Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு மரப்பெட்டிக் கனவு

 

பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் எராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு “சின்னதாகிவிட்ட’ ஆடைகள் எல்லாம் அதில் எதற்காகவாவது பயன்படும் என்று எடுத்து வைத்துவிடுவார்கள். சரவணன் தன் பதினாறு வயது அனுபவத்தில் பயன்பட்டதாகப் பார்த்ததில்லை . கொஞ்சம் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள்களும் அதில் இருக்கும். ஊறுகாய் ஜாடி, விநாயகர் அகவல், கார்த்திகை தீபத்துக்கான அகல்விளக்குகள் இப்படி..

ஆனால் அதனுள் ஒரு பிணம் இருக்கக் கூடுமோ என்று பயமாக இருந்தது சரவணனுக்கு. ரொம்ப சின்ன வயதில் “கண்டுபிடிக்கிற விளையாட்டு’ விளையாடும் போது அதனுள் சென்று ஒளிந்து கொண்டது ஞாபகம் இருக்கிறது. மூச்சுத் திணறிப் போய், மேற்கொண்டு ஒளிந்திருக்க முடியாது என்பது தெரிந்ததும் உயிர் பிழைத்து வெளியே வந்துவிட்டான்.

கண்டுபிடிக்கிறவனிடம் வலிய சென்று பிடிபட்டு, விளையாட்டில் இருந்து விலகிக் கொண்டதும்கூட நினைவிருக்கிறது. அதன் பிறகு அந்தப் பெட்டி மீது ஒருவித அச்சமும் அருவருப்பும்கூட வந்தவிட்டது. இப்போது இப்படியொரு கனவு வந்த பின்பு அதை ஒரு முறை திறந்துதான் பார்த்துவிட்டால் என்ன என்றெண்ணினான்.

சே.. இது என்ன பைத்தியக்காரத்தனம் கனவில் வந்தது எப்படி நிஜமாக இருக்கும் எனவும் ஒருவேளை ஏதாவது இருந்து தொலைத்தால் என்ன செய்வது எனவும் அதைத் தவிர்த்துவிட்டான். அந்தப் பெட்டியைக் கடக்கும்போது அவனால் மட்டுமே உணரக்கூடிய துர்நாற்றமும் வெளிப்பட்டது.

இந்த ஆண்டு திருவிழாவுக்கு நாடகம் போடலாம் என்று பஞ்சாயத்துத் தலைவர் கேட்ட போது இளைஞர் குழாமிலிருந்து “”அதுக்கு நாங்க பொறுப்பு” என்று குரல் வந்தது. பெண்களும் கூடியிருந்ததால் வெடுக்கென இப்படி ஒருவன் பதில் சொன்னான். ஆனால் அது யார் என்று யூகிக்கவிடாமல் செய்துவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். தலைவர் தானாகவே அதைச் சொன்னது பசுபதியாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து அவனை நோக்கியே அடுத்தடுத்துப் பேச ஆரம்பித்தார். பெண்கள் எதிரில் பின் வாங்கிவிடக் கூடாது என்று அவனும் முடிந்த வரை சமாளித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பவளக்கொடியா?, காத்தவராயனா?.. என்ன கூத்துன்னும் சொல்லிட்டீங்கன்னா நோட்டீஸ்ல போட வசதியா இருக்கும்.”

பசுபதி தன் இளைஞர் பட்டாளத்தை ஒருதரம் பார்த்து, அவர்கள் அனுமதியோடுதான் அறிவிக்கிறேன் என்ற தோரணையில் “நாங்க புதுசா பண்றதா இருக்கோம்” என பன்மையில் சொன்னான்.

“எங்களுக்குத் தேவை ஒரு தலைப்பு… எதாவது யோசிச்சு வெச்சிருப்பீங்கல்ல?”

பசுபதி மீண்டும் கெத்தாக தலையைத் திருப்பாமல் பின்பக்கமாகச் சாய்ந்து செவிமடுத்தான். அதாவது பின்னாடி இருக்கும் யாராவது ஒரு தலைப்பைச் சொல்லுங்கள் என்பதாக.
“ராஜதுரோகி” பின்னால் இருந்துதான் யாரோ சொன்னார்கள். பசுபதி அதை “முன்மொழி’ந்தான்.

ராஜதுரோகி என்ற தலைப்பைச் சொன்னவன் யார் என்பதையும் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. திருவிழா குறித்து ஊர் மக்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பசுபதியின் பின்னால் கதிர்வேலு, சண்முகம், பஞ்சா, குமரேசன், கன்னியாம்பாளையத்தார் பையன் சரவணன், புளிமூட்டை எல்லாரும்தான் இருந்தார்கள். பசுபதி தன் நினைவை விளிம்புகட்டி அந்தக் குரலைக் கட்டிப்பிடிக்க முனைந்தான். அது அவனுக்கு வசப்படவே இல்லை.

“அது அவ்வளவு முக்கியமா? ராஜதுரோகி கதை என்னான்னு முடிவு பண்ணிட்டா போவுது..” கதிர்வேலு சாந்தப்படுத்தினான்.

ராஜதுரோகி என்றால் அது அரசர்கள் இடம் பெற வேண்டிய கதை என்பதை முடிவு செய்து மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மனோகரா, ஆயிரத்தில் ஒருவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப் படங்களின் காட்சிகளை முன்னும் பின்னுமாக வரிசையாக அடுக்கினார்கள்.

ராஜவர்மனின் மகள் வசுமதியை கங்க நாட்டு மன்னன் குலோத்துங்கள் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று திருமணம் செய்ய துணிகிறான். மகளை மீட்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகத் தண்டோரா போடுகிறான் மன்னன். நளமாறன் கிளம்பிச் செல்கிறான். குலோத்துங்கனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள். அவன் மந்திரி சகுனிதேவனின் பிடியில் சிக்கி அவனுடைய கைப்பாவையாக இருப்பதை அறிகிறான். மன்னனையே சிறைபிடித்து வைத்துவிட்டு வசுமதியை மணக்கத் துடிக்கிறான் சகுனிதேவன். மக்களைத் திரட்டிப் போராடி சகுனி தேவனை வீழ்த்தி மன்னரை மீட்கிறான் நளமாறன். வசுமதியை அவனுக்கே மணமுடித்து நாட்டையும் ஒப்படைக்கிறான் குலோத்துங்கன்.
கதை இப்படி பிரமாதமாக அமைந்துவிட்டதில் பசுபதிக்குத் தலைகால் புரியவில்லை. மக்களைத் திரட்டிப் போராடுதல் என்றால் எப்படி மேடையில் காட்டுவது என்பதில் அவனுக்குப் பெரிய சந்தேகம் வந்துவிட்டது. மேடையில் குதிரைகளும் யானைகளும் போர் வீரர்களும் அம்பும் வேல்கம்பும் எப்படிக் கொண்டு வருவது என்று இரண்டு இரவுகள் ஓயாமல் சிந்தித்துவிட்டு நாடக விவாதம் நடக்கும்போது கேட்டும் விட்டான். யாருக்கும் விடை தெரியவில்லை.

நளமாறன் கிளம்பிப் போகிறான் என்று ஒருவரியில் சொல்லிவிட்டதையும் மேடையில் எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. பசுபதியின் மனத்திரையில் குதிரையில் ஏறி “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்று பாடிச் செல்வதாக ஓடிக் கொண்டிருந்தது அது.

காட்சி ஒன்று, காட்சி இரண்டு என சிவராம ஆசாரிதான் அவசரமாக அதை ஓரளவுக்கு நாடகமாக்கினார். அரசர்கள் கதை என்றாலும் அதிலே “”இதோ டூ மினிட்ஸ்ல வந்து விடுகிறேன் அம்மா” போன்ற வசனங்களும் இருந்தன. மக்கள் சிரிப்பார்கள் என்று அதற்குக் காரணம் சொல்லிவிட்டார் அவர். அவர் இதற்கு முன்னர் நடந்த “பூலோக நாகம்மா’ கூத்திலும் நடித்து அனுபவப்பட்டவர். அவர் மட்டும் இல்லையென்றால் நாடகம் ஒரு இம்மியும் நகர்ந்திருக்காது. நாடகத்தில் யார் யாருக்கு என்னென்ன வசனம் எந்தக் காட்சியில் வரும் என்பதைச் சொன்னார். கதை வசனமாக மாறியபோது அது அடிப்படை கதையிலிருந்து விலகி வேறொரு கதைபோல இருந்தது பசுபதிக்கு. சகுனிதேவன் பகடை விளையாட்டில் கைதேர்ந்தவன் என்பது புதிதாக சிவராம ஆசாரியால் சேர்க்கப்பட்டது. அந்தக் கலையின் மூலம் ஐம்பத்து நான்கு தேசத்து அரசர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பதாக கதையை வளர்த்தியிருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் கதை மிகவும் சிறியதாக இருக்கிறது என்பதுதான். அவர் இதைச் சேர்த்தபிறகும் நாடகத்தில் ஒன்பது காட்சிகள்தான் இருந்தன. ஒவ்வொரு காட்சியும் ஸ்கிரீன் (தூக்கி இறக்கும் நேரத்தையும் சேர்த்து) ஐந்து நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் நாடகம் முடிந்துவிடும் போல தோன்றியது. நாடகம் விடிய, விடிய நடக்கப் போவதாகவும் விளம்பரம் செய்திருந்தது நாடகத்துக்குப் பொறுப்பேற்றிருந்த அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

“நாடகத்தில் காமெடி காட்சிகளே இல்லை” என்பதை ஞாபகப்படுத்தினான் பஞ்சா.
கன்னியாம்பாளையத்தார் பையனையும் சோமுவையும் காமெடி செய்ய சொன்னார்கள். ஒவ்வொரு காட்சியைத் தொடர்ந்தும் அவர்கள் மேடைக்கு வந்து அடுத்த காட்சியை எடுத்துக் கொடுத்து விளக்கிவிட்டு, சினிமா பாடல்களை இட்டுக் கட்டிப் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. உண்மையில் இந்த யோசனைக்கு நல்ல பலன் இருந்தது. நாடகம் காட்டுப் பாய்ச்சலாக இரண்டு மணி நேர நாடகமாகிவிட்டது.

“சின்ன பொண்ணே கோக்கிலமடி கட்டாணி கட்டாணி..
சீக்கிரமா வந்தியனா வாங்கித்தர்றேன் பட்டாணி…
ஒவ்வொன்னா பொறுக்கு….
என் மீசைய கொஞ்சம் முறுக்கு ” என கன்னியாம்பாளையத்தார் பையனுக்கு ஒரு அறிமுகப்பாட்டும் அமைக்கப்பட்டது. சோமு காமெடியனுக்கு ஜோடியாகப் பெண் வேடம் கட்டி ஆட வேண்டும்.

நாடகத்தில் இப்போது இரண்டு பெண் வேடங்கள்.. ஒன்று வசுமதி. கடத்தப்பட்டுவிடுவதால் ஆரம்பத்திலும் முடிவிலுமாக இரண்டு தடவை மேடையில் தோன்ற வேண்டும்.

“மூன்றெழுத்தில் ஒரு மாடிருக்கும்
அது மூன்று படி பால்கறக்கும்…
எருமை… அது எருமை….”
எனவும்
பாலிருக்கும் பசி இருக்கும்
பழமிருக்காது…
பஞ்சணையில் தூக்கம் வரும்
காத்துவராது
எனவும் கன்னியாம்பாளையத்தார் பையன் அதை நன்றாக மெருகேற்றினான்.

எல்லாம் சரியாக இருந்தது. வீரன் நளமாறன் வேடத்துக்கு பசுபதியைப் போட்டதுதான் வேதனையிலும் வேதனையாக இருந்தது. சுட்டுப் போட்டாலும் வசனம் வரவில்லை. அரசரே என்று அழைப்பதற்கே தட்டுத் தடுமாறிப் போனான். “நான் மாடக்கூடலை நாடி வந்தக் காரணம் என்ன தெரியுமா? நவில்கிறேன் கேளுங்கள்..” உணர்ச்சி கொந்தளிக்கும் வசனத்தை அவன் உள்ளங்கையில் எழுதி வைத்து வாசித்துவிடுவதாக ஒத்திகையின் போதே முடிவு செய்துவிட்டனர். தனித் தனியாக வசன மனப்பாடம் செய்வதும் சேர்ந்து எல்லோரும் நடித்துப் பார்ப்பதும் நடந்து கொண்டிருந்தது. நளமாறன் வேடம் மட்டும் வெற்றிடமாகவே இருந்தது. பசுபதி எப்போதும் நடிப்பதற்கு வருவதே இல்லை. “நீங்கள்லாம் நடிங்கடா நான் சமாளிச்சுடுவேன்’ என்பான். பஞ்சாயத்துத் தலைவருக்கு பசுபதியின் மீது அபார நம்பிக்கை இருந்தது. அவன் ஒருத்தனால்தான் இந்த நாடகமே சாத்தியமானது என்று உறுதியாக இருந்தார். நாடக வசனங்கள் அவனுக்கு மட்டும்தான் தலைகீழ் பாடம் என்பதாக நினைத்து அவனை திருவிழாவுக்கான மற்ற வேலைகளுக்கு ஏவிக் கொண்டிருந்தார். அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் மாதிரி உடனே பைக்கை எடுத்துக் கொண்டு மறைந்துவிடுவான். அவன் மறைந்த கொஞ்ச நேரத்தில் நாடகப் பட்டாளத்துக்கு டீ வரும். சமயங்களில் பிஸ்கட்டும் சேர்ந்துவரும். “பசுபதி அண்ணன் குடுக்கச் சொன்னாரு’ என்பான் டீ பையன். இது போன்ற காரணங்களுக்காக யாரும் பசுபதியைக் கோபித்துக் கொள்ளவும் முடியாமல் இருந்தது. ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை அம்மனுக்குக் கூழ் ஊற்றி அன்று இரவே ராஜதுரோகி நாடகம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஊர்க்காரர்களின் உறவினர்கள் சிலர் அழைப்பின் பேரில் நாடகம் பார்க்க வந்திருந்தனர்.

காலையில் இருந்தே ராட்டினம் சுற்றுபவன், பலூன் விற்பவன், ரிப்பன் வளையல் விற்பவன் என களை கட்டியிருந்தது ஊர். பசுபதியை மட்டும் காணவில்லை. கன்னியாம்பாளையத்தார் பையனை வேகமாக ஓடி பார்த்துவிட்டு வரச் சொன்னதில் பசுபதி படுத்தபடுக்கையாக இருப்பதாகச் சொன்னான். குளிர் ஜுரம் தூக்கித் தூக்கிப் போடுவதாக விவரித்தான், பார்த்துவிட்டு வந்தவன். யாருக்கும் கைகால் ஓடவில்லை. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடைக்குக் கீழே பஞ்சாயத்துத் தலைவரை அணுகி இப்படி ஆகிவிட்டதைச் சொன்னார்கள். பஞ்சாயத்துத் தலைவர் அந்த நேரத்திலும் “”வேறு எல்லாருக்கும் சீக்கு வந்திருந்தாக்கூட கவலைபட்டிருக்க மாட்டேன். ஏன்னா பசுபதி சமாளிச்சுடுவான். பசுபதியே படுத்துட்டானே?” என நம்பிக்கையாக இடிந்துபோனார்.

“பசுபதி பேச வேண்டிய வசனம் வேறு யாருக்குத் தெரியும்?” வறட்சியாக விசாரித்தார்.

“கன்னியாம்பாளையத்தார் பையன் சரவணனுக்குத் தெரியும்” என்றனர்.

“அவன் பொடியனாச்சே?”

“மீசை வெச்சு.. பனியனுக்குள்ள கொஞ்சம் துணியை அடைச்சுட்டா தெரியாது ரெட்டியாரே”
தலைவர் அரைமனதுடன் சம்மதித்தார். மானம் தாளாமல் ஊரைவிட்டு ஓடிவிடுவார் போல இருந்தது அவர் முகம்.

காமெடி வேடத்திலும் நளமாறன் வேடத்திலும் சரவணனே நடித்தான். மூன்றாவது காட்சிக்கு அப்புறம் “சகுனிதேவன்’ குவார்ட்டர் அடித்துக் குப்புற விழுந்துவிட்டான்.

வசுமதியை மீட்டு வருவதாக அரசனிடம் சத்தியம் செய்துவிட்டு மேடைக்குப் வந்த சரவணனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. என்ன காரணத்தினாலோ அவன் கண்ட கனவு ஞாபகம் வந்தது.

மந்திரி இல்லாமலேயே காட்சியை முடித்துவிடலாம் என்றான் சரவணன்.

அதாவது தந்திரக்கார மந்திரியைத் தந்திரத்தாலே வீழ்த்தினான் நளமாறன். மன்னனுக்கு உண்மை புரியும் வரை மந்திரியை மயக்க மருந்திட்டு பெட்டியில் அடைத்துவிட்டான் என்று ஜோக்கராக வந்து காட்சி விளக்கம் தந்தான். தன் வீட்டில் இருந்த மரப் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லி அதில்தான் சகுனிதேவனை மயக்க மருந்திட்டு அடைத்து வைத்திருப்பதாகக் காட்டினான். குடித்துவிட்டு விழுந்து கிடந்தவனைத் தூக்கி வந்துப் பெட்டியில் போடுவதாகக் காட்டினான். ஒவ்வொரு காட்சியிலும் அந்தப் பெட்டி பார்வையாளரை திகிலூட்டியது. பெட்டி தென்படும் காட்சிகளில் குறிப்பாக அந்தப் பெட்டியின் மீது நளமாறன் ஒய்யாரமாகச் சாய்ந்து அரசனிடம் பேசிய காட்சியில் மக்கள் பரபரப்பானார்கள். ரெட்டியார் “உள்ள கிடந்து அவன் செத்துகித்துத் தொலைக்கப் போறான்டா” என்றார்.

முதல் காட்சியில் ஸ்கிரீன் மாற்றியபோதே அவனை வெளியே எடுத்துவிட்டதைச் சொன்னபோது “அடராமா.. அவன் உள்ளதான் இருக்கான்னு பயந்துட்டன்டா” என்றார்.
கடைசி வரை பசுபதிக்குப் பின்னால் இருந்து “நாடகத்துக்கு நாங்கப் பொறுப்பு, ராஜதுரோகி ‘என குரல் கொடுத்தது தான்தான் என சரவணன் யாரிடமும் சொல்லவில்லை.

இதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் சரவணன் ஹிச்காக்கின் “தி ரோப்’ படத்தைப் பார்த்தான். படம் டைரக்ட் செய்வதற்கான தகுதி இருப்பதாக அவன் மனதில் நம்பிக்கை உதித்தது. அடுத்த மூன்றாண்டுகளில் அவன் “நாடகப் பட்டாளம்’ என்ற திரைப்படத்தை எடுத்தான்.

- ஜூலை 2009 

தொடர்புடைய சிறுகதைகள்
"நீங்கள் மதராஸியா?' என்று அவள் கேட்டபோது, "இல்லை நான் தமிழ்நாடு' என்று சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றியது. இப்படியொரு விளக்கம் கொடுத்து அவளுடைய கேள்வியை மறுத்துவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. சலீமுடன் காஷ்மீர் வருவது உறுதியானதும் இங்கே எனக்கான ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை போர்டு வைத்திருந்தார்கள். கல்லூரியின் முகப்பு பிரம்மாண்டமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளை இங்கே படிப்பதை விரும்பத் தூண்டுவதாக இருந்தது அது. ...
மேலும் கதையை படிக்க...
துணை
''நீ கவிதை எழுதுவியா?'' - கேள்வியில் கோபம் அதிகமாக இருந்தது. பத்ரியின் கண்கள் சிவந்திருந்தன. அவனைத் தயக்கத்தோடு பார்த்தாள் புவனா. எழுதுவேன் என்று சொன்னால், அடுத்த விநாடி கன்னத்தில் அறை விழலாம். எழுதத் தெரியாது என்றாலும் அடிக்கலாம். அவனுக்குத் தேவை அடிப்பதற்கான ...
மேலும் கதையை படிக்க...
வேறு கிளை… வேறு சுவை!
நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால், அதன் பிறகு அவளை நான்பார்க்க வில்லை. தொடர்வண்டி எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும்போதும் மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் ...
மேலும் கதையை படிக்க...
இப்படிக்கு பூங்காற்று…
சரஸ்வதியின் முகத்தில் கலவரம் தூக்கலாக இருந்தது. காபி கொடுக்கும்போது, புன்னகைக்க முயற்சி செய்தாள். அது அவ்வளவு இயல்பாக இல்லை. 'ஒரு வாரமாக ஒருவன் தினமும் நேரம் காலம் இல்லாமல் தொலைபேசுகிறான்; தொல்லையாகப் பேசுகிறான். கொஞ்சம் நேரில் வர முடியுமா?’ - இதுதான் ...
மேலும் கதையை படிக்க...
மெஹர்
அது இது
துணை
வேறு கிளை… வேறு சுவை!
இப்படிக்கு பூங்காற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)