ஒரு நிமிடப் பயணம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 8,606 
 

அது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகப்பெரிய மருத்துவ மனை. சாப்பிடும் முன் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஏழு மணிக்கே நான் அங்கு போக வேண்டியிருந்தது!

மருத்துவமனை இருப்பது 5- வது மாடி. நான் ‘லிப்ட்’டுக்காக காத்திருந்தேன். என் அருகில் வந்து ஒரு பெரியவர் நின்றார். அவரின் புகைப் படத்தை நான் பத்திரிகைகளில் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தொழிலதிபர். சிறந்த ஆன்மிகவாதி. அவருக்கு கோவையில் இருநூறு கோடிகளுக்கு மேல் சொத்து இருக்கும். கதர் ஜிப்பா அணிந்திருந்தார். அவருக்கு அறுபது வயசு இருக்கும். மரியாதை நிமித்தம் அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன். அவரும் சிரித்துக் கொண்டே பதில் வணக்கம் செய்து விட்டு, அமைதியாக ‘லிப்ட்’டுக்காகக் காத்திருந்தார்.

ஒரு இளைஞன் ஓடி வந்து எங்கள் பக்கத்தில் நின்றான். அந்த இளைஞனுக்கு 35 வயசிருக்கும். நாகரிகமாக நல்ல பேண்ட், சர்ட் அணிந்திருந்தான்

லிப்ட் கீழே வந்தது. மூவரும் உள்ளே நுழைந்தோம். நான் 5- வது மாடிப் பட்டனை அழுத்த லிப்ட் புறப்பட்டது. இளைஞன் பெரியவரைத் தள்ளிக் கொண்டு வந்து லிப்ட் மின் விசிறிப் பட்டனை அவசரமாக அழுத்தினான். 50 நொடிப் பயணத்தில் லிப்ட் 5- வது மாடிக்கு வந்து விட்டது! எங்களோடு வந்த இளைஞன் வேகமாக வெளியேறி விட்டான். அடுத்ததாக நானும் வெளியே வந்து விட்டேன். பெரியவர் பொறுமையாக லிப்ட் மின் விசிறியை நிறுத்திய பின் வெளியே வந்தார்.

ஒரு மணி நேரம் இருக்கும். சாப்பிடுவதற்கு முன் கொடுக்க வேண்டிய டெஸ்டுக்கு ரத்தம் கொடுத்து விட்டு, அடுத்த டெஸ்டுக்காக வரவேற்பு அறையில் நானும், பெரியவரும் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு துப்புரவுத் தொழிலாளி ‘மாப்’பை வைத்துக் கொண்டு வரவேற்பு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான். சேர்களுக்கு மத்தியிலும், அடியிலும் ‘மாப்’பை விட்டு சுத்தம் செய்யாமல் மேம்போக்காக அந்த இளைஞன் தன் வேலையை செய்து கொண்டிருந்தான். அவன் என் அருகில் வரும் பொழுது அவன் முகத்தைப் பார்த்தேன். ஒரு மணி நேரத்திற்கு முன் எங்களோடு லிப்ட்டில் வந்த இளைஞன் தான் அவன்.

எங்களோடு லிப்ட்டில் வந்தவர் நினைத்தால், ஒரே செக் கொடுத்து, அந்த ஐந்து மாடி கட்டிடத்தையே விலைக்கு வாங்கி விட முடியும்! ஆனால் அவர் லிப்ட்டிலிருந்து வெளியே வரும் பொழுது, யாரோ போட்ட லிப்ட் மின் விசிறியைக் கூட யாருடைய மின்சாரம் கட்டணம் வீணாகச் செலவாகக் கூடாதென்று பொறுப்பாக நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.

எங்கள் கூட வந்த இளைஞனுக்கு மாத சம்பளம் 5 ஆயிரம் இருக்கும். லிப்ட் அடுத்தவர் பொருள் என்பதால், குளிர் காலத்தில் கூட, ஒரு நிமிடப் பயணத்திற்கு, லிப்ட் மின் விசிறியைப் பயன் படுத்தி விட்டு, பொறுப்பில்லாமல் அதை நிறுத்தாமல் போய் விட்டான். யாரோ போட்ட மின் விசிறியை யாருக்காகவோ அதைப் பொறுப்பாக நிறுத்தி விட்டு வந்தார் அந்தப் பெரியவர்.

அந்தப் பெரியவர் தன்னுடைய 25 வது வயசில் பசியொடு ஒரு வேளை சோற்றுக்காக கோவைக்கு வேலை தேடி வந்ததாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். இன்று அவருடைய மாத வருமானம் 35 லட்சம் இருக்கும்!

‘லிப்ட்’டில் ஒரு நிமிடப் பயணம்!

அன்று நான் சந்தித்த இளைஞன், அந்தப் பெரியவர் இருவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தவுடன், எனக்கு ஏன் பலர் ஏழையாகவே பிறந்து, ஏழையாகவே மடிகிறார்கள் என்பதற்கும், ஒரு சிலர் எப்படி ஏழ்மையில் பிறந்து, வாழ்க்கையில் மிக உயரத்திற்குப் போகிறார்கள் என்பதற்கான காரணம் புரிந்தது!

பாக்யா செப் 23-29

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *