Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

ஒற்றைத் தோடு!

 

கருணை இல்லத்து வாசலில் கிடந்த பெஞ்சில் சத்யனும் நாகலிங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். சத்யனின் மடியில் தவமணி உட்கார்ந்திருந்தாள்.

அவளின் பார்வை அந்த இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அவள் வயதொத்த பிள்ளைகள் மீது கிடந்தது. சத்யன் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு இவர்களோடுதான் தவமணி இருக்கப் போகிறாள் என நினைத்தான். ஆனால் அந்த நினைவை அவன் நெஞ்சுக்குள் ஒலித்த ஒரு குரல் கலைத்தது…

ஒற்றைத் தோடு

“பிள்ளய கவனமா பாருங்கோ… அது எனக்கு போதும்…’ அது சாகுந்தறுவாயில் பூரணி சொன்ன வார்த்தைகள். அவை இப்போது அவனை உலுக்கின. ஆனால் அதையும் மீறித்தான் அங்கே வநதிருக்கிறான்… இதைத்தவிர அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

உள்மனப் போராட்டத்தில் இருந்த சத்யனின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

முல்லைத்தீவை ஒட்டிய சிறிய காணியோடு கூடிய ஓலைக்குடிசையில் ஆடு, மாடு, கோழி என வாய் பேசாத உயிர்களோடு வாழ்ந்த இன்பமான வாழ்க்கை அது. ஓலைக் குடிசையில் விடிவது ஒரு கவிதை போல இருக்கும். வீட்டில் வளர்கிற சேவல்கள் சிறகடித்து சூரிய வருகையை வாழ்த்தும், குடிசையைச் சுற்றி நிற்கின்ற மரங்களில் இரை தேட நேரம் வந்து விட்டதென்று குருவிகள் பேசும். பட்டியில் கட்டி வைத்திருக்கும் “பாக்யா’ என்ற பசு கத்தும். சத்யனின் அம்மா ஆசையாக வளர்த்த பசுவின் கன்று. அம்மாவின் நினைவாக வைத்த பெயர். அம்மா பெயர் பாக்கியம். அது பிறக்கும்போது அம்மா உயிரோடில்லை…

காய்ந்த மரக்குச்சிகளால் அடுப்பெரிய வைத்து பிளேன் டீ (கறுப்புச் சாய டீ) போட்டு ஒரு கிளாஸில் எடுத்துக் கொண்டு படுத்திருக்கின்ற சத்யனை எழுப்புவாள் பூரணி. அவன் “பல்ல தீட்டாமல் ரீ குடிக்கிறதோ?’ என்பான். அதற்கு அவள் “வாய கழுவி போட்டு குடிங்கோ. பேந்து பல்ல தீட்டலாம் என்பாள். இதுவெல்லாம் தன்னை எழுப்ப பூரணி சொல்கிறாள் என்பது அவனுக்கு தெரியும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் மின்சாரமே இல்லாமல் வீட்டில் எண்ணெய் விளக்குகளை வைத்துக் கொண்டு நடந்த வாழ்க்கையையே இன்பமாக்கியவள் பூரணி. விவசாயம் செய்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்றிருந்த அப்பாவின் மனதை மாற்றி விவசாயம் செய்த சத்யனையே திருமணம் செய்தாள் அவள். பூமியைப் போல் பொறுமையான குணம் அவளுக்கு. உள்ளத்தாலும் வார்த்தைகளாலும் சத்யனுக்கு சுகமளித்த பூரணி உடலாலும் அதே சுகத்தை அளித்தாள். யுத்தத்தின் எல்லை விரிந்து கிராமத்தையும் ராணுவத்தினர் ஆக்கிரமிக்கிற போதெல்லாம் ஓடி, ஒளிந்து ராணுவம் போன பிறகு திரும்பி வந்து வாழ்ந்ததை இயல்பாக ஏற்றுக் கொண்டாள். அது சத்யனை யோசிக்க வைத்தது. எந்தத் துன்பத்தையும் துரும்பாகப் பார்க்கிற அவளின் இயல்பைப் புரிந்து கொண்டான் அவன். ஆனால் இறுதி யுத்தம் என்ற முழக்கத்தோடு வந்த யுத்தம் அவர்களின் மகிழ்ச்சியை, நிம்மதியை அள்ளிக் கொண்டு போயிற்று… கொடி யுத்த வாகனங்களின் கோரப்பற்கள் நிலத்தை ஒவ்வொரு அங்குலமாய்க் கடித்துக் குதறி மக்களைத் துரத்தின வெடித்துச் சிதறிய ஷெல்களினால் குடியிருப்புகள் சிதறின. அவர்களின் குடிசை தீயில் எரிந்தது. எதையெடுப்பது என யோசிக்கும்போதே இடைவிடாத குண்டு வீச்சால் “பாக்யா’வை மட்டும் இழுத்துக் கொண்டு காட்டுக்குள் அவர்கள் ஓடினார்கள். அவர்களின் கிராமத்தை ராணுவம் பிடித்தது. உயிர் பிழைத்தால் போதுமென எல்லோரும் ஓடிவிட்டார்கள். அவர்களோடு வாழ்ந்த ஆடு, மாடுகள் என்னவாயிற்றோ தெரியவில்லை. ஷெல் வீச்சுக்குத் தப்பியிருக்க முடியாது…

எப்போதாவது இரும்புப் பிசாசு ஷெல் வீச்சை நிறுத்தி ஓய்வெடுக்கும். அப்போது மக்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள். அப்படித்தான் ஒரு மரத்தடிக்கு வந்தார்கள் அவர்கள். அந்த மரத்தோடு ஒட்டிய ஒரு பக்கம் ஒற்றையடிப் பாதையும், மறுபக்கம் பெய்த மழையில் தேங்கிய தண்ணீரும் இருந்தன. அந்த மழைத்தண்ணீர் கண்ணாடி போல் தெளிவாக இருந்தது. அந்த ஒற்றையடிப்பாதையில் போகிறவர்களில் சிலர் கைகளால் அள்ளித் தண்ணீரைக் குடித்தார்கள். சாப்பிட எதுவும் இல்லையென்ற கவலையை மறந்து சத்யன் அந்தத் தண்ணீரை அள்ளிக் குடித்தான். பூரணி தண்ணீர் குடித்துவிட்டு தவமணிக்குத் தண்ணீர் கொடுக்கும் போது அழுது விட்டாள்… “என்ர குஞ்சுக்கு சோரை ஊட்டாம தண்ணியக் குடிக்க வைச்சிட்டானே நல்லூரான் (நல்லூரான் – நல்லூர் முருகன்)’
ஷெல் வீச்சுக்கான அறிகுறி தெரியவில்லை. சத்யன் தவமணியைத் தூக்கிக் கொண்டு, பூரணி, பாக்யாவை இழுத்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களைப் போல நூற்றுக்கணக்கானவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் சாவுக்களை மிதந்தது. ஆனாலும் சாவுக்கு அஞ்சி அரசாங்கம் அறிவித்திருக்கிற பாதுகாப்பு வளையத்தை நோக்கி நடந்தார்கள். அங்கு போவதற்குள் என்ன ஆகுமோ சொல்ல முடியாது. சாவு துரத்துவதை மட்டும் சொல்ல முடியும்.

பாக்யா ஏனோ மே, மே என்று கத்திக் கொண்டே நடந்தது. அதன் கத்தல் பலருக்குப் பிடிக்கவில்லை. அந்த சத்தம் கேட்டு ராணுவம் வந்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. சிலரோ மனிதர்களையே காப்பாற்ற முடியவில்லை. இதில் இவர்கள் மாட்டைக் கூட்டிக் கொண்டு வருகிறார்களே என்று நினைத்தார்கள். ஆனால் எவரும் பேசவில்லை. பேச நேரம் ஏது?

அப்போது நடந்து கொண்டிருந்த ஒருத்தன் கத்தினான்… “ஷெல் அடிக்கப் போறாங்கள்.. கவனம்’.

“நாசமாறப்பான்கள் ஷெல் அடிச்சா போரது?’ என்று கலங்கினாள் பூரணி.

“எப்படியோ போக வேணும். நீர்கெதியா நடவும்’ என்றான் சத்யன். ஆனால் பாக்யா மெதுவாக நடந்ததால் பூரணி மெதுவாக நடந்தாள். சத்யனுக்கும் அவளுக்கும் இடைவெளி உருவானது. ஷெல் பயங்கரச் சத்தத்துடன் விழத் தொடங்கியது. எல்லோரும் ஓடினார்கள். பூரணி பாக்யாவை இழுத்துக் கொண்டு ஓடினாள். எல்லாப் பக்கமும் ஷெல் விழுந்து வெடித்தது. ஒரு ஷெல் விழுந்து வெடித்ததில் பாக்யா சிதைந்து போனாள். மே என்ற சத்தம் காற்றில் கரைந்தது.

“அய்யோ பாக்யா’ என்ற பூரணி சிதைந்து கிடந்த பாக்யாவைப் பார்த்து அழுதபோது இன்னொரு ஷெல் விழுந்து வெடித்தது. பூரணிநிலை குலைந்து விழுந்தாள். அவள் உடலிலிருந்து ரத்தம் வடிந்தது.
“கடவுளே! இப்புடி செய்து போட்டியே?’ என விழுந்து கிடந்த பூரணியைப் பார்த்துக் கதறினான் சத்யன். தவமணி அம்மா என்று அழுதாள். பூரணியின் தலையில் இருந்தும் ரத்தம் வழிந்தது. அரை உயிராய் இருந்தாள் அவள். உலகமே இடிந்து விழுந்தது போன்று உணர்ந்தான் சத்யன்.

“நான் பிழைக்க மாட்டேன். பிள்ளய பத்திரமா பாருங்கோ’ என்று முணுமுணுத்தாள் பூரணி. சத்யனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளைக் காப்பாற்ற ஒரு வழியும் இல்லை. ஷெல் தொடர்ந்து வெடிக்கிற சத்தம் கேட்டது. பூரணி மெது மெதுவாக ஒரு கையால் காதைப் பிடித்து மறுகையால் தோட்டைக் கழற்றி தவமணியிடம் கொடுத்து, “உது பெறுமதியானது. துலைச்சி போடாதே. பத்திரமா வைச்சுக்கொள், என்ற குஞ்சுக்கு அம்மா குடுக்கிற சீதனம்’ என்றாள். தவமணி “அம்மா’ என்று அழுது கொண்டே அந்த ஒற்றைத் தோட்டை வாங்கினாள். அந்தத் தோட்டில் ரத்தம் படிந்திருந்தது. பூரணி மற்ற தோட்டையும் கழற்ற முயன்றபோது மறுபடியும் ஷெல் வெடித்தது. அந்த சத்தத்தின் பின்னர் பூரணியின் கைகள் சரிந்தன. சத்யன் கதறினான்.
“அய்யோ என்ற மனுசிய பாருங்கோ.’

எவரும் வரவில்லை. அவரவர் உயிர் அவரவர்க்குப் பெரிது. சத்யன் கதறினான். அப்போது ஒருவர் அவனருகே ஓடிவந்தார். ஐம்பது வயதிருக்கும், முகத்தில் தாடி மீசை அவரைக் கண்டதும் சத்யன், “என்ற மனுசிய பாருங்கோ’ என்று அழுதான்.

பூரணியின் கையைப் பிடித்துப் பார்த்த அவர் “மூச்சு நின்டுட்டுது’ என்று சொல்லிவிட்டு சத்யன் முதுகைத் தடவினார்.
அவனோ “அய்யோ பூரணி’ என்று அழுதான்.

“தம்பி… இனி அழுது ஒண்டும் ஆகாது… பிள்ளய காப்பாத்த நடவும்’ என்றார் அந்த தாடிக்காரர்.

“மனுசிய இப்புடியே விட்டுட்டு போறதோ?’ என்று அழுதான் சத்யன்.
“தம்பி… வேற வழியில்லை. நீர் என்ன செய்யப் போறீர்? என்ன செய்ய முடியும்? எப்புடி குழி தோண்ட முடியும்? ஷெல் விழுந்து கொண்டே இருக்குது. அடுத்த ஷெல் வர்ரதுக்குள் பிள்ளய காப்பாத்த பாரும்…’ என்றார் அவர். சத்யன் அசைவது போல் தெரியவில்லை.

“என்ர பேர் நாகலிங்கம், என்ற மனுசியும் ஷெல்லில் அடிபட்டு செத்துப் போனா. ஒரே மகன். அவன் எங்கெண்டு தெரியல. நான் மட்டும்தான் இப்ப இருக்கிறன். வர்ர வழியில ஷெல் அடிபட்டு பலர் செத்துக் கிடக்கிறாங்கள். அவங்கள அப்படியே விட்டுட்டு மத்தவங்கள் தங்கட உயிரை காப்பாத்த போயிட்டாங்கள். இது யுத்தம் நடக்கிற பூமி. உங்க சடங்கு சம்பிரதாயம் உதவாது. உயிர காப்பாத்திரது ஒண்டுதான் முக்கியம். உம்மட மனுசிய காப்பாத்த முடியாம போனாலும் மகளயாவது காப்பாத்தும்’ என்ற நாகலிங்கம் தவமணியைத் தூக்கிக் கொண்டார்.

சத்யன் பூரணியைப் பார்த்தான். அவள் கண்ணை மூடித் தூங்குவது போல் இருந்தாள். அவளின் ஒரு காது தோடு கண்ணில் பட்டது. ஒரு நொடி அந்தத் தங்கத் தோட்டைக் கழற்றினால் என்ன? அதைக் கழற்றித் தரத்தானே பூரணி நினைத்தாள் என்ற எண்ணம் மின்னலாய் அவன் நெஞ்சில் வெட்டியது. ஆனால் மறுவிநாடி “பூரணியே போய் விட்டாள் அவள் தோட்டைக் கழற்றி என்ன செய்ய? அவளைவிட அந்தத் தோடு பெரிதா?’ என்று உள் மனது பேச, பூரணியைப் பார்த்துக் கும்பிட்டு அழுது கொண்டே நடந்தான்.

முகாமுக்கு வந்தும் சத்யன் அழுவதை நிறுத்தவில்லை. அவன் அழுவதைப் பார்த்து தவமணியும் அழுதாள். அவர்கள் அழுகையை நிறுத்த நினைத்த நாகலிங்கம் சத்யன் அருகில் உட்கார்ந்து பேசினார். “தம்பி… உனக்கு மட்டும்தான் எண்டு நினையாதே. இந்த முகாம்ல இருக்கிறவங்களில் பாதிப்பேர் பலரை ஷெல்லடியாலயும் குண்டு வீச்சாலயும் பறி குடுத்தவங்கள். அவங்களும் உன்ன மாதிரி அழுதால் இது அழுகை முகாமாக இருக்கும். இனி அழுது ஆகப் போறது ஒண்டும் இல்லை. நீர் அழுதால் புள்ளய யார் பார்ப்பார்? முதலில் அழுகையை நிறுத்தும்.’

இந்தக் கூட்டத்தில் தன்னை எவரும் திரும்பிப் பார்க்காதபோது, இவர் தானாக வந்து பேசி தனக்குத் தைரியம் கொடுத்ததை எண்ணி அழுகையை மெல்ல மெல்ல நிறுத்தினான்.’

“தம்பி… நீர் ஒண்டும் யோசியாதே. முகாமை விட்டு வெளியே போனதும் நீர் என்னோடு வவுனியாவுக்கு வாரும். வவுனியாவில எனக்கு தெரிஞ்ச பேக்கரி இருக்கு. பேக்கரி முதலாளி எனக்கு சொந்தக்காரன். நிச்சயமா வேல கிடைக்கும். ஆனா இரவில பான் போடுற வேலை. பகல்ல பேக்கரியில தங்கலாம். ஆனால்’ என்று இழுத்தார் நாகலிங்கம்.

சத்யன் ஒருவித பயஉணர்வோடு என்ன என்பது போல் நாகலிங்கத்தைப் பார்த்தான். அப்போது நாகலிங்கம் மெதுவாக சொன்னார். “தவமணிய பார்க்கறதுதான் பிரச்னை. இரவில் உமக்கு வேலை. பக்ல்ல தூக்கம். பிள்ளய என்ன செய்யறது?’
“எனக்கு ஒண்டும் தெரியாது. நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேணும்…’ என்றான் சத்யன்.

“கொஞ்ச நாளைக்கு தவமணியை சிறுவர் காப்பகத்தில் விடுவம். வவுனியாவில சிறுவர் காப்பகம் இருக்கு. நீர் சரியென்டால் தவமணிய அங்கவிடலாம். நீரும் வேல முடிஞ்ச பிறகு அவள பார்க்கலாம்.’

சத்யன் யோசித்தான்… தானும் தவமணியும் சேர்ந்து வாழ ஒரு வழியும் இல்லாத போது நாகலிங்கம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ஆனால் தவமணி சிறுவர் காப்பகத்தில் இருப்பாளா?
தவமணியிடம் அவளுக்குப் புரியுமாப்போல் பேசினான் சத்யன். முதலில் தவமணி மறுத்தாள். சத்யன் உடனே “அப்படியென்டால் நானும் நீயும் ரோட்டில் படுத்துப் பிச்சை எடுத்து வாழ வேண்டியதுதான். முல்லைத் தீவு வீட்டுக்குப் போகவிட மாட்டாங்கள்…’ என்று சொன்னதும் சம்மதித்தாள் தவமணி.
மூன்று மாதங்களுக்குப் பிறகு விசாரணை முடிந்ததும் சொந்தக்காரர்களின் வீடுகளுக்குப் போகிறவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்களை வெளியே போக விட்டார்கள். நாகலிங்கமும் சத்யனும், தவமணியும் வவுனியாவுக்கு வந்தார்கள்…
“உங்களை சாமியார் வரட்டாம்’ என்று எவரோ சொல்லவும் நினைவுகள் அறுந்து நடந்தான் சத்யன். அவன் பின்னே தவமணியோடு நடந்தார் நாகலிங்கம்.

அவர்கள் உள்ளே போனார்கள். உள்ளே ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்த மேஜையருகே அவர்களை எதிர்பார்த்து ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார்…. சாமியார் என்றதும் காவி உடுப்போடு இருப்பார் என்று நினைத்த சத்யன் அவரைப் பார்த்தான். வயது அறுபதுக்கு மேலிருக்கும். நெற்றியில் விபூதிக்குறிகள். வெள்ளை நிற வேட்டி, சட்டை…

அவர் மெதுவாகக் கேட்டார்… “என்ன விசயமாக வந்தீர்கள்?’ அவரை தவமணி ஏக்கத்துடன் பார்த்தாள்…

“இவள் என்ற மகள்’ என்ற சத்யன் தனது கதையைச் சொல்லிவிட்டு, “எனக்கு வீடுவாசல் இல்லை அய்யா… இந்த பிள்ளயமட்டும் கொஞ்சநாளைக்கு உங்களோட நிக்கட்டும் அய்யா’ என்று அழுதான்.
அவன் அழுகையை நிறுத்தும்வரை காத்திருந்த அந்த இல்லப் பொறுப்பாளர், “தம்பி… உமக்கு மட்டுமில்ல எல்லோருக்கும் உதவ வேண்டும் என்பது எனது ஆசை… ஆனால் 100 பேர் தங்குகிற இங்க 180 பேர் இருக்கிறாங்கள். ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கே பெரிய பிரச்னை. அதுல புதுசா யாரையும் எடுத்து என்ன செய்ய முடியும்?’ என்று சொன்னார்.

சத்யன் அவர் பதிலைக் கேட்டு நிலை குலைந்தான். நாகலிங்கம் தன் பங்குக்கு கெஞ்சினான்… “கொஞ்ச நாளைக்கு தான் அய்யா… சின்ன பிள்ளை. நீங்கள் நினைச்சால் இடம் இருக்கும் அய்யா….’

அவர் புன்னகைத்தார். “என்ற மனசில எல்லாருக்கும் இடம் உண்டு. ஆனால் இங்கு இடம் இல்லை. காலையில மூண்டு பிள்ளைகள் வந்தங்கள். இடம் இல்லை என்டு சொல்லிப்போட்டன். புதுசா வர்ற பிள்ளைகள தங்க வைக்க நிதிகாணாது…’ அவர் கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது தவமணி தன் பாவாடையில் முடித்து வைத்திருந்த ஒற்றை தோட்டை எடுத்து அந்தப் பெரியவரிடம் நீட்ட, “உது பெறுமதியானது. அம்மா சொன்னவை. உதை கழற்றி தந்து மற்றதை கழற்றி தரப்போன நேரத்தில ஷெல் அடிச்சி அம்மா செத்து போனா. அம்மா இருந்தா உங்க வர மாட்டன். அப்பா பாவம். ரோடுல நிக்கிறார். உந்த தோட்ட வைச்சுக் கொண்டு இடம்தாங்கோ’ என்று சொன்னபோது சத்யன் வியப்புடன் அவளையே பார்த்தான். பதில் எதுவும் பேசாத இல்லப்பொறுப்பாளரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது…

- பிப்ரவரி 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
தாய்லாந்துக் காதல்
மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் ...
மேலும் கதையை படிக்க...
தாய்லாந்துக் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)