என் முதல் கதை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 5,061 
 

சிறிய வயதிலிருந்தே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை நிறைய. அதற்கு காரணம் அப்போது பத்திரிக்கைகளில் கதை எழுதிக் கொண்டிருந்த சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்கள். அவர்களின் கதைகளில் வேகமும் விறுவிறுப்பும் இருக்கும்.

தற்போது சுஜாதா உயிருடன் இல்லை. ராஜேஷ்குமார் மட்டும்தான் இப்போதும் தொடர்ந்து தொய்வில்லாமல் எழுதிக் கொண்டு இருக்கிறார். பிரபாகர் ஏனோ இப்போது அதிகமாக எழுதுவதில்லை.

நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருட மார்ச் மாதத்திலும் மாணவர்கள் அனைவருக்கும் ‘மாணவர் மலர்’ என்ற வருடாந்திர பத்திரிகை ஒன்றை வினியோகம் செய்வார்கள். அதில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர்; ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்; விளையாட்டு தினம்; பல நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் ஆசிரியர்களின் கட்டுரைகள் என்று ஏராளமான சங்கதிகள் பிரசுரமாகி இருக்கும்.

இவைகளைத் தவிர மாணவர்கள் எழுதிய கவிதைகளும், கதைகளும் பிரசுரிக்கப்படும். இதற்கான கதைகளையும், கவிதைகளையும் டிசம்பர் இறுதிக்குள் மாணவர்கள் எழுதி அதை அவரவர் வகுப்பு ஆசிரியர்களிடம் கொடுத்துவிட வேண்டும். அக்டோபர் மாதமே இதற்கான சர்குலர் வெளிவந்துவிடும்.

மாணவர்களிடமிருந்து வருகின்ற படைப்புகளை பரிசீலனை செய்து பிரசுரத்திற்கு தேர்வு செய்ய ஆசிரியர் குழு ஒன்றை அமைத்துவிடுவார்கள்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, அந்தக் குழுவில் என்னுடைய வகுப்பு ஆசிரியர் சத்தியநாதனும் இடம் பெற்றிருந்தார். அதனால் எனக்கும் ஒரு கதை எழுதி அதை மாணவர் மலரில் வரச்செய்து விடவேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டது.

என்னுடைய கணக்கு நோட்டுப் புத்தகத்தில் இருந்து கற்றையாக நிறைய தாள்களை கிழித்து எடுத்து, பொறுமையாக யோசித்து யோசித்து ‘கசப்பான உண்மைகள்’ என்கிற கதையை நான்கு நாட்களில் எழுதிவிட்டேன். அந்தக் கதையில் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரை நாம் எப்படி பொய்யுடன் சமரசம் செய்துகொண்டு வாழ்கிறோம் என்பதையும், அவைகளுக்கு எப்படி மரியாதையும் தரப்படுகிறது என்பதை விலாவாரியாக எழுதியிருந்தேன்.

எழுதியதை நானே ஏழெட்டுத் தடவைகள் படித்துப் பார்த்தேன். கதை ரொம்பத் திருப்தியாக வந்திருந்தது. அடுத்தநாள் அந்தக் கதையை ஒரு வெள்ளை உறையில் போட்டு, பெரிய எழுத்தாளனாகிவிட்ட பெருமித உணர்வோடு அந்தக் கவரை சத்தியநாதன் சாரிடம் நீட்டினேன்.

“என்னடா இது?”

“நம்முடைய மாணவர் மலருக்கு கதை சார்.”

“யார் எழுதினது?”

“நான்தான் சார்…”

சத்தியநாதன் சாரின் பார்வையில் இருந்த கிண்டலான அலட்சியம் எனக்கு வேதனை அளித்தது.

“ஏண்டா, உனக்குப் படிப்பே வராது… ஒரு கேள்விகேட்டா அதுக்கு பதில் சொல்லத் தெரியாது. நீ என்னத்த எழுதிக் கிழிச்சுடுவே?”

நான் பதில் சொல்லாமல் பேசாமல் நின்றேன்.

“சரி… சரி, டேபிள் மேல உன் கதையை வச்சிட்டுப்போ..”

மிகவும் பணிவுடன் அந்தக் கதையை அவர் டேபிளின் மீது வைத்துவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த வாரத்தில் ஒருநாள் டீச்சர்ஸ் ஹாலில் இருந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

ஆசையுடன் விரைந்து சென்றேன்.

அவர் என்னை ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பார்த்து குரலில் ஏளனத்துடன், “இந்தக் கதையை யாருடா உனக்கு எழுதிக் கொடுத்தாங்க?” என்றார். டேபிளின் மீது நான் கொடுத்த வெள்ளைக் கவர் இருந்தது.

நான் அதிர்ந்து போய்விட்டேன்.

“யாரும் எழுதித்தரல சார்…”

“பொய் சொல்லாதடா.”

“சத்தியமா சார்.”

“சத்தியநாதன் கிட்டேயே சத்தியம் பண்றயா? உனக்கு என்ன பெரிய சாக்ரடீஸ் என்று நினைப்பா? இவ்வளவு கேவலமா எழுதியிருக்க?” என்னுடைய கதையைப் பிரித்துக் காண்பித்தார். அதில் அவரை வெறுப்பேற்றிய வரிகளை சிவப்பு மையினால் அடிக்கோடிட்டிருந்தார்.

அதைப் படித்துப் பார்த்து “கசப்பான உண்மைகள் சார்..” என்றேன்.

அவர் கதையை என் மூஞ்சியில் விட்டெறிந்தார்.

“இப்பவே அதை பொறுக்கி எடுத்துக்கிட்டு நடையைக்கட்டு.”

நான் கதையை எடுத்துக்கொண்டு தலையைக் குனிந்தவாறு வெளியேறினேன். என் ‘கசப்பான உண்மைகள்’ கதை மாணவர் மலரில் இடம் பெறாது என்பது ரொம்ப ஏமாற்றமாக இருந்தது.

இதற்குப்பிறகு இரண்டு வருடங்கள் அந்தப் பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்தாலும், மாணவர் மலருக்கு எந்தக் கதையும் எழுதி அனுப்பவில்லை.

ஆனால் நான் எழுதி என் கதைகள் பிரசுரமாக வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் மட்டும், நீறு பூத்த நெருப்பாக என் மனதில் கனன்று கொண்டிருந்தது.

கல்லூரியில் படிக்கும்போது நிறைய கதைகள் எழுதி தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அவைகள் அனைத்தும் சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தன. எனினும் நான் என் முயற்சியைக் கைவிடவில்லை.

அதன்பிறகு நான் படித்துமுடித்து வேலையில் சேர்ந்ததும் ஒருமுறை நான்கு கதைகளை மொத்தமாக எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தேன். ஒருமாதம் கழித்து அவைகளில் மூன்று திரும்பி வந்தன. ஒன்றுமட்டும் வரவில்லை. நான் அந்தக் கதையை திருப்பி அனுப்ப மறந்து விட்டார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், என்ன ஆச்சரியம்!? விகடனிலிருந்து என் அலுவலக முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் – அன்புடையீர், தாங்கள் எழுதி அனுப்பிய ‘திசை மாறிய எண்ணங்கள்’ சிறுகதை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கூடிய விரைவில் அந்தக் கதை விகடனில் பிரசுரமாகும்.

தங்களுடைய இலக்கியப் படைப்புகளை தொடர்ந்து எங்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

எஸ்.வரதராஜன், பொறுப்பு ஆசிரியர்.

நான் மகிழ்ச்சியில் துள்ளினேன். அந்தக் கடிதத்தை எனக்குத் தெரிந்த அனைவரிடமும் காண்பித்து சந்தோஷப்பட்டேன். அந்தக் கடிதத்தை இன்னமும் என்னிடம் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இதைத் தொடர்ந்து மேலும் என்னுடைய மூன்று கதைகள் விகடனில் வெளிவந்தது. அடுத்தடுத்து என்னுடைய கதைகள் குமுதம், கலைமகள், கல்கி, சாவி, அமுதசுரபி பத்திரிகைகளில் வெளிவந்தன. நாளடைவில் சுவாரசியமாக கதை எழுதுவது எப்படி என்கிற உத்தியை கற்றுக்கொண்டதாக நான் நம்ப ஆரம்பித்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மாணவர் மலருக்காக எழுதிய அந்த ‘கசப்பான உண்மைகள்’ என்ற என்னுடைய முதல் கதையை மட்டும் திருப்பி ஒருநாளும் அதே வடிவத்திலோ அல்லது வேறு வடிவத்திலோ எழுதவும் இல்லை, எழுதிப் பார்க்கிற முயற்சியும் செய்யவில்லை.

தற்போது சிறுகதைகள்.காம் இணையதளத்தில் 180 கதைகள்வரை எழுதிவிட்டேன்.

பல வருடங்கள் கழித்து, ஓய்வுபெற்ற சந்தியநாதன் சாரை ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து, வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள என்னுடைய மூன்று சிறுகதைத் தொகுப்புகளை அவரிடம் கொடுத்து அவரின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டேன்.

அவர் என்னை அன்புடன் கட்டித் தழுவிக்கொண்டார்.

அதுசரி, ‘கசக்கும் உண்மைகள்’ கதையில் அவரை வெறுப்பேற்றிய வரிகள் என்னது என்று கேட்கிறீர்களா? கீழ்க்கண்ட வாசகங்கள்தான்.

‘நான் ஒரு பிராமணத்தி வயிற்றில் பிறந்துவிட்டதால் நான் ஐயராம்; அதனாலேயே நான் இந்து மதத்தைச் சார்ந்தவனாம்; தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்துவிட்டதால் தமிழனாம்; பூகோள ரீதியாக இந்தியாவில் பிறந்து விட்டதால் நான் இந்தியனாம். அதனால் இந்தியன் என்று பெருமைப்பட வேண்டுமாம். இவைகள் அனைத்தும் என் சம்மதமில்லாமல் என்னைக் கேட்காமல் நடந்துவிட்ட சம்பவங்கள். இதில் எப்படி நான் பெருமைப் பட்டுக்கொள்ள முடியும்?’

இப்போதும் என்னுடைய கருத்தில் இன்றளவும் எனக்கு மாற்றமில்லை. இந்த பரந்த உலகில், ஜாதி, மதங்கள்; இனம், நாடு எல்லாவற்றையும் தாண்டி மனிதம்தான் மிகப்பெரியது என்பதை நான் திடமாக நம்புகிறேன். நாம் எந்த நாட்டில் இருந்தாலும், சகமனிதர்களை எப்போது அன்புடன், புரிதலுடன் நடத்துகிறோமோ அன்றுதான் நாம் ஜெயித்தவர்களாவோம்.

Print Friendly, PDF & Email

1 thought on “என் முதல் கதை

  1. என்னய்யா கருத்து இது? நாட்டுப் பற்று, மொழிப் பற்று , மதப் பற்று இதெல்லாம் இருந்தால் மனிதம் இல்லாமல் போய் விடுமா? சமயம் தான் ஐயா நமக்கு அன்பையும் மனிதத்தையும் கற்பிக்கிறது? அன்பே சிவம் என்று சொல்வது நம் தமிழ்ச் சமயம்தானே? யாதும் ஊரே என்று சொல்லித் தருவது தமிழ்தானே? எல்லாவற்றையும் தூக்கி வீசக் கற்றுத் தருவது கேடுகெட்ட மதமாற்று சக்திகள்தான். தயவுசெய்து அவற்றின் வலையில் விழாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *