Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஊர்வலம்!

 

தேசிய நெடுஞ்சாலை.

வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம். கிராமங்களின் இலக்கணம் அத்தனையும் அங்கே இருந்தது. மோசமான புழுதி பறக்கும் சாலை, காரை பெயர்ந்த வீடுகள், கொஞ்சம் கால்நடைகள், கோவில், மசூதி, சர்ச், வழிபட கொஞ்சம் மனிதர்கள், ஒழுங்கற்ற ஐந்து தெருக்கள், ஊர்க்கோடியில் மரபெஞ்சுடன ஒரு டீக்கடை என எல்லாம் இருந்தன. இருள் விலகும் அதிகாலையில், கிராமத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, இரண்டு காவலர் வேன்கள் வந்தன. அதிலிருந்து தபதபவென இறங்கிய காவலர்கள், அடிக்கொருவராய் கிராமத்தை சூழ்ந்து நின்றனர்.

ஊர்வலம்

காதர்பாய் எழுந்து, கலர் லுங்கியும், முழங்கால் தொடும் ஜிப்பாவும் அணிந்தார். தலையில் நைலான் தொப்பியும், மேலே தலைப்பாகையும் அணிந்தார். செருப்பணிந்து வீட்டை விட்டு இறங்க… காவலர் படை, கண்ணில் பட்டது. “என்ன இது அதிசயமாய்!’ உள்ளுக்குள் லேசாக பயம் எட்டிப் பார்த்தது. வெளிக்காட்டாமல் நடையை எட்டிப் போட்டார்.

ராமசாமி வீடு வந்ததும் வாசல் அருகே நின்று, “”ஏய் ராமசாமி…” எனக் குரல் கொடுத்தார்.

“”இதோ வந்துடுறேன்…” ராமசாமியின் பதில் உள்ளிருந்து கேட்டது. இஸ்லாமிய கோலத்தில், ஒருவர் ராமசாமியை அழைப்பதை, காவலர் பட்டாளம் கவனித்துக் கொண்டிருந்தது.
அறுபத்தைந்து வயது ராமசாமியும், 60 வயதாகும் காதரும் பால்ய நண்பர்கள். ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து, ஆளுக்கொரு துறையில் இருந்தாலும், இருவரின் சிநேகிதம் கூடிக் கொண்டு தான் இருந்தது. அதிகாலை நாலரைக்கே எழுந்து, ராமசாமியை அழைத்து போய், வரப்போரம் ஒதுங்கி, காலைக்கடன்கள் கழித்துவிட்டு, முனிஸ்வரன் கடையில் டீ குடித்துவிட்டு, காதர், பள்ளிவாசல் போவதும், ராமசாமி, பால்பண்ணைக்குப் போவதும், 40 வருட வாடிக்கை.

இரு சமூகங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் பனிப்போரை அறியாமல், ராமசாமிக்காக காத்திருந்தார் காதர்.

அரைக்கை பனியனும், கலர் லுங்கியுமாய் வந்த ராமசாமி, “”என்னய்யா இவ்வளவு கூட்டம் இங்கே?” என்றார், காவலர்களைப் பார்த்துக் கொண்டே.

“”அதுதான் தெரியல… வா விசாரிக்கலாம்.”
“”யாருக்கிட்டே கேட்கலாம்?”
“”டீ கடைல கேட்டிருவோம்…”
இருவரும் நடந்து ஊருக்கு ஓரமாய் ஒதுங்கி, இயற்கை உபாதையை கழித்துவிட்டு, ஊருக்குள் இருந்த ஒரேயொரு டீ கடைக்கு வந்தனர்.
“”ஏய் முனி… ரெண்டு டீ போடு. ஆமா… என்ன இவ்வளவு போலீஸ் நிக்குது?” விசாரித்தார் ராமசாமி.
“”அதுவா… விநாயகர் சதுர்த்தி வருதில்ல. அன்னிக்கு நம்ம சாயபுமார்களும் ஊர்வலம் போறாங்களாம். அதனால, ரெண்டு பக்கமும் பிரச்னை வந்திடக் கூடாதுன்னு பாதுகாப்பு போட்டிருக்காங்களாம்,” என்று கூறினான் முனி என்ற முனிஸ்வரன்.
“”என்ன… சாயபுமார்கள் ஊர்வலம் போறாங்களா?”
“”ஏம்ப்பா காதர், என்ன ஊர்வலம்?”
“”தெரியலியே… இப்ப முனி சொல்லித்தான் எனக்கே தெரியுது.”
“”ஆனா… இது ரெண்டு பக்க மக்களுக்கும் நல்லதில்லையே.”
“”ஆமா… அதைத்தான் நானும் யோசிக்கிறேன்.”
“”சரி… டீயைக் குடி… அப்புறம் பார்க்கலாம்.”
இருவரும் டீ குடித்து, முனியிடம் காசு தந்து, கலைந்தனர்.
“”என்ன காதர், ஊர்வலத்தைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”
“”ஆமா… இந்த வாலிபப் புள்ளைங்க, புதுசா ஏதோ ஏற்பாடு செய்றாங்களாம்.”
“”வேற ஒருநாள் வச்சுக்கிட்டா என்ன?”
“”வைக்கலாம். ஆனா, விநாயகர் சதுர்த்திய மாத்தினா என்னன்னு கேட்கிறாங்கப்பா.”
“”அதெப்படி, காலங்காலமா நடக்கிறத எப்படி மாத்துறது?”
“”இதுவும் அப்படித்தானே!”
“”ஊர்வலம் புதுசு தானே!”
“”ஆமா… ஆனா, இந்த பசங்க பிடிவாதமா இருக்கிறாங்களே!”
“”யாரும் எதுவும் நடத்தட்டும். பிரச்னை வராம இருந்தா சரிதான்,” ராமசாமி பொதுவாய் சொன்னார்.
காளி கோவிலின் பின்னே அரசமரத்தடி—
ஊர் மக்கள் கூடி இருந்தனர். நடுவில் இருந்தார் நாட்டாமை வேலு. பார்வையால், “என்ன?’ என்றார். துரைசிங்கம் முன் வந்தான்.
“”எல்லாருக்கும் வணக்கமுங்க. விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு, நம்ம ஊரு சாயபுமார்களும் ஊர்வலம் வர்றாங்க. அதுக்காக, சென்னையிலிருந்து அவுங்க பக்கத்து ஜனங்கள கூட்டியாறாங்க. நம்ம ஜனங்களுக்கு பாதுகாப்பு வேணுமுங்க. அதுக்காக, வெளியூர்ல இருக்கிற, நம்ம ஜாதி ஜனங்கள கூப்பிட, ஊர் அனுமதி வேணுமுங்கோ.”
“”நம்ம சாயபுமார்களால என்ன பிரச்னை வந்திடப் போகுது?”
“”நம்மளப் புரியாத ஜனங்க வெளியூர்லயிருந்து வர்றாங்க. இங்க நாம அண்ணன், தம்பியா இருக்கிறது, அவுங்களுக்குத் தெரியாது. எதுனா பிரச்னை வரலாமுங்க.”
“”சரி… நம்ம ஜனங்க பாதுகாப்புக்காக, 200 பேரை கூட்டிவர, இந்த பஞ்சாயத்து அனுமதிக்குது. நான் உத்தரவு வாங்கிக்கறேன்,” தீர்ப்பை அறிவித்து விட்டு எழுந்து சென்றார் நாட்டாமை வேலு.
சென்னை —
இஸ்லாமியர் இளைஞர் இயக்க அலுவலகம்.
நிர்வாகிகள் கூடியிருந்தனர்.
“”ஊர்வலத்துக்கு பர்மிஷன் கிடைச்சுதா?”
“”ரொம்ப கஷ்டப்பட்டு தான் வாங்க முடிஞ்சது.”
“”ஏன்?”
“”அதே தினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் இருக்கு.”
“”அவங்க தான் வருடா வருடம் நடத்துறாங்களே. நாம இப்பத்தானே புதுசா நடத்தப் போறோம்.”
“”அதைச் சொல்லித் தான் வாங்கியிருக்கிறோம்.”
“”அவங்க ஊர்வலம் எப்போ?”
“”மாலை 3:00 முதல் 4:00 மணி வரை.”
“”நமக்கு…”
“”மாலை 4:00 முதல் 5:00 மணி வரை.”
“”சரி எதுக்கும் இளைஞர் மன்றத்திலேர்ந்து ஒரு, 500 பேரை ரெடி பண்ணுங்க.”
