ஏனோக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 10,218 
 

ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம் என் நினைவுக்கு வந்தது.

ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருகையில் காணப்ப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்’. (ஆதியாகமம் 5:24)

எழுபது வயது முதியவர் ஒருவர் தன் கையைப் பின்னால் கோத்துக்கொண்டு தலை குனிந்து மிகுந்த யோசனையோடு மெதுவாக நடந்து வருவதையும், எதிரே வரும் யாராவது ‘வணக்கம் தாத்தா’, என்றால் பதிலுக்கு இரு கைகளையும் குவித்து ‘வணக்கம்பா’, என்று சொல்வதையும் மனத்தில் நினைத்துப் பாருங்கள். ஆம்! அவர்தான் ஏனோக்கு தாத்தா.

ஏனோக்கு தாத்தா யாருடனும் அனாவசியப் பேச்சு பேச மாட்டார். எமிலிப்ப் பாட்டி இருந்த போதே அவர் சுபாவம் அப்படித் தான் இருந்தது. பாட்டி இறந்தபின் அவர் அதிகமாக மௌனம் காக்க ஆரம்பித்து விட்டார்.

அதே போல அவர் மிகவும் கண்டிப்பானவரும் கூட! அதனால்தான் அவர் பிள்ளைகள் இப்பொழுதும் கூட அவர் வருவதைக் கண்டால் எழுந் நின்று விடுவார்கள். வீட்டில் மட்டுமல்ல; அவர் பணி புரிந்த இடத்திலும் கண்டிப்புடன் நடந்து கொண்டார்.

அவர் பண்பிற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறியே ஆகவேண்டும்.

கொல்லம் – எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதித்துக் கொண்டிருந்தார். நாகூரில் ஒரு இஸ்லாமியக் குடும்பம் இரயிலில் ஏறியிருந்தனர். கணவன் மனைவியுடன் ஒரு பத்து வயது சிறுமி மற்றும் மனைவியின் கையில் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. வறுமையான குடும்பம் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது.

அவர்களிடம் வந்த ஏனோக்கு டிக்கெட்டுகளை வாங்கினார். சரி பார்த்துக் கொடுத்தவர், சிறுமியைக் காட்டி ‘ இது யாரோட பொண்ணு? இதுக்கு டிக்கெட் எங்கே? என்று கேட்டார்.

‘இது எம்பொண்ணு தாங்க! இதுக்கு வரும்போது டிக்கெட் கேக்கலீங்க. அதனால தான் இப்பவும் டிக்கெட் வாங்கலீங்க’.

அந்த இளைஞன் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைத்து அந்தப் பொய்யைச் சொன்னான்.

“பொண்ணுக்கு என்ன வயசு?”

“பத்து வயசுங்க”.

“பத்து வயசுக்கு டிக்கெட் வாங்கக் கூடாதுன்னு யார் சொன்னது? டிக்கெட் வாங்கலைன்னா வாங்கலைன்னு சொல்லுங்க. பொய் சொல்லாதீங்க”.

” இல்லீங்க, வரும்போது கூட…”

“போதும் நிறுத்துங்க! டிக்கெட் இல்லாம வந்தது தப்பு. அதுக்கு அபராதம் டிக்கெட் விலையில் இரண்டு மடங்கோ தெரியுமா? பணம் இருந்தா எடுத்து வைங்க இல்லைன்னா தெரிஞ்சவங்க யாராவது இருந்தா வாங்கி வைங்க’, என்று கூறினார்.

“ஐயா! ஏதோ தெரியாம செய்திட்டார். இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டு விடுங்களேன்” என்று அருகில் இருந்த ஒருவர் பரிந்து பேசினார்.

“என்ன ஐயா பேசறீங்க? ஏற்கனவே ஒருவர் இப்படி மன்னிச்சு விட்டதால் தான் இப்ப மீண்டும் அதே தவறை செய்திருக்கிறார். ஒரு முறை தண்டனை அனுபவிக்கட்டும். அப்பதான் மீண்டும் இது போல தவறு செய்யமாட்டார். இவ்வளவு பேசறீங்களே! சரி நீங்க தான் அவருக்குப் பணம் கொடுத்து உதவுங்களேன்”, என்று கூறியவர் மற்ற பயணிகளிடம் தன் பணியைத் தொடர்ந்தார்.

பரிந்து பேசியவர் இப்போது மூக்குடைபட்டவராய் தொடர்ந்து எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டார்.

ஏனோக்கு மீண்டும் வந்து அந்த இளைஞனிடம் விசாரித்தார்.

அந்த இளைஞன் தன்னிடம் பணமும் இல்லை. எவரும் தனக்கு பணம் தர முன் வரவில்லை என்று கூறினான்.

இரயில் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

“சரி ஒன்று செய். விழுப்புரத்திலே ரயில் பத்து நிமிடம் நிற்கும். நீ போய் ஒரு அரை டிக்கெட் மட்டும் வாங்கி வா. உன்னைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது”, என்றார்.

“ஆனால்…. ஐயா …”

“அதுக்கும் பணமில்லையா? என்ன ஐயா உம்மோடு,” என்றவர் தன கோட் பையில் கையை நுழைத்து கிடைத்த பணத்தை அவன் முன் நீட்டினார்.

“மசமசன்னு நிக்காதே! ரயில் நின்ன உடனே சட்டுன்னு போய் விரைவாக வரணும். இல்லையின்னா ரயில் புறப்பட்டுவிடும்”.

“சரிங்க ஐயா “.

“குழந்தையோட முகம் வாடி இருக்கே. ஏன் சாப்பிடலியா?” சிறுமியைப் பார்த்துவிட்டு கேட்டார்.

அது வரை அமைதியாக இருந்த பெண் இப்போது பதில் சொன்னாள்.

“இருந்த பணத்தையெல்லாம் ஊரிலே செலவு பண்ணிட்டோங்க! இது காலையிலிருந்து பட்டினியா இருக்குது.”

“என்னப்பா இப்படி இருக்கீங்க”, என்றவர் ,

“குழந்தைக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா”, என்று மேலும் சிறிது பணத்தை அவன் கையில் வைத்து அழுத்தினார்.

அந்த ரயில் அன்றைய தினம் தாமதமாகப் புறப்பட்டதற்கு அவர் தான் காரணம் என்பதை அந்த இளைஞன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

– ஜனவரி, பிப்ரவரி 1997 பூக்கூடை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *