எல்லா சாலைகளும்..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 5,039 
 

பஸ் ஸ்டாண்டே காலியாக இருந்தது. ஆஸ்பெஸ்டாசில் கட்டப்பட்ட அந்த மேற்கூரை எந்த நேரமும் விழுந்துவிடும் போலிருந்தது. இது போன்ற நேரங்களில் நமக்கு எந்த பஸ் வேண்டுமோ அதைத் தவிர எல்லா பஸ்ஸும் ஒவ்வொன்றாக நம்மைக் கடந்து செல்வது நம்மை மேலும் எரிச்சலடையச் செய்யும்.

அப்போது தன்னுடைய டூ வீலரை என்னருகில் கொண்டுவந்து நிறுத்தி “ஏய் ப்ரஷாந்த் எப்படி இருக்க?” என்றான் பள்ளித்தோழன் ‘சுதாகர்’.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் பார்க்கிறேன் என்று உணர்ந்து சுதாரித்து “நல்லா இருக்கேண்டா, நீ எப்படி இருக்க, இப்ப என்ன பண்ற?”

“எலெக்ட்ரிக் பவர் கன்ட் ரோல்ஸ்னு சொந்தமா யு பி எஸ் அசெம்ப்ளிங் யுனிட் வச்சிருக்கேன். இந்தா விசிட்டிங் கார்ட்.” என்று தன் விசிடிங் கார்டை நீட்டினான்.

அவன் விசிடிங்க் கார்டை வாங்கி, முன்னும் பின்னும் பார்த்து “ம்.. வேற லெவல், நைஸ்”

“சீச்சி அப்படியெல்லாமில்லை, ஆமா நீ என்ன பண்ற?”

“ஒரு பிரின்டிங் கம்பெனியில அக்கவுன்டன்டா இருக்கேன்டா.”

” அக்கவுன்டன்டா?, ஏய் எனக்கும் ஒரு நல்ல அக்கவுன்டன்ட் வேணும்.. பேசாம என்னோட கம்பனியில ஜாய்ன் பண்ணிக்கிறியா?”

“நோ சான்ஸ்.”

“ஏன், நீ இப்ப வேலை செய்யறது ரொம்ப நல்ல கம்பனியோ?”

“இல்ல ரொம்ப நல்ல பாஸ் ..”

“நல்ல பாஸ்!” என்று நிறுத்தியவன் “ஜென்ட்ஸா?, இல்ல…” என்று கண்ணடித்தான்.

“நீ இன்னமும் மாறவேயில்லை! ரொம்ப நல்லவர்னு சொல்ல வந்தேன்”

“யாராவது நல்ல அக்கவுன்டன்ட் தெரிஞ்சா சொல்லேன்.”

“கண்டிப்பா,”

“சரி, உன்னோட கம்பனி எஙக இருக்குன்னு சொல்லு உன்னை ட்ராப் பண்றேன்”

“தாங்ஸ்டா ஆமா, நீ டெய்லி இந்த வழியா போவியா?”

“மே மாச லீவ்ல்ல, அதனால என் டாட்டரை இங்க கீ போர்டு கிளாஸ் சேர்த்திருக்கேன், என்னோட ஆஃபீசுக்கு இதுதான் ஷார்ட்கட், போர வழியில இந்த பக்கமா பஸ் ஸ்டாண்டில உன்னை பாத்ததும் வண்டிய நிறுத்தினேன். இன்னும் ஒரு மாசத்துக்கு உனக்கு ட்ராப் கிடைக்கும் போதுமா?”

அதிர்ஷ்ட வசமாக அந்த ஒரு மாதமாக நண்பனின் தயவில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே ஆஃபீஸ் செல்ல முடிந்தது.

இலவச சவாரி முடிந்த பிறகு, முதல் நாள் அலுவலக செல்ல சற்று தாமதமானது, சீட்டிற்குச் செல்வதற்கும் என்னுடைய டெலிபோனில் கால் வருவதற்கும் சரியாக இருந்தது. ரிஸீவரை காதில் வைத்தபோது,

“ப்ரஷந்த் கொஞ்சம் என் ரூமுக்கு வாப்பா”

ஜி எம் என்று உணர்ந்து, சுதாரித்து “எஸ் சார், இதோ வரேன்” என்று வேகமாக அவர் அரையை நோக்கி வேகமாக நடந்தேன்

அப்போது என்னைக் கடந்து சென்ற அலுவலக உதவியாளர் பாரி, “பிரசாந்த் ஜி. எம் காலைலர்ந்தே உன்னை தேடிட்டு இருந்தாரு, சீக்கிரம் என்னான்னு போய் பாரு” என்று துரிதப்படுத்தினார்.

ஜி எம் ரூமுக்கு சென்றபோது , அவர் மிகுந்த குழப்பத்திலிருந்ததை

உணர முடிந்தது. அவருக்கென்று தனி உதவியாளர் இல்லாததால் அந்த கம்பெனியில் அக்கவுன்டென்ட் கூடவே தனி உதவியாளர் என்ற பொறுப்பும் என்னிடம்.

“குட் மார்னிங் சார், எனி ப்ராப்ளம்?”

“மொதல்ல உக்காருப்பா” என்றார். எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது அவர் பிறரை நடத்தும் இந்த விதம்தான்

“தாங்க்யு சார்”

“ஒவ்வொரு பாய்ன்டா சொல்றேன் நோட் பண்ணிக்கோ”

“எஸ் சார், ப்ளீஸ்” என்று குறித்துக்கொள்ளத் தயாரானேன்.

“மொதல்ல பாரி நேத்து ஹை வால்யு செக் டெபாசிட் பண்ணானான்னு கேளு, அப்புறம் எம் டி வந்துட்டாரான்னு பாத்து செக்ரட்ரிட்ட அப்பயின்மென்ட் வாங்கிக்க நம்ம பான்க் பாலன்ஸ் , இதுவரைக்கும் இஷ்யு பண்ண போஸ்ட் டேட்டட் செக் டீடெயில்ஸெல்லாம் கலெக்ட் பண்ணு, கடைசியா வரும்போது ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துட்டு என் ரூமுக்கு வா”

“சார்.. வெள்ளை பேப்பர்.. எதுக்கு?”

“சொல்றதை செய்யிப்பா, கேள்வி கேக்காதே. ஆமா இதுக்கு உனக்கு மொத்தமா உனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்.”

“ஒரு தர்ட்டி மினிட்ஸ்”

“குட் எடுத்துக்கோ “

சரியாக ஆறைமணி நேரத்தில் அவர் அறைக்கதவைத் திறந்தபோது, என் முகத்திலிருந்த வாட்டத்தைப் பார்த்து, அவர்

“வாப்பா என்ன நீ ஒரு மாதிரி இருக்க?” என்றார் லேசாக சிரித்துக் கொண்டே.

“டி ஜி எம் ஸ்ரீதர் ரொம்ப கிண்டல் பண்ரார், கொஞ்ச நாள் அதிசயமா கரெக்ட் டயத்துக்கு ஆஃபீஸ் வந்தே இன்னைக்கு வேதாளம் முருங்கை மரத்தில ஏறிடுச்சுன்றார்.”

“மெதுவாப்பேசு நாளைலேர்ந்து உனக்கு அவர் தான் பாஸ்”

“வாட் … நீங்க?”

“ரிசைன் பண்ணப்போறேன்,!!”

அவர் வெள்ளை பேப்பர் கேட்டதன் நோக்கம் இப்போது புரிந்தது. அப்போது இடைஞ்சலாக மாணிக்கம் உள்ளே வந்தார்

“சார் உஙக கிட்ட ஒண்ணு சொல்லணும்”

“வா உட்கார் மாணிக்கம், சொல்லு” என்றார் ஜி. எம் மிகுந்த கனிவுடன்

அவர், “இல்லை பரவாயில்ல சார், அந்த க்ரவுன்ட் ஃப்ளோர் ப்ரின்டிங் மிஷின் இல்ல அது ரிப்பேராயிருச்சு” என்றார்

“எந்த மிஷின்” என்றார் நெற்றியைச் சுருக்கி, ஏனென்றால் அதை வாங்கி இன்னும் சிறிது நாட்கள் கூட ஆகவில்லை

“அதான் சார் இன்சால்வென்ட்ல வாங்கனமே அந்த மிஷின் சார்”

“இப்போதைக்கு சிக் இன்டஸ்ட்ரிதான் மாணிக்கம் இன்னும் இன்சால்வென்சில்லாம் ஆகலை!!” என்று பெரிதாக சிரித்தார்.

எப்படி இவரால் இந்த நிலையில் சிரிக்க முடிகிறதென்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது மாணிக்கம்,

“அதில்ல சார் தவணைல வாஙனதுன்னு சொல்லவந்தேன்”

“சரி ரிப்பேர் பாக்கசொல்லு அதக்கூடவா என்கிட்ட கேக்கணும் ஒண்ணு செய்யி, நீ வெளிய ஒரு ஸ்டூல் போட்டு உக்கார்ந்துக்கோ. இன்னைக்கு யாரையும் என் அனுமதியில்லாம உள்ள விடாதே.”

“சரி சார் “ சொல்லிக்கொண்டே மாணிக்கம் வெளியில் சென்றார்.

அவர் வெளியில் சென்றதை உறுதி செய்துகொண்டு “சார் நான் நாளைலேர்ந்து என்ன பண்ணட்டும்?”

“இப்போதைக்கு, நாளைலேர்ந்து சமத்தா ஸ்ரீதருக்கு ரிப்போர்ட் பண்ணு. சீக்கிரம் வேற ஒரு நல்ல வேலையை தேடிக்கோ” என்றார் கனிவுடன்.

“ஏன் சார் இந்த திடீர் முடிவு?”

“உங்க எம் டி மறுபடியும் பாங்க்லேர்ந்து லோன் வாங்கித் தரச்சொல்றார்”

“ஏற்கனவே நம்ம அக்கவுன்ட் இருக்குற முணு பான்க்லேயும் ஹெவி அமொவுன்ட் லோன் வாங்கிட்டு இ.எம்.ஐ க்கூட கட்டலை, நோட்டீஸ் மேல நோட்டிஸ் வந்திட்டிருக்கு!”

“அதனாலதான் வேற பான்க்லேர்ந்து வாங்கித்தரச்சொல்றார்”

“முடியாதுன்னு சொல்லவேண்டியதுதானே சார்.”

“அதோட விளைவுதான் இது. தப்பா நினச்சுக்காதே, அவரா சொல்லலை நானாத்தான் டிசைட் பண்ணிட்டேன். இன்னொரு விஷயம் தெரியுமா ? நானும் உஙக எம் டியும் டியரஸ்ட் ஃப்ரென்ட்ஸ்”

“சார்…”

“ம். ஆரம்பத்துல சின்னதா ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரி வச்சிருந்தான். பாங்க் வேலைய விட்டுட்டு வா உனக்கு என் கம்பனில நல்ல போஸ்ட் தாரேன்னு சொன்னார். ஃப்ரெண்டாச்சேன்னு நம்பி வந்தேன், திடீர்னு ஒருநாள் நீ வேலை செஞ்ச பான்க்லயே லோன் வாங்கித்தான்னு கேட்டார், அப்புறம் பாங்க் காரன்டி, எல் சின்னு ஒவ்வொண்ணா ஆரம்பிச்சது. எல்லாத்தையும் ஆரம்பத்தில ஒழுங்காத்தான் கட்டிட்டிருந்தார். காலப்போக்கில இப்படியாயிட்டார். ம்.. யாருக்கவது உதவி செய்யரதுன்னா இனிமே நல்லா யோசிச்சு தான் செய்யணும், லேட் ரியலைசேஷன்.”

“அமா நீங்க ரிசைன் பண்ணிட்டா இவங்க லோன் வாங்குறதெல்லாம் இவங்களுக்கு சாத்தியமே இல்லாம போயிடும், ஸ்ரீதர் சாருக்கும் இதெல்லாம் தெரியாதே, அவரும் க்வார்டெர்லி மீட்டிங், அன்வல் ஜெனெரல் மீட்டிங்னு இருந்துட்டாரு? அப்புறம் இவங்க என்ன பண்ணுவாங்க?”

“இத்தனை வருஷமா எனக்கு எல்லாமே நீதான்னும், உனக்கு என்ன தெரியும்னும் என்னைவிட, இன்னும் சொல்லப்போனா உன்னைவிட அவங்களுக்கு நல்லா தெரியும். அதுக்குதான் சொல்றேன் உடனே ஒரு வேலை தேடிக்கோ”

அவர் சொன்னதன் அர்த்தம் எனக்கு அப்போது தான் உறைத்தது. என் நண்பனைப் பற்றி அவரிடம் ஆலோசனை கேட்பது சரியாக இருக்கும் என நினைத்து, “சார் என் ஃப்ரெண்ட் ஒருத்தன் தன் கம்பனிலயே வேலை தறேன்னு சொல்றான் போகலாமா? அதுவுமில்லாம ஒரு வேளை எனக்கு வேலை கிடைத்தால், இவங்க ரிலீவ் பண்ரதில பிரச்சினை வந்துடாதில்ல?”

“ நான் இன்னம் குறைந்த பட்சம் ஒரு மாசமாவது இங்கே நோட்டீஸ் பீரியட் சர்வ் பண்ண வேண்டியிருக்க, அதுக்குள்ளாரன்னா உன்னை நான் தான் ரிலீவ் பண்ணனும், பாத்துக்கலாம் ஒரே நாள்ல கூட ரிலீவ் பண்றேன், பட் சொன்னது எதையும் மறந்துடாதே நினைவுல வச்சிக்கோ, மத்தபடி உன் இஷ்டம்.”

“யெஸ் சார், தாங்க்ஸ் ஃபர் யுவர் அட்வைஸ்” என்று என் சீட்டுக்கு வந்து முதல் வேலையாக நண்பனின் மொபைல் நம்பரை டயல் செய்தேன், அவன் “சொல்லுடா, என்ன இந்த நேரத்துக்கு” என்றான்.

“சுதா, எனக்கு ஒரு உதவி வேணும்” என்றேன் லேசாக தயங்கி.

“உனக்கில்லாமலாடா, மொதல்ல என்ன உதவின்னு சொல்லு!”

“அன்னைக்கு சொன்னியே அக்கவுன்டன்ட் போஸ்ட் இன்னும் காலியா இருக்கா?”

“யாருக்குடா, சொந்தக்கார பசங்க யாராவது இருக்காங்களா? ஓரளவாவது விஷயம் தெரியுமா?” கேள்விகளை அடுக்கினான்

“வேர யாருக்கும் இல்லை எனக்குத்தான்”

“அடப்பாவி உனக்குன்னா க்ரியேட் பண்ணி கூடத் தறேன்டா!”

“ஏய் அதெல்லாம் வேண்டாம், போஸ்ட் காலியா இருந்தா மட்டும் சொல்லு, அது போதும்”

“சும்மா சொன்னேன். என்னிக்கு ஜாய்ன் பண்றே?”

“நாளைக்கேன்னா கூட ஓகே”

“ரியலி? ப்ராமிஸ் என்னால நம்பவே முடியலை, ஆமா, ரொம்ப நல்ல பாஸ் அது இதுன்னே!”

“அவர்தான்டா வேர வேலையை பாத்துக்க சொல்லிட்டார்” என்றேன் வருத்தம் தோய்ந்த குரலில், அவர் மீது பழி போடுவது மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. உண்மை தானே என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். அவன்,

“அதுக்காக இப்படி ஒரே நாள்லகூட ரிலீவ் பண்ணிடுவாங்களா என்ன?” என்றான் ஆச்சரியத்துடன்.

“தனியார் கம்பனின்னாலே அவ்வளவுதானேடா, என்ன பண்றது,!” என்றேன் சுரத்தில்லாமல்.

“நீ சொல்றதும் கரெக்ட்தான்டா, அப்புறம், உன்கிட்ட முக்கியமா ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன், உனக்கு ‘பாங்க் காரன்டி, லெட்டர் ஆஃப் க்ரெடிட்’ பத்தியெல்லாம் எதாவது தெரியுமா?”

“தெரியாதுடா!! இங்க என்ன ஒரு டேட்டா என்ட்ரி மாதிரி யூஸ் பண்ணீட்டாங்க, வெறும் வவுச்சர் என்ட்ரி தான், இப்ப நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு, யாரை நம்பறது யாரை நம்பகூடாதுன்னே கூட புரியலை, ஒரே குழப்பமா இருக்குடா, இப்ப நான் எடுக்குற டெசிஷன் கூட சரியா தப்பான்னு தெரியலை! ” என்றேன் அதே வருத்தம் தோய்ந்த குரலில்.

“நல்ல டெசிஷன் தான் கவலைப்படாதே. கூடிய சீக்கிரம் நீயும் வேர லெவலுக்கு போகப்போறே, அதே பஸ் ஸ்டாண்டில வெய்ட் பண்ணு, ஒண்ணு தெரிஞ்சுக்கோடா ஒருத்தர் ஒருத்தரை ஒரு தடவை ஏமாத்திட்டா எல்லாரும், எல்லாரையும் அதே மாதிரி ஏமாத்திடுவாங்கன்னு மட்டமா எடை போட்டுடாதே, பீ சீர் ஃபுல் காலைல பாக்கலாம்” என்றான் அதே உற்சாகத்துடன்.

“தாங்க்ஸ்டா!!” என்றேன், அவன் கடைசியாக கூறிய அட்வைஸ் மனதை கொஞ்சம் உறுத்தியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *