Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஐ.டி நடப்புகள்

 

“பாலகுமார் சார், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு லஞ்சுக்கு கண்டிப்பா நீங்க வர்ரீங்க… என் பெரியம்மா மகள் கோயமுத்தூர்லர்ந்து வந்திருக்கு, உங்கள பார்த்து பேசனும்னு ஒத்த கால்ல நிக்குது..”

“சரி ஏகாம்பரம், ஆனா அவங்க எதுக்கு என்ன பாக்கணும், பேசணும்? எனக்கு அவங்களோட ஒரு அறிமுகமும் கிடையாது, பார்த்ததுமில்லை”

“சார் போன மாசம் நம்ம கம்பெனி ஆனுவல்டே செலிபரேஷனுக்கு அவங்க வந்தப்ப உங்கள பார்த்திருக்காங்க… இறந்துபோன அவங்க கணவர் மாதிரியே நீங்க இருக்கீங்களாம்..அதனால உங்க மேல அவங்களுக்கு ஒரு ஈடுபாடு.”

“ஐயைய்யோ… பாவம் அப்ப கண்டிப்பா வர்றேன்”

பாலகுமாருக்கு உள்ளுக்குள் ஆசை துளிர் விட்டது. போய்த்தான் பார்ப்போமே என்று நினைத்தான்.

பாலகுமார் நாலாயிரம் பேர் வேலை பார்க்கும் அந்த ஐ.டி கம்பெனியின் ஹெச்.ஆர் ஜெனரல் மானேஜர். எம்.டி. யிடம் நல்ல செல்வாக்கு.

ஏகாம்பரம் அந்த கம்பெனியில் உள்ள ஹெல்ப் டெஸ்கில் பணிபுரியும் பத்து பேரில் ஒருவன். சிரித்துப் பேசி சட்டென ஒட்டிக் கொள்பவன். ஒருமுறை பாலகுமாரின் மேஜை இழுப்பறைக்குள் ஒளித்து வைக்கப் பட்டிருந்த ஷிவாஸ் ரீகலைப் பார்த்தவுடன், பாலகுமாரை நோக்கி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். ஹெச்.ஆர் கேபினிலேயே ஷிவாஸ் ரீகலைப் பார்த்துவிட்ட சிரிப்பு அது. பிறகு இருவரும் நட்பாகி அவ்வப்போது வெளியே சென்று சேர்ந்து குடித்தார்கள்.

அன்று சனிக்கிழமை. விடுமுறை தினம்.

பாலகுமாரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லி அங்கிருந்து அவன் காரில் தொற்றிக்கொண்ட ஏகாம்பரம் தன் வீட்டிற்கு அவனை அழைத்துச் சென்றான்.

சென்னையின் ஒதுக்குப் புறத்தில் வீடு. காலிங் பெல் அடித்தவுடன் அழகாக ஒருத்தி வந்து கதவைத் திறந்தாள்.

ஏகாம்பரம் உற்சாகத்துடன், “கோமதி, பாலகுமார் சார் நம்ம வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்காரு…எங்க கம்பெனியில ரொம்ப பெரிய பதவி. இவர் சொல்றதத்தான் எங்க எம்.டி கேட்பாரு.. நீ அவர பார்க்கணும்னு ஆசைப்பட்டதாலதான் கஷ்டப்பட்டு அவர நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தேன்” என்றான்.

“சார் இவங்கதான் கோமதி, என் பெரியம்மா மக, கோயமுத்தூரிலிருந்து வந்திருக்காங்க”

கோமதி பாலகுமாரைப் பார்த்து அழகான புன்னகையுடன், “வாங்க சார்” என்றாள். கோதுமை நிறத்தில் ஏராளமான மார்பகங்களுடன் வாளிப்பாக இருந்தாள்.

“உங்க ஒய்ப் எங்க ஏகாம்பரம்?”

“அவங்க அக்காவுக்கு உடம்பு சரியில்லைன்னு திடீர்னு திருச்சிக்கு இன்னிக்கு காலைலதான் போனாங்க, நாளைக்கு வந்துடுவாங்க சார்.”

இரண்டு படுக்கையறைகளுடன் வீடு வசதியாக, சுத்தமாக இருந்தது.

“சார் லஞ்சுக்கு முன்னால, கொஞ்சம் தாக சாந்தி பண்ணிக்கலாமே..” ஏகாம்பரம் சிரித்தபடியே வோட்கா அப்சல்யூட்டை காண்பித்தான்.

இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து நான்கு சுற்றுகள் வோட்காவில் ஸ்பரைட் கலந்து குடித்தார்கள். அப்போது ஏகாம்பரத்தின் மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பேசி முடித்தவுடன், “சார், நான் அர்ஜண்டா வெளிய போய்ட்டு அரை மணி நேரத்தில் வந்துர்றேன்” என்று உடனே கிளம்பிச் சென்றான்.

கோமதியும், பாலகுமாரும் வீட்டில் தனித்து விடப்பட்டனர். நன்கு குடித்திருந்த பாலகுமாருக்கு கோமதியின் அருகாமை வெறியூட்டியது.

இருவரும் படுக்கையறைக்குள் நுழைந்தனர்.

மூன்று மாதங்கள் சென்றன.

அன்று காலை ஏகாம்பரத்தின் மேனஜர் சுகுமார் அவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு பாலகுமாரின் கேபினுக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான்.

பிறகு மெல்லிய குரலில், “ஏகாம்பரம், நம்ம கம்பெனியில் இப்ப ஆள் குறைப்பு செய்கிறோம்… மொத்தம் நானூறு பேர் வேலையை இழப்பார்கள். அதில், நூற்றியிருபதுபேரை சென்னையில் மட்டும் குறைப்பு செய்கிறோம். அந்த நூற்றியிருபதில் நீயும் ஒருத்தன்…

உன் அப்பாயிண்ட்மெண்ட் டெர்ம்ஸ் படி ஒரு மாத சம்பளம் அதிகமாக உனக்கு கிடைக்கும். உன் பைனல் செட்டில்மெண்ட் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் நாளைக்கு பெற்றுக் கொள்ளலாம்.” என்றான்.

அதிர்ந்துபோன ஏகாம்பரம், பாலகுமாரை உதவிக்கு அழைப்பதுபோல் ஏக்கத்துடன் பார்த்தான்.

பாலகுமார், “சாரி ஏகாம்பரம், இது உன் மானேஜர் ரெக்கமெண்டேஷன்… கம்பெனி ஆல் இண்டியா லெவலில் எடுத்த கலெக்டிவ் டிஸஷன்” என்றான்.

“சார் நான் ஏழு வருஷமா இந்த கம்பெனியில் வேல செய்கிறேன்.. இப்படி திடீர்னு நாளைக்கு செட்டில்மெண்டுன்னா நான் எங்க போவேன்?”

பாலகுமார், “அதுக்காகத்தான் ஒரு மாத சம்பளம்… உனக்கு அடுத்த கம்பெனியில் இண்டர்வியூ வரும்போது என் பெயரை ரெபரன்ஸ் கொடு” என்றான்.

பேச்சை மேலும் வளர்க்க விரும்பாத சுகுமார் ஏகாம்பரத்துடன் கேபினைவிட்டு வெளியே வந்தான்.

மதியம். இண்டர்காமில் பாலகுமாரை தொடர்பு கொண்ட ஏகாம்பரம், ஐந்து நிமிடங்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்றான்.

பாலகுமாரின் கேபினுக்குள் தன்னுடைய லேப்டாப்புடன் வந்தான். அவன் முன்னால் அமர்ந்து தன்னிடமிருந்த குண்டு பேனாவின் மூடியை திருகி கழட்டி, லேப்டாப்புக்கு உயிர் கொடுத்து அதன் பக்கவாட்டில் பேனா மூடியிலிருந்த ட்ரைவை சொருகினான். பின்பு சிரித்துக் கொண்டே, லேப்டாப்பை திருப்பி பாலகுமாருக்கு காண்பித்தான்.

அதில், பாலகுமார் கோமதியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நீலப் படக் காட்சி நீளமாக ஓடியது.

அதிர்ச்சியான பாலகுமார், “ஏகாம்பரம், என்ன இது உன் பெரியம்மா மகளைப்போய் இப்படி அசிங்கமா…” என்றான்.

“அவ ஒன்னும் என் பெரியம்மா மக இல்ல, அவ பேரு கூப்பே கோமதி. சென்னையிலிருந்து ஒருத்தனுடன் நைட் ட்ரெயின்ல கூப்பேல போவா, மிட் நைட்ல திருச்சில இறங்கி அடுத்த ட்ரெயின்ல இன்னொருத்தனோட கூப்பேல சென்னைக்கு மறு நாள் காலைல வந்துருவா. பகல்ல அவ ரேட் கம்மி, ஹாப்பி அவர்ஸ்.. அவளைத்தான் நீ என் வீட்ல….”

பாலகுமாருக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தொடையிடுக்கில் அரிப்பது போல் இருந்தது.

“எல்லா ஐ.டி கம்பெனிகளிலும் குறைந்த சம்பளத்துக்கு ஆள் எடுத்துக்கொண்டு, அதிக சம்பளம் வாங்குபவர்களை கழட்டி விடுவதுதான் இப்ப லேட்டஸ்ட் பேஷன்.. நன்றாக ரேஸில் ஓடி பரிசுகள் வாங்கிய குதிரையை, அதற்கு வயதானவுடன் சுட்டுக் கொன்று விடுவார்களாம்…

ஜல்லிக்கட்டில் ஜெயித்த காளைகளை, அதற்கு வயதானவுடன் அடி மாட்டு விலைக்கு கசாப்பு கடைக்கு விற்று விடுவார்களாம்… இந்த குதிரைகளுக்கும், காளைகளுக்கும் தற்போது ப்ளூ க்ராஸ் உதவியினால் பாதுகாப்பு அதிகம். அவைகளுக்கு கிடைக்கும் பாதுகாப்புகூட எங்களுக்கு இப்ப கிடையாது…இத்தனைக்கும் எங்க பெர்பார்மன்ஸ்ல எந்தக் குறையும் கிடையாது… இந்த மாதிரி ஏடாகூடமா நம்ம கம்பெனியிலும் நடந்து, எனக்கு ஏதாவது ஆக்சுன்னா ஹெச் ஆர மீறி எதுவும் நடந்துவிட முடியாது. அதனாலதான், உன் வீக்னெஸ் தெரிந்து, கோமதிய செட்டப் பண்ணி, ஸ்பை பென் காமிராவை யூஸ் பண்ணி உன்ன வீடியோ எடுத்தேன்.”

“இது உன்னுடைய மானேஜர் டிஸஷன்… நான் ஒன்றும் செய்ய முடியாது ஏகாம்பரம், ப்ளீஸ் புரிஞ்சுக்க”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது…இந்தக் கண்ணாமூச்சி வேலைல்லாம் எங்கிட்ட நடக்காது. என்னால இந்த வேலைய விட்டுட்டு தெரு நாய் மாதிரி ரோட்டில் அலைய முடியாது. நாளைக்கு மதியம் ஒரு மணிக்குள்ள இந்த டிஸஷன ரிவோக் பண்ணி என் வேல எனக்கு வேணும், இல்லைன்னா கூப்பே கோமதியுடன் உன்னோட நீலப் படம், உன் ஒய்ப், காலேஜ் படிக்கும் உன் ஒரே டாட்டர், நம்ம எம்.டி ஈ மெயிலுக்கு ரெண்டு மணிக்கு அனுப்பி வைக்கப் படும். எனக்கு ரெண்டு கண் போனாலும் பரவாயில்ல, உனக்கு ஒரு கண் போகும்… நீ புத்திசாலியா, முட்டாளான்னு நாளைக்கு எனக்குத் தெரியும்.”

கேபினைவிட்டு வெளியேறினான்.

மறு நாள்.

காலை பதினோரு மணிக்கு சுகுமார், பாலகுமாரின் கேபினுக்குள் அவசரமாக நுழைந்து, “என்னாச்சு பாலா, ஏகாம்பரம் பெயர் பிங்க் ஸ்லிப் லிஸ்ட்ல இல்லியே?” என்றான்.

“நேத்து எம்.டி ய நேர்ல பார்த்து அழுதிருப்பான் போல, அவன் பெயர லிஸ்ட்லருந்து எம்.டி எடுத்துரச் சொல்லிட்டாரு.” 

தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம். படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு தடவைகள் பெயிலானேன். அதன் பிறகு தற்போது என் அப்பாவுக்கு உதவியாக வெல்ல மண்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆங்....இந்தக் கதை என்னைப்பற்றியல்ல. என் அம்மாவையும், பாட்டியையும் ...
மேலும் கதையை படிக்க...
( இதற்கு முந்தைய எனது ‘சமையல்காரன்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). மனைவி மரகதத்தின் இறப்பிற்குப் பின் சபரிநாதன் மிகவும் வதங்கிப்போனார். நாட்களை தனிமையில் மிகவும் வேதனையுடன் நகர்த்தினார். அன்று சமையல்காரர் சிவக்குமார் சமைத்துப்போட்ட மத்தியான சாப்பாட்டை மன நிறைவுடன் ...
மேலும் கதையை படிக்க...
வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே மனைவியுடன் தனிக்குடித்தன வாழ்க்கை கிடைப்பது அதிர்ஷ்டமானது. தாம்பத்ய வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அற்புதமானவை. மனைவியின் சின்னச்சின்ன பார்வைகள்கூட கணவனை ...
மேலும் கதையை படிக்க...
என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு. பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை. தினமும் காலையில் என்னோட அப்பாதான் என்னை அவரோட கார்ல காலேஜுக்கு கூட்டிகிட்டுப் போவார். என்னை செல்லமா ‘டுப்பி’ன்னு கூப்பிடுவார். நானும் அப்பாவும் பிரண்ட்ஸ் மாதிரிதான் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘இசக்கியின் கல்யாணம்’ சிறுகதையைப் படித்து விட்டு, இதைப் படித்தால் புரிதல் எளிது) ஏற்கனவே இசக்கி ஒரு சாப்பாட்டுப் பிரியன். அதுவும் ஒரு புது மாப்பிள்ளையாக ‘மாப்பிள்ளைச் சோறு’ சாப்பிட இலஞ்சி வந்ததும் அவன் தினமும் ஏராளமாகத் தின்று தீர்த்தான். புதுமனைவி கோமதி ...
மேலும் கதையை படிக்க...
அம்மாவும் மாமியாரும்
தனிமை
புதுமனைவி மோகம்
அப்பாவா இப்படி?
மாப்பிள்ளைச் சோறு

ஐ.டி நடப்புகள் மீது ஒரு கருத்து

  1. Pannir Selvam says:

    ஆசிரியரின் மனதில் உள்ள வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)