Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு கதையின் ஸ்டோரி

 

ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

நாளுக்கு நாள் அதைப் படிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள். அடைபட்ட கால்வாயினால் வெள்ளம் வீதியில் பெருக்கெடுப்பதுபோல் இண்டு இடுக்கிலுள்ள வாசகர் குழாத்திடையே செய்தி பரவியது. வாசகர்கள் பதறியடித்துக் கொண்டு ஓலைச்சுவடி இதழை வாங்கிப் பார்க்க ஓடினார்கள். அவர்கள் ஓடிய வேகம் சாலை விபத்தைக் காண ஓடுபவர்களின் வேகத்தை ஒட்டியதாக இருந்தது. மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் விமர்சகர்களும் இலக்கிய இதழ் துணையாசிரியர்களும் பெரும் பாய்ச்சலாக வந்துகொண்டிருந்தனர். எப்படி அவர்களுக்கு அதற்குள் வாசம் எட்டியது எனத் தெரியவில்லை.

“ஐயா, கதையைப் படிப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்” என்று வாசகர்களைப் பார்த்து விமர்சகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் கதையை முதன் முதலாகப் படிக்கக் கொடுத்துவைத்தவர் யார் என்ற தேடலும் கிளம்பிற்று. கண்கள் கலங்கி உடல் வியர்த்திருந்த ஒரு தீவிர வாசகர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் அவரது சொற்களில் தானியங்கியாகக் கற்பனையின் ஜிகினாத் துகள்களும் உயர்ந்த செண்ட் வாசனையும் வரத் தொடங்கின. தன்னால் இவ்வாறு கற்பனா வளத்துடன் வருணிக்க முடிவதை எண்ணி அவருக்குப் பெருமிதம் பொங்கிற்று. சொல்தடுமாற்றத்துடன் மட்டுமே பேச முடிந்த அந்த இளம் வாசகர் இதனால் சிறுவயது முதலே தனக்கு இருந்து வந்த பேச்சுத் தயக்கத்தை மறந்தவராகப் பேசினார். பேச்சு அவருக்குச் சரளமாக வர ஆரம்பித்தது. அவரது பேச்சில் தீர்மானமும் நிச்சயமும் தன்னம்பிக்கையும் இருந்தன.

அவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இத்தனை பேர் இப்படி ஆர்வமாகக் கேட்கிறார்கள்? அவர்கள் படிக்க முடிந்த விடயம்தானே? அதையும் நான் ஏன் விவரித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது? நான் சொல்வது அத்தனையும் அடுத்த மாதம் எல்லா இலக்கிய இதழ்களிலும் வரப் போகிறதா?

விமர்சகர்கள் அவர்களின் தொழில் தந்திரப்படி அரும்பு விட்டுக்கொண்டிருந்த வாசகரின் கற்பனைகளை நுட்பமான கேள்விகள் வழியாக இதழ் மலர்ச் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் உருவாக்க விரும்பும் கருத்துக்களை அவர் வாய்வழியே வரவழைக்க முடிந்துவிட்டது அவர்களுக்கு வெற்றிதானே! ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையின், பிடரி முடிவளர்த்திருந்த ஒரு இளம் விமர்சகர் – அவரை ஏன் சக விமர்சகர்கள் ‘கூகை’ என அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை – ஆங்கிலத்தில் கேட்டார்: “ஐயா, நீங்கள் முதன்முறையாக இதைப் படித்தபோதும் இதன் கரு இப்படித்தான் மறைந்திருந்ததா?” திடீரென வாசகருக்கும் தனக்குத் தெரிந்த ஆங்கில மொழித் திறனைக் காட்ட வேண்டும் என்னும் ஆவல் உண்டாயிற்று. அவர் தன் தொண்டையைக் கனைத்தபடி ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்: “Yes, it is as opaque as a deep coat of tar.” இந்த பதிலில் விமர்சகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர் ஆங்கிலத்தில் பேசியது நம்பகத் தன்மைக்கு அதிகப்படியான ஒரு சான்றாகவும் அவர்களுக்குத் தோன்றியது.

அந்தக் கதையின் உச்சம் ஒரு முழுமையான மறைவுதான் என்பது எல்லா மனங்களிலும் பட்டது. மிகுந்த விட்டம் கொண்ட ஒரு இதழில் அக்கதை தன் மொழியை மட்டும் வெளிப்படையாகக் காட்டி நின்றது. ஆசிரியரின் மொழித்திறன் அந்த அளவுக்குத்தான் அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தது போலிருக்கிறது.

இறைவா, அந்த மறைவு, படைப்புத் தன் சிகரத்தைக் கண்ட வெற்றியில் கெக்கலித்துக் கொண்டிருக்கிறது. அதன் சிறப்பு அதன் கெட்டியும் திடத்தன்மையும்தான். புரிதல் என்னும் வெளிச்சம் ஊடுருவ முடியாத கருமைதான் அதை ஸ்திரப்படுத்தியிருக்கிறது. பாம்புகளின் கண்களின் கருமையையொத்த ஓர் உண்மையை முற்றாக மறைத்துக் கொண்டு அந்தக் கதை நெருங்கத் துடித்துக் கொண்டிருக்கும் புரிதலை அண்ட விடாமல் காத்தது.

கதை வெளிவந்த முதல் சில நாட்களிலேயே ஓலைச்சுவடிப் பிரதிக்குக் குவியத் தொடங்கிய கூட்டம் தடித்துக் கொண்டே வந்தது. அதன் அடர்த்தியைச் சமாளிக்க முடியாமல் அனைவரையும் கொடுக்குப் பிடித்து நிற்க வைக்கும் முயற்சியும் தோற்றது. அலையலையாகப் பிரதிகள் லாரிகளில் வந்து குவிந்தும் பலர் பொறுமை காக்க முடியாமல் பிடுங்கிக் கொண்டு ஓடினர். பல பிரதிகள் இழுபறியில் கசங்கிக் கிழிந்தன.

புத்தகக் கடைகளுக்குக் காவல் துறையினரின் உதவி தேவைப்பட்டது. எனினும் அவர்களின் வாகனங்கள் கூட்டத்தை நெருங்க முடியாமல் தெருவிலேயே நிறுத்தி வைக்கப் பட்டன. திரண்டு வந்த கூட்டம் காவல்துறையினரை மதிக்காமல் தள்ளிக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. விமர்சகர்கள் தங்கள் குறிப்புக்களில் இந்தச் சூழல்களையும் குறித்துக் கொண்டனர். விமர்சனம் என்பது உணர்ச்சி பொங்காது எழுதப்படவேண்டும் என்னும் விதியை அறிந்தவர்களாக இருந்தாலும் இந்தச் சூழலின் உணர்வுகள் அவர்களைத் தாக்குவதை அவர்களின் நாளைய எழுத்துப் பிரதிபலிக்கும் என்றே தோன்றியது.

வாசகர் கூட்டம் என்பது விரிவடைந்துகொண்டே போனது. மாணவர்கள், ஜேப்படித் திருடர்கள், ஆசிரியர்கள், திரைப்படத் துறையினர், எத்துவாளிகள், அரசியல்வாதிகள், குண்டர்கள், சாமியார்கள், வியாபாரிகள், முடிச்சுமாறிகள், எழுத்தாளர்கள், வேசிகள், ஓவியர்கள், தொழிலாளர்கள், மாணவிகள், சகல ஊடகங்களையும் சார்ந்த பணியாளர்கள்… யார்தான் அங்கில்லை? அரசாங்கச் சேவகர்களும் கோப்புகளுக்குச் சிவப்பு நாடா கட்டி வைத்துவிட்டு விரைந்து வரத் தொடங்கினர்.

பார்க்கப் பார்க்க அந்தக் கதை ஒரு பிரமைதானோ என்ற சந்தேகம் பலர் மனங்களிலும் முளைத்து வலுப்பட்டு வந்தது. திடத்தன்மை கொண்ட நீரும், இருளும், கரு மேகங்களும் முடை நாற்றமுடைய காற்றும் கல்லும் இணைந்து ரசாயன மாற்றத்தால் இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டனர். இந்தச் சந்தேகம் அடக்கி வைத்துக் கொள்ள முடியாத மன அரிப்பானபோது இவை பற்றிய பேச்சுக்கள் தொடங்கின. இந்தப் பேச்சு பரவத் தொடங்கியதும் அவர்கள் சொன்னவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்குக் கத்தி பதில் சொல்லத் தொடங்கினர். ஒரு காகிதத்தின் மேல் இத்தனைக் கெட்டியான கதையை உருவாக்க முடியுமா என அவர்கள் கேட்டனர். ஆம்! அந்தக் கதையின் கனம் அவ்வப்போதாவது கைகளில் தாங்க முடியாத அளவுக்குக் கனக்கத்தான் செய்தது.

தொடர்ந்து கைகளில் தாங்கியிருந்தால் அது கனம் அதிகரித்தும் குறைந்தும் துடிப்பதும் உணரப் பட்டது. அதன் கனபரிமாணம் பற்றி வாதங்கள் வெடித்தன. கத்துதலும் சலசலப்பும் ஏற்பட்டன. அந்தச் சலசலப்பு கைகலப்பாக மாறலாம் என்ற செய்தி வெட்டவெளியில் அச்சுறுத்துவதுபோலப் பரவிற்று.

ஆனால் அந்தக் கனத்துக்கும் அதில் ஒளிந்துள்ள மறைவுண்மைக்கும் யாராலும் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உளவியல் அறிஞர் ஒருவர் தான் சொல்வது ஒரு ஊகம்தான் என்னும் முன்னுரையுடன் தன் மாணவர்களுக்கு விளக்கம் தந்தார். இப்படி மறைந்துள்ள ஒரு பொருளுக்கு வாசகர்கள் இப்படி சைப்படுவது ஏன் என்பது அந்தக் கதாசிரியருக்கே ஒரு புரியாத புதிராக இருக்கலாம். இப்படி ஒரு கூட்டம் மறை பொருளை எண்ணிக் கலவரப் படுவது சிரியருக்கு மிகப் பெரிய கேள்வியாகி அது பூதாகரமாக வளர்ந்திருக்கலாம். இதை மனதில் கொண்டு இந்த மக்களுக்கு ஒரு மறை பொருளைத் தெரிந்து கொள்ளும் ஆசை இப்போதுதான் முதன் முறையாகத் தோன்றியிருக்கிறது என்ற தவறான எண்ணத்திற்கு அவர் வரலாம். அந்த ஆசிரியர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது என்று தன் பேச்சை முடித்தார் பேராசிரியர்.

இலக்கிய இதழ்கள் அன்றி நாளிதழ்களும் சினிமா இதழ்களும் பொழுது போக்கு இதழ்களும் காட்டிய ஆர்வத்தில் அந்த அலுவலகங்களில் பதற்றம் கூடிக்கொண்டே போயிற்று. தொலைபேசிகள் இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்தன. சகல இதழ்களின் நிருபர்களும் குறைந்தது நான்கு பக்கத்திற்கு இதைப்பற்றிய ஸ்டோரி எழுதுமாறு பணிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் கதையைப் பத்திபத்தியாகப் பிரித்து அவற்றுள் ஒளிந்துள்ள பொருளுக்கு சமூக/ அறிவியல்/ உடற்கூறு/ ஜோதிட/ இலக்கிய அறிவுறுத்தல்கள் என்ன என்பதைப் பின்னிப் பின்னி எழுதிக் கொண்டிருந்தனர். இதை சிரியர்கள் படித்து ஓகே சொல்லவேண்டும். ரசம் ஊறியது காணாதென்று ஆசிரியர்களுக்குத் தோன்றிவிட்டால் மீண்டும் முழுமையாக எழுதிவிடும்படி ஆகிவிடும்.

ஆசிரியர்களுக்கு இதுபோன்ற ஒரு நாள் விடிந்ததே இல்லை. அவர்களுடைய மூளைகள் கொதித்துக் கொண்டிருந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அதிசயம் இன்று தேடி வந்திருக்கிறது. அதனைப் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். நாளை உலக இதழ்கள் அனைத்திலும் இக்கதை வெளிவரும். அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுவது ஒரு ஆசிரியனின் திறனைப் பொறுத்தது; கற்பனையைப் பொறுத்தது. வாய்ப்பு வாசலில் வந்து நிற்கிறது. மறைப்பு பெரிய விடயமில்லை. ஆனால் அதன் கனமும் இருண்மையும். அந்த அபூர்வ நிலைமைதான் ரத்தத்தைச் சூடேற்றுகின்றது. ஆக அதுதான் ஸ்டோரியின் மையம். இதில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இல்லை. எப்போது மறைவு மையம் கொண்டுவிட்டதோ அப்போதே அந்த ஸ்டோரிக்குக் கருத்துப் படிமம் எழுத்தைவிட முக்கியமாகிவிடுகிறது. ஆனால் இந்தப் பார்வையில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இருந்தது. கருத்துப் படிமம் முக்கியம் என்றாலும் எழுத்துத்தான் அதிக ரசத்தை உறிஞ்சும் திறன்கொண்டது என்று அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பாரில் விவேகமான சில விமர்சகர்கள் வாதிட்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் சகல மன இயற்கைகளையும் சகல மனப் பிறழ்வுகளையும் பச்சையாகச் சித்திரிக்கும் மாத நாவல்களை விடவும் இடுக்குகளில் கற்பனைத் திறன் கொழிக்கும் தட்டையான எழுத்துக்கள் ஏன் அதிக விமர்சனப் பாராட்டுக்கள் பெறுகின்றன என்று அவர்கள் கேட்டதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

படைப்பைப் படித்த பலர் – முக்கியமாக இளைஞர்கள் – படைப்பாளரை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவருக்குப் புரியும் மொழி எதுவாக இருப்பினும் அந்தப் பெருங் கூட்டத்தில் அதையும் கற்றுத் தேர்ந்தவர்கள் சிலரேனும் இருந்ததில் ச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆனால் அந்தப் படைப்பாளர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமலும் முகத்தில் எளிய பாவ பேதங்களைக் கூடக் காட்டாமலும் இருந்தார். அன்பு செய்வோரை அலட்சியம் செய்வதாகக் கூட்டத்தினர் புரிந்து கொண்டதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? பொறுமையிழந்த கூட்டத்தினர் முரட்டுத் தனமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். சொல்லவோ எழுதவோ இயலாத மிக பாசமான சொற்களில் அவரைக் கேலி செய்யவும் சென்சிட்டிவான அவருடைய கற்பனா மனத்தைப் புண்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். பாசச் சொற்களை மேலும் தோண்டி பாசமாக்குவதில் கற்பனைத்திறன் கொண்டவர்களிடையே ஒரு போட்டாபோட்டி ஏற்பட்டுவிட்டதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

கூகையின் அலுவலகத்தில் நிருபர் தொகுத்துத் தந்த இந்தக் கேள்விகளைக் கூகை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். ஆணித்தரமான கேள்விகள் என்றாலும் அவற்றை அப்படியே வெளியிட்டால் காகிதம் அழுகத் தொடங்கிவிடும் என்று தோன்றியதால் அவற்றை ஆசிரியரிடம் கொண்டு சென்றார். ஆசிரியர் புரட்டிப்பார்த்துவிட்டு இவற்றை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றார். திடீரென்று தன் நினைவுக்கு வந்ததுபோல் அவர் ஏன் அந்தக் கதை இன்னும் தன் மேஜைக்கு வந்து சேரவில்லையென்று கத்தத் தொடங்கினார்.

கூகை தன் மனதில் உள்ளதைச் சொன்னார். இந்தக் கதையில் சில இடைப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்கக் கூடும் என்ற தனது சந்தேகம் அடங்குவதாக இல்லை என்றார். இந்தக் கதையைப் பற்றிப் பெண்ணிய விமர்சகர்கள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை என்று சொன்ன கூகையின் முகம் இறுகிப் போயிருந்தது. விடயத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டியதுதானே என்றார் ஆசிரியர். தொனி குற்றம் சாட்டுவது போல இருந்தது. “எனக்கு மேல் தகவல் தெரிந்தால் சொல்லுகிறேன் சார்!” என்று அவர் வெளியே வந்தார்.

கூகை மறுபடியும் தன் கையில் இருந்த பிரதியை உற்றுப் பார்த்தார். அதற்குள் அலுவலகம் முழுக்க அதைப் பற்றிச் சலசலவெனப் பேச்சுக்கள் பரவின. மற்றவர்களை அவர் கலந்தாலோசித்தார். அவர்கள் பிரதிகளிலும் அப்படித்தான் இருப்பதாகச் சொன்னார்கள்.

கையிருப்புத் தீர்ந்து போனதால் ஓலைச்சுவடி புதிய எடிசன் போட்டிருப்பதால் அதில் இந்த விடயம் சரி செய்யப் பட்டிருக்கலாம் என சிலர் மீண்டும் தங்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு புதிய பதிப்பு வாங்க கடைகளுக்கு விரைந்தனர்.

அப்போதுதான் உக்கிரமாக மழை பெய்யத் தொடங்கியிருந்தது. ஆசிரியருக்கு விடயம் எட்டியவுடன் “ஏன் மழையில் போக வேண்டும்? என் காரைக் கொடுத்திருப்பேனே!” என்றார்.

கூகை தெருவைப் பார்த்தபோது இப்படித் தொடர்ந்து பெய்தால் நெடுஞ்சாலையில் கூடத் தோணியில்தான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டார். செல்போன் வழியாகத் தன் அலுவலக நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் மின்சாரமும் நின்றுவிட்டது. தம்மைச் சிறிது சுவாசப் படுத்திக் கொள்ள அப்படியே ஏணிப்படியில் உட்கார்ந்து விட்டார்.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரின் செல்போன் கிணுகிணுத்தது. பெரிய ஏமாற்றம் சார் என்று சொன்னார்கள். என்னவென்று கேட்டார். புதிய எடிசன் வந்துவிட்டது. ஆனால் அதில் இந்தக் கதையைக் காணோம் என்று சொன்னார்கள்.

“ஏன், ஏன்?” என்று கத்தினார் கூகை. “தெரியாது சார்! பக்கங்களெல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கதை இடம் பெற்ற 6 பக்கங்களிலும் ஒரு முலையில்லாத சிலையின் கோட்டுச் சித்திரம் மட்டும் திரும்பத் திரும்ப அச்சிடப் பட்டுள்ளது. எழுத்துக்களையே காணோம்! என்றனர். கூகை மீண்டும் கேள்விகள் கேட்க முயன்றபோது தொடர்பு அறுந்துவிட்டது; அல்லது முறிக்கப் பட்டிருக்கலாம் எனவும் அவருக்குச் சந்தேகம் தட்டியது.

கூகை ஏணிப்படிக் கைப்பிடியில் தன் கைகளை வழுக்கியவாறே இறங்கி முதல் தளத்துக்கு வந்தபோது ஆசிரியரின் கத்தல் கேட்டது. கூகை மெதுவாக அவர் அறைக்குள் நுழைந்தார். அடுத்த பதிப்பில் கதை இல்லாதது பற்றியும் கோட்டுச் சித்திரம் மட்டும் இருப்பது பற்றியும் சொன்னார். “பெரிய மர்மமாக இருக்கிறது சார்!” என்றார்.

“இதில் என்ன பெரிய மர்மம்? புதிய எடிசனில் கதை இல்லாதது மர்மமா?” என்றார்.

“இல்லை!”

“கோட்டுச் சித்திரத்தில் பெண்ணுக்கு முலையில்லாதது மர்மமா?”

“இல்லை”

“அப்புறம்?”

“பெண்ணும் முலையும் மையமாக உள்ள இந்தக் கதை முழுவதிலும் ஒரு பெண் கூட இல்லை. அதுதான் மர்மம்!” என்றார் கூகை.

- பெப்ருவரி 2005 

தொடர்புடைய சிறுகதைகள்
இரண்டு கைகளையும் ஊன்றி எழுந்து தள்ளாடி நின்றான் பாஸ்கரன். முட்டிகள் கொஞ்சம் வளைந்தாற்போல் நின்றன. முழுதாக நிமிரவில்லை. பிருஷ்டத்தைத் தட்டி ஒட்டியிருந்த மண்ணை அகற்றினான். போக்கெட்டுக்குள் கையை விட்டு சிகரட்டுப் பாக்கெட்டை எடுத்தான். பாக்கெட்டில் ஒரே கடைசி சிகரெட் இருந்தது. எடுத்து ...
மேலும் கதையை படிக்க...
பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன். எப்போதும் என்னிடம் கதையளப்பவள் இன்று ...
மேலும் கதையை படிக்க...
பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட ...
மேலும் கதையை படிக்க...
பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில் இறக்கிவிடும் போது நனையாமல் கொண்டு விட வேண்டும். மல்லி, என் மகன் வழிப் பேத்தி. பெற்றோர் இருவரும் காலை முதல் ...
மேலும் கதையை படிக்க...
இன்னொரு தடவை
புதிதாய்ப் பிறத்தல்!
பாக்கியம் பிறந்திருக்கிறாள்
நல்லவராவதும் தீயவராவதும்
என் வயிற்றில் ஓர் எலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)