என்ன காரணம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 6,466 
 

அங்கஜனுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவன் அந்த பாடசாலையின் விவசாயப் போதனாசிரியராக அண்மையில்தான் நியமனம் பெற்று வந்திருந்தான். அவனது அந்த பாடசாலை அதிபர் அவன் என்ன விதமான விவசாயக் கல்வியை அந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டுமென்று விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அவர் அண்மைக் காலமாக அங்கு பல மரணங்கள் சம்பவித்துவிட்டதாக மிக வருத்தத்துடன் தெரிவித்தார். மனிதர்கள் மிருங்கங்கள், பறவைகள், மரஞ்செடிகள் கூட பரவலாக மரணித்து வருகின்றன என்று கவலை தெரிவித்தார்.

‘‘அவன் அதற்கு என்ன காரணமாக இருக்கும்’’ என்று தாழ்ந்த குரலில் கேட்டான். அதிபர் அவன் கேள்விக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. அவர் ஒரு பெருமூச்சு விட்டார். அவர், அவன் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க விரும்பவில்லைபோல், மறுபுறம் பார்த்துக்கொண்டிருந்தார். பின் மெதுவாகக் கூறினார் ‘‘அதற்கான காரணத்தை அவர்கள் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனைக் கண்டு பிடிக்க அவர்கள் உலகுக்கு வெளிப்படுத்துவார்களா என்பது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது’’.

அங்கஜனுக்கு அவர் என்ன சொல்லவருகிறார் என்பது தெளிவாக விளங்கவில்லை. அவர் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் அப்படி ஒரு பதிலைச் சொல்கிறாரோ என்பதுபோல் பட்டது. அதன்பின் அவர்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

அங்கஜன் வெளியே வரிசையாக அணிவகுத்து வந்து கொண்டிருந்த அவனது வகுப்பைச்சேர்ந்த அந்த முப்பது மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த விவசாய நிலத்தை நோக்கிச்சென்றான். அந்த மாணவர்கள் எல்லோருக்குமே சுமார் பத்துப் பதினோரு வயதுதான் இருக்கும். அவர்கள் ஒவ்வொருவரது கரத்திலும் ஒரு மரக்கன்று இருந்தது.

அவன் மரக்கன்றுகளை நடுவதற்காக விவசாயக் காணிகளை சென்றடைந்ததும் அங்கு கண்ட காட்சியைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தான். அங்கு பல மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து சருகாகி பச்சை நிறம் மாறிப்போய் கபில நிறமாகக் காணப்பட்டன. ஒரு பிரதேசம் மரம் மீள்நடுகை செய்வதற்காக சுத்தப்படுத்தப்பட்டுக் காணப்பட்டது. அவர்கள் மரக்கன்றுகளை நடுவதற்காக அப்பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கிருந்துதான் தன் பாடத்தை அங்கஜன் ஆரம்பித்தான். அவன் மாணவர்களை சூழ வைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினான்.

‘‘இயற்கையின் சிருஷ்டிப்பில் மிக உன்னதமான படைப்பு மனித இனம் தான். இருந்தாலும் இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள சகல ஜீவராசிகள், மரங்கள், செடி கொடிகள், பூச்சி புழுக்கள், நுண்ணுயிர்கள் எல்லாமே ஒரு காரணத்துக்காகவே படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை மற்றொன்று அழிப்பது நாமே நம்மை அழித்துக்கொள்வதற்கு சமமானதாகும். நாம் சுவாசிக்கும் உயிர் மூச்சை எமக்கு வழங்குவது மரஞ்செடி, கொடிகள் தான் . அவை நாம் சுவாசித்து வெளியேற்றும் கரியமிலவாயுவை சுவாசித்துக்கொண்டு பொதுவாக காற்று என்று சொல்லப்படுகின்ற ஒட்சிசனை நமக்கு வழங்குகின்றன. இந்தச் செயல், நடைபெறாது போனால் நாமெல்லாம் மூச்சடைத்து இறந்து போவோம்.

பிள்ளைகள் அங்கஜன் சொல்லும் விளக்கத்தை கவனமுடன் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“ஆனால் இன்றைய மனிதன் தன் சமூகம் சார்ந்த பொறுப்புக்களை எல்லாம் துஸ்பிரயோகம் செய்ய ஆரம்பித்து விட்டான். நமக்கு மூச்சுக்காற்றை வழங்கும் மரங்களையெல்லாம் வெட்டிச்சாய்த்து விட்டான். அதற்கும் மேலதிகமாக பொலித்தீன், பிளாஸ்டிக் என்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் அடங்கிய பொருட்களை தமது அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தி டொன் கணக்கான கழிவுகளை, ஆறு, கடல், குளம் எல்லாம் நிறைத்து நீர், மண், காற்று என்பனவற்றை நஞ்சாக்கிவிட்டான்.”

“இப்படிக் கூறிவிட்டு அவன் பிள்ளைகளில் என்ன உணர்வுகள் தோன்றுகின்றன என நோட்டம் விட்டான். அவர்களுக்கு அவன் சொன்ன விடயம் புதியதாகவும், வியப்பாகவும் இருந்தன. அவன் மேலும் கூறினான்.

“தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இலத்திரனியல் கழிவுகள் பெருகிவருகின்றன. ஆபத்தான கதிர் வீச்சுகளால் புற்றுநோயும் இனந்தெரியாத வைரசுகளும், பக்டீரியாக்களும் பெருகிவருகின்றன. அளவுக்கதிகமான உரப்பாவனை, கிருமிநாசினி, களைநாசினி பாவனை என்பன உணவுப் பொருட்களையும் நஞ்சாக்கிவிட்டன. ஒன்றுக்கும் உதவாத செயற்கையான கொக்கோலா பானம்,சொசேஜ் மற்றும் நொறுக்குத் தீனிகள் மனித உடலையே திரிபு படுத்திவருகின்றன”.

“அதனால்தான் மீன்களும், பறவைகளும் செத்துப் போய்விட்டனவா?” யாரோ ஒரு மாணவன் அப்பாவித்தனமாகக் கேள்வி கேட்டான்.

“ஆம்,” என்று அதற்கு பதிலளித்த அங்கஜன், இன்று நாம் சுத்தமான நீரை அருந்த அதனை வடிகட்டி பிளாஸ்டிக் போத்தலில் அடைத்து குடிக்கின்றோம். அது போல் விரைவிலேயே சுத்தமான காற்றை நாம் போத்தலில் அடைத்து முதுகில் தொங்கப்போட்டு றப்பர் குழாய் ஒன்றை மூக்குக்குள் பொருத்தி சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படும்”.

மாணவர்களின் சிந்தனையில் அங்கஜன் கூறிய வார்த்தைகள் கூரிய அம்பாகப்பாய்ந்து தைத்தன. அவர்கள் எல்லோருமே தத்தமது புத்தகப் பையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தலை நினைத்துப் பார்த்தார்கள். எதிர்காலத்தில் தாம் சுவாசிப்பதற்காக காற்றடைத்த போத்தலையும் வைத்திருக்கவேண்டி வரும் என்று தமது ஆசிரியர் கூறியதை நினைத்துப்பார்த்தார்கள். அவர்களுக்கு ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் ஆச்சரியமாகவும் இருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் எல்லோரும் வரிசையாகச் சென்று விவசாய பூமியில் சமமாகத்தோண்டப்பட்டிருந்த குழிகளில் மரக்கன்றுகளை ஊன்றி மண்போட்டு மூடினார்கள். அவர்கள் தமது வேலைகளை முடித்துக்கொண்டு திரும்ப முற்பட்ட போதுதான் அந்தப் பெருங்கூச்சல் கீழே பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து எழுந்தது. இது ஒரே சீராக, ஒரு பாட்டுப் பாடுவது போல் இதமாக ஒலித்தது. அது என்னவென்று பார்ப்பதற்காக அவர்கள் அங்கிருந்த சிறு குன்று போன்ற மேட்டுக்குச் சென்றார்கள். அங்கிருந்து பார்ப்பதற்கு கீழே சுற்றுப்புறச் சூழல் தெளிவாகத் தெரிந்தது.

அங்கே கீழே சமவெளியில் ஒரு பாரிய தொழிற்சாலை பத்துப் பதினைந்து ஏக்கரில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் ராட்சத புகைபோக்கிகள் வானளாவ உயர்ந்து கரும்புகையையும், தூசியையும் கக்கிக்கொண்டிருந்தது. வேறும் குழாய்களில் இருந்து நச்சு ஆவி புஸ் புஸ் சென்று வெளியேற்றிக்கொண்டிருந்தது. அண்மையில் இருந்த ஆற்றை நோக்கி கருமையான இரசாயன கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருந்தது. தொழிற்சாலையின் பின்புறத்தில் பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் மலை என குவிந்துபோயிருந்தன.

தொழிற்சாலையின் பாரிய நுழைவாயில் கேற்ருக்கருகாமையில் பிரதான பாதையை மறித்துக்கொண்டு ஒரு தொகை மக்கள் கூட்டத்தினர் குவிந்திருந்தனர். அவர்கள் கரங்களில் எதிர்ப்புச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும், கொடிகளும் அட்டைகளும் காணப்பட்டன. அவர்கள் அந்தச் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்றும்படி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் “வெளியேறு வெளியேறு இங்கிருந்து வெளியேறு”, ‘‘கெடுக்காதே கெடுக்காதே, சூழலைக் கெடுக்காதே,” ‘‘நிறுத்து, நிறுத்து நச்சுப் புகையை நிறுத்து”, ‘‘அகற்று, அகற்று கழிவு நீரை அகற்று” என்றும் இன்றும் பலபடியாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அன்று காலை அங்கஜன் அவனது பாடசாலை அதிபரை சந்தித்தபோது அவர் கூறிய அந்த விசயம் அவன் ஞாபகத்துக்கு வந்தது. அண்மைக்காலமாக இங்கே மரணங்கள் அதிகரித்து வருகின்றன மனிதர்கள் மட்டுமல்ல, காக்கைகள், குருவிகள், பறவைகள், மீன்கள், மரஞ்செடி கொடிகள் எல்லாம் மரணிக்கின்றன” அங்கஜனால் ஒரு நீண்ட பெருமூச்சை மட்டுமே அப்போதைக்கு விட முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *