உயிர்வலி

 

யம்மா! தாங்கமுடியலம்மா, கடவுளே! எதுக்காக இன்னும் இந்த உசுர வச்சு, இப்படிச் சித்ரவதைப் படுத்தறப்பா? “ஏம்மா! ஒரேயடியாப் போய்ச்சேர்ற மாதிரி எதாச்சும் மாத்திரை மருந்து இருந்தா குடும்மா, ஒனக்குப் புண்ணியமாப் போகும்” என்று முதுகுத்தண்டில் உள்ள பிரச்சினையால், மாதக்கணக்கில் படுத்த படுக்கையாக இருந்த தணிகாசலம் நர்ஸ் வந்தபோது புலம்பியதைக் கேட்டுத் திடுக்கிட்ட பக்கத்துப் படுக்கைக்காரர் ராமசாமி, “அப்படியெல்லாம் சொல்லாதிங்க, வயசாயிட்டாலே ஒடம்புக்கு நோவு வர்றதுதான். எப்படிப் பிறப்புன்னு ஒண்ணு இருந்தா இறப்புன்னு ஒண்ணைத் தடுக்கமுடியாதோ! அது மாதிரித்தான் வயசாயிட்டா நம்ம ஒடம்புக்கு வர்ற நோவுகளையும் தடுக்க முடியாது” என்று சொன்னார். அதைக்கேட்ட தணிகாசலம், “நீங்க ரொம்ப நாளா இங்க இருக்கீங்களோ?” என்றார்.

“ஆமா! எனக்கு நுரையீரல்ல பிரச்சினை, அதுல ஒரு திரவம் தேங்கி இருக்கு, சரியா உறுப்புக்கள் வேலை செய்யாததால அத தினமும் குழாய் வழியாத்தான் எடுக்கணும். நாளடைவில சரியாயிடும்-னு டாக்டர் சொல்லியிருக்கார், என்ன… ஒண்ணு… அந்தத் திரவம் எடுக்கறப்ப, தினமும் ஒரு மணிநேரம் ஒக்காந்திருக்கலாம், பாவம்! ஒங்களால அது முடியாம படுத்த படுக்கையா இருக்கறதால கொஞ்சம் செரமமா இருக்கும். ஆனாலும் நான் ஒக்காந்திருக்குற ஒரு மணி நேரமும், அந்த திரவம் வெளில வர்றதுக்குள்ள போதும் போதும்-னு ஆயிடுது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வேதனை. எல்லாம் நல்லதுக்குத்தான், கூடிய சீக்கிரமே நாம ரெண்டுபேருமே குணமாகி வீட்டுக்குப் போயிரலாம், ஒண்ணும் கவலப்படாதீங்க தணிகாசலம்” என்று ஆறுதல் வார்த்தை கூறியது தணிகாசலத்துக்குச் சற்றுக் காயத்தில் மருந்து போட்டது போன்று இருந்தது.

இருவருமே நெடுநாட்களாக அந்த மருத்துவமனையில் படுத்த படுக்கையாகவே இருக்கக்கூடிய நோயாளிகள். தங்களது இளமைக்காலங்கள் பற்றியும், சந்தோசமான சம்பவங்கள் பற்றியும் பேசிக்கொள்வதுண்டு. தணிகாசலம், தான் மிலிடரியில் இருந்தபோது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான அனுபவங்களை ராமசாமியிடம் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதுபோல் உணர்வார்.

ராமசாமி அந்த அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னலோரத்தில் படுத்திருப்பதால், அவர் அமர்ந்திருக்கும் அந்த ஒரு மணிநேர அந்திசாயும் மாலைப்பொழுதுகளில், வெளியில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை மிகத்தெளிவாகத் தணிகாசலத்துக்கு விளக்குவார். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தணிகாசலம் வாழ்வதே அந்த ஒரு மணிநேரம்தான்.

“அதோ பக்கத்துல பச்சைப்பசேல்-னு உயரமான மலை உச்சியிலேருந்து பால்போல வெண்மை நிறத்துல ரம்மியமான ஒரு நீர் வீழ்ச்சி கொட்டுது. அதுக்குக்கீழ பாத்தா, அழகான தடாகம் ஒண்ணு இருக்கு, அதுல தாமரையும் அல்லியும் பூத்துக்குலுங்குது. அன்னங்களும், வாத்துகளும், இன்னும் ஏதேதோ வண்ண வண்ணப்பறவைகளெல்லாம் நீந்தி விளையாடுது. பக்கத்துல உள்ள பூங்காவுல அழகழகான மலர்களும் அதுல தேனெடுக்குற வண்ணத்துப்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்கூட இங்கேருந்து கண்ணுக்குத் தெளிவாத் தெரியுது. அங்கே குழந்தைங்கெல்லாம் ஓடி ஆடி விளையாடுறாங்க. அங்கங்கே இருக்குற நாற்காலிகள்ல இளம் காதல் ஜோடிங்க ஊடலும் கூடலுமா ஒக்காந்து பட்டும் படாமக் கொஞ்சிக் கொலாவிக்கிட்டுருக்காங்க. நம்மமாதிரிக் கொஞ்சம் வயசானவங்க காலார நடக்கிறாங்க. இதோ ஓய்வெடுக்கச் சூரியன் கௌம்பிட்டதால மலைக்குக் கீழ இருக்கற எல்லா வீடுகள்லயும் மின்விளக்குப் போட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அருவியோட அழகும், அதுக்குக்கீழ இருக்கற வீடுகளும், அழகழகான மின்விளக்குகளும்..அப்பப்பா! பார்க்கவே மனசுக்கு எவ்வளவு இதமாக இருக்கு தெரியுமா? இதோ வலதுபுறம் ஏதோ ஒரு ஊர்வலம் வருது, நல்ல செவிக்கினிய மங்களகரமான வாத்தியங்கள் முழங்க சீருடை அணிஞ்சபடியே நெறய பேரு வரிசையாக மிலிடரி பெரேடு போல உணர்ச்சிப்பூர்வமாக முகத்துல சந்தோசம் பொங்க நடந்து வர்றாங்க. ஒரு வேளை திருமண ஊர்வலமாக இருக்குமோ” என்று வெளியில் உள்ள பல நிகழ்வுகளை வர்ணித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் ராமசாமி.

“ராமசாமி! நீங்க சொல்றத நான் முழுசாப் இந்தப் படுக்கையிலிருந்து பாக்கமுடியாட்டியும், என்னால அத உணரமுடியுது, அந்த பெரேடுச் சத்தம் என்னோட காதுல விழாட்டியும், நான் மிலிடரில இருக்கறப்ப நடந்த அந்த பெரேடையெல்லாம் நெனச்சுப் பாத்துப் பூரிச்சுப்போறேன்” என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

வழக்கம்போல இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அப்படியே உறங்கிப்போனார்கள். மறுநாள் காலை மருந்து மாத்திரைகள் கொடுக்க வந்த நர்ஸ் ராமசாமியை எழுப்பினாள். எந்த அசைவும் இன்றி தூக்கத்திலேயே நிம்மதியாக அவர் உயிர் பிரிந்திருந்தது. நர்ஸ் மேற்கொண்டு ஆகவேண்டியதைச் செய்து, உடலை அந்தப் படுக்கையிலிருந்து அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தபோது, செய்தி அறிந்த
தணிகாசலம் உடைந்து போனார். அவருக்கென்று ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்த ராமசாமியின் பிரிவு அவரை வெகுவாகப் பாதித்தது. அடுத்தநாள் நர்ஸிடம், “என்னை அந்த ராமசாமி இருந்த ஜன்னலோரத்துல உள்ள படுக்கைக்கு மாத்துங்களேன்” என்று கேட்டதற்கிணங்க அவரை அங்கு மாற்றினர். ராமசாமி நினைவாகவே இருந்த தணிகாசலம் அவர் வெளியே பார்த்து ரசித்துத் தனக்குத் தினம் தினம் விளக்கும் அந்த அழகுமிகு காட்சியைப் பார்க்க எண்ணி, மிகவும் சிரமப்பட்டு ஒரு புறம் திரும்பித் தலையை லேசாகத் தூக்கி ஜன்னல் வழியாகப் பார்த்தார்.

ஒரு உயர்ந்த கட்டிடத்தின் வெள்ளைச் சுவரைத்தவிர, ராமசாமி விளக்கியதுபோல் அங்கு வேறு எதுவுமே இல்லை. குழம்பிப்போனவர் நர்ஸிடம் இதுவரை நடந்தவற்றையெல்லாம் கூறி, விளக்கம் கேட்டபோது அந்த நர்ஸ் சொன்னதைக்கேட்டு அவரால் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியவில்லை.

“ராமசாமிக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுங்க, அவரால அந்தச் சுவரைக்கூடப் பாக்கமுடியாது, நீங்க படுத்த படுக்கையா இருந்து வேதனைப்படுறத உணர்ந்த அவரு, ஒங்கள உற்சாகப்படுத்தறதுக்காகவும், வேதனை தெரியாம இருக்கறதுக்காகவும் தினம் தினம் அப்படிச் சொல்லியிருக்காரு. எங்க எல்லாருக்குமே அவரால எந்தத் தொந்தரவும் இல்ல, அருமையான பேஷன்ட், மரணம் கூட அவருக்கு வலி தெரியாம தூக்கத்துலயே வந்துருச்சு பாத்தீங்களா” நர்ஸும் சேர்ந்து துக்கம் தொண்டையடைக்கக் கண்ணீர் விட்டாள்.

- அக்டோபர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
(ஒரு உண்மைச்சம்பவம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்றும் தான் தனிமையில் இருப்பதை பெரிதுபடுத்தாமல், உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை நினைத்தும், சமீபத்தில் மறைந்துபோன தன் கணவரை ...
மேலும் கதையை படிக்க...
என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ ...
மேலும் கதையை படிக்க...
ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். 'ம்ம்... நல்லா அசந்து தூங்கிட்டம்பா' என்ற முனகலோடு நெட்டி ...
மேலும் கதையை படிக்க...
கிராமம்
கருவ மரம் பஸ் ஸ்டாப்
சொந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)