உலகை மாற்றும் திறனாளி!

 

சாந்தியின் அன்பு மகன் மோகனுக்கு அவனுடைய மூன்றாவது வயசிலேயே போலியோ தாக்கப்பட்டு வலது கால் சூம்பிப் போய் விட்டது.

பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அது போல் தான் இந்த ஊனமும்! யாரும் விரும்பி ஊனம் அடைவதில்லை! பிறப்பால், விபத்தால், வியாதியால் ஊனம் ஏற்பட்டு விடுகிறது!

இதை குழந்தை மோகனுக்குப் புரிய வைத்து, அவனுக்கு தன்னம்பிக்கையை எப்படி ஊட்டுவது என்றே ஒரே சிந்தனை தான் சாந்திக்கு!

சாந்தியின் கணவன் சரவணன் குழந்தை மோகனுக்கு இரண்டு வயசு இருக்கும் பொழுது ஒரு சாலை விபத்தில் உயிர் இழந்து விட்டான். அதன் பின் மோகனையும், அவர்களின் பம்ப் செட் தயாரிக்கும் தொழிற்சாலையையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிர்பந்தம் சாந்திக்கு வந்து விட்டது

கணவன் பிரிவுக்குப் பின் சாந்திக்கு கவலைப் படக் கூட நேரம் இல்லை! ஒரு நாள் மோகனுக்கு சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை! வயிற்றால் போனது! அதை கட்டுப் படுத்த ஒரு மாத்திரையைக் கொடுத்து, அவனின் டிராயரைக் கழட்டி கழிவறையில் உட்கார வைத்து விட்டு, சாந்தி சமையலறைக்கு ஒரு வேலையாகப் போனாள்.

“டமார்!…” என்ற பெரிய ஓசை முதலில் கேட்டது.

அதைத் தொடர்ந்து “ ஐயோ!…அம்மா!….” என்ற அலறல் ‘டாய்லெட்’டிலிருந்து வந்தது!

விழுந்தடித்துக் கொண்டு சாந்தி டாய்லெட்டிற்கு ஓடிப் போய் பார்த்தாள்,

பக்கெட்டிலிருந்த தண்ணீரை மக்கில் எடுக்க முயற்சி செய்த பொழுது எப்படியோ வழுக்கி டாய்லெட்டில் குப்புற விழுந்து கிடந்தான் மோகன்.

அவன் உடல் முழுவதும் சிறு சிறு கட்டியாக சிதறிக் கிடந்த துர் நாற்றத்தோடு கூடிய மலம் ஒட்டிக் கொண்டிருந்தது. சாந்தி பக்கத்தில் வந்தவுடன் மோகன் அழுது கொண்டு அம்மாவைக் கட்டிக் கொண்டான். அவன் கைகளிலிருந்த மலம் சாந்தியின் சேலை ரவிக்கை எல்லாம் ஒட்டிக் கொண்டது.

மோகனின் மேல் சட்டையைக் கழற்றி குளியலறைக்கு கூட்டிக் கொண்டு போய் சுத்தம் செய்து அவனை சாந்தி சமாதானப் படுத்தினாள்.

அவள் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் இது போன்ற சந்தர்ப்பங்கள் தனக்கு வரும் பொழுதெல்லாம், தன் மனசு தளராமல் இருக்கும் பக்குவத்தை மட்டும் தந்தால் போதும் என்று தான் எப்பொழுதும் வேண்டிக் கொள்வாள்!

ஊனமுற்றவர்களுக்கு எந்த நேரமும் கூடுதல் கவனத்தோடு மற்றவர்கள் உதவி தேவைப் படும்! அவர்களுக்கு மிக வேண்டியவர்கள் உடனிருந்து அவர்கள் மனசு கோணாமல் அந்த உதவிகளைச் செய்தால் தான், அவர்கள் மனசும் ஊனமாகாமல் இருக்கும்! நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் நிறைய கதைகள் சொல்வாள் சாந்தி.. அத்தனையும் தன்னம்பிக்கை கதைகளாக இருக்கும்!

மோகனுக்கு ஐந்து வயசு வரும் பொழுது, அருகில் இருக்கும் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தாள். பொறுப்பாக அவனை மட்டும் கூட்டிக் கொண்டு வர தனியாக ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து விட்டாள்.

மோகன் எட்டாவது வகுப்புக்கு வந்து விட்டான். ஓடியாடி விளையாட முடியாத மோகன் மற்ற குழந்தைகளைப் பார்த்து சோர்ந்து போய் விடாமல் இருக்க, அவனுக்கு நல்ல கதைப் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வத்தை ஊட்டினாள் சாந்தி. நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்கள் டி.வி. யில் போட்டால், மோகனை தன் பக்கத்தில் உட்கார வைத்து சாந்தி சினிமாப் பார்ப்பது வழக்கம். அன்று டி.வி. யில் மயூரி சினிமா போட்டிருந்தார்கள்!

மோகன் சாந்தி பக்கத்தில் உட்கார்ந்து ஆர்வத்தோடு சினிமா பார்த்து கொண்டிருந்தான். படம் அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டது!

“அம்மா! அந்த நடிகை ரொம்ப அருமையா டான்ஸ் ஆடறாங்கம்மா!.”.. “அப்படியா மோகன் நான் இன்னும் ஒரு விஷயத்தை சொன்னா நீ ஆச்சரியப் பட்டு விடுவாய்!”

“ அப்படி என்னம்மா விஷயம்?…”

“ ….அந்த நடிகைக்கு வலது காலே இல்லே!…”

“ என்னம்மா…நம்புகிற மாதிரி சொல்லுங்க!….எனக்கும் தான் வலது கால் இல்லே! என்னால் உங்க துணையில்லாமே டாய்லெட் கூட போக முடியலே!.. அப்படியிருக்க யாராவது டான்ஸ் ஆட முடியுமா?…”

“ அவங்களுக்கு நாட்டியம் என்றால் உசுரு…அதில் சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாங்க… ஆனா சின்ன வயசிலேயே ஓரு அறுவை சிகிட்சையிலே அவரது வலது காலை எடுத்திட்டாங்க… அதற்காக அவர் தன் லட்சியத்தை கை விட்டு விடலே!…ஒரு செயற்கை காலை பொருத்திக் கொண்டு வலியோடு அந்தக் கடினமான நாட்டியப் பயிற்சியைத் தொடர்ந்தாங்க…இப்ப சாதனையும் படைத்துக் காட்டி விட்டாங்க!….”

“ எப்படியம்மா அது முடிந்தது?….”

“ ஒரு மனிதனுக்கும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்து விட்டால் இந்த ஊனம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லே!…நினைத்ததை எல்லாம் சாதிக்க முடியும்!..”

“அப்ப என்னால் கூட முடியுமா..அம்மா?…”

“நிச்சயம் முடியும்! தன்னம்பிக்கையோடு விடா முயற்சி செய்தால், நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே எதிர்காலத்தில் ஆகி விடுவாய்! தன்னம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்த ஊனம் எல்லாம் தூசு மாதிரி….முடியும் என்றால் முடியாதது எதுவுமே இல்லை…ஊதி தள்ளி விட்டு போய் விடலாம்!..”

“நிஜமாத் தான் நீங்க சொல்லறீங்களா அம்மா!…என்னால் உங்க உதவி இல்லாம இன்று வரை எதையும் செய்ய முடிவதில்லையே!..”

“ ஊனமுற்றவர்கள் எல்லோருமே தங்கள் இயலாமையால் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை என்பது முதல் தடை! அடுத்த தடை சமுதாயம் ஊனமுற்றவர்கள் மேல் காட்டும் அலட்சியம் என்ற தடை!….இந்த இரண்டையும் நீ கடந்து விட்டால் உன் வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்து விடும்! ..நம்மை உருவாக்குவது நம் மனமே!…தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் மற்ற தடைகளை எல்லாம் விடா முயற்சியால் கடந்து விடலாம்!…”

“ இப்பத் தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது!…நான் கூட எதிர் காலத்தில் ஒரு சாதனை மனிதன் ஆகி விடுவேன்! ….”

என்று உற்சாகமாகச் சொல்லிய மோகன் ஆரோக்கியமாக இருந்த தன் இடது காலில் எழுந்து நின்று கொண்டு, ஹாலில் இருந்து அவன் படுக்கையறைக்கு ஒரே காலில் தாவித் தாவிப் போனான்!

அன்று தான் மோகன் தன் ஒரே காலில் தாவித் தாவி குதித்து யார் உதவியும் இல்லாமல் அவனே தன் படுக்கையறைக்குப் போயிருக்கிறான்!

தன் மகன் ஊனமுற்றவர்களுக்கு இருக்கும் முதல் தடையை அன்று கடந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் தூங்கப் போனாள் சாந்தி.

சில வருடங்கள் நகர்ந்தன. மோகன் இப்பொழுதெல்லாம் தன் ஊனத்தை ஒரு குறையாக பொருட்படுத்துவதில்லை!

வலது கால் சூம்பிப் போனாலும், ஆண்டவன் அதன் பலத்தையும் சேர்த்து இடது காலுக்குக் கொடுத்திருக்கிறான் போலும்! ஒரே காலில் நின்று குதித்துக் குதித்து சீக்கிரமாக ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்குப் போகப் பழகி விட்டான்!

கல்லூரியில் சேர்ந்தவுடன், மூன்று சக்கரம் உள்ள பைக்கை ஓட்டிப் பழகிக் கொண்டான். சாந்தியிடம் சொல்லி அம்மாதிரி பைக் ஒன்றை விலைக்கு வாங்கித் தான் கல்லூரிக்குப் போய் வந்தான்.

பி.காம். டிகிரியில் முதல் வகுப்பில் மோகன் தேர்ச்சி அடைந்தான். அதற்கு அடுத்த ஆண்டு பொதுத் துறை வங்கிகளுக்கு ஆட்கள் எடுக்கும் தேர்வில் கலந்து கொண்டான் மோகன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு என்று 3% சதவிகிதம் இட ஒதுக்கீடு இருந்த தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், சுலபமாக மோகனுக்கு கோவையிலேயே சரவணம் பட்டியில் வேலை கிடைத்து விட்டது.

ஓய்வு நேரங்களில் சிறுகதைகள் நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு மோகன் அனுப்பிக் கொண்டே இருந்தான். அவ்வப்பொழுது, அவனுடைய சிறுகதைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், நமது நம்பிக்கை போன்ற பத்திரிகைகளில் இடம் பெற்றன,

அடுத்தடுத்து திருப்பூர் தமிழ்ச் சங்கம், கோவை ரங்கம்மாள் நினைவு அறக்கட்டளை போன்றவைகள் அவன் எழுதிய நாவல்களை சிறந்த நாவ லாகத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவப் படுத்தியது.

மாற்றுத் திறனாளிகளின் இரண்டாவது தடையாக சமூகம் அவர்களை அலட்சியப் படுத்துவதைச் சொல்வார்கள்! கற்றவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று சொல்வதைப் போல மோகனுக்கு இதே சமுதாயம் போன பக்கம் எல்லாம் மாலை போட்டு மரியாதை செய்தது!

மோகனும் சாந்தியும் அன்று ஓய்வாக உட்கார்ந்து டி.வி.யில் செய்தி அறிக்கையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நடப்பாண்டு சாகித்திய அகடாமி விருது பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அதில் தமிழ் மொழியில் மோகன் எழுதிய “அவன் மாற்றுத் திறனாளி அல்ல!….. உலகை மாற்றும் திறனாளி!…” என்ற நாவலுக்கு விருது தரப் பட்டிருப்பதாகச் சொன்னார்கள்!

சாந்திக்கு சொல்ல முடியாத சந்தோஷம்!

“ மோகன்! .உன் .வலது கால் சூம்பி போன குறை உனக்கு தெரியாமல் வளர்த்து, இந்த சமுதாயத்தில் உன்னை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அல்லும் பகலும் உனக்காகவே வாழ்ந்தேன்! என் ஆசை நிறைவேறி விட்டது மோகன்! …”

“ அம்மா! நீ எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்த தன்னம்பிக்கை, விடாமுயற்சி தமிழ் இலக்கியம் பற்றிய ஆசை! எல்லாம் என் நெஞ்சில் தேக்கு மரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது!…இன்னும் அதன் வளர்ச்சி பூர்த்தியாக வில்லை!.. அது ஒரு தொடர்கதை!,,,,இன்னும் பல பரிசுகள் வந்து குவிவதை நீ ஆசை தீரப் பார்க்கத் தான் போகிறாய்!.. என் முயற்சிகள் தொடரும் அம்மா!!…”

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் உலகில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை அன்று சாந்தி பூரணமாக உணர்ந்தாள்!

- இம்மாத நமது நம்பிக்கை இதழில் இடம் பெற்றுள்ளது 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஹலோ!....நான் ரமேஷ் பேசுகிறேன்!...நீங்க யார் பேசறது?...” “நான் உன் பால்ய சிநேகிதன் கேசவன் பேசுகிறேன்!....என்னைத் தெரியவில்லையா?...” அட!.....சின்ன வயசிலே கூடப் படித்த அந்தக் கேசவனா…ஐயோ! …அவனுக்குப் பொய் சொல்வது அல்வா சாப்பிடற மாதிரி! ...அவனிடம் எப்படி தப்பிப்பது என்று ரமேஷின் சிந்தனை ஓடியது! …. “ ...
மேலும் கதையை படிக்க...
“அருமை நாயகம் சாரா...பேசறது?....” அவர் முன் பின் கேட்டறியாத குரல்! மிகவும் பதட்டமாக இருந்தது! “ஆமாம்!....நான் அருமை நாயகம் தான் பேசறேன்!....நீங்க யார் பேசறது?....”அவருக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக்கொண்டது! “சார்!.....நா துடியலூரிலிருந்து பேசறேன்!......இங்கு நாற்சந்தியில் பத்து நிமிடத்திற்கு முன்பு, ஒரு ‘ஹீரோ ஹோண்டா’ பைக் ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகவனும், பிருந்தாவும் ஹாலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தார்கள். ராகவனின் வயசான அப்பா சுந்தரம் அன்றைய தினசரி பத்திரிகையில் வந்த பரபரப்பான ஊழல் வழக்கு தொடர்பான செய்திகளில் மூழ்கியிருந்தார். பேரன் செல்வம் அந்த நேரம் ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்தான். பிருந்தா மகனை ...
மேலும் கதையை படிக்க...
நேரு மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் வேலையை ஒரு தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைந்திருந்தது. செல்வம் காரை பார்க் செய்தவுடன், ஒரு தடித்த மனிதன் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி முப்பது ரூபாய் கேட்டான். “ என்னப்பா!...அநியாயமா இருக்கு….சைக்கிளுக்கு இரண்டு ரூபாய்…பைக்கிற்கு ஐந்து ரூபாய்…கார்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரபல டைரக்டர் மோகன் ராஜ் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் சுறுசுறுப்பாக ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிரபல எழுத்தாளர் ஜயராமன், பிரபல கேமரா மேன் சந்திரன் மற்றும் பல முதல் தர டெக்னிஷன்களும் அன்று ...
மேலும் கதையை படிக்க...
எஸ்.எம். எஸ்!
நீக்கு!
ஆரம்பம்!
திருந்தாத சமுதாயம்!
நைன் ஹீரோயின்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)