எல்லாம் முடிந்த பின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 5,610 
 

ஹலோ…ஹலோ இது மதுமிதா ஹாஸ்பிடல்தானே? ஆமா நீங்க யாரு?

நான் டாக்டர் சரவணன் கிட்ட பேசணும். எந்த சரவணன்? ஆர்தோ டாகடரா? இல்லை நெப்ராலஜி டாக்டரா?

இந்த கிட்னி இதெல்லாம் பாப்ப்பாங்க இல்லை !

ஓ.. நெப்ராலஜி டாக்டரா !

ஆமா அவர்தான் கொஞ்சம் அவசரமா அவர்கூட பேசணும், லைன் கொடுக்கறீங்களா?

கொஞ்சம் இருங்க, அவர் எங்கிருக்காருன்னு பார்த்துட்டு லைன் தர்றோம்

சிறிது நேரம் அமைதி…… மெல்லிய பாட்டு சத்தம் மட்டும் கேட்கிறது

போன் செய்தவன் முணங்குகிறான்….

ஐந்து நிமிடங்களில் ஹலோ நான் டாக்டர் சரவணன் யார் நீங்க?

டாக்டர் என்னோட பேரு ராமகிருஷ்ணன்,

சொல்லுங்க ராமகிருஷ்ணன் உங்களுக்கு என்ன வேணும்?

டாக்டர் கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு ஏழைக்குழந்தைக்கு கிட்னி டொனேட் பண்ண முடியுமான்னு பத்திரிக்கையில கேட்டிருந்தீங்கள்ள ?

ஆமா அந்த குழந்தைக்காக நானே பேப்பர்ல விளம்பரம் கொடுத்தேனே, ரெஸ்பான்ஸுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்.

முடிஞ்சா நான் கொடுக்கலாமா டாக்டர்.

ரொம்ப சந்தோசம், எங்க ஹாஸ்பிடலுக்கு வாங்க உங்க இரத்தம் எல்லாம் பரிசோதனை பண்ணி ஒத்து வந்தா எடுத்து அந்த குழந்தைக்கு மாத்திடுவோம்.

சரிங்க டாக்டர், சீக்கிரமே வர்றேன் டாகடர்.

போன் அணைக்கப்பட, போன் செய்தவன் தனது செல்லை மீண்டும் வேறொரு எண்ணுக்கு அழுத்துகிறான்.

ஹலோ இது அமிர்தா கண் ஆஸ்பத்திரி…

அங்க டாக்டர் டேவிட் இருக்காரா? ஒரு நிமிசம் லைன்லயே நில்லுங்க, டாகடருக்கு போன்..யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பது இவன் காதுக்கு கேட்கிறது.

யெஸ் டாக்டர் டேவிட் பேசறேன்

டாக்டர் என்னுடைய பேர் ராமகிருஷ்ணன். போன வாரம் ஒரு பத்திரிக்கையிலே பார்வயில்லாதவங்களுக்கு நாம இறந்த பின்னால கண் தானம் பண்ணனும்னு பேட்டி கொடுத்திருந்தீங்க இல்லையா டாக்டர்.

ஆமா, நிறைய பேரு பேர் கொடுத்திருக்காங்க, அவங்க இறந்த பின்னால கண் தானம் பண்ணறேன்னு பேர் கொடுத்திருக்காங்க

டாக்டர் நானும் அது மாதிரி கொடுக்கணும்னு ஆசைப்படறேன் டாக்டர்.

தட்ஸ்..குட்.. தாராளமா உங்க பேரை பதிவு பண்ணிக்குங்க, ஹாஸ்பிடலுக்கே வந்து பதிவு பண்ணிட்டீங்கண்ணா ரொம்ப நல்லது.

கண்டிப்பா செய்யறேன் டாக்டர், ரொம்ப நன்றி

செல்போனை பார்த்து முணுமுணுத்துவிட்டு ஏதோ தேடினான், ஹா கிடைச்சுடுச்சு கட கட வென நம்பரை அழுத்தி காதில் வைத்தனுக்கு அங்கு பெல் அடிக்கும் சத்தம் கேகவும் முகத்தில் எதிர்பார்ப்புடன் போனை காதில் வைத்தான். ஹலோ, குரல் உள்ளிருந்து கேட்டது.

ஹலோ…சத்தம் கேட்கலை இவன் இங்கிருந்து கத்தினான்

ஹலோ..ஹலோ குரல் கேட்டு சற்று வெளியே வந்து பேசியிருப்பார்கள் போலிருக்கிறது

இப்பொழுது இவனுக்கு நன்றாக கேட்கவும் ஹலோ இப்ப நல்லா கேட்குது

நீங்க யாருங்க? என் பேரு ராமகிருஷ்ணன்

உங்களுக்கு என்ன வேணும்?

உங்க பத்திரிக்கையில் போன வாரம் ஒரு குழந்தைக்கு ஹார்ட் சர்ஜரிக்கு உதவி கேட்டு விளம்பரம் செஞ்சிருந்தீங்கல்ல ?

ஆமா சார், விளம்பரம் பண்ணியிருந்தோம்.

சார் அதுக்கு நான் ஒரு பத்தாயிரம் ரூபாய் டொனேட் பண்ணலாமுன்னு நினைக்கிறேன்

வெரி குட், நீங்க அந்த ஹாஸ்பிடலுக்கே பணம் அனுப்பினாலும் சரி, இல்லை எங்க அட்ரஸுக்கு பணம் அனுப்பி வச்சாலும் சரி நாங்க கொடுத்திடறோம்.

ரொம்ப நன்றி சார், நான் அனுப்ப சொல்லிடறேன் சார்

எதிரில் போன் அணைக்கப்பட, மீண்டும் புன்னகையுடன் அடுத்து யாருக்கு? கொஞ்சம் யோசனை செய்தவன் மகேஷுதான் இந்த வேலைக்கு லாயக்கு, தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவன் மீண்டும் நம்பரை அழுத்தினான்.

மகேஷ் ஹியர்..போன் சற்று நேரம் அமைதி.. ஹலோ மகேஷ் பேசறேன், எதிரில் யாரு?

மகேஷ் என் நம்பரை அழிச்சிடற அளவுக்கு என் மேலே வெறுப்பாடா?

நீ..நீயா.. சாரி போனை அணைக்க முயற்சிக்கிறான்

டே டேய் வேண்டாம் போனை அணைச்சிடாதடா, நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு.

வேண்டாம் பேசாத இனி யார் பேச்சையும் கேட்க நான் தயாரா இல்லை, உன்னை மாதிரி நண்பனுக்கு துரோகம் பண்ணறவனை எல்லாம்….

ப்ளீஸ் ப்ளீஸ் நான் திருந்திட்டண்டா, உன்னை பிசினசுல ஏமாத்தி நான் ஒண்ணும் கோட்டை கட்டலைடா, ப்ளீஸ் புரிஞ்சுக்க

கோட்டை கட்டாதவன் இப்ப எதுக்கு மறுபடி எங்கிட்ட வந்து பேசறே

மகேஷ் உன்னை ஏமாத்தனதுனால பெரிசா பணம் எனக்கு கிடைக்கும்ன்னு நினைச்சுத்தாண்டா எல்லாம் பண்ணினேன், ஆனா நாம் ஒண்ணு நினைச்சா கடவுள் ஒண்ணு நினைக்கிறாருன்னு புரிஞ்சிடுச்சுடா..

இங்க பாரு வள வள ந்னு பேசறத நிறுத்து எனக்கு வேலை இருக்கு, நான் போனை வைக்கிறேன்.

சரி நான் பேசலே,இப்ப நீ, நாம எப்பவும் சந்திப்போமே அந்த பை பாஸ் ரோட்டு “கார்னர்ல” அங்க வர முடியுமா?

இங்க பாரு நீ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் வர நான் உன் பிரண்டு பழைய மகேஷ் இல்லை, இப்ப எனக்கு நிறைய வேலை இருக்கு, போனை அணைக்க முயற்சித்தவன் ப்ளீஸ் என்ற வார்த்தை மட்டும் மீண்டும் கேட்க மனம் சஞ்சலப்பட ஆரம்பித்தது.

இன்று நேற்று நட்பல்ல..இவர்களின் நட்பு பிறந்து ஐந்து வயதில் ஆரம்பித்து இந்த முப்பது வரை ஒருவரோடு ஒருவர் நட்பாய் இருந்த காலம், இவனுக்கு வர வேண்டிய பங்குத்தொகையை சபலத்தால் ராம கிருஷ்ணன் தன் பெயருக்கு மாற்ற முயற்சித்தது தெரிந்து, சண்டையிட்டு விலகியவன்தான் இப்பொழுது மீண்டும் இவனின் அழைப்பு..

மனதுக்குள் எதோ தோன்ற தனது வண்டியை எடுத்து இவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு விரைந்தான்.

ரொம்ப தேங்க்ஸ்டா..இவன் காதில் ஒரு குரல் விழ சுற்று முற்றும் பார்த்தான், ஒருவரும் இல்லை. வண்டியை முறுக்கி வேகத்தை அதிகப்படுத்தினான்.

இவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்திற்கு சற்று முன்னால் நடு ரோட்டில் ஒரு லாரியும் அதன் மீது ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி நின்று கொண்டிருந்தது. இவன் அதிர்ச்சியாகி வண்டியை அவசர அவசரமாக நிறுத்தி இறங்கி போய் பார்க்க அது ராமகிருஷ்ணனின் வண்டியாக இருந்தது.

அங்கு நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனைக்கண்டு ஒதுங்கி சார் ஆள் டையருக்கு அடியில போயிட்டாருங்க சார், உயிரில்லை சார். அதனால எல்லாரும் போலீசுக்காக வெயிட் பண்ணறாங்க..

இவன் காதில் “வலது டயர் பக்கத்துல என் செல் போனை பார்”..மறுபடியும் அந்த குரல் அவன் காதுக்கருகில்……

இவன் லாரிக்கு அடியில் குனிந்து அந்த டயருக்கு அருகில் இருந்த செல் போனை எடுத்து பார்த்தான்.யார் கையிலோ ”செல்” இருந்தால் எப்படி கதகதப்பாய் இருக்குமோ அப்படி இருந்தது.. அவசர அவசரமாய் இவன் “டயல் செய்தவர்கள்” எண்களை பார்த்து ஒவ்வொருவராய் கூப்பிட்டான்.…மேலே “இறந்தவனுடன் பேசியவர்கள்” மீண்டும் இந்த போனின் அலைக்கு வந்தனர்.

சுற்றியிருந்த கூட்டம் இவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த்தது.

அடிபட்டவுடன் இறந்து விட்டதாக அல்லவா சுற்றியுள்ளவர்கள் சொல்கிறார்கள்.

அப்படியானால் என்னுடனும்,மற்றவர்களுடனும் எப்படி பேசியிருப்பான். ஒன்றுமே புரியவில்லை, ஆனால் அந்த குரல்..! எனக்கு கேட்ட குரல்.. புரிகிறது

இதுதான் இவனின் கடைசி விருப்பமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *