ஸ் கமலா இவனது இருக்கைக்கு வந்து புன்னகையுடன் ‘கங்கிராட்ஸ்’ சொன்னபோது, இவன் தன் மானசீகக் காதல் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டான்.

வாசகர் கடிதங்களும், கேள்விகளும் எழுதிக் கொண்டு, அதனால் அவ்வப்போது தனக்கு வரும் காம்ப்ளிமென்ட்ரி பிரதிகளை நண்பர்களிடம் காண்பித்து பெருமையடித்துக் கொண்டிருந்தவனுக்கு, ‘தாமும் ஒரு கதை எழுதி முயற்ச்சித்தால் என்ன?’ என்கிற எண்ணம் தோன்றி அந்த எண்ணத்தை செயலாக்கி ஒரு மாதத்திற்கு முன் இந்தக் கதையை பொன்னிக்கு அனுப்பி வைத்தான்.

இப்போது – நான்கு வரிகளில் எழுதியவன், நானூறு வர்களுக்கு மேல் தன கதை பிரசுரமாகப் போவதை எதிர் பார்த்து, அந்த எதிர் பார்த்தலில் உற்சாகம் கண்டு கொண்டிருக்கிறான்.

மாலை நான்கு மணிக்கு வழக்கமாக டீ கொண்டுவரும் நாயர் வந்தபோது, அலுவலக நண்பர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டு ‘அட்வான்ஸ் ட்ரீட்’ கேட்டனர். இவன் மறுப்புச் சொல்லாமல் அனைவருக்கும் சந்தோஷத்துடன் காப்பி, டீ வாங்கிக் கொடுத்தான்.

தன பெற்றோர்களும், சகோதரிகளும் பொன்னியின் கடிதத்தைப் படித்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவார்கள், சர்ப்ரைசாக அதை அவர்களிடம் காண்பிக்க வேண்டும் என்று மணி ஆறு அடிக்க காத்திருந்தான்.

அலுவலக வேலையில் மனம் ஒட்டாது மீண்டும் மீண்டும் பொன்னியிலி
ருந்து வந்த கடிதத்தையே படித்துப் பரவசமடைந்தான்.

மணி ஆறு. தனக்கு அளிக்கப்பட்ட ஓவர்டைம் வேலையை வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன் டூ வீலரை எடுத்துக்கொண்டு நேராக லாலா கடைக்குச் சென்றான். தன் சகோதரிகளுக்கு இனிப்பு வாங்கிக் கொண்டான்.

அகலமான தார் ரோட்டில் அவனது டூ வீலர் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

தன்னுடைய எழுத்துலகப் பிரவேசத்தை இன்னமும் அதிகரித்து குறிப்பிடத்தக்க விதத்தில் தன்னுடைய பெயர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் மிளிர வேண்டும் என்கிற சுகம் தரும் கற்பனையில், எதிர் பார்ப்புகளில் மனம் மிகவும் லேசாகி இன்பத்தில் லயித்தபோது… நாற்சந்தியில் குறுக்காக வேகமாக வந்து கொண்டிருந்த மணல் லாரியை எதிர் நோக்கத் தவறி விட்டான்.

இவன் நிதானிப்பதற்குள் மின்னலென லாரி இவனைத் தாக்கி, தன்னுள் அமுக்கிக் கொண்டது.

மனிதர்கள் அவனைச் சுற்றி ஈயென மொய்த்தனர்.

தலை சிதறி, கண்கள் பிதுங்கி, அடர்த்தியான அவனது மீசையில் ரத்தம் உறைந்திருக்க, இனிப்புப் பொட்டலங்கள் சிதறிக் கிடந்தன. சட்டைப் பையில் பொன்னியின் கடிதம் ரத்தத்தில் தோய்ந்திருந்தது.

போலீஸ் வந்தது. அவனைச் சுற்றி சாக்பீஸால் கோடுபோட்டு கூட்டத்தை விரட்டியது. சிறிது நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து, அவனை வாரிக்கொண்டு போனது.

மருத்துவமனைக்கு அவனது பெற்றோர்களும், சகோதரிகளும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வந்தார்கள். விஷயம் தெரிந்து அங்கு வந்திருந்த சில அலுவலக நண்பர்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல,
போஸ்ட்மார்ட்டத்திற்குப் பிறகு ‘அவன்’ ‘அது’வாகி ஒரு ஓலைப் பாயில் சுருட்டி ‘அதை’ அவன் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த வாரத்திய பொன்னியில் அவனது கதை ஐந்து பக்க அளவில் ஒரு பிரபல ஓவியரின் கை வண்ணத்துடன் பிரசுரமாகியது.

நண்பர்களும், உறவினர்களும் அக்கதையைப் பற்றியும், அவனைப் பற்றியும் கண்களில் நீர் மல்க குறைந்த ஸ்தாயியில் பேசிக் கொண்டார்கள்.

தான் எழுதிய கதையை அச்சில் பார்க்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்து அதனை தற்போது செயலாக்கி வெற்றியும் கண்டவன், அதனைப் பார்க்காமலேயே கண்களை மூடி விட்டான்.

உதயமான ஒரு எழுத்தாளன் அஸ்தமித்துவிட்டான். 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘விஷச் சொட்டு’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). நாட்கள் ஓடின. ராஜாராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது. மாதங்கள் ஓடின. அவனுடைய கல்யாணமும் சிறப்பாக முடிந்தது. திம்மராஜபுரத்தில் இந்த மாதிரி கல்யாணம் இதற்கு முன் நடந்திருக்குமா என்று ஊரே அசந்து போகிறமாதிரி ராஜாராமனின் கல்யாணம் தடபுடலாக ...
மேலும் கதையை படிக்க...
என் பெற்றோர்கள் எங்களைப் பார்க்க பெங்களூர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அதனால் தினமும் சீக்கிரமாக அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பிச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு. அதற்குக்காரணம் அவர்கள் மீதிருக்கும் அன்போ மரியாதையோ அல்ல. ஏற்கனவே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கும் என் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
சென்னை ஈ.ஸி.ஆர் சாலையில் பற்பல அடர்த்தியான மரங்களுக்கு அப்பால் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்ட். ஆங்காங்கு ஒழுங்கற்ற வரிசைகளில் பல்வேறு இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓய்வுடன் நின்றிருந்தன. அந்த வெளிர் நீல நிற புத்தம் புதிய ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘ஸம்ஸ்கிருதத் தனிப்பாடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் தன்னையே மிகவும் நொந்து கொண்டார். இப்படியா ஒரு கூறுகெட்ட கோட்டிக்காரியிடம் போய் உளறித் தொலைவேன் என்று தன்னையே ஏசிக்கொண்டார். இனி அவருக்கு ரொம்ப வேண்டியவர்கள் என்று யாராவது ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘வட்டிப் பணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையிடம் வேற ஒரு சுபாவமும் பரவலாக வளர்ந்து விட்டிருந்தது. பூத்தும் மணம் பரப்பிக்கொண்டிருந்த அந்த சுபாவம், வடிகட்டின கஞ்சத்தனம்! மனசு வந்து யாருக்கும் மச்சக்காளை ஒரு பைசா தரமாட்டார். வீட்டில் ...
மேலும் கதையை படிக்க...
கோழிக்கோட்டில் வரவேற்பு
கொள்ளி
இளம் கன்றுகள்
சுயநலக் குணம்
கஞ்சத்தனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)