ஒரு பிடி அரிசிச் சோறு

 

​அபிராம் தன் பால்ய நண்பன் ‘மஸ்கு’ வைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். மகிழ்ச்சியோடு காட்டு வழியே நடந்தான். அவலும், பொரியும் நிறைந்த ஒரு சிறு துணி முடிச்சும், ஒரு சிறிய கோபால விக்ரஹமும் மட்டுமே அவனுடைய லக்கேஜ்.

அபிராமுக்குத் தாய் தந்தையர் இல்லை. பாட்டி தான் வளர்த்தாள். இப்போது அவளும் திடீரென்று பரலோகம் சேர்ந்து விட்டாள். தனக்கென்று யாருமில்லாத அனாதையானான் அபிராம். அவன் எங்கு சென்றாலும் ஏனென்று கேட்பாரில்லை. ஆனாலும் முதலில் தன் நண்பன் ‘மஸ்கு’ வைக் காண வேண்டும்.

ஒரு குஷால் பேர்வழியான அரசன் ஆளும் நகரத்தில் மஸ்கு வசிக்கிறான். ஆனால் மஸ்கு அந்நகரத்தில் எந்த சுக போகமும் அறியாமல் வாழ்ந்து வந்தான். அபிராமைப் போலவே எளிமையான உணவு உண்டு மகிழ்ச்சியாக காலம் கழித்து வந்தான். காட்டில் விறகு வெட்டி அதனை நகரத்தில் சென்று விற்று வாழ்க்கை நடத்தி வந்தான் மஸ்கு.

வழியை விசாரித்தறிந்தபடி மஸ்கு வசிக்கும் நகரத்தை வந்தடைந்தான் அபிராம். நகர எல்லையில் இருந்த ஒரு சிறிய காட்டிலேயே தன் நண்பனைச் சந்தித்தான் அபிராம். அப்போது சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்திருந்தான். நாள் பூராவும் நடந்து நடந்து களைத்திருந்தான் அபிராம். நண்பர்களிருவரும் சந்தோஷமாக பேசிக் களித்திருக்கையில் அன்று முழுவதும் தன் ‘கோபாலனுக்குக்’ கூட எதுவும் நைவேத்யம் அளிக்க வில்லை என்று ஞாபகம் வந்தது அபிராமுக்கு.

“மஸ்கண்ணா! எனக்கு பசிக்கிறது” என்றான் அபிராம். உடனே மஸ்கு அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்று இலை நிறைய பொங்கலும் ஒரு சிறு பானையில் ஆட்டுப் பாலும் பெற்று வந்தான்.

“கோபாலா! பாட்டி இல்லையல்லவா? இனிமேல் என் கையால் தான் நீ உண்ண வேண்டும்” என்றான் விக்ரஹத்திடம் அபிராம். நன்கு இருட்டிய பின் மஸ்கு சில சோளக் கதிர்களைச் சுட்டு தன் நண்பனுக்களித்தான். அதன் பிறகு ஒரே பேச்சு தான். இரு நண்பர்களும் பல விஷயங்களைப் பேசித் தீர்த்தார்கள்.

“அபிராம்! எங்களுக்குத் தான் வயிற்றுக்குச் சோறு இல்லையே தவிர, எங்கள் அரசன் போஜனப் பிரியன். மாளிகையின் மேல் மாடியில் அமர்ந்து விருந்து சாப்பிடுவார் ராஜா. சேவகர்கள் ராஜாவுக்கு குடை பிடிப்பார்கள், தங்கத் தட்டு நிறைய கமகமவென்று மணம் கமழும் உயர்தர அரிசிச் சோறு. தட்டைச் சுற்றி வெள்ளிக் கிண்ணங்களில் வித விதமான உணவு வகைகள். … மீன் உணவு, மாமிச உணவு, லட்டு, பாயசம் என்று சொல்லி மாளாது” என்றான் மஸ்கு.

அபிராம் கண்களை அகல விரித்து நண்பன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அரசனின் உணவு நாளைக்கு பிரஜைகள் அனைவருக்கும் காட்சிக்கு வைக்கப்படும் நாள். ஆண்டுக்கு ஒரு நாள் இவ்வாறு நடைபெறும். நாமும் போய் பார்க்கலாமா?” என்று மஸ்கு கேட்டவுடனே தன் வாழ்நாளில் ராஜ வைபவத்தைப் பார்த்தறியாத அபிராம் உடனே ஒப்புக் கொண்டான்.

“கோபாலா! சந்தர்ப்பம் வாய்த்தால் உனக்கும் ராஜ போஜனம் நைவேத்யம் செய்கிறேன்” என்று மனதிற்குள் கோபாலனிடம் கூறிக் கொண்டான் அபிராம்.

மறுநாள் அரசனின் போஜன சமயத்திற்கு மணி அடித்தார்கள். நண்பர்களிருவரும் அரச உணவைப் பார்க்கும்படியாக ஒரு உயரமான மரத்தின் மேலேறி அமர்ந்து கொண்டார்கள். சேவகர்கள் ராஜ போஜனத்தை எடுத்து வந்தார்கள். சூடான அரிசிச் சோற்றின் மணம் அபிராமின் மூக்கைத் துளைத்தது. “அண்ணா மஸ்கா! அந்தச் சோறு ஒரு பிடியாவது வேண்டுமடா!” என்று தன்னை மறந்து சற்று உரத்தே கூவி விட்டான் அபிராம். சற்று தொலைவிலிருந்தாலும் அரசன் அக்குரலைக் கேட்டு விட்டான்.

“யாரடா அவன்? என் உணவை உண்ணும் சாகசமா? இறங்கி வாடா!” என்று கர்ஜித்தான் மன்னன். சேவகர்கள் அப்பையன்களைப் பிடித்திழுத்து அரசன் முன் நிறுத்தினர்.

“மகாராஜா! இவனை மன்னித்து விடுங்கள். இவன் கிராமத்து முட்டாள். நேற்று தான் வந்தான். ராஜ மரியாதைகளை அறியாதவன்” என்று மன்னனிடம் கெஞ்சினான் மஸ்கு.

ஆனால் அபிராம் மட்டும் மீண்டும் அதே தோரணையில் “ஒரு பிடி அரிசிச் சோறு கொடுங்களேன்” என்று உரத்துக் கூவினான். அதை கேட்ட அரசன் கொடூரமாகச் சிரித்தான்.

“சரி. உனக்குத் தருகிறேன். ஆனால் இன்றைக்கல்ல. சம்பளமில்லாமல் மூன்று வருடங்கள் என்னிடம் வேலை செய்தால் நீ கேட்ட ஒரு பிடி அரிசிச் சோறு கிடைக்கும்” என்றான் அரசன் ஏளனமாக.

“அதற்கென்ன? கூலி கீலி தேவை இல்லை. உங்கள் அரசாங்கத்தில் வேலை செய்ய நான் தயார்” என்றான் அபிராம்.

கூறியபடி ஓய்வின்றி அரசனிட்ட வேலையைச் சிரமேற்கொண்டு உழைத்தான் அபிராம். இட்ட வேலையை சிரத்தையுடன் கடவுளுக்குச் செய்யும் பூஜை போல் செய்தான். இரவானதும் நண்பன் மஸ்குவின் குடிசைக்குத் திரும்பி அவனளிக்கும் எளிமையான உணவை சிறிது உண்டு திருப்தியாக ஆழ்ந்து உறங்கினான் அபிராம்.

“உன் தோழன் ஒரு பைத்தியக் காரனடா!” என்று ஊர் ஜனங்கள் மஸ்குவிடம் கூறிச் சிரித்தார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மூன்றாண்டுகள் கடந்து விட்டன. தற்பொழுது அபிராம் உயரமாக வளர்ந்திருந்தான். கடின உழைப்பின் காரணமாக நல்ல பலசாலியாகவும் விளங்கினான். எந்த ஒரு வேலையானாலும் ஒரு கணத்தில் செய்து முடித்து விடும் திறனுள்ளவனாகப் பெயர் பெற்றான். மனதில் கள்ளமில்லை; கவலை இல்லை; அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கினான்; நன்றாகக் கலந்து பழகினான்.

ஒரு நாள் அரசனிடமிருந்து அழைப்பு வந்தது. “இதோ பார்! சம்பளமில்லாமல் நீ வேலை செய்ய வேண்டுமென்பது தானே நம் ஒப்பந்தம்? ஆனால் உன் சிரத்தையும் உழைப்பும் என்னை மகிழ்வித்தன. உனக்கு ஐம்பது வராகன் பொன் தருகிறேன். ஆனால் உனக்கு அரிசிச் சோறு ஒரு பிடி வேண்டுமா? அல்லது ஐம்பது வராகன் பொன் வேண்டுமா?” என்றுகேட்டான் அரசன்.

“மகாராஜா! நம் முந்தைய ஒப்பந்தப் படி ஒரு பிடி அரிசிச் சோறு தான் வேண்டும்” என்றான் அபிராம்.

அரசன் ஆச்சர்யமடைந்தான். சற்று நேரம் யோசித்து, “இதோ பார்! என் அரச போஜனத்திற்​​
க்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ஆயிரம் பொற்காசுகள். உனக்கும் இன்று அதே உணவை அளிக்கிறேன். நல்ல உடையளித்து உனக்கு அலங்காரம் செய்யச் சொல்கிறேன். என் பக்கத்திலேயே அமர்ந்து இன்று போஜனம் செய்” என்றான் அரசன்.

அதன்படி அரசனும் அபிராமும் உணவு உண்ண அருகருகில் அமர்ந்தனர். உணவு பரிமாறப்பட்டது. அபிராம் இன்னும் உண்ணத் தொடங்க வில்லை. அதற்குள் “ஐயா! ரெண்டு கவளம் உணவு போடுங்கையா!” என்று யாரோ ஒரு பிச்சை காரனின் குரல் கேட்டது. அபிராம் டக்கென்று எழுந்து தன் உணவுத் தாம்பாளத்தை எடுத்துச் சென்று அந்தப் பிச்சை காரனின் பாத்திரத்தில் உணவைக் கவிழ்த்து விட்டான்.

உணவை வாயிலிட முற்ப்பட்ட அரசனின் கை அப்படியே நடுவில் நின்று விட்டது. வாயில் வார்த்தை வெளி வரவில்லை. அபிராமை வைத்த விழி வாங்காது பார்த்திருந்தான் அரசன். அபிராமின் முகத்தில் தான் எத்தனை திருப்தி! மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பிடி சோற்றுக்கு ஆசைப்பட்டான் ஆனால் தான் அதைத் தர முன் வரவில்லை. மூன்று வருடங்கள் கூலி இல்லாமல் உழைத்த உழைப்பின் பலனை அப்படியே ஒரே கணத்தில் பிச்சைக்காரனுக்கு அளித்து விட்டான்.

கடின இதயம் கொண்ட அந்த அரசனின் கண்கள் கூட கலங்கி விட்டன. அபிராமின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அபிராம்! இன்றைக்கு நான் உன்னிடம் தோற்று விட்டேன்” என்றான் அரசன்.

அபிராம் மலர்ந்த முகத்துடன், “அரசே! ‘உன் தேவையையும் சுய நலத்தையும் விட்டு விட்டு என்றைக்கு நீ மற்றவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யத் துணிகிறாயோ, அன்றே கோபாலன் உனக்கு சகலமும் அருளுவான்’ என்று என் பாட்டி கூறுவாள். உயிரை தியாகம் செய்ய சந்தர்ப்பம் வைக்கவில்லையே தவிர, உணவைக் கொடுத்து ஒருவனின் பசியைத் தீர்க்க முடிந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒருவரின் திருப்தி இன்னொருவருக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியும் என்பதை இத்தனை நாட்களாக நான் அறிந்திருக்கவில்லை. என் கோபாலனே இன்று பிச்சைக் காரனின் உருவில் வந்து ராஜ போஜனம் உண்டு ஆனந்தமடைந்தான் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றான் அபிராம்.

அபிராமின் கண்கள் ஆனந்தத்துடனும் திருப்தியுடனும் மூடிக் கொண்டன. அகக் கண் முன் நண்பன் மஸ்குவின் முகம் தெரிந்தது. “கோபாலா! அவனுக்கும் சிறிது அன்னம் கிடைக்கும் படிச் செய். அவனை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி உண்பேன்?” என்று பிரார்த்தித்தான் அபிராம்.

​மொழிபெயர்ப்பு கதை -Source- ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரபா. 

தொடர்புடைய சிறுகதைகள்
பிராணிகளின் பராமரிப்பு பற்றியும் அவற்றின் உரிமைகள் பற்றியும் இன்றைய தினம் நிறையவே பேசப்படுகிறது. ஆனால் உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் நாய்களைப் பற்றிய உயர்வான குறிப்புகள் காணப்படுகின்றன. தெய்வீகப் பசுக்களை போலவே தெய்வீக நாய்களும் தேவதைகளுக்கு சேவை செய்த்துள்ளன. ...
மேலும் கதையை படிக்க...
எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, 'அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது, பணத்தைக் கட்டுவது, பின் இரண்டு கிளாஸ் கூட அட்டெண்ட் பண்ணாமல் ஜகா வாங்கி விடுவது. நிறைய மனைவிமார்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
தினமும் நான் அலுவலகத்திலிருந்து வந்ததும் எங்கள் வீட்டுத் தோட்டத்தை ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான்... கொல்லையின் மத்தியில் இருந்த மாமரத்தில் நிறைய பிஞ்சுகள், கொத்துக் கொத்தாய். இந்த ஆண்டு மாம்பழமே வாங்க வேண்டாம் போலிருக்கிறதே! என் மகிழ்ச்சியைப் ...
மேலும் கதையை படிக்க...
ராம - ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியின் முன்பாக ஒரு கபடமான யுக்தியைப் பிரயோகித்தான். மகா மாயாவியான ராவணன், 'வித்யுஜ்ஜிஹ்வன்' என்ற மந்திரவாதி அரக்கனை அழைத்து சீதையின் மனதை சிதற அடிப்பதற்காக ஒரு ஆலோசனை செய்தான். அதன்படி, "அரக்கனே! ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிலந்திப் பூச்சி, தன் வாயிலிருந்து வந்த நூலால் சிவனுக்கு கோவில் எழுப்பியது. ஒவ்வொரு கணமும் அந்த ஆலயத்தை உன்னிப்புடன் கவனித்து, சரி செய்தபடி, சதா சிவ தியானத்திலேயே நேரத்தைச் செலவிட்டது. பூர்வ புண்ணிய பலனால் ...
மேலும் கதையை படிக்க...
காரணமின்றி துன்புறுத்தினால் காரணமின்றியே அழிவு வரும்
ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!
விடுதலை… விடுதலை …
சீதையும் ஸ்ரீராமனும் செய்த சூரிய வழிபாடு
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் பெயர் தோன்றிய கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)