Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு பிடி சோறு

 

அவள் ஒரு விசித்திரமான பெண் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவளை ஒரு பிச்சைக்காரி என்றுதான் முதலில் நினைத்தேன்.

அந்தப் பெண் வீட்டுக் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள். கையில் ஒரு குழந்தை. கைப்பிடியில் ஒரு குழந்தை. அது அம்மாவின் நடைக்கு ஈடு செய்யும்படி ஓடியும் நடந்தும் வந்தது. முற்றத்தில் வந்து நின்று குரல் தந்தாள்.

‘அம்மா… தாயி!”

வந்த கோலத்தையும், நின்ற கோலத்தையும் பார்த்துத்தான் அன்றாடம் பிச்சைக்கு வருபவர்களில் யாராவதாக இருக்கலாமென்று எண்ணினேன். ஆனால் அந்த முகம் அதற்கு முன் நான் ஒருநாளும் காணாத முகமாயிருந்தது.

‘சாமி!”

உள்ளே இருந்த என்னை அப்போதுதான் அவள் கவனித்திருக்கவேண்டும்.

குழந்தையின் சிணுக்கமும், அழுகையும்தான் என்னை ஈர்த்தது. நான் மனைவியை அழைத்தேன்.

‘சில்லறை இருந்தால் கொண்டுவந்து கொடுங்கோ..!”

குசினியிலிருந்து வெளிப்பட்டு சில்லறையுடன் வாசலுக்குப் போனாள் மனைவி. காசை அவளிடம் நீட்டியதும்,

‘பிச்சை வேணாம் தாயி!… நாங்க குறி சொல்றவங்க.. கைரேகை சாஸ்த்திரம் பார்க்கிறவங்க!” என்றாள்.

மனைவி திரும்பினாள். ‘இஞ்ச ஆருக்கும் பார்க்கத் தேவையில்லை.. போங்கோ!”

அவள் போகவில்லை.

‘அப்படிச் சொல்லாத தாயி! புள்ள அழுவுறான்… பால் பவுடருக்குக் கூட காசில்ல..”

‘நிற்கச் சொல்லங்கோ!” என்றவாறே நான் எழுந்து போனேன். அவளிடம் கைரேகை சாஸ்திரம் பார்க்கும் உத்தேசம் எனக்கு வந்திருந்தது. கைரேகை சாஸ்திர சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை ஒன்றுமில்லை. அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை. எனினும் அவளுடையதும், அந்தப் பிள்கைளினதும் நிலையைப் பார்த்து கைரேகை பார்க்கம் சாட்டிலாவது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று தோன்றியது.

நான் முன்னே போனதும்,

‘சாமி! தர்மதுரை! நல்லாயிருந்தீங்க சாமி. மாளிகையாட்டம் வீடு கட்டி சிறப்பா இருந்தீங்க. எல்லாமே போட்டது போட்டபடி விட்டு வந்தாச்சு! க~;டகாலம் சாமியைப் போட்டு உலைக்குது!”

அடடே! கைரேகை சாஸ்த்திரம் பார்க்க வந்தவள் என் முகத்தைப் பார்த்து குறி சொல்கிறாளே..! ஆச்சரியப்பட்டேன்.

யுத்த நிலைமைகள் காரணமாக வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து அப்போது ஓரிரு வருடங்களாகியிருந்தது. ஊகித்து அறிதல் மூலமோ… முகக்குறி பார்த்தோ சிலருக்கு உள்ளது உள்ளபடி சொல்லும் ஆற்றல் இருக்கலாம். எனினும் அவள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் சுவாரஸ்யமாயிருந்தது. அதனாலும் அந்தப் பெண்ணிடம் கைரேகை பலன் கேட்கும் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.

அவளது கைக்குழந்தையின் அழுகை நின்றபாடில்லை.

‘தூங்குடா!” குழந்தையைத் தோளிற் சாய்த்தாள். அது திமிறி எழுந்து உரத்து அழுதது. அவள் அதுபற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என்னிடம் கேட்டாள்.

‘கைரேகை பார்க்கிறீங்காள சாமீ!”

‘சரி! பார்த்துச் சொல்லுங்க!”

நின்ற நிலையிலேயே கையை அவளிடம் நீட்டினேன்.

‘இந்த மாதிரியெல்லாம் சொல்லேலுமா? அதுக்கு ஒரு முறை இல்லையா?”

கைரேகை பார்ப்பதற்குரிய ஒழுங்குமுறை என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

‘ஒக்காருங்க சாமி! ஏதாச்சும் தச்சனை வையுங்க..! ஐஞ்சோ… பத்தோ ஒங்களுக்குப் புடிச்ச மாதிரி வையுங்க!”

நான் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டுவந்தேன். பணத்தைக் கூடக் கொடுக்காவிட்டால் பலனைக் கூடாமல் சொல்லிவிடக்கூடுமல்லவா? அந்தத் தயக்கம் மனதிலிருந்தது.

முன் விறாந்தையில் அவள் இருக்க, முன்னால் நான் சப்பணமிட்டு அமர்ந்தேன். தனக்கு முன்னே ஒரு துண்டை விரித்து அதில் பணத்தை வைக்குமாறு கூறினாள்.

ஐம்பது ரூபாய்த் தாளை வைத்ததும் அவளது முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.

‘கையைக் காமியுங்க சாமி!”

வலக்கையை விரித்து நீட்டினேன். நான்கு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு சில தெய்வங்களைத் துணைக்கு அழைத்துப் பிரார்த்தனை செய்தாள். பின்னர் பலன் சொல்லத் தொடங்கினாள்.

‘சாமிக்கு நல்ல மனசு…” (இது என் கைரேகையில் அவள் கணித்த முதல் வாக்கியம்).

குழந்தை அழுதது. தனது ரவிக்கையை ஷஅவுக்|கென நீக்கிக் குழந்தையின் முகத்தைப் புதைத்தாள். (அழுத பிள்ளை பால் குடிக்கும்)

அந்த உத்தி முன்னே இருந்த எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தினாலும், ஷஅதைக்| கண்டுகொள்ளாமலே இருந்தேன்.

‘இல்ல எண்டு சொல்லாமல் கொடுக்கிற மகராசா..” இப்படியாக எனது கைரேகை பலன் கூறிக்கொண்டே போனது. அந்தப் பெண் கூறுவதையெல்லாம், ஒருவித சுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். நடந்தவை, நடப்பவை, நடக்கப் போகிறவை என அடுக்கிக் கொண்டே போனாள்.

‘அப்பிடித்தானே? சொன்னது சரிதானே?” என இடைக் கேள்விகளையும் கேட்டாள். நான் ஒரு பதிலும் சொல்லவில்லை. சொல்லும் பதிலிலிருந்து தகவல்களை அறிந்துகொண்டு அவள் இன்னும் கதை அளக்கக்கூடும் என எச்சரிக்கையாயிருந்தேன்.

எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் என்னை, படு அப்பாவியாக நினைத்திருப்பாளோ என்னவோ! சில ஏடுகளை எடுத்து என் முன்னே அடுக்கிப் பிடித்தவாறு அவற்றின் இடையில் ஒரு நூலைப் போடுமாறு கூறினாள். அப்படியே செய்தேன். நூல் விழுந்த பக்கத்தை விரித்து, அதில் தோன்றிய மூன்று தெய்வங்களின் பெயரைக் கூறினாள். அந்தத் தெய்வங்கள் எனக்குக் காவலாய் இருப்பார்கள் என்றும், அவர்கள் இன்ன இன்ன பலன்களைத் தருவார்கள் என்றும் கூறினாள். எனக்கு மூன்று தெய்வங்கள் காவலிருப்பார்கள் என்பது சந்தோ~மான வி~யமாகவே எனக்குப் பட்டது.

‘ஆனா ஒண்ணு… சாமி மேல கண்ணு பட்டிருக்கு. பொல்லாத கண்ணு! ரோட்டில் போனீங்கன்னா இவருக்கு என்ன கொறைச்சல்… என்று எரிச்சல் பொறாமை படுகிறவங்கட கூடாத கண்ணு பட்டிருக்கு சாமி. க~;டங்களுக்கெல்லாம் காரணம் அதுதான்…”

நான் ஏதும் பேசாமல் இருக்க..

‘கண்ணூறு கழிக்க என்ன செய்யோனும் என்று கேளுங்க! கேட்டாத்தானே சொல்லலாம்…”

‘சரி சொல்லுங்க!”

‘வாய் பேசாது போயி மூணு வேப்பம் இல புடுங்கிட்டு வாங்க!” (ஏற்கனவே வாய் பேசாமல்தான் இருக்கிறேன்).

வேப்பமரம் எங்கள் வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் ஒரு மரம் நிற்கிறது. அந்த மரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது. எனக்கு வேப்பமரத்தில் ஏறும் பரிச்சயமும் இல்லை. வாய் பேசாது போய் பக்கத்து வீட்டு வேப்ப மரத்தில் ஏறினால் அவர்கள் ஷஇவனுக்கு ஏதாவது ஆகிவிட்டது| என முடிவு கட்டவும் கூடும்.

எனது இக்கட்டான நிலையை வாய் திறந்து அவளிடம் கூறினேன்.

‘எனக்கு வேப்பமரத்தில் ஏறத் தெரியாதே..?”

‘போயி வேற ஒரு மரத்தில பச்சை இலை புடுங்கி வாங்க… வாய் பேசப்படாது!”

வாய் பேசப்படாது என அடிக்கடி குறிப்பிட.. எனக்கு உள்@ர சற்று பயமும் ஏற்பட்டது. மந்திர தந்திரமோ!

மனைவி ஏதும் அலுவல் சொன்னாலே.. சாட்டுப் போக்குக் கூறிக் கடத்திவிடுகிறவன் நான். இப்போது இவளது கட்டளைக்குப் பணிந்து எழுந்து, உறக்கத்திலே நடப்பவனைப்போல (வாய் பேசாமல்) நடக்கத் தொடங்கினேன்.

தூர நின்று விடுப்புப் பார்த்துக்கொண்டு நின்ற எனது சின்ன மகன் கிட்ட ஓடிவந்தான்.

‘என்னப்பா? என்னப்பா?” எனப் பதற்றத்துடன் கேட்டான்.

நான் வாயே திறக்கவில்லை. சைகையால் அவனுக்குப் புரியவைக்க முயன்றேன். அவன் படுசுட்டி. ஏதாவது கேட்டு அறிய வேண்டுமானால் வாயைத் திறக்காமல் விடமாட்டான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. முதுகில் ஒன்று வைத்தேன். ஷஅந்தப் பக்கம் போ!| என்பது போல கையைக் காட்டினேன். பிள்ளை அழத் தொடங்கிவிட்டான். பொதுவாக பிள்ளைகள் எங்களைவிடப் புத்திசாலிகள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

அவன் பின்வரும் வார்த்தைகளை ராகமிழுத்து அழுதான்.

‘அந்த மனிசியைப் போகச் சொல்லுங்கோ! அவங்கட்டை கையைக் காட்டவேணாம்! எனக்குப் பயம்.. பயம்..!”

எனினும் நான் அவனது புத்திமதியைக் கேட்கவில்லை. ஒரு சோதனை முயற்சி போன்ற ஆர்வமும் கைரேகை பார்ப்பதில் இருந்தது. எதுவரை போகுமோ அதுவரை போகலாம்.

கைக்கு எட்டிய மரம் ஒன்றிலிருந்து பச்சை இலை ஒன்றைப் பிடுங்கிக் கொண்டுவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். முன்னே அமரும்படி நிலத்தைத் தொட்டுக் காட்டினாள். அமர்ந்தேன். தன் சேலைத் தலைப்பிலிருந்து எதையோ எடுத்து இலையில் வைத்து (என் தலைமேல்) சுற்றினாள். பின்னர் அதைத் தன் பையில் வைத்தாள்.

‘நெதானமா கேளுங்க சாமி! மூணு தெய்வத்துக்கும் படையல் பூசை போடவேணும். (ஏட்டிலிருந்த படங்களைக் காட்டினாள்). உங்க மேல தங்கியுள்ள குத்தம் குற கண்ணேறு எல்லாம் கழிஞ்சிடும்… பூசைக்கான செலவ குடுத்திடுங்க!”

இன்னொரு முன்னூறோ நானூறு ரூபாய்க்குக் குறி வைக்கிறாள் என்று தோன்றியது. எனினும் நான் அந்தப் பணத்தைக் கொடுக்கச் சம்மதமாயிருந்தேன். அது பூசைக்காக அல்ல. ‘பிள்ளை அழுகிறான். மாப்பவுடர் வாங்கக்கூடக் காசில்லை” என அந்தப் பெண் ஆரம்பத்தில் கூறியது நினைவிலிருந்தது.

‘சரி எவ்வளவு பணம் வேணும்!”

‘சாமி! மத்தவங்ககிட்ட பேசவேணாம்… கேக்கவேணாம். (வாய் மூடிக் கொண்டு) மூவாயிரம் ரூபா எடுத்துக் கொடுங்க!”

இது நான் எதிர்பார்க்காத தொகை!

‘வாய் பேசக்கூடாது” என அவள் பலமுறை கூறிக்கொண்டிருந்ததன் மர்மம் ஓரளவுக்குப் புரிந்தது. காசு கொடுக்கலாமா வேண்டாமா என்று மனைவியிடம் கூட அபிப்பிராயம் கேட்பதைத் தடுக்கும் தந்திரம்!

“அவ்வளவு காசு என்கிட்ட இல்லையே அம்மா..”

‘அப்படி சொல்லவேணாம் சாமி… எத்தனையோ பேருக்கு ஒதவியிருக்கீங்க. எத்தனையோ செலவு செய்திருக்கிறீங்க.. இது தெய்வ காரியத்துக்காக கொடுக்கிறீங்க… உங்களுக்கு நல்லதுக்குத்தான் கொடுக்கிறீங்க… யோசிக்காமல் கொடுங்க!”

எனக்கு நல்லதோ என்னவோ.. அந்தப் பெண்ணுக்கு இது நல்லதாகத்தான் அமையும். அவள் கேட்கும் தொகையைக் குடுத்தால் என்ன?

‘இப்ப அவ்வளசு காசு இல்ல. முன்னூறு ரூபாதான் இருக்கு. அதை இப்ப தாறன்.. மீதிக்கு இன்னொரு நாளைக்கு வாங்க.. தாறன்!”

இரண்டு மனம் வேலை செய்தது. அவளுக்கு உதவுவதாகக் கருதிக்கொண்டு அத்தொகையைக் கொடுக்கப் போகிறேன். அது அவளது பிள்ளையின் பராமரிப்புக்கு உதவும். எனினும் அது அந்தப் பெண்ணின் தந்திரத்துக்கு ஆட்பட்டு வீணாகக் கொடுக்கப்போகும் பணமா என்றும் கேள்வி பிறந்தது.

‘அடுத்த சனிக்கிழமை வாறன்! நெசமா தருவீங்கதானே?”

‘சரி போயிட்டு வாங்க!”

முன்னூறு ரூபாய்களை அவளிடம் கொடுத்தேன். போவதற்கு முன் மனைவியிடம் ‘உடுக்க ஒரு சேலை தாங்க தாயி..” எனக் கேட்டு வாங்கிக்கொண்டு போனாள். அடுத் சனிக்கிழமை ‘நெசமா” வருவதாக பல தடவை கூறிச் சென்றாள்.

அடுத்த சனிக்கிழமைக்கு முன் சில வேளைகளில் அவளது நினைவு வந்தது. (கனவும் வந்தது.) சனிக்கிழமை வருவாளா? வந்தால் பணம் கொடுக்கவேண்டுமா? கொடுப்பது நியாயமா? என்றெல்லாம் கேள்விகள்.. கேள்விகளுக்குப் பதிலின்றியே அடுத்த சனிக்கிழமையும் வந்தது.

ஆனால் அவள் வரவில்லை. ஷதொல்லை விட்டது| என ஒருவித நிம்மதியடைந்தேன்.

அதற்கு அடுத்த சனிக்கிழமை அந்தப் பெண் வீடு தேடி வந்தாள். கையிலும், கைப்பிடியிலும் அதே குழந்தைகளுடன்.

‘கதிர்காமம் போனேன் சாமி! வர முடியுமா போச்சு!”

தனது பையினுள் வெற்றிலையில் சுற்றி வைத்திருந்த பிரசாதத்தை எடுத்து எனது கையில் தந்தாள்.

சரியோ பிழையோ அந்தப் பெண்ணுக்குப் பணம் தருவதாக ஒத்துக்கொண்டாயிற்று. கொடுப்பதுதான் சரி என நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம். பணத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன்.

அவள் என்னைப் பார்த்துக் கூறினாள்.

‘வேணாம் சாமி! எனக்கு என்னமோ.. சரியில்ல என்னு படுது… ஒரு பிடி சோறு போடுங்க.. தின்னுட்டுப் போயிடுறோம்!”

(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது – 2004) 

தொடர்புடைய சிறுகதைகள்
யூனிவர்சிட்டிக்குக் காலடி எடுத்துவைத்த முதல்நாளே அப்படியொரு சோதனை எனக்குக் காத்திருந்தது. இயல்பாக நடக்க முடியவில்லை. ஒவ்வொரு அடியையும் மிகச் சிரமத்துடன் எடுத்துவைத்தேன். வலி… சப்பாத்து ஏற்கனவே என் பாதங்களை அமுக்கி பதம் பார்த்திருந்தது. அப்பாவிற்கு அந்தச் சிரமங்கள் புரிய ஞாயமில்லை. ஸ்கூலில் படித்த ...
மேலும் கதையை படிக்க...
அவளது பெயர் எனக்கு முதலிற் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது தெரியவரும் என்றும் நினைத்திருக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அவள் மட்டுமே சற்று வித்தியாசமாக என் கண்களிற் பட்டது உண்மைதான். எனினும் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எங்களது பல்கலைக்கழகம் ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது. கனவில் மனைவி வந்தாள். கமலநாதனுக்குத் திடுக்குற்று விழிப்பு ஏற்பட்டது. பொதுவாக, மனைவி என்பது பலருக்குத் திடுக்குறல் ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனால் இது அந்த மாதிரியான திடுக்குறல் அல்ல. சற்று வித்தியாசமான, சற்று பரவசம் கலந்த திடுக்குறல் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்திலிருந்து வரும்போது பொழுதுபட்டிருந்தது. புவனா ஜன்னலடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஃபிளாட்டின் இரண்டாவது மாடியில் வீடு. அங்கிருந்து வீதியைப் பார்ப்பதற்கு வசதியாகவே ஜன்னல் அமைந்திருந்தது. வீடுகளை டிசைன் பண்ணுகிறவர்கள் பரந்த அறிவு படைத்தவர்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று. நான் படியேறி வாசலுக்கு வர, ...
மேலும் கதையை படிக்க...
கேட்டுக்கேள்வியில்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான். அப்போது நான் வீட்டு முன் விறாந்தையிலிருந்தேன். மதியச் சாப்பாட்டின் பின்னர் சற்று ஓய்வாக சாய்வுக் கதிரையில் அமர்வது வழக்கம். அதை ஓய்வு என்றும் சொல்ல முடியாது. யோசனை... கவிழ்ந்துகொண்டிருக்கும் கப்பலை எப்படி மீட்டெடுப்பது என்ற ...
மேலும் கதையை படிக்க...
இட்ட அடி நோக…
இன்னொரு ரகசியம்
மனைவி மகாத்மியம்
புரியாதது
காட்டிலிருந்து வந்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)