எக்ஸ்சேஞ்ச் ஆபர்

 

வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் டைனிங் டேபிளில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், டென்ஷனாகாமக் கேளுங்க” என்று முன்னறிவிப்புக் கொடுத்து என்னை டென்ஷன் படுத்திவிட்டு விஷயத்தைச் சொல்லுவது தான் என் மனைவிக்கு வழக்கம். அன்றும் அதே பீடிகையுடன் ஆரம்பித்து, “நம்ப கம்ப்யூட்டர் அறையிலிருக்கும் டேபிள் பேன் ரிப்பேராயிடுச்சி, ஸ்பீடே இல்லை, சீலிங் பேனும் ட்ராக்டர் மாதிரி சத்தம் போடுது, ரெண்டுத்தையும் மாத்தணும்” என்றாள்.

நாளில் பாதி நேரம் அவள் அந்த கம்ப்யூட்டரில் தான் மூழ்கி இருப்பாள். ஆகவே அது முக்கியமான பிரச்சனை தான். “ஓகே, வேற பேன் வாங்கிப் போட்டிடலாம்” என்றேன். “புதியதைப் போட்டால், இந்தப் பழசை வைக்க இடம் இருக்காது அதனால் எக்ஸ்சேன்ஜ் ஆபர்ல வாங்கி மாட்டுங்க” என்றாள். ”இந்த ரிப்பேரான டேபிள் பேன்லாம் எக்ஸ்சேஞ்ச் ஆபர்ல எடுப்பாங்களா தெரியலையே” என்றேன்.

“ஏன், அந்த பழைய வாஷிங் மெஷினைக் குடுத்திட்டு மேலே பணம் போட்டு புது வாஷிங் மெஷின் வாங்கினோமே” என்றாள். பழைய வாஷிங் மெஷினுக்கு 5௦௦ ரூபாய் கழித்துப் புதிதாக வாங்கிய சைனா வாஷிங் மெஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று என்னை டென்ஷனாக்கி ஒரு மாதமாக அந்த சர்விஸ் சென்டருடன் நான் மல்லுக்கட்டியது வேறு கதை.

“சரி, நம்ம டிவி கூட பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கியது, அதையும் மாத்திப் புதுசா எல்.ஈ.டி.டிவி வாங்கலாம். எல்.ஈ.டி.டிவில தான் ஹைடெபனிஷன் சேனல் வருமாம்” என்று சொல்லிவிட்டு மறுநாள் அதற்கான காரியத்தில் இறங்கினேன்.

டேபிள் பேன், சீலிங் பேன், மற்றும் டிவியை என் செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டு முதலில் வீட்டருகில் இருந்த ஒரு எலக்ட்ரானிக் ஸ்டோர்ஸில் போட்டோவைக் காட்டி ”இவற்றை எக்ஸ்சேன்ஜ் ஆபர்ல எடுத்துக் கொள்வீர்களா“ என்று கேட்டதற்கு முடியாது என்றார்கள். மெயின் ரோடிலிருந்த ஷோரூமில் கேட்டதற்கு, பழைய டிவி மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்களிடம் நான் விரும்பிய எல்.ஈ.டி. டிவி பிராண்ட் இல்லை. அண்ணா நகரிலிருக்கும் பிராண்டட் டி.வி.ஷோரூமில் விசாரித்த போது என் பழைய டிவிக்கு ஆயிரம் ரூபாய் தான் குறைப்போம் என்று சொன்னார்கள். இப்போது உபயோகித்துக் கொண்டிருக்கும் டிவியை இவ்வளவு குறைவாக மதிப்பிடுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. வீட்டிற்குத் திரும்பி விஷயத்தை மனைவியிடம் சொன்னேன். “இந்த பேன்களை ரிப்பேர் செய்ய முடியுமா என்று பாருங்களேன்” என்றாள்.

மறுநாள் மாலை பேன் கடைகளில் போட்டோவைக் காட்டி ரிப்பேர் செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர்கள், “ரிப்பேர் எல்லாம் இப்ப யாரும் செய்றதில்லை சார், சார்ஜ் அதிகமாகும், ரிப்பேர் செஞ்சாலும் கேரண்டி கிடையாது, காயலான் கடைக்கு தான் போடணும்” என்றார்கள். எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டதற்கு “ரெண்டு பேனுக்கும் சேர்த்து 15௦ ரூபாய் தரலாம்” என்றார் ஒரு கடைக்காரர்.

எதுவும் பேசாமல் வீட்டிற்கு வந்து நடந்தவற்றை மனைவியிடம் சொன்னேன். “நம் வீட்டு வேலைக்காரம்மாவுக்குத் தேவைப்படுமான்னு கேளேன்” என்றேன். “ஏங்க, அந்தம்மா கிட்ட அரசு குடுத்த டிவி ஒண்ணு, சொந்தமா வாங்கின கலர் டிவி ஒண்ணு இருக்கு, அவங்களுக்கு டிவி தேவை இருக்காது . ரிப்பேரான பேனைக் குடுத்தா வாங்கிப்பாங்களா? இனாமாக் குடுத்தா வேணா வாங்குவாங்க, அதெல்லாம் நான் கேட்கமாட்டேன். என்னமோ, உங்கள் இஷ்டம் போல் செய்யுங்கள், பழைய பொருட்களை வைக்க இங்கு இடமில்லை” என்று அலுத்துக் கொண்டாள்.

வேலை மிகுதியால் அடுத்த இரண்டு தினங்கள் இதைப் பற்றி மறந்தே போனேன். அன்று சனிக்கிழமை காலை, என் மனைவி அலமாரியிலிருந்து அவளுடைய புடவைகளை எல்லாம் வெளியில் எடுத்துப் பிரித்துக் கொண்டிருந்தாள். “என்ன நடக்கிறது?” என்று கேட்டேன். “என் பழைய புடவைகள், பெட்ஷீட், டவல் எல்லாம் சேர்த்து ஜீவோதயாவுக்கு டொனேஷனா குடுக்கணும். என் பிரெண்ட் ஒரு ஈ மெயில் அனுப்பி இருந்தாங்க, புற்று நோயாளிகள் காப்பகமாம். அவங்களுக்கு உதவியாய் இருக்குமாம்” என்றாள். அதைக் கேட்டவுடன் முடிவெடுத்தேன். என்னுடைய சில சட்டைகளையும் வேட்டிகளையும் எடுத்து அவளிடம் கொடுத்து அதையும் சேர்த்துக் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, நான் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன்.

தினமும் ஆபீசிலிருந்து வீட்டிற்கு வரும் வழியிலிருக்கும் அனாதைச்சிறுவர் காப்பகத்துக்குச் சென்றேன். அங்கிருந்த காப்பாளரிடம் பேசினேன். நான் சொன்ன விஷயத்தைக் கேட்டதும், ஆர்வத்துடன் ஒரு ஆட்டோவில் ஏறி என்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்கு வந்தார். ரிப்பேரான சீலிங்பேனை அவரே கழற்றினார். இரண்டு மின்விசிறிகளையும் டிவியையும் ஆட்டோவில் ஏற்றி 5௦௦ ரூபாயும் கொடுத்து தேவைப்பட்டால் சர்விஸ் செய்துகொள்ளச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

“ரொம்ப நல்லது தாங்க, ஆனா என் விஷயம் என்னாச்சு?” என்றாள் என் மனைவி. என் மனைவி கேட்டபடி 2 மின்விசிறிகளையும், எனக்குப் பிடித்த பிராண்ட் எல்.ஈ.டி.டிவியை மாதத் தவணையிலும் வாங்கிக்கொண்டு வந்தேன். எலக்ட்ரிசியனைக் கூப்பிட்டு சீலிங்பேன் பிட் செய்ய வைத்தேன். ஹைடெபனிஷன் செட் டாப் பாக்ஸு க்கு மாற்றச் சொல்லி அழைத்திருந்த டெக்னிஷியனிடம் ஒரு புதிய டிஷ்ஷையும் எடுத்து வரச் சொல்லி இருந்தேன்.

புதிய டிஷ், எச்.டி.செட் டாப் பாக்ஸ் பொருத்தி, புதிய டிவியை இயக்கி வைத்தார். பழைய டிஷ்ஷையும் செட் டாப் பாக்சையும் அனாதைச் சிறுவர் காப்பகத்தில் பொருத்தித் தரும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். அதற்குத் தனியாக சர்விஸ் சார்ஜ் தருவதாகவும் சொன்னேன். அவர் சரியென்று என்னுடன் அந்தக் காப்பகத்துக்கு வந்தார். அவர் அவற்றைப் பொருத்தி, ஹாலில் வைத்திருந்த டிவியை ஆன் செய்து ரிமோட்டை வைத்து எல்லாச் சானல்களையும் செட் செய்து கொடுத்தார். இந்த வேலைக்குப் பணம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். காப்பாளரும் அங்கிருந்த சிறுவர்களும் எனக்கு நன்றி சொன்னார்கள். நான் அந்த டெக்னிஷியனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன்.

மறுநாள் காலை ஸ்போர்ட்ஸ் சானலில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த போது என் செல்போன் சிணுங்கியது. காப்பகத்திலிருந்து காப்பாளர் பேசினார். “சார், பசங்க போடுற சத்தம் கேட்குதா சார்?” என்று சந்தோஷமாகக் கேட்டார். பின்புலத்தில் ‘தோனி தோனி ‘ என்று சிறுவர்களின் உற்சாகக் கூச்சல் கேட்டது. “பசங்க நீங்க குடுத்த டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டிருக்காங்க சார், சீலிங் பேனை ஹாலில் மாட்டிட்டேன் சார், டேபிள் பேனை ப்ரீயா சர்விஸ் செஞ்சு தரேன்னு சொல்லி இருக்காங்க, ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார். மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

“சார், நான் தான் உங்களுக்கும் அந்தப் பிள்ளைகளுக்கும் நன்றி சொல்லணும், மின்விசிறியையும் டிவியையும் எக்ஸ்சேன்ஜ்ஆபர்ல குடுத்திடலாம்னு நினைச்சிருந்தேன்.அவங்க அதுக்குக் குறைவா மதிப்பிட்டு ஒரு சொற்பத் தொகையைத்தான் குடுத்திருப்பாங்க. ஆனா இப்ப என் காதில் கேட்கிற உற்சாகக் கூச்சலுக்கும், மனசுல நெறைஞ்ச சந்தோஷத்துக்கும், மதிப்பு ரொம்ப அதிகம் சார். இது தான் பெஸ்ட்எக்ஸ்சேன்ஜ் ஆபர்” என்றேன்.

என் மனைவி தலையசைத்து ஆமோதித்தாள். இது அவளால் தோன்றிய எண்ணம் தானே, அவள் கை குலுக்கி நன்றி சொன்னேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
மிகச் சாதாரணமான விஷயம் தான். அது இவ்வளவு பெரிய சண்டையாக மாறி எனக்கும் என் மனைவிக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. எங்களுக்குக் கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. டிகிரி படித்து முடித்த ப்ரியா, கல்யாணம் முடிந்த கையோடு, அண்ணாநகரில் நான் ...
மேலும் கதையை படிக்க...
முனைவர் ராகவன் ஒரு நிர்வாக இயல் கல்லூரியில் பேராசியராகப் பணி புரிகிறார். ஆசிரியப் பணியை விருப்பத்துடன் எடுத்துக் கொண்டவர். ஆகவே உற்சாகத்துடன் பாடங்கள் நடத்துவார். ஒவ்வொரு பாடம் துவங்கும் போதும் அதன் பின்னணிக்கு ஒரு கதையோ அல்லது வரலாற்றுத் துணுக்கோ, ஆச்சரியப் படவைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும். மெட்ராஸிலிருந்து 25 மைல் தொலைவிலிருக்கும் திருவள்ளூர் என் தந்தை பிறந்து வளர்ந்த ஊர். அங்கு நடக்கும் 'குரு பூஜை'யில் கலந்து கொள்ள அம்மாவையும், ...
மேலும் கதையை படிக்க...
நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்து மிட்டேர்ம் பரிட்சைக்குப் படித்துவிட்டுத் தூங்கி, காலையில் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது, என் செல்போன் அலறியது. என் க்ளாஸ்மேட் சந்தியா போனில் சொன்ன செய்தி கேட்டு அப்படியே கீழே சரிந்தேன். என் கைகால்கள் நடுங்க ...
மேலும் கதையை படிக்க...
தேசிய நெடுஞ்சாலை 4. ஹுண்டாய் கார் பாக்டரிக்கு அருகில் சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல், அந்த மாருதி ஸ்விப்ட் கார் சென்னையை நோக்கிப் பறந்தது. சாலையோரத்தில் இருந்த ட்ராபிக் போலீஸ்காரர் சைகை காட்டியும், விசிலடித்தும் நிற்காமல் வேகமாகப் பறந்தது. போலீஸ்காரர் ...
மேலும் கதையை படிக்க...
துளசி என் பள்ளித் தோழன். தெலுங்கு தாய்மொழி ஆயினும் என்னுடன் தமிழ் மீடியத்தில் படித்து வந்தான். அவனுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். படிப்பில் நாட்டமில்லை. புத்தகங்களைத் தொடவே மாட்டான். காலாண்டு, அரையாண்டுத் ...
மேலும் கதையை படிக்க...
கிராக்கியை இறக்கி விட்டு, ஓட்டிவந்த சைக்கிள் ரிக்க்ஷாவை ஸ்டாண்டில் ஓரங்கட்டி நிறுத்தினான் துரை. மடித்துக் கட்டியிருந்த அழுக்கு லுங்கியைத் தூக்கி உள்ளே அணிந்திருந்த காக்கி நிஜாரின் பாக்கெட்டிலிருந்து பீடிக் கட்டையும், வத்திப் பெட்டியையும் எடுத்தான். பக்கத்திலிருந்த பெட்டிக் கடையில் ஒரு பாக்கெட் ...
மேலும் கதையை படிக்க...
மூன்றுஆண்டுகளாகப் பிரியப்பட்டு, பிரயத்தனப்பட்டு, இப்போதுதான் நிறைவேறப்போகிறது, மங்களம்மாளின் கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்தயாத்திரை விருப்பம். மங்களம்மாளுக்கு அறுபது வயதாகிறது. அவர்களுக்கு திருநெல்வேலி பூர்விகம். இரண்டு வருடங்களுக்கு முன் கணவர் கூட்டுறவுவங்கி உத்யோகத்திலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே மாரடைப்பில் இறந்துபோனார். மூன்று மகன்கள். முதல்வன் மாசிலாமணிக்கு 40 ...
மேலும் கதையை படிக்க...
அன்று மாலை , ஐந்து மணி இருக்கும். ஆவி பறக்க காஃபியை எனக்குப் பிடித்த கோப்பையில் நிரப்பிக் கொண்டு, பால்கனிக்கு வந்து சுவரில் சாய்ந்தபடி, எதிரிலிருக்கும் பார்க்கைப் பார்த்தேன். நானும் என் கணவரும் இந்தப் பலமாடிக் குடியிருப்பிலிருக்கும் ஃபிளாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த ...
மேலும் கதையை படிக்க...
அந்த குறுகலான தெருவில், சாலையை ஆக்ரமித்துப் போடப்பட்டிருந்த சிறு கடைகளையும், சாலையின் ஓரத்தில் படுத்திருந்த எருமை மாடுகளையும், அவைகளின் மீது விழுந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களையும், நடுத் தெருவில் நடந்து கொண்டிருந்த மனிதர்களையும் லாவகமாகத் தவிர்த்து, வளைந்து நெளிந்து தன் சைக்கிளை ...
மேலும் கதையை படிக்க...
என் பொண்டாட்டி ரொம்ம்ம்ம்ப நல்லவ!
கர்மயோகி
கழுதை சாய்ந்திருக்கும் வீடு
நீங்களே நியாயம் சொல்லுங்கள், நான் குற்றவாளியா?
வேகம்
துளசி, நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு!
பீரம் பேணில் பாரம் தாங்கும்
அம்முவும் கேதார்நாத் தரிசனமும்
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் ….
வாக்குச்சாதுர்யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)