எல்லாமே நாடகம்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 6,839 
 

வங்காள விடரிகுடா கடலின் ஏதோ ஒரு மூலையில் சிறியதாய் ஒர் நாடு.நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு தீவு போல இருக்கும். அந்த நாட்டின் மீது மற்ற நாடுகளின் கண் படாமல் இருக்க மிகப்பெரிய நாட்டுக்கு கப்பம் கட்டிவிட்டு சுயேச்சையாய் ஆண்டு கொண்டிருக்கும் நாடு. சுபைதான் என்று பெயர் கொண்டுள்ள நாட்டில் மக்கள் தொகையே சுமார் மூன்றரை லட்சம்தான். இதில் ஆண் பாதி,பெண் பாதி, குழந்தைகள், முதியவர்கள், எல்லாரையும் சதவீகிதமாக ¼, 1/2, 3/4, முழுவதும் என்று வரிசையில் வைத்துக்கொள்ளுங்கள்.

நாட்டின் மதம், மொழி என்னவென்று கேட்காதீர்கள், அது இந்த கதைக்கு உதவாது. இந்த நாட்டில் நான்கைந்து கட்சிகள் உள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வைக்கப்பட்டு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கும். பெரும்பாலும், ஒரே கட்சிதான் கடந்த நான்காவது முறையாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சி சரியாக செயல் படவில்லை என்று ஒரு சிலர் கருதுவதால் இது மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பது இங்குள்ள பத்திரிக்கைகளின் கணிப்பு. ஆனால் இங்கு ஆட்சி என்பது ஜனநாயகம் என்று சொன்னாலும் மேலாதிக்கத்தில் ஒரு வித சர்வதிகாரம் கொண்டது என்பது பாமரனுக்கு புரியாது. உயர் மட்ட அலுவலக அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.

சுபைதான் நாட்டில் ஒரே ஒரு “பெயர் பெற்ற ஜெயில்” அது. சாதாரண திருட்டு முதல் தேச துரோக குற்றவாளிகள் வரை அடைக்கப்பட்ட சிறைச்சாலை அது. தேச துரோக குற்றச்சாட்டில் கைதாகி மூன்று மாதங்களாக சிறையில் இருக்கும் பூபேந்தரை பார்க்க அவன் மனைவி சிறை அலுவலக அதிகாரிகளிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறாள்.

சொன்னா கேளும்மா, பார்வையாளர்கள் நேரம் முடிஞ்சிடுச்சு, இனி நாளைக்கு வா கண்டிப்பா உன்னைய பாக்க விடறேன். சார்..சார்.. கொஞ்சம் தயவு பண்ணூங்க, எனக்கு வேலை முடியறதுக்கே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு, நாளைக்கு எங்க முதலாளி எனக்கு லீவு தர மாட்டாரு. அவளின் கெஞ்சல் அந்த அதிகாரிக்கு இடைஞ்சலாக இருந்தது. அப்பொழுது அவரை பார்க்க வந்த மற்ற அதிகாரியிடம் இவர் முறையிடுகிறார். பாருப்பா இந்த பொண்ணை இப்ப பாக்க முடியாது அப்படீன்னா, கேக்க மாட்டேங்குது, வந்தவர் இந்த பெண்ணை உற்று பார்த்த்தார், அவள் அந்த அதிகாரியின் பார்வையில் தன் உடையின் மேல் போர்த்தியிருந்த துப்பட்டாவை எடுத்து தன் தலை மேல் போட்டுக்கொள்கிறாள்.

சரி விடுப்பா, பாவம் பார்த்துட்டு போகுது, சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். கொஞ்சம் இரும்மா, உள்ளே போய் கேட்டுட்டு வர்றேன், சொன்னவர் உள்ளே சென்று பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவர், அஞ்சு நிமிசம் இந்த ரூமுல நில்லு, கைதி வந்து அந்த பக்கம் நிப்பான், பாத்துட்டு போயிடு, வள வளன்னு பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது, புரிஞ்சுதா? அவள் தலையாட்டினாள்

அந்த அறைக்குள் நுழைந்த கைதிக்கு சுமார் நாற்பதிலிருந்து ஐம்பதுக்குள் இருக்கும், அந்த நாட்டின் இராணுவ தளபதியை கொல்ல முயற்சித்தாகவும், நாட்டுக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டியதாகவும் வழக்கு. அதற்குள் சிறைக்கு வெளியே அவன் மனைவி அவனை சந்திக்க வந்துள்ள செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிக்கைகள் சிறைக்கு வெளியே அவளை பேட்டி காண குழும ஆரம்பித்து விட்டார்கள்.வெளியே இருந்த அந்த ஜெயில் அதிகாரிக்கு தர்ம சங்கடமாக போய் விட்டது. ஏற்கனவே தேச துரோக வழக்கு. இப்பொழுது பார்வை நேரம் முடிந்தும் எப்படி அவரை பார்க்க அனுமதிக்கலாம் என்று மேலிடத்திலிருந்து கேள்வி கணைகள் வருமே என்ற பயம் வேறு.அங்கிருந்தே உள் அறையில் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் சத்தமாய் சொன்னார். அம்மா தயவு செய்து சீக்கிரம் பாத்துட்டு வந்துடு. இது பெரிய வம்பாய் போயி, என் வேலைக்கு உலை வச்சுடாத.

சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு திரும்பிய அந்த பெண் உள்ளே நுழைந்த கைதியை பார்த்ததும் அழுகை பொத்துக்கொண்டு வர கேவி கேவி அழுக ஆரம்பித்து விட்டாள் .அழுகாதே, என் தலையெழுதது இப்படி நடந்துடுச்சு, அவனும் அவளைக்கண்டு குரல் நடுங்க சொன்னான். உனக்கு என்னாத்துக்கயா இந்த வேலை எல்லாம், நீ பாட்டுக்கு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தே, அப்புறம் எப்படி உன்னை புடுச்சு இப்படி ஜெயில்ல உட்டுட்டாங்க, அந்த பெண் இப்பொழுது கூவி கூவி அழுக ஆரம்பித்து விட்டாள். இவள் அழுகை சத்தம் வெளியில் உள்ளவர்களுக்கும் இலேசாக கேட்க அந்த ஜெயில் அதிகாரி நெளிந்து, அம்மா ஏம்மா இப்படி அழுது கூப்பாடு போடறே, சீக்கிரம் பேசிட்டு வாம்மா, உள்ளே பார்த்து கூப்பாடு போட்டார்.

வெளியே வந்த அந்த பெண்ணை சுற்றி அங்குள்ள பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, உங்கள் கணவர் என்ன சொன்னார்? நாட்டு எதிராக செயல்பட்டுள்ள உங்கள் கணவரை பற்றி என்ன நினைகிறீர்கள்? சரமாரியான கேள்விகளுக்கு அவள் மூக்கை சிந்தி ஒரு ஒப்பாரி மட்டுமே வைத்தாள். வேறு எதுவும் வராத்தால் பத்திரிக்கை நிருபர்கள் ஒரு கட்டத்தில் சலிப்படைந்து அந்த பெண் அழுகும் தோற்றத்தையே பல கோணங்களில் படம் பிடித்து ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் என்று பெரிய எழுத்துக்களில் மறு நாள் அச்சிட்டு, பத்திரிக்கையும் பரபரப்பாய் விற்பனையும் செய்யப்பட்டது.

இராணுவ தளபதி தலையிட்டு அந்த குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டதால் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டைனையுடன் விடுதலை ஆகலாம் என்ற தீர்ப்பு வந்தது. அதுவும் ஆறுமாத இந்த சிறை வாசமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இன்னும் ஆறு மாதம் மட்டும் இருந்தால் போதும் என்றும் தீர்ப்பானது.

வெளியே வந்த பூபேந்தரை ஏராளமான உள் நாட்டு பத்திரிக்கையாளர்களும், வெளி நாட்டு பத்திரிக்கையாளர்களும், சுற்றி நின்று சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு தெளிவாகவே பதில் சொன்னான், நம் நாடு அந்த பெரிய நாட்டின் சார்பாகவே செயல்படுகிறது,

அதனை பொறுக்க முடியாமல்தான் நான் அந்த செயலை செய்ய வேண்டியதாகி விட்டது. எனக்கு நம் நாடு முக்கியம்,எல்லாவற்றிற்கும் அந்த நாட்டை சார்ந்து இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே வரும் தேர்தலில் நம் நாடு நமக்கே என்ற கொள்கையுடன் தேர்தலில் நிற்கிறேன்.சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து வெளியே வந்த பூபேந்தரை சுற்றி ஏராளமான பொது மக்கள் கை குலுக்க ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக வந்த கூட்டம் இப்பொழுது அவனை சுற்றி பெரும் கூட்டமாய் மாறிப்போனது. அவன் மனைவி அவனை விட்டு இப்பொழுது வெகு தூரம் தள்ளப்பட்டாள்.மறு நாள் பத்திரிக்கைகளில் “புதிய உதயம்” நம் நாட்டுக்கு என்ற தலைப்புடன் இவனை ஆகா ஓகோ என புகழ்ந்து வெளி வந்து விற்பனையில் சக்கை போடு போட்டன.

ஒரு வாரம் கழிந்திருக்கும் இரகசியமான அறையில் இராணுவ தளபதியும், அவரை சுற்றி இராணுவ அதிகாரிகளும், சாதாரண உடையில் உட்கார்ந்திருக்க, அவர்களிடம் பவ்யமாய் நின்று பேசிக்கொண்டிருந்தான் பூபேந்தர். எப்படியும் இந்த முறை ஆட்சியை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இராணுவ தளபதியும் அதற்காகத்தான் இந்த நாடகம்,நீயும் நன்றாக செய்து கொண்டிருக்கிறாய்.

நன்றி ஐயா, நம்மை ஆதரித்துக்கொண்டிருக்கும் நாட்டை பற்றி பொதுவாக, திட்ட வேண்டி இருக்குமே?

கவலைப்படாதே, அந்த நாடேதான் இந்த ஏற்பாட்டை செய்கிறது. இப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் வேறொரு நாட்டுக்கு இரகசியமாக தூது அனுப்பி பாதுகாப்பு தேடுவதால், அந்த நாடே இந்த ஏற்பாட்டை செய்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *