ஒரு வித்தியாசமான சிரிப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 6,402 
 

“மிஸ்டர் குப்புசாமி, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு இது ஒண்ணும் சத்திரம் இல்லை, ஆபீஸ். தெரிஞ்சுதா?”

காலையில் அலுவலகத்துக்குத் தாமதமாக வந்தவனை ஹெட்கிளார்க் முறைத்துப் பார்த்தார்.

அவன், பொங்கும் வியர்வையோடு, உடம்பைக் குறுக்கிக் கொண்டு பயபக்தியோடு நின்றான். தன் கஷ்டங்களைச் சொல்ல வாயெடுத்து, பின் ஒரு ஒடுங்கலில், விரக்தியில், “பஸ் கிடைக்கலை, இனிமே ஒழுங்கா வந்திடறேன் ஸார்!” என்றான், வழக்கம் போல்.

“இதோட நூறு தடவை ஆயிடுத்து. இனியொரு தரம் லேட்டா வந்தீர்னா, நான் ஆபீசர்கிட்டே ரிப்போர்ட் செய்றதைத் தவிர வேற வழியில்லை!.. உம், போய் ஸீட்டுல உக்காந்து வேலையைப் பாரும்!”

தளர்ந்த நடையில் அவன் தன் இருக்கைக்குப் போனான்.

போகும் வழியில் அந்த அலுவலகத்தின் எல்லா ஆசனங்களும் நிரம்பியிராததைக் கவனித்தான். இன்னும் கேஷியர் சுந்தரம் வரவில்லை. சொகுசு சுந்தரி லதா வரவில்லை. டபேதார் மாணிக்கம் கூட வரவில்லை. இந்த ஹெட்கிளார்க் என்னை விரட்டியதைப் போல அவர்களை விரட்ட முடியாது.

விரட்டினால் ஹெட்கிளார்க்கின் பில்களை கேஷியர் கிடப்பில் போட்டு விடுவான். வழுக்கைத் தலை, பருத்த தொந்தி இத்யாதி அழகுகளுடன் வீற்றிருக்கும் ஹெட்கிளார்க்குக்கு லதா என்றாலே ஒரு மயக்கம். அவள் குலுங்கிச் சிரித்து அவரை ஏறிட்டுப் பார்த்தாலே தன் ஜன்மம் சாபல்யமடைந்து விட்டதாகப் பூரித்து
விடுவார். லதாவுக்கு ஆபீஸ் துவங்கும் நேரம், அவள் வரும் நேரம்தான்! டபேதார் மாணிக்கத்திடம் சத்தம் போட்டுப் பேசினால், அவனும் அவன் கீழிருக்கும் எல்லாக் கடைநிலை ஊழியர்களும் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள்!

குப்புசாமி ஃபைல் கட்டு ஒன்றைப் பிரித்தான். பக்கத்து ஸீட் காதர் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தான். “ஏங்க குப்புசாமி, ஒரு டூ வீலர் வாங்கிக்கலாமே..”

“உம்..ம். வாங்கலாம், வாங்கலாம்…” இவன் திணறினான்.

“டூ வீலர் இருந்தால் பஸ்சுக்குக் காத்து நிக்கற நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். இந்த ஹெட்கிளார்க் வழுக்கைத் தலையர்கிட்டே மாட்டிக்காமத் தப்பலாம்..”

“ஆமா காதர் ஸார்!”

“இன்ஸ்டால்மெண்டுல வாங்குங்க; இல்லாட்டி பேங்க் எதுலியானும் பெர்சனல் லோன் போட்டு வாங்குங்க!”

“டூ வீலர் வாங்கக் கூட பெர்சனல் லோன் தராங்களா ஸார்?”

“ஓ! நான் கூட ஸ்கூட்டர், டேபிள் ஃபேன், ஃபிரிட்ஜ் எல்லாம் பேங்கில் பெர்சனல் லோன் போட்டுத்தான் வாங்கினேன்.. மாசா மாசம் நூறோ, இருநூறோ கட்டி அடைச்சிட்டாப் போவுது..”

காதரின் மனைவி தாலுகாபீஸில் அக்கவுண்டண்டாக இருக்கிறாள். சம்பாதிக்கிறாள். ஸ்கூட்டர், ஃபேன், பிரிட்ஜ் எல்லாம் வாங்க அவனுக்கு வசதி இருக்கிறது. எனக்கு?

இவனுக்குத் திடீரென்று தன்மேலேயே கோபம் வந்தது. சே, என்ன மனுஷன் நான்? என்ன பிழைப்பு இது? வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்துக் கணக்கு போடத்
தொடங்கினான். தனக்கு வரவிருக்கும் சம்பளத்தை முதலில் எழுதினான். பிறகு வரிசையாக அரிசிக் கடன், மளிகை பாக்கி, பால்காரருக்குத் தர வேண்டியது, உடம்பு சரியில்லாது வீட்டில் இருக்கும் அப்பாவுக்கு வாங்க வேண்டிய மருந்துக்கான தொகை, கைமாற்றாக வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணம்
எல்லாவற்றையும் எழுதிக் கூட்டினான். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. இதில் எதைக் குறைப்பது? சினிமா போன்ற பொழுது போக்குகளுக்கு பட்ஜெட்டில் இடம் ஒதுக்காமலேயே செலவு, வரவை எட்டுகையில் மிச்சம் பண்ணி டூவீலருக்கு இன்ஸ்டால்மெண்ட் கட்டுவது எப்படி? மூளை குழம்பியதுதான் மிச்சம்.

மாலையில் வீட்டுக்குள் நுழைந்தவுடன், “அப்பா! அப்பா!” என்று இவன் செல்வங்கள் மூன்றும் காலைக் கட்டிக் கொண்டன.

“அப்பா, பிஸ்கட். சாக்லேட்” என்று ஸ்வரம் பாட ஆரம்பித்தது கடைக்குட்டி. “ஒதைச்சேன்னா..?” என்று கை ஓங்க, அது உச்சஸ்தாயியில் சூப்பர் சிங்கர்-ல் வெற்றிக் கனியைப் பறிக்கப் பாடுவது போல் ஓங்காரம் போட்டது.

“கொழந்தையை ஏன் மிரட்டுறீங்க?” இல்லாள் பாய்ந்து வந்து தூக்கிக் குழந்தையைச் சமாதானம் செய்யத் தொடங்கினாள். இரவு இன்ஸ்டால்மெண்டில் டூ வீலர் விற்கும் கடையைத் தேடிப் போய் விசாரித்தான்.

“மோட்டார் சைகிள், ஸ்கூட்டர் எது வேணா வாங்கிக்குங்க. அதன் விலையில் மூன்றில் ஒரு பங்கை மொதல்ல கட்டணும். மீதியை பத்து அல்லது இருபது மாசத்துல கட்டி அடைச்சிட்டாப் போதும்!”

துவக்கத்தில் கட்ட வேண்டிய தொகையை நினைத்து மலைத்தான் குப்புசாம். “சரி, அப்புறமா வர்றேங்க!;; என்று திரும்பினான். வழியில் பார்த்த ஒருவரை “ஸார், ஒன் மினிட்!” என்று குறுக்கிட்டு நிறுத்தினான்.

இவன் அலுவலகத்தை அடுத்துள்ள வங்கியில் பணிபுரியும் அவரை இவனுக்குத் தெரியும் அவரும் இவனைப் பார்த்து சினேக பாவத்தில் சிரித்தார்.

“ஸார், எனக்கு டவுன்ஷிப்பில் வீடு. அங்கேர்ந்து சிடி மார்க்கெட் பக்கத்துல இருக்கிற ஆபீசுக்கு தினமும் பஸ் பிடிச்சு வர்றேன். பீக் அவர்ல பஸ் கெடைக்காம தெனமும் லேட்டாயிடுது ஸார். எங்க ஹெட்கிளார்க் வசவை என்னால தாங்க முடியலை…”

அவருக்கு போர் அடித்திருக்க வேண்டும். கைக்கடியாரத்தில் மணி பார்த்தார்.

“ஸாரி, என் கஷ்டம் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கறாப்பில ஆயிடுத்து. ஒரு டூ வீலர் இருந்தா ஆபீசுக்கு நேரத்துல வரலாம். உங்க வங்கியில டூ வீலருக்கு லோன் தர்றாளாமே, நான் அப்ளை பண்ணினாக் கொடுப்பேளா ஸார்?”

“அடடா, பெர்சனல் லோன் அலாட்மெண்ட் தீர்ந்துடுச்சே ஸார், நீங்க ஒரு ரெண்டு மாசத்துக்கு முந்தி அப்ளை பண்ணி இருந்தா கிடைச்சிருக்கும்… இப்பல்லாம் டூ வீலர் கம்பெனிகளே ஃபைனான்ஸ் கொடுக்கறாங்களே? அங்கே ட்ரை பண்ணிப் பாருங்களேன்…”

“பரவால்ல ஸார்!” அவரை அனுப்பி விட்டு நடக்கத் தொடங்கினான். இவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும் மனைவி சொன்னாள். “ஹவுஸ் ஓனர் இப்பத்தான் வந்துட்டுப் போறார். நாம் வீட்டு வாடகை குறைச்சலாத் தர்றோமாம். இந்த மாசத்துலேர்ந்து நூறு ரூபா அதிகமாத் தரணுமாம். இல்லேன்னா, வேற வீடு பார்த்துட்டுப் போயிடச் சொல்றார்!”

“அடப்பாவி!” என்றான் குப்புசாமி. திடுமென தன் பட்ஜெட்டில் வீட்டு வாடகையை எழுத விட்டுப் போனது ஞாபகம் வந்தது.

“அப்பா எனக்கு மூணு சக்கர சைக்கிள் வாங்கித் தர்றியா?” மகன் கேட்டான்.

“முப்பது சக்கர சைக்கிளே வாங்கித் தருவார்டா உங்கப்பா!” என்று மகனிடம் கேலியாகக் கூறி, நக்கலாகச் சிரித்தாள் குப்புசாமியின் மனைவி. ஜிவ்வென்று ரத்தம் சூடேறியது அவனுக்கு. விருட்டென்று பாய்ந்து அவளை ஓங்கி அறைந்தான்.

“சைக்கிள் வாங்கித் தர வக்கு இல்லாதவன்னு என்னைக் கிண்டலா பண்றே? தெரிஞ்சுதானேடி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே? தெரிஞ்சுதானேடி மூணை வரிசையாப் பெத்துக்கிட்டே?” என உரத்த குரலில் சத்தம் போட்டான்.

அவள் ஓவென்று அழுதாள். குழந்தைகள் பயத்தில் அலறின. உள்ளே உடல் நலமின்றிப் படுத்திருந்த தந்தை, “அடப்பாவி, அவளைப் போட்டு ஏண்டா கொல்றே?” என்று குரல் கொடுத்தார்.

இரவு கனவில் ஹெட்கிளார்க் வந்தார். “உன்னை சஸ்பெண்ட் பண்ணிட்டேன். தினமும் லேட்டா வர்றதுக்கு இது பனிஷ்மெண்ட்..” என்றார். அவர் காலில் விழுந்து அழுதான் இவன். “ஸார், நான் பிள்ளை குட்டிக் காரன் ஸார், என் குடும்பமே பசி பட்டினியோட வீதிக்கு வந்துடும் ஸார், பெரிய மனசு பண்ணுங்க ஸார்!” என்று கண்ணீர் விட்டுக் கதறினான். “என்னங்க, தூக்கத்துல கன்னா பின்னான்னு உளர்றீங்க. கெட்ட கனவு ஏதும் கண்டீங்களா?” என்று அவனை உலுக்கினாள் மனைவி. அவளைக் கட்டிக்கொண்டு அழுதான் குப்புசாமி.

மறுநாள் வீட்டிலிருந்து டவுன் ஷிப் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து, இரண்டு பஸ்சில் இடம் கிடைக்காமல், மூன்றாவதில் முண்டியடித்து ஏறி, ஆபீஸ் போனதில் இருபது நிமிடங்கள் தாமதம் ஆகியிருந்தது. அத்தனை பேர் மத்தியிலும் ஹெட்கிளார்க் போடப்போகும் சத்தத்தை நினைத்து உடம்பு இப்போதே கூனிக் குறுகியது; மனசு வெட வெடத்தது.

ஆபீஸ் முன் வராந்தாவில் எல்லோரும் கூடியிருந்தார்கள். ஏதோ மாறுதலாகத் தெரிந்தது. ஹெட் கிளார்க் அவர் இருக்கையில் காணப்படவில்லை.

காதர் இவனைப் பார்த்ததும் சொன்னான். “குப்புசாமி, உங்களுக்கு விஷயம் தெரியாதே, நம்ம ஹெட்கிளார்க் ஸார் நேத்து ராத்திரி ஹார்ட் அட்டாக்கில் போயிட்டார். அவர் வீட்டுக்குத்தான் இப்ப எல்லோரும் கிளம்பிகிட்டிருக்கோம். டபேதார் மாணிக்கம் நம்ம எல்லோர் சார்பிலும் போடுவதற்கு மாலை வாங்கப் போயிருக்கான். அவன் மாலையோட ஹெட்கிளார்க் வீட்டுக்கு அப்படியே வந்துடுவான்… நாம போலாமா?”

குப்புசாமிக்கு விஷயத்தை மனசில் வாங்கிக் கொள்ளவே கொஞ்ச நேரம் பிடித்தது. “நம்பவே முடியலியே ஸார்! ஏன்யா லேட்டு?ன்னு அவர்கிட்டே திட்டு வாங்காம நுழைஞ்சா, எனக்கு ஆபீசுக்கு வந்த மாதிரியே இருக்காது ஸார். அடப்பாவமே, த்சு! த்சு!” என்று அங்கலாய்த்தபடி அலுவலக சகாக்களுடன் குப்புசாமி வெளியில் வந்தான்.

எல்லோரும் அவரவர் வாகனங்களில் ஏறிக்கொண்டு கிளம்பினார்கள். ஸ்டெனோ லதா கூடத் தன் ஸ்கூட்டியில் ஏறிக் கிளம்பினாள். காதர் தன் ஸ்கூட்டரில் ஏறிக் கொள்ளும்படி குப்புசாமியிடம் சொன்னான்.

“பரவாயில்லை காதர் ஸார். ரெண்டு தெரு தள்ளித்தானே ஹெட்கிளார்க் வீடு. நடந்தே சீக்கிரம் வந்துடுவேன். நீங்க போங்க!”

தனிமையில், வெறிச்சோடிய தெருவில், காலை வெயிலின் கடுமையில் நடந்தபோது குப்புசாமி தனக்குள் சொல்லிக் கொண்டான்: “அப்பாடா, இனிமேல் நான் லேட்டாக ஆபீஸ் போனால் விரட்ட ஹெட்கிளார்க் இல்லை. அடுத்த ஹெட் கிளார்க், ஸீனியாரிட்டிபடி நம்ம வெங்கிட்டுதான். பள்ளியில் கூடப் படித்தவன். அவன் நாம லேட்டா வர்றதையெல்லாம் கண்டுக்க மாட்டான்!” மனம் விடுதலை உணர்வில் பரபரத்தது.

எல்லோரும் தங்கள் வாகனங்களில் ஹெட்கிளார்க் வீட்டுக்கு முன்னதாகச் சென்ற நிலையில், தான் மட்டும் தாமதமாக வந்தது குறித்து, “ஏன்யா குப்புசாமி, இங்கேயும் நீ லேட்டா? என்று ஹெட்கிளார்க்கின் ஆவி கேட்குமோ” என்று தன் அனுபவத்தில் பிறந்த நினைப்பு அவனுக்குள் எழுந்தபோது, அவனுக்குச் சிரிப்பு
வந்தது.

அவன் தன்னுள் சிரித்துக் கொண்டே ஹெட்கிளார்க்குக்குத் தன் இறுதி அஞ்சலியைச் சமர்ப்பிக்க, நடையை எட்டிப் போட்டான்.

(அலிபாபா வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *