உடம்பெல்லாம் உப்புச்சீடை

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 27,870 
 

மாலை மணி 5.25. கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தேடி ஓடி, முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகளைக் கண்டுபிடிக்கவும், ரயில் வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒருமுறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.

“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப்பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய வேலை இல்லை. சாப்பாட்டுக்கூடை, தயிர் சாதத் தூக்கு, டவரா தம்ளர், வாட்டர்கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை, நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும்படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சிடுங்கோ” மனைவி தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தவண்ணம் இருந்தாள்.

பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்துச் சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். எதிர்புற லோயர் பர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும். வண்டியில் ஏறியதுமே அவசரமாகக் கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப்பட்டாள் பங்கஜம்.

குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.

“ஒரு பக்க ஜன்னல் மட்டும்தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக்கூடாது. சமத்தாயிருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப்படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

“என்னடி ஆச்சு” என்று பதறினாள் பங்கஜம். “வயதுக்கு வந்த பெண் இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா?” என்றாள். தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப்பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், தான் ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.

புதிதாக வயதுக்கு வந்த (13 வயது) பெண் எதையோ பார்த்துப் பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமே கழிவறைக்குத் தனியாகப் போகாதே. நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப்படுத்தி, அவளை அமரச் செய்து ஃப்ளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள். ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள் அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களைச் சற்று ஒதுக்கிக் கீழே வைத்து விட்டுத் தானும் அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாகத் தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.

“என்ன நீங்களெல்லாம் காசிக்குப்போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு காரியமா! ஃபில்டர் காஃபியா கும்முன்னு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம். எல்லாவற்றுக்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம். “நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

‘காசிக்குப்போனாலும் கருமம் தொலையாது’ என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர் பங்கஜமும், பட்டாபியும்.

குழந்தைகள் ரவியும் கமலாவும் வைத்த கண் வாங்காமல் எதிர்புறம் அமர்ந்திருந்த அந்த வினோத ஆசாமியைக் கண் கொட்டாமல் பார்த்த வண்ணம் இருந்தனர்.

“டேய் பசங்களா, என்ன அப்படிப் பார்க்கிறீங்க. உங்க பெயர் என்ன?” கேட்டார் அந்த வினோதப் பயணி.

“என் பெயர் ரவி. இவ பெயரு கமலா, அவ பெயரு விமலா, இது என் அப்பா, அது என் அம்மா” என்று குழந்தை, எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டு, “உங்க மூஞ்சி பூராவும் ஏன் இப்படியிருக்கு? நல்லா சோப்புப் போட்டு குளிக்க மாட்டீங்களா?” ரவி கள்ளங்கபடமில்லாமல் குழந்தைத் தனமாகக் கேட்டான்.

பலத்த சிரிப்புடன் அனைவரையும் அவர் பார்த்த பார்வை எல்லோருக்குமே ஒரு வித பயத்தை வரவழைத்தது. அவருக்கு சுமார் 75 வயதிருக்கும். உயரமான ஒல்லியான தேகம். கருத்த உருவம். பின் கழுத்துக்கு மேல் கொஞ்சமாகத் தொங்கும் நரைத்த முடிக் கற்றைகள். அதன் மேற்புறம் சந்திரபிம்பம் போன்ற வளைவு.

முகம், கழுத்து, நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும் பெரியதுமாகக் கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாகப் பார்க்கவே அருவருப்பான தோற்றம். பல் முழுவதும் காட்டி சிவந்த தாடையுடன் சிரித்தது பயங்கரமான திகில் உணர்வை ஏற்படுத்தியது. வெள்ளை வேஷ்டியும், முழுக்கை வெள்ளை நிற ஜிப்பாவும், விசிறி மடிப்புடன் ஒரு அங்கவஸ்திரமும் அணிந்திருந்ததால், நல்லவேளையாக எண்பது சதவீத கொப்புளங்கள் மூடி மறைக்கப்பட்டிருந்தன.

ரவியைத் தன் அருகே அழைத்து ஜன்னல் பக்கம் உட்கார வைத்துக் கொண்டார் அந்த சாமி. கமலாவைப்பார்த்துச் சிரித்த வண்ணம் ரவியும் தனக்கு ஜன்னல் சீட் கிடைத்ததால் படு உற்சாகமானான். இளங்கன்று பயம் அறியாது என்பது போல மெதுவாக அந்தப் பெரியவரின் வலது கைவிரலில் இருந்த ஒரு கொப்புளத்தைத் தொட்டுத் திருகிப் பார்த்தான். இதைப்பார்த்த பங்கஜத்திற்கும் பட்டாபிக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமானது. ரவியை அடிக்கக் கையை ஓங்கினர்.

“குழந்தை தானே, அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ அவனாவது என்னிடம் பிரியமாகப் பழகுகிறான். அவனையும் என்னிடமிருந்து விலக்கிடாதீங்கோ” என்றார்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மிகவும் சங்கடத்தில் நெளிந்து ரவியை முறைத்துப் பார்த்தனர். சாமி சற்றே கண்களை மூடிக்கொண்டார். சற்றே பயம் தெளிந்த விமலா அம்மாவின் புடவைத் தலைப்பிலிருந்து அடிக்கடி வெளியே எட்டிப் பார்க்க முயன்றாள். ரவிக்கு கை ஜாடை காட்டி அவன் அப்பாவும், அம்மாவும், அந்த சாமியிடமிருந்து எழுந்து தங்களிடம் வந்து அமரும்படி எவ்வளவோ கஜகர்ணம் போட்டுப்பார்த்தனர்.

ஜன்னலை விட்டு வர முடியாது என்று பிடிவாதமாகத் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியவண்ணம் அழுத்தமாக வெளிப்புறம் பார்வையைச் செலுத்தி ஓடும் மரம் செடி கொடிகளை ஆச்சர்யமாக நோக்கி வந்தான். “சரியான அடம்பிடித்தது – ஊர் வரட்டும் – கங்கையிலே ஒரே அமுக்கா அமுக்கிப்புடறேன்” கறுவிக் கொண்டாள் பங்கஜம்.

“சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர். வண்டி வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது. சாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக்கொண்டு மணியைப்பார்த்து எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது என்று சொல்லிக்கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ்க்ரீம் ரவியின் பார்வையில் பட்டு விட்டது அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான், ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது. “கமலா, கமலா, கோன் ஐஸ்க்ரீம் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

சாமி தன் இடுப்பிலிருந்து சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு’ என்று கையை நீட்டினார். ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டது போல குஷியானது. அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக்கொண்டு அம்மாவையும், அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா “தனக்கு வேண்டாம்” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்தால் நாங்கள் தான் கஷ்டப்படணும்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர், பெற்றோர்கள்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ்தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, மீதியிருந்த மற்றொரு ஐஸையும் ரவியின் மற்றொரு கையில் திணித்தார்.

பொறுமையாகப் பல்லைக் கடித்துக்கொண்டு ரவியை முறைத்துப் பார்த்தனர். விவரம் புரியாத அவனைத் தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தவேண்டும் போலத் தோன்றியது பெற்றோர்களுக்கு.

வண்டி பெரிய ஒரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

“சாப்பாட்டு மூட்டையைப் பிரிச்சுடலாமா?” பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்பக் குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக்கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே.

சாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு எதையோ எடுத்து, “இந்தாங்க ஸார் ‘ஹாஜ்மோலா’ ஆயுர்வேத மருந்து – இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார். இது பட்டாபிக்கு, பசிக்கு பதிலாகக் கடுங்கோபத்தைக் கிளப்பி விட்டது.

“ஐயா…சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள்தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்யக் காசிக்குப் போய் கொண்டு இருக்கோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச்சாப்பிடக்கூடாது. நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையைச் சோதிக்காதீங்கோ. ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில் முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப்படறோம். நீர், வேறு எங்காவது ஒத்தை சீட் காலியாக இருந்தா, மாத்திண்டு போய்ட்டாக்கூட உமக்குப் புண்ணியமா இருக்கும்” என்று பட்டாஸ¤ போல வெடிக்க ஆரம்பித்தார் பட்டாபி.

இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு மனதிற்குள் வருத்தமாக இருந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குச் செல்வது போல வெளியேறி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார்.

வெகு நேரம் வரை சாமியைக் காணாததால் சற்று நிம்மதியடைந்தனர். “ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் மெதுவாகத் தன் கணவனிடம் கேட்டாள். “அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது. கழிவறைக்குத்தான் போய் இருப்பான் – வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போ சாப்பாடு மூட்டையை அவிழ்த்தால் உடனே வந்து, அது என்ன, இது என்ன என்று கேட்டுக் கழுத்தை அறுத்து, நம்மை சாப்பிட விடாமல் சங்கடப்படுத்தி விடுவான். என்ன பண்ணித்தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைத்தானோ? நாம் பண்ணின பாவம் நம்மைக் காசி வரை துரத்துகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல் நிற்க ஆயத்தமாகி இஞ்சின் பெருமூச்சு வாங்குவது போல சப்தம் கேட்டது.

அந்த சாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தான். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்தவாறு, தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா என்பது போல இவர்களை ஒரு பார்வை பார்த்தான். அவர்கள் வேறு எங்கோ பார்ப்பது போல பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு “தம்பி, நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். கணவனும், மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது. வேண்டாம்” எனச் சொல்லி விட்டான் ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்து, பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக பயணத்தை அனுபவியுங்கள். நான் அப்பர் பெர்த்தில் போய்ப் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி எல்லா சாமான்களுடனும், மேல் தட்டுக்குக் குடிபெயர்ந்தார், அந்த சாமி.

இது தான் சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டது பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காம மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று நினைத்துக் கொண்டார்கள் பட்டாபியும் பங்கஜமும்.

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’வில் காலை டிபனும், ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ‘இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும் மெதுவாக இறங்கி, காலார நடந்து, கதவு வரைச் சென்று எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறை காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார். நாக்பூரில் மட்டும் மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழம் போட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த அவரின் கேரி பேக் இப்போது மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக்கொண்டு பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளித்தது. அவர் இரண்டொருமுறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி பார்த்திருந்தார்.

மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு அவர் தன் சொத்து பூராவும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த சாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு 10.45 க்கு ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். சாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தைச் சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். 4.50க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும் அவர்கள் அனைவரும்.

குழந்தையை ஆட்டி விடும் தொட்டிலைப்போல வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும் சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி அதை மேலும் அடிக்க விடாமல் அதன் தலையில் குட்டி ஊமையாக்கினார். லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் எழுந்து விடக்கூடும். காலை வேளையில் மீண்டும் அதன் முகத்தில் விழிக்க விருப்பமின்றி, இருட்டிலேயே தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா, பங்கஜம் உதவியுடன் ரயில் பெட்டியின் கதவு அருகில் கொண்டு போய் இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார் பட்டாபி. ரவியையும் கமலாவையும் எழுப்பிக் கொண்டு முகத்தை அலம்பித்துடைக்கவும் வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது. மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து டாக்ஸியில் ஏறி அமர்ந்தது, அந்தக் குடும்பம்.

சற்று நேரத்தில் கண் விழித்த அந்த சாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாகக் கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு முதலியவற்றை கையில் எடுத்துக்கொண்டு, செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடக் கீழே குனிந்தார். அலஹாபாத் ஸ்டேஷனிலிருந்து வாராணசிக்கு ரயில் கிளம்ப இன்னும் ஏழே நிமிடங்கள் இருந்தன.

சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று ரூம் கொடுத்து பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து, ஆகாரம் முடித்து விட்டு சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா வந்து நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படிச் செய்யணும், பிறகு காசிக்குப்போய் கங்கையின் பல்வேறு கட்டங்களில் பிண்டம் போடுவது, தம்பதி பூஜை செய்வது, காசி விஸ்வநாதர் தரிஸனம், காலபைரவர் கோவிலுக்குப்போய் காசிக் கயிறு கட்டுவது, கங்கைச்சொம்பில் நீர் அடைத்து சீல் செய்வது, அதன் பிறகு கயாவுக்குப் போய் கயா ஸ்ரார்த்தம் முதலியன செய்வது பற்றியெல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய நித்யப்படி பூஜை செய்யச் சென்றார் சங்கரமடத்து சாஸ்திரிகள்.

பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக்கொதிப்பு உச்ச நிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி கொண்டு வரப்படவில்லை.

சென்னையில் தூக்கி வர முடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்பொழுது ரயிலில் வரும்போது பங்கஜத்தால், எளிதில் தூக்குமாறு இரண்டாக மாற்றப்பட்டதால், சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை என ஒருவர் மேல் ஒருவர் பழிபோட்டுக் கொண்டனர்.

