எங்கோ ஒரு பிசகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,094 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பனை கொடியேறும் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஒரு தனி மவுசு பிறந்துவிடும். வெளியிடங்களில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் பலர் இக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தடவையாவது விஜயம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். உள்ளூர்க் கோவில்களில் கொடியேறித் திருவிழாக்கள் நடக்கும் போதுகூட ஊர்ப்பக்கம் திரும்பியும் பார்க்காத பல பிரகிருதிகள் பனை கொடியேறிய காலத்தில் ஊருக்கு வந்து ‘திருவிழாக்கள்’ நடத்திவிட்டுத்தான் திரும்புவார்கள். சிலருக்கு இக்காலத்தில் ஞானம் பிறப்பதுமுண்டு.

இத்தகைய ‘திருவிழாக்கள்’ நடக்கும் தலங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் முத்தனுடைய கள்ளுக் கொட்டிலும்!

இந்தக் கொட்டில் தற்காலத்துக்கேற்ப எவ்வித புனருத்தாரண வேலைகளுக்கும் உட்படாமல் வெகுகாலமாகப் பழைய நிலையிலேயே இயங்கி வருகிறது.

அந்தி சாயும் நேரம்.

ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் முத்தனுடைய கள்ளுக் கொட்டிலின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார்கள்.

அவர்கள் வருவதைக் கண்ட முத்தன் தலையிலே கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு குழைந்தபடி “கமக்காரனவை வாருங்கோ” என அவர்களை வரவேற்று, முற்றத்திலே போடப்பட்டிருக்கும் வாங்கிலிருந்த தூசியைக் கைத்துண்டினால் துடைத்துவிடுகிறான்.

செல்லத்துரையர் முப்பது வருடங்களுக்கு மேலாக கொழும்பிலே வாழ்ந்துவருகிறார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் ஆறுமுகத்தாரையும் அழைத்துக்கொண்டு முத்தனின் கள்ளுக் கொட்டிலுக்கு வருவதற்குத் தவறுவதில்லை.

உள்ளே இருந்துவரும் கள்ளின் மணம் ஆறுமுகத்தாரின் வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. முற்றத்திலே வளர்ந்திருந்த பூவரச மரத்தின் கெவர்களில் நான்கைந்து பிழாக்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அவற்றை ஒருதடவை நோட்டம் விடுகிறார் ஆறுமுகத்தார்.

அவரைக் கவனித்த செல்லத்துரையர் சிரித்துவிட்டு, “முத்து, இரண்டு கொண்டுவாவன்” என ஓடர் கொடுக்கிறார்.

முத்தன் உள்ளே போகிறான்.

கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்த வாழ்க்கையின் பயனாகச் செல்லத்துரையர் சமூகத்திலே தனக்கென ஓர் அந்தஸ்தைத் தேடி வைத்திருக்கிறார். பெரிய வீடு, சொந்தத்திலே கார், பெரிய மனிதர்களின் சிநேகம் இவையெல்லாம் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கொழும்பிலே தனது சிநேகிதர்களுடன் சேர்ந்துகொள்ளும்போது அவர் உயர்ரக மதுவகைகளைத்தான் சுவைப்பார். ஆனாலும், அப்போது காணாத ஒரு சுவையை, மனநிறைவை, முத்தனுடைய கொட்டிலில் ஆறுமுகத்தாரோடு சேர்ந்து குடிக்கும் பனங்கள்ளிலே அவர் கண்டிருக்கிறார்.

ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் சிறுபராயத்திலிருந்தே நண்பர்களாக இருக்கின்றார்கள். ஆறுமுகத்தாருக்கு ஊரிலே நிறைய நிலபுலன்கள் இருக்கின்றன. அவர் தனக்குச் சொந்தமான ஏராளமான நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு தானும் ஏதோ வேலை செய்கிறேன் என்ற பெயருக்காக ஒரு சிறிய காணியிலே கமஞ்செய்து வருகிறார். ஆறுமுகத்தாருக்கும் ஊரிலே பெரிய மனிதர் என்ற மதிப்பு உண்டு.

முத்தன் உள்ளே போனதும், ஆறுமுகத்தார் செல்லத்துரையிடம் சொல்கிறார், “இந்த முத்தன் கிழவனிட்டை நாங்கள் விவரந்தெரிஞ்ச காலத்திலையிருந்து கள்ளுக்குடிக்கிறம். இவன் எவ்வளவு பணிவாயும் மரியாதையாயும் நடக்கிறான். தன்னுடைய மகன் கொழும்பில பெரிய உத்தியோகத்திலை இருக்கிறான் எண்ட செருக்குக்கூட இல்லை. மற்றவங்களெண்டால், மகன் கொழும்பிலை உத்தியோகம் பாத்தால் உடனை கள்ளுக் கொட்டிலை மூடிவிடுவாங்கள். இவன் தன்னுடைய குலத்தொழிலை விடக்கூடாது எண்டுதானே இப்பவும் கள்ளு வித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்குத் தெரியிற மரியாதை இவன்ரை பெடியனுக்குத் தெரியேல்லை. அந்தப் பொடியன் எங்களுக்குச் செய்த வேலை சரியே….? இப்ப நினைச்சாலும் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகுது….. கொழும்பிலை, தான் பெரிய மனிசனாகி விட்ட நினைப்பிலைதானே அவன் அந்த வேலை செய்தவன்…. எல்லாம் உம்மாலைதான் வந்தது….. நீர் கொழும்பிலை மானம் மரியாதை எல்லாத்தையும் விட்டிட்டு நடக்கிறீர் எண்டால் என்னையும் மானங்கெட வைக்கப் பாத்தனீரெல்லே.”

செல்லத்துரையர் மௌனமாக இருக்கிறார். இந்த நேரத்தில் ஏதாவது பேசினால் ஆறுமுகத்தாருக்குக் கோபம் வந்துவிடுமென்பது அவருக்குத் தெரியும்.

முத்தன் இரன்டு போத்தல் கள்ளுடன் வெளியே வருகிறான். பூவரச மரத்தில் இருந்த பிழாக்களிலே இரண்டை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, ஒன்றை ஆறுமுகத்தாரிடமும் மற்றதை செல்லத்துரையரிடமும் கொடுக்கிறான். அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டதும் கள்ளை அந்தப் பிழாக்களிலே ஊற்றுகிறான்.

செல்லத்துரையர் கள்ளின் நுரையில் செத்து மிதந்து கொண்டிருந்த ஏதோ பெயர் தெரியாத பூச்சி ஒன்றைத் தனது விரலினால் வழித்து வீசிவிட்டு பிழாவில் வாயை வைத்து உறிஞ்சுகிறார். “முகத்தார், சோக்கான சாமான் ” என அந்தக் கள்ளுக்குத் தனது மதிப்புரையையும் வழங்குகிறார்.

“இப்பதான் கமக்காரன் என்ரை சின்னவன் பனையிலையிருந்து இறக்கிக்கொண்டு வந்தவன்…… நல்ல புதுக்கள்ளு….. உங்களுக் கெண்டுதான் கலப்பில்லாததாய் எடுத்துக்கொண்டு வந்தனான்.” முத்தன் வழக்கமாகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கும் கூறுவதைதான் இப்பொழுதும் கூறுகிறான்.

ஆறுமுகத்தார் ஒரே இழுப்பில் பிழாவைக் காலிசெய்து விட்டு அதனைப் பக்கத்திலே வைக்கிறார். அவரது உடலில் ஒரு புதுத்தென்பு உண்டாகிறது.

“முத்து, இன்னும் இரண்டு கொண்டு வா” இப்போது ஆறுமுகத்தார் ஓடர் கொடுக்கிறார்.

முத்தன் பணிவோடு வெற்றுப் போத்தலை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறான்.

ஆறுமுகத்தாரின் வயிற்றுக்குள் போன கள்ளு கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்குகிறது. சிலநாட்களாக அவரது மனதை அரித்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியொன்று இப்போது விசுவரூபம் எடுக்கிறது.

ஆறுமுகத்தாரின் மகன் படிப்பை முடித்துக் கொண்டு நான்கு வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறான். எத்தனையோ வேலைகளுக்கு மனுப்போட்டிருந்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. செல்லத்துரையர் சென்றதடவை ஊருக்கு வந்திருந்தபோது, ஆறுமுகத்தார் இதைப்பற்றி அவரிடம் கூறினார். அதற்குச் செல்லத் துரையர், தான் எப்படியாவது பெரியமனிதர்களிடம் சிபார்சு செய்து அவரது மகனுக்கு வேலை தேடிக்கொடுப்பதாக உறுதியளித்துவிட்டுச் சென்றார்.

செல்லத்துரையர் கொழும்புக்குச் சென்ற சில நாட்களில் ஆறுமுகத்தாருக்கு கடிதம் வந்தது. மகனையும் அழைத்துக் கொண்டு உடனே புறப்பட்டு வரும்படி செல்லத்துரையர் கடிதம் எழுதியிருந்தார்.

ஆறுமுகத்தாரும் அவரது மகனும் கொழும்புக்கு வந்த தினமே, அவரைக் கொழும்பிலுள்ள பிரபல கம்பனி மனேஜரிடம் அழைத்துச் சென்றார் செல்லத்துரையர்.

ஊரிலே கள்ளு விற்கும் முத்தனின் மகன்தான் படித்துப் பட்டம்பெற்று சிறிது சிறிதாக முன்னேறி இன்று கம்பனியின் மனேஜராக உயர்ந்திருக்கிறான் என்ற இரகசியத்தை ஆறுமுகத்தாரிடம் சொல்லலாமா கூடாதா என்பது செல்லத்துரையருக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது.

இவ்வளவு காலமும் ஊரிலே வாழ்ந்து, அந்தச் சூழ்நிலையிலும் பழக்கவழக்கங்களிலும் ஊறிப்போன ஆறுமுகத்தார் முத்தனின் மகனிடந்தான் இப்போது வேலை கேட்கப் போகிறோம் என்றால் சம்மதிப்பாரா? செல்லத்துரையர் எந்த விபரத்தையும் ஆறுமுகத்தாரிடம் சொல்லவில்லை.

கார் ஓர் அழகிய வீட்டின் முன்னால் நிறுத்தப்படுகிறது. ஆறுமுகத்தார் மிகவும் அடக்கமாகவும் பயபக்தியுடனும் தனது மகனுக்கு உத்தியோகம் கொடுக்கப்போகும் பெரிய மனிதரின் வீட்டின் உள்ளே செல்லத்துரையருடன் நுழைகிறார். வாசலிலே மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ‘எம். சண்முகம்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயரை ஒருதடவை எழுத்துக் கூட்டி வாசிக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு ஆங்கிலமும் தெரியும்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் “வாருங்கோ, வாருங்கோ” எனப் பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறார் சண்முகம்.

ஆறுமுகத்தார் சண்முகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார். இந்தச் சண்முகத்தை அவர் எங்கோ பார்த்திருக்கிறார். ஆ….! ஞாபகம் வந்துவிட்டது!; முத்தன்ரை பெடியன் சண்முகத்தான்!

செல்லத்துரையரைத் திரும்பி ஒருதடவை பார்க்கிறார் ஆறுமுகத்தார். செல்லத்துரையர் ஒன்றுமே பேசவில்லை. அந்தச் சூழ்நிலை அவருக்கு இக்கட்டான நிலைமையை உருவாக்கி விட்டது.

“ஐயா, இந்தச் சோபாவிலை உட்காருங்கோ” சண்முகம் அவர்களை உபசரித்தார்.

ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் அமர்ந்துகொள்கிறார்கள்.

“ஐயா, என்ன குடிக்கிறியள்? தேத்தண்ணியோ அல்லது ஓவல் போட்டுக் கொண்டுவரச் சொல்லட்டுமோ?” சண்முகம் அப்படிக் கேட்டது ஆறுமுகத்தாருக்கு அதிர்ச்சியாக இருந்தது; ஆத்திரமாகவும் இருந்தது. ஊரிலே கள்ளுக்கொட்டில் வைத்திருக்கும் முத்தனுடைய மகனல்லவா அப்படிக் கேட்டுவிட்டான்.

“இப்பதான் நாங்கள் வீட்டில தேத்தண்ணி குடிச்சிட்டு வந்தனாங்கள்…… எங்களுக்கு இப்ப ஒண்டும் வேண்டாம்.” ஆறுமுகத்தார்தான் சொன்னார்.

“பரவாயில்லை…… கொஞ்சமாய்க் குடியுங்கோ…… வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேத்தண்ணிகூடக் கொடுக்காமல் அனுப்பிறது எனக்கு மரியாதையில்லை.” சண்முகம் இப்படிக் கூறிவிட்டுக் குசினிப்பக்கம் திரும்பி, “பியசேனா, தே தெக்கக் கெயின்ட” எனத் தனது வேலைக்காரனிடம் கூறினார்.

சிறிது நேரத்தில் பியசேனா என்னும் அந்தச் சிங்களப் பையன் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்தான். சண்முகம் அவனிடமிருந்து தட்டுடன் தேநீரை வாங்கி மிகவும் விநயத்துடன் ஆறுமுகத்தாரிடம் நீட்டினார்.

“நான் தேத்தண்ணி குடிக்கிறதில்லை.” ஆறுமுகத்தார் சிறிது கோபத்துடன் கூறினார்.

“பரவாயில்லை, கொஞ்சமாய்க் குடியுங்கோ.”

ஆறுமுகத்தாருக்குக் கோபம் அதிகமாகியது. அவமானம் அடைந்துவிட்டது போன்ற உணர்வு அவருள்ளே எழுந்தது; முகம் கடுமையாக மாறியது.

“என்னுடைய மகனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை……. நான் உன்னுடைய வீட்டிலை….. தேத்தண்ணி குடிக்க மாட்டேன்.”

ஆறுமுகத்தார் கோபத்துடன் எழுந்துசென்று காரில் ஏறி அமர்ந்துகொண்டார். அவர் காரின் கதவை அடித்துச் சாத்திய பலமான சத்தம், எவ்வளவு கோபத்துடன் அவர் இருக்கிறாரென்பதை எடுத்துக் காட்டியது.

செல்லத்துரையரின் நிலைமை தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவர் முன்பும் இப்படிச் சில பெரிய மனிதர்களை சண்முகத்திடம் அழைத்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது நடந்துவிட்டதே என எண்ணிக் கவலைப்பட்டார். சண்முகம் இதைத் தவறாக எண்ணவும் கூடும்.

இதனால் தனக்கும் சண்முகத்திற்கும் உள்ள நட்பு ஈடாட்டம் கண்டுவிடுமோ எனவும் அவருக்குக் கவலையாக இருந்தது. சண்முகத்திடம், ஏதேதோ தன்னால் முடிந்த சமாதானங்களைக் கூறிவிட்டுச் செல்லத்துரையரும் புறப்பட்டார்.

“நீர் என்னை அவமானப்படுத்தத்தான் இங்கை கூட்டிவந்தனீரோ?” செல்லத்துரையர் வந்து காரில் ஏறும்போது ஆத்திரத்துடன் கேட்டார் ஆறுமுகத்தார்.

“இல்லை….. முகத்தார், எப்படியாவது உமது மகனுக்கு வேலை தேடித்தரத்தான் நான் முயற்சி செய்தனான். உம்மை அவமானப்படுத்த நினைக்கேல்லை; நீர்தான் அவமானமாக நடந்துகொண்டீர்.”

“செல்லத்துரை, உமக்கு புத்தி மழுங்கிப் போச்சு….. அவனை நாங்கள் எங்கடை வீட்டுக்குள்ளையும் விடமாட்டம்; அப்படிப் பட்டவனுடைய வீட்டிலை நான் தேத்தண்ணி குடிப்பனே?”

ஆறுமுகத்தாருக்கு ஆத்திரம் கூடியதேதவிரக் குறையவில்லை. எப்படியெப்படியெல்லாமோ செல்லத்துரையரைத் திட்டித் தீர்த்துவிட்டு மறுநாளே மகனையும் கூட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார்.

“என்ன கமக்காரன், கடுமையான யோசனை? கள்ளைக் குடியுங்கோ.”

முத்தனின் பணிவான குரல் கேட்டுச் சுயநினைவுக்கு வருகிறார் ஆறுமுகத்தார்.

கள்ளுக் குடித்த மயக்கத்திலேதான் ஆறுமுகத்தார் கண்ணை மூடியவண்ணமிருக்கிறார் என நினைத்திருந்த செல்லத்துரையருக்கு அவர் இவ்வளவு நேரமும் ஏதோ யோசனையிலே தான் இருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது.

ஆறுமுகத்தார் முத்தனை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருக்கிறார். கள்ளு உள்ளே கடுமையாக வேலைசெய்கிறது.

“டேய் முத்தன், உன்ரை மோன் சண்முகத்தான் இப்ப பெரிய மனிசனாகிவிட்டானே?”

ஆறுமுகத்தார் திடீரென இப்படிக் கேட்டது முத்தனுக்குச் சங்கடமாக இருந்தது. ஏன் இப்படி அவர் கேட்கிறார் என்பது அவனுக்கு விளங்கவே இல்லை.

அவன் ஒன்றும் பேசாது நின்றுகொண்டிருந்தான்.

“உன்ரை மோன் செய்த வேலை தெரியுமே….? நான் கொழும்புக்குப் போயிருந்தபொழுது தன்னுடைய வீட்டிலை தேத்தண்ணி குடிக்கச் சொல்லியெல்லே கேட்டவன்”

இதைக் கேட்டதும் முத்தன் பதறிப் போனான்.

செல்லத்துரையருக்கு முத்தனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க எண்ணிய அவர், முத்தனை இன்னும் இரண்டு போத்தல் கள்ளுக் கொண்டுவரும்படி உள்ளே அனுப்பி வைத்தார்.

முட்டியிலே கள்ளு முடிந்திருந்தது. தனது பாவனைக்கென வேறாகச் சோற்றுப் பானையில் ஊற்றிவைத்திருந்த கள்ளில் இரண்டு போத்தலை எடுத்துவருகிறான் முத்தன்.

ஆறுமுகத்தாரின் கண்கள் சிவப்பேறி இருக்கின்றன. அவர் பிழாவை இரண்டு கைகளினாலும் ஏந்தியபடி இருக்கிறார். முத்தன் கள்ளை அதற்குள் ஊற்றுகிறான்.

ஆறுமுகத்தார் உறிஞ்சிக் குடிக்கிறார். வாய்க்குள் …. ஏதோ தட்டுப்படுகிறது. எறும்பு என நினைத்துத் துப்புகிறார். சோற்று அவிழ் ஒன்று வெளியே வந்து விழுகிறது. வெற்றுப் போத்தல்களை எடுத்துக்கொண்டு முத்தன் மெதுவாக உள்ளே நழுவுகிறான்.

செல்லத்துரையர் இந்தக் காட்சியை வெறித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறார். சக்கர வியூகத்தில் ஆயுதமின்றி அகப்பட்டுத் தவிக்கும் போர்வீரனுக்கு திடீரென ஆயுதமொன்று கையிலே கிடைத்துவிட்டால் ஏற்படும் ஆவேசம் அவருள் எழுகின்றது.

மறுகணம் ஆறுமுகத்தாரின் தோளைப்பிடித்து உலுக்கியபடியே அவர் கேட்கிறார், “முத்தனுடைய மகன் தன்னுடைய வீட்டில் கொடுத்த தேத்தண்ணியைக் குடிக்கக் கூடாதெண்டால், முத்தன் கொடுக்கும் கள்ளை மட்டும் குடிக்கலாமோ?”

ஆறுமுகத்தாரின் மூளைக்குள் பலமான ஒரு தாக்கம்.

முத்தனுடைய வீட்டில் கள்ளுக் குடிப்பது பிசகா…? அல்லது முத்தனின் மகன் தனது வீட்டிலே கொடுத்த தேநீரைக் குடிக்காமல்விட்டது பிசகா…?

ஆறுமுகத்தாரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் எங்கோ ஒரு பிசகு இருக்கிறதென்பது மட்டும் இப்போது அவருக்கு நன்றாகத் தெரிகிறது.

– மித்திரன் 73.

– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *