கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 17,301 
 

பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம் இல்லை. அதனால் கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. மழைக்கு முன்னால் வரும் காற்று போல மாளாத துயரத்துக்கு முன்னால் வந்தது பூமிநாதனுக்கு வியாதி. அதற்கு முன்பே வந்துகுடி புகுந்தது வறுமை. எல்லா சினிமாக் கலைஞர்களையும் போல அதற்கும் முன்னதாகவே வந்து தொற்றிக் கொண்டது குடிப்பழக்கம். நளினி கைப்பையில் இருந்த சில்லறையை எண்ணிப் பார்த்தாள். தேறவில்லை. துருப்பிடித்துக்கிடந்த தகரப் பெட்டியைத் திறந்து துழாவினாள். பணம் இல்லாவிட்டாலும் பூமிநாதன் புகழோடு இருந்த காலத்தில் கிடைத்த சன்மானங்கள், வெள்ளிப்பதக்கங்கள், கோப்பைகள் என்று ஏதாவது மிச்சமிருக்காதா என்று நப்பாசை, போட்டாக்கள், பைசாபெறாத ஷீல்டுகள், கன்னங்கரேலென்று ஆகிவிட்ட உடலாக வடிவங்கள் இவைதான் தட்டுப்பட்டன.

பூமிநாதன் பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்று தொடங்கி பத்தாண்டுகளுக்கு முன்னால் திரையுலகில் காலடி வைத்த ஜெயபூஷன் வரை பல முக்கிய பிரமுகர்களோடு சேர்ந்து நின்று, அமர்ந்து சிரித்து, தோள் மேல் கை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். வெள்ளைக்கட்டம் போட்ட கறுப்புத்துண்டினால் எம்.ஜி.ஆர். பூமிநாதனின் கழுத்தை சிரித்தபடியே இழுப்பது மாதிரி இருந்த போட்டோவை அவள் துடைத்துச் சுத்தமாக்கினாள். “”””மேக்கப் போடறதுக்கு பொறந்த ஆளுப்பா நீ”” என்பாராம் எம்.ஜி.ஆர். பவளக்கொடி கண்ணுசாமிப்பிள்ளையின் மருமகன் என்றஹோதாவில்தான் பூமிநாதன் மேக்கப் பெட்டி சகிதமாகக் கோடம்பாக்கம் வந்து சேர்ந்தார். பவளக்கொடி ஸ்பெஷல் நாடகத்தில் அத்தனை பெரிய பேர் கண்ணுசாமிப்பிள்ளைக்கு. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர். ராதா எல்லோரும் கூட கண்ணுசாமிப்பிள்ளையின் பாய்ஸ் கம்பெனியில் ஒரு காலத்தில் பாலபாடம் கற்றவர்கள்தான்.

பூமிநாதனும் அவர்களைப்போல மாமாவின் கம்பெனியில் முன்னணி நடிகராகவே ஆகியிருக்கலாம். அங்கிருந்து திரைப்படத்துக்குத் தாவியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? “”””எல்லா மூங்கிலும் பல்லாக்கு ஆயிடுதா சார்? எல்லாக் கல்லும் சாமி சிலையாயிடுதா? கம்பெனி வேணா மாமாவுதா இருக்கலாம். அதுக்குன்னு ராஜபார்ட் வாங்கிட முடியுமா? சிவாஜி மாதிரி பக்கம் பக்கமா வசனங்களை அடிபிசகாம மனப்பாடம் பண்ண எல்லோருக்கும் வந்துடுமா? ராதாவுடைய தைரியமும் சமயோசிதமும் எல்லேருக்கும் வந்துடுமா? இந்தக்காலம் மாதிரின்னு நெனச்சீங்களா? பொம்பளை மூஞ்சி மாறாத பையனுங்களைக் கொண்டாந்து ஹீரோவாப் போட்டு புரொட்யூசர் பையன், டைரக்டர் பையன்ங்கறதுக்காகப் படத்தைக் குட்டிச்சுவரா அடிக்கறாங்களே. அது மாதிரியா?”” என்பார் பூமிநாதன்.
பாய்ஸ் கம்பெனிகளின் பொதுவான கட்டுப்பாடுகளை விடக் கொஞ்சம் கூடுதலான கண்டிப்புடனே தன் கம்பெனியை நடத்தியவர் கண்ணுசாமிப்பிள்ளை. நடிக்க வந்த பையன்களை விட நெருங்கிய சொந்தக்காரன் என்று வந்த பூமிநாதனுக்கோ மேலும் அதிக கட்டுப்பாடுகள். கண்ணுசாமிப்பிள்ளையின் சொந்த மருமகன் என்பதால் மற்ற பிள்ளைகளும் இவனிடமிருந்து விலகல். மனக்குறையைத் தாயாரிடம் சொல்லிக் கொள்ள முடியாத சூழ்நிலை. அவளுக்குப் பேரோடும் புகழோடும் வாழ்கிற தம்பி கண்ணுசாமிப்பிள்ளைதான் கடவுள். மனசுக்குள்ளே பயந்துபயந்து பதைந்து நடுங்கியதிலோ பூமிநாதனுக்குத் திக்குவாயாகிவிட்டது. இருந்தாலும் மேக் – அப் போடுவதில் நிபுணனாக இருந்த அவர் திறமைக்குத் தன்னுடைய பாராட்டாவே கண்ணுசாமிப்பிள்ளை தன் ஒரே மகள் அல்லியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அந்தக் கல்யாணத்தினால்தான் பூமிநாதனுக்கும் அவருடைய அண்ணன் ஆறுமுகத்துக்கும் பகை மூண்டது. அதுவரை அல்லியைத் தன் சொத்து என்பதாக எண்ணிக் கொண்டிருந்தான் ஆறுமுகம். இன்றைய நடப்பியல் அவனுடைய ஒரே ஆறுதல் அல்லி தன் வம்சாவளி வழக்கம் தவறாமல் நளினி ஒருத்தியை மட்டும் பெற்றுவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டதுதான். ஆறுமுகத்துக்கு நாலுபையன்கள் இரண்டு பெண்கள். பூமிநாதனின் தெம்பு சடசடவென சரிந்தது. நடக்கக் கூடாத என்னென்னவோ நடந்து உடம்பும் போய் தொழிலும் போனது.

“”””அப்பா! கவலையே படாதப்பா. இதே ஃபீல்டுல உம் பேரைநான் வாங்கிக்காட்டறேம்ப்பா. உன்னுடைய தொழிலும் கைத்திறமையும் என் ரத்தத்துல இருக்காதா.”” நளினி பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஒப்பனை கலையையே பாடமாக எடுத்துப் படித்தாள். “”””சிவாஜி சாருக்கு பிரபு மாதிரி, முத்துராமன் சாருக்கு கார்த்திக் மாதிரி நான் வரப்போறேன் பாரு”” என்பாள் நளினி.
பூமிநாதன் விதைத்த விதைதான் அந்த நம்பிக்கை. சுப்ரீம் கோர்ட் நீதிபதயாக, நியமிக்கப்பட்டிருக்கிற பெண் அமைச்சர்களாக, அரசு அதிகாரியாக, காவல் துறையில் உயர்பொறுப்பில், விமான ஓட்டியாக, ராணுவ அதிகாரி என்று தொடங்கி அடுத்த தெருவில் கார் – கிளினிக் நடத்தும் பெண்ணிலிருந்து சித்தாள், கீரை வியாபாரி என்பது வரை எப்படிப் பெண்கள் பல துறைகளிலும் கால்பதித்து வெல்கிறார்கள் என்பதை மகள் மனதில் படியவைத்தவர் அவர்தான். படிப்பை முடித்து லேடிடாக்டரைப் போல வெள்ளைக் கோட் மேக்கப் பாக்ஸ் சகிதமாக நின்ற மகளைப் பார்க்கப் பெருமையாக இருந்தது பூமிநாதனுக்கு. கடன் தொல்லையும் சாப்பாட்டுப் பிரச்சனையும் சற்று குறையாதா என்ற எண்ணத்தில் பூமிநாதனின் மனைவிக்கு சற்றே ஆசுவாசம். அலங்காலம் சீராக அமையாததோடு அலர்ஜியாகவும் ஆகிவிடுவது போல நளினியின் முயற்சி தடைப்பட்டதுடன் அதே துறையில் பணிபுரியும் பிற கலைஞர்களுடன் சச்சரவும் ஏற்பட்டது.

தடதடவென்று கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டு கிரீன் ரூமின் கதவைத் திறந்தாள் நளினி. புலிவரி போட்ட கலர்ப்பனியனும் காலருக்குள் செருகிய கட்டம் போட்ட கர்ச்சீஃபுமாக நின்ற இளைஞன் ஒரு விஸிட்டிங்கார்டை நீட்டினான். தமிழ்த்திரை ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் நாதமுனிதான் அவன்.

“”””என்ன சார் வேணும் உங்களுக்கு?”” நளினி கேட்டாள்.””””மொதல்ல வெளிய வாங்க. அப்புறம் பேசலாம்.”” ‘ஷெட்யூல் தொடங்கப்போவுது. முதல் சீன்லேயே இவங்க வர்ராங்க முடிச்சுட்டு வந்துடறேன்.”” “”””அது கூடாதுன்னுதாம்மா சொல்ல வந்துருக்கேன். தன்மையாக சொன்ன கேட்டுக்கணும். அப்புறம் நல்லா இருக்காது…”” நாற்காலியிருந்த நடிகை மேலே போர்த்தியிருந்த துண்டைத் தூர எறிந்தாள். “”””என்னன்னு போய்க் கேட்டுத்தான் தெலையேம்மா… வேற யாரையாவது இங்க அனுப்பச் சொல்லி டைரக்டருக்குச் சொல்லிடு அப்படியே”” நளினி சினிமாவுக்கு மேக்கப் போடக்கூடாது. அப்படிப் போடுவதாக இருந்தால் அதற்கு முன்பே அவள் அவர்கள் சங்கத்தில் மெம்பராக வேண்டும். அப்படியில்லாமல் அவள் எப்படி ஸ்பாஞ்ஜைத் தொடலாம்.

“”””அடேயப்பா… இவ்வளவுதானா இப்பவே மெம்ராயிடறேன். எவ்வளவு பணம் கட்டணும் சொல்லுங்க…”” நாதமுனி அவளை ஏற இறங்கப் பார்த்தான். முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். “”””நாங்க பொம்பளைங்களை எங்க சங்கத்துலே சேர்த்துக்கறதா இல்லை…”” குழப்பமும், ஆத்திரமும், ஆங்காரமும் பொத்துக் கொண்டு கிளம்பியது நளினிக்கு. “”””என்ன சார் இது அநியாயமா இருக்குது. மெம்பராவும் ஆக்கிக்கமாட்டீங்க. ஆனா அதே சமயத்துல மெம்பர் ஆகாட்டா வேலை செய்யவும் விட மாட்டீங்க. இதுக்கு என்ன சார் அர்த்தம்…”” நாதமுனி, காலருக்குள் வைத்திருந்த கர்ச்சிஃபை எடுத்து கழுத்தைத் துடைத்துக் கொண்டான். இரண்டு தடவைகள் அதைப் பட்பட்டென்று உதறினான். நான்காய் மடித்தான். பிரித்தான். முக்கோணவாட்டத்தில் உருட்டி காலரில் வைத்துக் கொண்டான்.

“”””சங்கத்துலே புகார் வந்தது. உன்னாண்ட சொல்லச் சொன்னாங்க… சொல்லிட்டேன்.””நம்பிக்கை பொங்க நின்ற அம்மாவையும் பெருமை நிறைந்த கண்களால் தன்னைப் பார்த்த பூமிநாதனையும் நினைத்துக் கொண்டாள் நளினி.

“”””இப்படிப் பேசினா நான் என்ன சார் செய்யறது? பூமிநாதனோட பொண்ணு சார் நான். அப்போவோட நிலையும் வீட்டுக் கஷ்டமும் கேள்விப்பட்டிருப்பீங்களே சார்…”” அவளுடைய கோரிக்கைகள் பயனற்றுப் போயின. புசுபுசுவென்று கோபம் தலைக்கேற. “”””கோர்ட்டுக்குப் போவேன் சார். பொம்பளைங்கறதுனால என்னை வேலை பார்க்க விடமாட்டேங்கறாங்கன்னு கோர்ட்டேறி சொல்லுவேன். அப்புறம் பார்க்கலாம் என்ற நடக்குதுன்னு.”” நாதமுனி அமுத்தலாகச் சொன்னான். “”””ஏற்கனவே உன்னை மாதிரி ஒருத்தி ஆந்திராவில் கேஸ் கொடுத்துப் பார்த்தா. என்ன தீர்ப்பு சொன்னாங்க தெரியுமா? மேக்கப் – போடு. ஆனா, பொம்பளைக்கு மட்டும் போடுன்னாங்க… தெரிஞ்சுதா?””

திடீரென்று வீடு வந்த நளினியைக் கண்டதும் திகைப்பாக இருந்தது பூமிநாதனுக்கு. “”””என்ன பொண்ணும்மா நீ. நாதமுனி வந்து இவ்வளவு பேசினான்னு டைரக்டர் கிட்டே ஒரு வார்த்தை கூடவா நீ சொல்லலை. அவர் நல்ல டைரக்டராச்சேம்மா. அவருடைய வெற்றிப் படங்களத்தினியுமே கூட பொம்பளைங்க பிரச்சனையை வச்சு பிரமாதமா பண்ணியிருந்தாருன்னு சொன்னாங்களே. அவரு நிச்சயமா இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பாரு. ரொம்ப சீனியர் டைரக்டர் பாரு.””

அந்த சீனியர் டைரக்டர் மட்டுமில்லை. அவரைப் போல திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் வேறு சிலரையும் அவள் போய்ப் பார்த்தாள். “”””சார்! பொம்பளைங்க நாட்டை ஆள்றாங்க. ஸாரி, பஸ், ஆட்டோவெல்லாம் ஓட்டாறங்க. மேக் – அப் வுமனா இருக்கக்கூடாதுங்கறது என்ன நியாயம்? பொம்பளை இதே சினிமா இண்டஸ்ரியிலே தயாரிப்பாளரா, டைரக்டரா, ஒளிப்பதிவாளரா வேலை பாக்கலியா? என்னை மட்டும் ஏன் இப்படித் தொல்லைப் படுத்தணும்.”” “”””பாரும்மா… உன் ஒருத்திக்காக ஒரு சங்கத்தை நாங்க பகைச்சுக்கறது உசிதமில்ல…”” என்கிற பாணியில்தான் அவர்கள் வார்த்தைகளும் மௌனங்களும் அமைந்திருந்தன.

ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு கம்பளியைப் போர்த்தபடி பூமிநாதனே போய் நேரிலேயே வாதாடிப் பார்த்தார். “”””ஆம்பளைங்களுக்கெல்லாம் பொம்பள மேக்கப் போடறது சரியா இருக்காதுண்ணே. வேற மாதிரி பிரச்சனைங்க வரும். நம்ப தொழிலோட கௌரவமே போயிடும்… வேணும்னா யாராவது லேடி ஆர்டிஸ்டுங்க கிட்ட சான்ஸ் கேட்டு பெர்சனல் மேக்கப் பார்த்துங்குங்க.”” “”””என்னப்பா சொல்றீங்க… லேடி ஆர்ட்டிஸ்டுங்ககளுக்கு நம்ப இத்தினிநாள் மேக்கப் போட்டுவுடலியாக. என்ன பிரச்சனை வந்திடிச்சி அதுலே… என்னா கௌரவம் போயிடிச்சி…”” மூச்சிரைத்தது பூமிநாதனுக்கு?

“”””குதுரைக்குக் குர்ரம்னா கழுதைக்குக் கர்ரம்னு ஆயிடாதுண்ணே”” சம்மதிக்கிற எந்தப் பெண்ணையும் ஆண் தொடலாம். ஆனால் பெண், ஒருவனைத் தொட்டுவிடலாகாது என்ற எண்ணம் உள் நரம்பாக ஓடியது பேச்சில். “”””நீ வாம்மா நாம்ப கோர்ட்ல பேசிக்கலாம்.”” வீராப்பாகச் சொல்லியாயிற்றே தவிர, வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் அலைவதற்கான பணமும் பலமும் யாரிடம் இருக்கிறது. பள்ளிவிழாக்கள், திருமணம், குடும்ப விழாக்கள் அதிகம் போனால் தொலைக்காட்சியின் ஸ்பான்சர்ட் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வேலைபார்த்து குடும்பத்தை ஒருவிதமாக ஒப்பேற்றிக் கொண்டு வருகிறாள், நளினி. சென்ற வார தொலைக்காட்சி நாடகத்தில் “”””ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமமென்று வாழ்வம் இந்த நாட்டிலே”” என்று பெருங்குரல் எடுத்து முழங்கி எல்லோருடைய பாராட்டையும் பெற்ற அந்த டி.வி. நாடகக் கதாநாயகிக்கும் நளினிதான் ஒப்பனை செய்திருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *