Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

ஒரு மழை இரவில்…

 

போலீஸ்காரர் ரோட்டில் கம்பீரமாக நடை பயின்றுகொண்டிருந்தார். தெருவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்த மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டுமென்பதற்காக அவர் நடை பழகவில்லை—அவர் நினைத்திருந்தாலும் முடிந்திருக்காது; இரவு மணி பத்துதான் என்றாலும், மழையும், சிலீரென்று அடித்த காற்றும் மக்களை தெருக்களிலிருந்து விரட்டிவிட்டன.

ஒவ்வொரு கதவும் பூட்டியிருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டே சென்றார். கையிலிருந்த தடியைச் சுழற்றியபடி, தெருவின் ஒவ்வொரு மூலையிலும் பார்வையைச் சுழலவிட்டு அவர் நடப்பதைக் கவனிக்கையில், நாட்டின் அமைதியைக் காப்பதையே பணியாகக் கொண்டு செயல்படுத்தும் கடமை வீரனை நேருக்கு நேர் பார்ப்பது போல்தான் இருந்தது. அவர் ரோந்து போய்க்கொண்டிருந்த இடம் சலனமற்று இருந்தது. ‘மினுக் ‘ ‘மினுக் ‘ கென்று வெளிச்சத்தைக் கொடுத்துக்கொண்டு சில பெட்டிக்கடைகள் திறந்திருந்தன; மற்றவை அநேகமாகக் கம்பெனிகள். இரவு வெகு நேரம் திறந்து வைக்கும் வழக்கம் இல்லை என்பதால், எப்பொழுதோ மூடப்பட்டுவிட்டன.

ஒரு கட்டிடத்தில் பாதி வரையில் வந்த போது, மெக்கானிக் கடை ஒன்றின் மூடிய வாயிலில், பற்ற வைக்காத சிகரெட்டைக் கடித்தபடி ஒருவன் நின்றுகொண்டிருப்பதை அவர் கவனித்தார். அதே கணத்தில் அவரை அவனும் பார்த்தான். அவசரமாகப் பேசினான்.

‘ஒண்ணுமில்ல சார், ‘ என்றான். ‘நான் என் நண்பனுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன். இருபது வருஷத்டுக்கு முந்தி ஏற்படுத்திக்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட். அதிசயமா இருக்கா ? அது ஒரு பெரிய கதை. நான் ஒண்ணும் தப்பான காரியத்துக்காக இங்கக் காத்துக்கிட்டு இருக்கலைன்னு நீங்க முடிவு செய்ய விரும்பறீங்கன்னா அந்தக் கதையைச் சொல்றேன். இப்ப இந்த மெக்கானிக் கடை இருக்கில்ல ? இருபது வருஷத்துக்கு மிந்தி இங்க ஒரு ஓட்டல் இருந்துச்சு. ‘பிக் ஜோ ப்ரேடி ‘யோட ஓட்டல். ‘

‘அஞ்சு வருஷத்துக்கு முந்தி வரை இருந்துச்சு, ‘ என்றார் போலீஸ்காரர். ‘அப்புறம் இடிச்சிட்டாங்க. ‘

கடை வாயிலில் நின்றிருந்தவன், வாயிலிருந்த சிகரட்டைப் பற்றவைத்தான். தீக்குச்சியின் மெல்லிய ஒளி பரவியது. சதுர முகவாய், சிறிய, ஒளிவீசும் கண்கள், சோகையடைந்த முகம். வலது புருவத்திற்கு மேல் ஒரு சிறிய வெள்ளைத் தழும்பு. கழுத்தின் கட்டியிருந்த கர்சீப்பில் ஒரு வைரம் பொருத்தமில்லாமல் ஜொலித்தது.

‘இருபது வருஷத்துக்கு முந்தி, இதே நாள் ராத்திரி, நானும் என் ஃப்ரெண்டு ஜிம்மி வெல்ஸ்ஸும் ‘பிக் ஜோ ப்ரேடி ‘ ஓட்டல்லதான் சாப்பிட்டோம். ஜிம்மிதான் எனக்கு எல்லாம். நானும் அவனும் இங்க ஓண்ணத்தான் வளர்ந்தோம்; அண்ணன் தம்பி மாதிரி. அவனுக்கு இருவது வயசு; எனக்குப் பதினெட்டு. அடுத்த நாள் காலைலே நான் பொழைப்புக்காக ஊரை விட்டுப் போறதாக ஏற்பாடு. ஜிம்மி வரமாட்டேன்னிட்டான். அவனுக்கு நியூ யார்க்தான் உலகம். அதைத்தவிர ஒண்ணும் தெரியாது; புடிக்காது. இருவது வருஷம் விட்டு இதே எடத்துல சந்திக்கிறதாக அன்னிக்குப் பேசிக்கிட்டோம். வாழ்க்கைல முன்னுக்கு வர இருவது வருஷம் போதும்னு நெனைச்சோம்… ‘

‘இது கூட வித்தியாசமா இருக்கே, ‘ என்றார் போலீஸ்காரர். ‘இருவது வருஷம்கிறது கொஞ்சம் அதிகமாத் தெரியலை ? இடையில உங்கள் நண்பர்கிட்டேயிருந்து எந்தத் தகவலும் இல்லையா ? ‘

‘கொஞ்ச நாள் வரையில பேசிக்கிட்டிருந்தோம், ‘ என்றான் அவன். ‘அப்புறம் விட்டுப் போச்சு. நான் மேற்குப் பக்கம் போயிட்டேன்ல ? சுத்திக்கிட்டே இருந்தேன். ஆனா ஜிம்மி மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு; ரொம்ப நாணயமான் ஆள் சார். சொன்னா சொன்னதைக் காப்பாத்துவான்; மறக்க மாட்டான். ஆயிரம் மைல் கடந்து வந்திருக்கேன்; அவனைப் பாத்திட்டா, நான் வந்தது அர்த்தம் இருக்கும். ‘

அவன் தன் கையிலிருந்த வாட்சைப் பார்த்தான். அதன் டயல் முழுதும் சின்னஞ்சிறிய வைரங்கள் மின்னி ஒளிர்ந்தன.

‘பத்தடிக்க மூணு நிமிஷம் இருக்கு, ‘ என்றான். ‘சரியா இதே நேரத்துக்குத்தான் அன்னிக்கு நாங்க பிரிஞ்சு போனோம். ‘

‘நல்ல காசு பாத்திருப்பீங்க போல, ‘ என்றார் போலீஸ்.

‘கண்டிப்பா. ஜிம்மியும் என்னை மாதிரி நாலு காசு பாத்திருந்தன்னா, சந்தோஷமா இருக்கும். எதையும் மெதுவாத்தான் செய்வான் அவன். நம்ம கேசு அப்படியில்லியே ? மேற்கேயெல்லாம் புத்தியை உபயோகப்படுத்தணும்; அப்பத்தான் பொழைக்க முடியும். நியூ யார்க் ரொம்ப டல்லு; இங்க குப்பை கொட்டினா புத்தி மழுங்கிப் போயிறும். ‘

போலீஸ்காரர் தடியை உருட்டிக்கொண்டு நகரத்தொடங்கினார். ‘அப்ப நான் கிளம்பறேன். உங்க நண்பர் வந்தாருன்னா பாருங்க. பத்து மணிக்கு ஷார்ப்பா அவர் வரலைன்னா கெளம்பிறுவீங்களா ? ‘

‘சேச்சே. அரை மணி நேரமாவது காத்துக்கிட்டு இருப்பேன். ஜிம்மி உசிரோட இருந்தான்னா, கண்டிப்பா என்னைப் பாக்க வருவான். நீங்க போய்ட்டு வாங்க. ‘

‘குட் நைட், ‘ பூட்டுக்களைச் சோதித்தவாறு, போலீஸ்காரர் நகர்ந்தார்.

மழை வலுத்தது. காற்று மென்மையை இழந்து, தீவிரமடைந்தது. தெருவில் மிச்சமிருந்த ஒன்றிரண்டு வழிப்போக்கர்கள் கோட்டுக்களில் மறைந்துகொண்டு மெளனமாக நடந்தனர். மெக்கானிக் கடையின் வாயிலில், சிகரெட் புகைத்தவாறு, இருபது வருடங்களுக்கு முன் நண்பனுடன் செய்துகொண்ட சத்தியத்தை—அபத்தமான சத்தியத்தைக்—காப்பாற்ற, அவன் இன்னமும் காத்துக்கொண்டிருந்தான்.

பத்தடித்து இருபது நிமிடங்கள் வரை அவன் காத்திருப்பு நீடித்தது. அவற்றின் முடிவில், உயரமாக, கோட்டு அணிந்த மனிதன் ஒருவன் தெருவின் மறுபக்கத்திலிருந்து அவனை நோக்கி வந்தான்.

சந்தேகத்துடன் அவனைப் பார்த்துவிட்டு, ‘பாப் ? நீதானா ? ‘ என்றான்.

‘ஜிம்மி ? ஜிம்மிதானே ? ‘ வாயிலிருந்தவன் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினான்.

‘டேய்! வந்திட்டியா ? ‘ வந்தவன் ஆவலுடன் வனது கைகளைப் பிடிட்துக்கொண்டான். ‘நீ இங்க இருப்பேன்னு எனக்குத் தெரியுண்டா. எவ்வளவு நாளாச்சு! இருவது வருஷம்னா சும்மாவா ? அப்ப இருந்த ஓட்டல் இப்ப இல்லை—இருந்திருந்தா இன்னொரு டின்னர் சாப்பிட்டிருக்கலாம், இல்ல ? அப்புறம் ? மேற்கே போனியே, அங்கேயெல்லாம் எப்படி ? ‘

‘நான் கேட்டதெல்லாம் கெடைச்சிருச்சு. நீ ரொம்ப மாறிட்ட, ஜிம்மி—உன்னை இவ்வளவு உயரமா எனக்கு நெனைவில்லை. ‘

‘இருவது வயசுக்கப்புறம் கொஞ்சம் வளர்ந்துட்டேன். ‘

‘நல்லா இருக்கியா ? வேலையெல்லாம் எப்படி ? ‘

‘சுமாரா இருக்கு. கவர்மெண்ட்டுல வேலை. வாயேன், அப்படியே நடந்து போவலாம். எனக்குத் தெரிஞ்ச எடம் ஒண்ணு இருக்கு—நெறைய பேசணும் உன்கூட. ‘

இருவரும் கை கோர்த்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தனர். இருவது வருடங்கலுக்குப் பிறகு நண்பனைச் சந்தித்த களிப்பில், மேற்கேயிருந்து வந்தவன் தன்ச் அரித்தை விலாவாரியாகச் ச்ல்ல ஆரம்பித்தான். கோட்டின் நுனியை இழுத்து விட்டவாறு, மற்றவன் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

தெருக்கோடியில் இருந்த ஃபார்மசி ஒன்றின் விள்ளக்குகள் தெருவை ஒளிவெள்ளத்தில் பாய்ச்சியிருந்தன. நண்பர்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே நேறத்தில் ஒருவர் முகத்தொ இருவர் பார்த்துக்கொண்டனர்.

மேற்கேயிருந்து வந்தவன் சட்டென்று தனது கையை விடுவித்துக்கொண்டான்.

‘யாருய்யா நீ ? நீ ஜிம்மி வெல்ஸ் இல்லை, ‘ என்றான் வெடுக்கென்று. ‘இருவது வருஷமானாலும் அறுவது வருஷமானாலும், ஒரு மனுஷனோட நீள மூக்கு சப்பையாக முடியாது. ‘

‘ஆனா நல்ல மனுஷன் கெட்டவனாகலாம், ‘ என்றான் மற்றொருவன். ‘பத்து நிமிஷமா நீ அரெஸ்ட்டுல இருக்கே, பாப். சிகாகோக்காரங்க உன்னை விசாரணை செய்யணுமாம், கூட்டிக்கிட்டு வரசொன்னாங்க. நீயா வர்றியா, இல்ல… ? நீயே வர்றியா ? நல்லது. போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதுக்கு முந்தி, உனக்கொரு லெட்டர் தர்றேன். கான்ஸ்டபிள் வெல்ஸ் எழுதியனுப்பினாரு. படிச்சுப் பாரு. ‘

மேறேயிருந்த வந்தவன் லெட்டரை மெல்லப் பிரித்தான். படித்து முடித்த போது, அவனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. சிறிய லெட்டர்தான்.

‘பாப்: நான் சரியான நேரத்திற்கு வந்துவிட்டேன். நீ சிகரெட் பற்றவைத்த வெளிச்சத்தில் உன்னைப் பார்த்தேன்; சிகாகோவில் தேடப்படும் ஆள் நீதான் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னால் அந்த காரியத்தைச் செய்ய முடியவில்லை; அதனால்தான் வேறொருவனை அனுப்பி வைத்தேன்.

ஜிம்மி. ‘

- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- ஏலங்குழலி (elankhuzhali@yahoo.கம) 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த வேளையில் பார்க்குக்கு அதிகம் பேர் வருவதில்லை. பார்க்கின் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருந்த இளம்பெண், வரப்போகும் வசந்தகாலத்தின் முன்னறிவிப்பை ரசிப்பதற்காகவே அங்கு அமர்ந்திருந்தாள் என்பது யாருக்கு தெரிந்திருக்கும். அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் கவலை படிந்திருந்தது. கண்களில் தெரிந்த ஏக்கத்திற்குக் காரணமான சம்பவம் சமீபத்தில்தான் ...
மேலும் கதையை படிக்க...
கொரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)