சென்னையில் உள்ள இயக்கத் தலைவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார் காதர்.
“”நான் ஊர்லயிருந்து காதர் பேசுறேன்.”
“”சொல்லுங்க மாமு, நான் ஜாபிர்.”
“”யாரைக் கேட்டு ஊர்வலத்துக்கு முடிவு பண்ணுனீங்க?”
“”மன்றப் புள்ளைங்க விருப்பப்பட்டாங்க.”
“”ஊர்ல எங்கள கேட்க வேணாமா?”
“”நல்ல விஷயம் தானே!”
“”நல்ல விஷயம் தான். நம்ம ஊருக்கு நல்ல விஷயமான்னு ஊர்லயிருக்கிற நாங்க தானே சொல்லணும்.”
“”என்ன சொல்றீங்க மாமு!”
“”தாயா புள்ளயா பழகிக் கிடக்கிற ரெண்டு பக்கச் ஜனங்களும், இந்த ஊர்வலத்தால பிரிஞ்சுடுவாங்களோன்னு பயப்படுறோம்.”
“”ஏன் மாமு?”
“”ஊர்ல இப்பவே அதிரடிப்படையை கொண்டு வந்து இறக்கியாச்சு, இந்து சகோதரர்கள், அவங்க பாதுகாப்புக்கு பக்கத்து கிராமங்களிலேர்ந்து ஆட்கள கூப்பிட போறாங்க, நீங்க வேற, உங்க மன்றத்துப் பசங்கள திரட்டுறதா கேள்விப்பட்டேன்.”
“”ஊர்வலத்துக்குத் தானே!”
“”முதல்ல ஊர்வலம். அதுல பிரச்னையாச்சுன்னா கலவரம்.”
“”அப்படி எல்லாம் ஒண்ணும் வராது.”
“”உன்னால உறுதி தர முடியுமா?”
“”அதெப்படி?”
“”அப்ப… இது வேணாம்.”
“”எது?”
“”இந்த ஊர்வலம்!”
“”அது நம்மளோட கவுரவ பிரச்னை.”
“”ஒரு மண்ணும் இல்லே.”
“”ரொம்ப கஷ்டப்பட்டு அனுமதி வாங்கியிருக்கிறோம்.”
“”அதை விட கூடுதலா கஷ்டப்பட்டு இதை நிறுத்தணும்.”
“”மன்றத்துப் பிள்ளைங்க ஒத்துப்பாங்களான்னு தெரியலியே.”
“”அதை அப்புறம் பார்க்கலாம். முதல்ல சென்னையில் உள்ள தலைமை இமாம் கிட்ட பேச ஏற்பாடு செய்.”
“”இதோ ஐந்து நிமிடத்தில ஏற்பாடு செய்திடுறேன்.”
ஐந்து நிமிடம் கடந்த பின்…
“”மாமு, இமாம் லைனில் இருக்கிறாங்க… பேசுங்க.”
“”அஸ்லாமு அலைக்கும்!”
“”வஅலைக்கும் முஸ்ஸலாம். என்ன விஷயம்?”
“”ஊர்வலத்துல மார்க்கத்து அனுமதியிருக்கா?”
“”நம்ம நாட்டில ஒற்றுமையைக் காட்டறதுக்காகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊர்வலம் போறது வழக்கம் தானே… இதை மார்க்க அடிப்படையில் ஏன் பார்க்கணும்?”
“”நபி பிறந்த நாளுக்காக ஊர்வலம் போலாமா?”
“”நபி பிறந்த நாளை, நபி விரும்புற மாதிரி தான் கொண்டாடணும்.”
“”ஆனா, மிலாது விழாவில் ஊர்வலம் ஏற்பாடு பண்றாங்களே!”
“”அது நம்ம சமுகத்தோட ஒற்றுமையைக் காட்டறதுக்காக இருக்கலாமில்லையா?”
“”அதிலே பிரச்னை வந்திச்சின்னா?”
“”என்ன சொல்றீங்க?”
“”ஊர்வலத்தினாலே ஒற்றுமையா இருந்த இரண்டு சமூகம் ரெண்டு பட்டா தப்பில்லையா?”
“”தப்பு தான்… விளக்கமா சொல்லுங்க.”
“”பிரச்னையை உருவாக்குறது நபி வழியில்லை. பிரச்னையை தீர்க்கறது தான் நபி வழி.”
“”சரி நம்ம ஒற்றுமையைக் காட்ட வேற வழி இருக்கா?”
“”ஏன் இல்ல!”
“”அது என்ன வழி?”
“”பெருநாள் தொழுகையை, ஈத்கா திடல்ல நடத்துவோம். அதுக்கு ஒரு வழியா போயி, இன்னொரு வழியா திரும்பறது போதும். போகும் போதும் வரும் போதும் இறைவனைப் புகழ்ந்து தக்பீர் சொல்வது. இப்படி செஞ்சா நபிவழியை பின்பற்றியது மாதிரியும் இருக்கும். இயல்பா, ஒற்றுமையை காட்டுற ஊர்வலம் மாதிரியும் அமையும்.”
“”ரொம்ப நன்றி. போனை ஜாபிர்கிட்டே தாங்க.”
“”இதோ.”
“”என்னப்பா கேட்டியா?”
“”கேட்டேன் மாமு.”
“”உடனே ஊர்வலத்தை கேன்சல் பண்ணு. இங்க ஸ்டேஷன்ல நான் தகவல் சொல்லிக்கிறேன். நாம ஊர்வலத்தை பெருநாள் அன்னிக்கு வச்சுக்கலாம்.”
“”சரிங்க மாமு…”

பரபரப்பாய் செயல்பட்டார் காதர். முதலில் காவல் நிலையத்திற்கு சென்று ஊர்வலம் நடத்தப் போவதில்லை என்றார். அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல், அதிரடிப் படை, விழா முடியும் வரை இருக்கும் என்றனர். ராமசாமியை அழைத்து போய், இந்து சகோதரர்களிடம் பேசினார். அவர்கள் நம்பினாலும், உள்ளுக்குள் லேசான பயம் இருந்தது. பக்கத்து கிராம ஜனங்களை வேண்டாம் என மறுக்கவில்லை.

திருவெற்றியூர் விநாயகர் சதுர்த்தி விழா அஞ்சு கிராம மக்களின் ஊர்வலத்தோடு அமைதியாய் முடிந்தது. முஸ்லீம் ஜமா அத் சார்பில், ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஊர் தலைவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதிரடிப்படைக்கு வேலையின்றி முடிந்தது.

இரண்டு மாதம் சென்ற பின், பெருநாள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இமாமுக்கும், தலைவருக்கும் இந்து சமூகம் சார்பாக ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. பரஸ்பரம் இனிப்பையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர்.

துவக்கப்பள்ளி ஆண்டுவிழா —

மாறுவேடப் போட்டியில் அரவிந்தும், ஸ்டீபனும், ஒரு கிராமத்து டீ கடையை உருவாக்கியிருந்தனர். நீள மர பென்ச் இருந்தது. “”ரெண்டு டீ போடு,” காதர் வேடத்தில் இருந்த அரவிந்த் சொல்ல, ராமசாமி வேடத்தில் இருந்த ஸ்டீபன் சிரித்துக் கொண்டே வந்து அமர்ந்தான். மேடையில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலும் இவர்கள் வேண்டும் என பார்வையாளர்கள் பிரார்த்தித்தனர்.

- ஜனவரி 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
ரீமா
கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத். ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க அறிஞர்கள், இமாம் என, எல்லாரும் கூடியிருந்தனர். பள்ளிவாசல் கணக்குப் பிள்ளை மைதீன், வழக்கின் சாராம்சத்தைப் பார்த்தார். வடக்கு ஜமாஅத்தைச் சார்ந்த பொறியாளர் ஷம்சுதீன்; வயது ...
மேலும் கதையை படிக்க...
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே இருந்தது. நான்கு தெருக்களில் முஸ்லிம்களும், இரண்டு தெருக்களில் இந்துப் பெருமக்களும், மீதி இரண்டு தெருக்களில் சமத்துவபுரம் போல் முஸ்லிம், இந்து, ...
மேலும் கதையை படிக்க...
பக்ரீத் விருந்து
""வாப்பா எங்கே?'' கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அன்வர். ""வந்ததும் வராததுமா ஏன் கேட்கிறே... பின்னால தோப்பிலே நிக்கிறாக...'' என்று சொல்லிவிட்டு, வேலையில் மூழ்கினாள் ஸாலிஹா. அன்வர் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன். வீட்டின் ஒரே பிள்ளை; வாப்பாவிற்கு செல்லப்பிள்ளை. அவன் என்ன கேட்டாலும், ...
மேலும் கதையை படிக்க...
முதல் அழைப்பு
இமாம் ஸலா ஹுத்தீன், ஈசிசேரில் சாய்ந்தார்; மனைவி ராஹிலா, பக்கத்தில் கிடந்த சேரில் அமர்ந்தாள். என்ன என்பது போல் இமாம் பார்த்தார். ""நம்ம பையனுக்கு நிறைய வரன்கள் வருது. ஏதாவது ஒண்ணு பார்த்துட்டா நல்லது.'' ""எங்கேயிருந்து?'' ""உங்க தங்கச்சி மகள், என்னோட அண்ணன் மகள், ...
மேலும் கதையை படிக்க...
ஆணென்ன? பெண்ணென்ன?
""வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!'' - எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார்.""இது என் மகள் வீடு... நான் வர்றத எந்த நாயும் தடுக்க முடியாது...'' - ஐம்பது வயது, இரட்டை நாடி கொண்ட ரைஹானா, பதிலுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ரீமா
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
பக்ரீத் விருந்து
முதல் அழைப்பு
ஆணென்ன? பெண்ணென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)