உன்னை நீ அறிவாயா?

 

நாம் என்ன செய்கிறோம்?…

ஏன் செய்கிறோம்…

என்ன பேசுகிறோம்…

எதனால் பேசுகிறோம் என்று உணர்வதில்லை பலர்.

ஒரு தொலைக்காட்சியில் தொடர் ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறாள்… பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்த மகள், தொடரின் காட்சியில் லயித்து மூடுகிறாள்…!

எதேச்சையாக திரும்பிய தாயின் பார்வையில் மகள் பட்டுவிடுகிறாள்…!

”ஏன்டீ சனியனே, நாளைக்கு பரீட்சை வெச்சிட்டு டி.வி. பாக்கிறியாடீ கழுதை” என்று மண்டையில் இரண்டு கொட்டு கொட்டிவிட்டு கதவை இழுத்து விடுகிறாள்.

தேர்வு நேரத்தில் தொலைக்காட்சியை சனியனும் கழுதையும் மட்டும் பார்க்கக்கூடாது என்று ஏதேனும் விதி இருக்கிறதா… குடும்பத்தில் உள்ள அனைவரும் தொலைக்காட்சியைத் தவிர்ப்பது நல்லது… தவிர்த்தால் சனியனும் கழுதையும் பார்க்காது அல்லவா… என்ன பேசுகிறோம் ஏன் பேசுகிறோம் என்பதற்கு முன்னர் என்ன பேச வேண்டும் ஏன் பேச வேண்டும் என்று சற்று சிந்தித்தால் நல்லது.

ஆல மரத்தடி அரட்டை அரங்கம்.

மாலை மங்கி இரவு அடர்த்தியாகும் வரைக்கும் நீடிக்கும்.ராமமூர்த்தியின் அரட்டை தத்துவமாகப் பொழியும்…பேச்சால் எவரையும் ஈர்த்து விடுவதோடு சிந்திக்கவும் செய்து விடுவார்…ஆனால் தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்…

”எட்டி உதைத்தால் நமது காலும் வலிக்கும்… விட்டுக் கொடுத்தால் நமது மதிப்பு உயரும்” என்று தத்துவத்தை முத்தாய்ப்பாய் அன்று பேசிவிட்டு இரவு 11 மணி வாக்கில் வீடு திரும்பினார்…

மெல்லிய விளக்கொளியில் மூலையில் பாயில் சுருண்டுப் படுத்திருந்தாள் அம்புஜம் – ராமமூர்த்தியின் மனைவி.

பழைய மேசை மீது குடிக்க நீரும், ஒரு தட்டில் சோறும். சட்டியில் ரசமும் இருந்தன.

”ஏண்டீ அம்பு வெறும் ரசம் மட்டும் வெச்சிருக்கியே… மனுசன் சாப்பிடுவானா?”

”வாய்க்கு ருசியா வேணும்னா, கையிலே காசும் இருக்கனும்… வெட்டிப் பேச்சாலே வேகாது சோறு” என்று எதிர் தத்துவம் பேசினாள் அம்புஜம்.

அறை விழுந்தது அம்புஜத்துக்கு… தண்டச்சோறு என்று சொல்லாமல் சொன்னதற்காக.

ருசியா சாப்பிட காசும் வேண்டும் என்று உணர்ந்திருந்தால், தத்துவஞானி மனைவியை அறைந்திருக்க மாட்டார். மனைவியின் சம்பாத்தியத்தில் சாப்பிட்டுவிட்டு ஆலமரத்தடியில் தத்துவம் பேசுவதற்கு முன் என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றுச் சிந்தித்திருந்தால் அம்புஜத்தை அறைந்திருக்க மாட்டார்.

சரியாக சிந்திக்காமல் செய்த செயல்கள் சில நேரங்களில் கோரமாகி விடுவதுண்டு.

விலங்குகளின் பால் கரிசனம் கொண்ட மனிதர் ஒருவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

தெரு நாய் ஒன்று புழுதியில் புரண்டு கொண்டிருந்தது.

உடம்பெல்லாம் சொறி!

“சே! என்ன மனிதர்கள்… எத்தனைப் பேர் இதைப் பார்த்துச் செல்கிறார்கள்…கருணையற்றவர்கள்… மருந்து தடவி விட்டால். நாயின் நோய் குணமாகி விடுமே… நாயும் மனிதர்களைப் போல் ஒரு ஜீவன்தானே…இரக்கம் கொண்ட மனிதன் மருந்து வாழூ;கிக் கொண்டு அந்த நாயை நோக்கி நெருங்கினான்.

தன்னை ஒரு மனிதன் தாக்க வருகிறான் என்று புரிந்து கொண்டதோ என்னவோ… நாய் அந்த மனிதனைக் கடித்து குதறி விட்டது.

என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என அந்த மனிதன் சிந்தனை செய்திருந்தால், விலங்கியல் வல்லுநர் மூலமாக நாயைக் குணமாக்க முயன்றிருப்பான்… அதனைச் செய்யாததால். அந்த மனிதன் நாயைப் போல் குரைத்து சாக நேரிட்டது.

கணவனின் நிதி நிலைமையைப் புரிந்து கொள்ளாமல், ஏகத்துக்கு செலவு வைத்தாள் மனைவி. கண்டதன் மீதெல்லாம் ஆசைப் பட்டாள். கணவன் திண்டாடினான். கடைசியில் மனைவியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் உன்னைக் கட்டிகிட்டதுக்கு ஒரு பிச்சைக்காரனைக் கட்டியிருக்கலாம்.

பார்த்தீர்களா… பிச்சைக்காரனிடம் கூட காசு இருக்கிறதாம்.

விரக்தியின் விளிம்பிலிருந்த கணவன், போய் பிச்சைக்காரனையே கட்டிக்கோ என்று எட்டி உதைத்து வெளியேத் தள்ளினான்.

சரியான சிந்தனையின்மையால் மனைவி தள்ளப்பட்டாள். சரியான சிந்தனை .இருந்திருப்பின், மனைவியைத் தள்ளாமல, மனைவியின் மனதில் குடியிருந்த பேராசையைத் தள்ள முயற்சித்திருப்பான்.

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு மாணவனிடம் கேள்வி கேட்டு அதற்கான விடைகளைச் சொல்லும்படி கூறினார். ஒரு மாணவனுக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. பிரம்பால் அடித்து விளாசிக் கத்தி கூப்பாடு போட்டார்.

பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு அடித்த ஆசிரியரை இடைநீக்கம் செய்யக் கூச்சலிட்டார்கள். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவன் சரியான கவனம் செலுத்தாததால் ஆசிரியரின் வேலை போயிற்று.

பாடம் நடத்தும் விதத்தில் குறைபாடா அல்லது மாணவனின் புரிதல் உணர்வில் குறைபாடா என்று சிந்திக்காமல் ஆசிரியர் ஆத்திரம் பட்டமையால் வேலை போயிற்று.

ஆக, சாக்ரடீஸ் சொன்னது போல முதலில் உன்னை நீ அறிவாய்…வள்ளுவன் கூற்றுப்படி எண்ணித் துணிக கருமம்…! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)