குழந்தைகள் ரவியும், கமலாவும் மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவற்றின் முதுகில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி அடிக்க பசு தன் வாலைச் சுழட்டி அடிப்பதையும் காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருந்ததையும் ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கினர். விமலா மட்டும் பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றாமல் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

கைநிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு உள்ளது. ரயிலில் தவற விட்ட தன் தகப்பனாரின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்க முடியுமா? ஆர்டர் கொடுத்து வரவழைக்கத்தான் முடியுமா? ஒரு டாக்ஸி பிடித்து வாரணாசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துப் போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒரு வேளை உடைத்திருப்பார்களோ?

எதற்காகக் காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் மனது பித்துப் பிடித்தாற்போல ஆகி தவியாய்த் தவித்தது. எப்படியும் போய் பார்த்து விட்டு வந்து விடவேண்டும் என்று தீர்மானித்து, ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக்கொண்டு கிளம்பத் தயாராகி விட்டார், பட்டாபி.

“பூஜை அறையிலிருந்து சங்கரமட சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பயணத்தைச் சற்றே ஒத்தி வைத்தாள், பங்கஜம்.

பூஜையை முடித்துக்கொண்டு வெளியே வந்த சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல இவர்கள் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

“ரயிலில் கோன் ஐஸ் வாங்கித்தந்த உப்புச்சீடைத் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” என கமலாவும், ரவியும் விமலாவிடம் சொல்ல உள்ளே ஓடி வந்தனர்.

“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு கணும். உட்காருங்கோ” என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி சுழல விட்டு, தன் மேல் அங்க வஸ்திரத்தை, மிகவும் பெளவ்யமாக இடுப்பில் சுற்றிக்கொண்டு, சாஷ்டாங்கமாக வந்தவரை நமஸ்கரித்தார், சங்கரமட சாஸ்திரிகள்.

வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிரயாணி) தான். அவர் கையில் அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல். பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்ன!

அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது. அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த மனுஷன் கையால் தூக்கி வரும்படி கிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது.

“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாதரக்க்ஷகளை (செருப்புக்களை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது. உங்களுடைய பொருளாகத்தான் இருக்கும். இங்கு எங்கேயாவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன். நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன். நல்ல வேளையாக அதிக சிரமம் இல்லாமல் உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார். கைநடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி. அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதைக் கேள்விப்பட்ட அவர், அதை தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புற கிணற்றடிக்குச் சென்றார்.

அதற்குள் அவருடைய அருமை பெருமைகளை மடத்து சாஸ்திரிகள் இவர்களுக்கு விளக்க ஆரம்பித்தார்.

“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப்போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மகான் – எங்கள் குருநாதர் அவர். விளையாட்டுக்குக் கூட பொய் பேசாதவர். கோபமே படாத குழந்தை போன்ற தங்கமான மனஸ¤.

அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கத்திலே காவேரிக் கரையோரம் ஏதோ ஒரு கிராமம். பல தலைமுறையா வேதம் படித்த குடும்பம். வேதத்தை ரக்க்ஷிக்கும் பரம்பரையில் வந்தவர். சங்கர மடத்து ஆச்சார்யாள் ஆக்ஞைப்படி கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார். இந்த கங்கைக் கரைப்பக்கம் இவாளைத் தெரியாதவாளே கிடையாது.

வேதம் படித்து முடித்தவர்களுக்கெல்லாம் ‘வித்வத் சதஸ்’ ன்னு ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவர் தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி இருந்து, வேதத்தை தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவர். ஒரு ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும், ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதும் பிரார்த்திப்பவர்.

நான் அவாளிடம் வேதம் படிக்கும் போது மிகவும் தேஜஸ¤டன் அழகாக மினு மினுப்பாக இருப்பார்” எனச் சொல்லி, தான் அவருடன் பாட சாலையில் எடுத்துக்கொண்ட போட்டோவைக் காட்டினார்.

“ஏதோ ஒரு பூர்வஜன்ம பாவம், இது போல அவருடைய வெளித் தோற்றத்தை இப்போது ஆக்கியுள்ளது” என வருத்தத்துடன் சொல்லி முடித்தார். யாரோ சாட்டையால் தன்னை அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.

ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான் ரவி. அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த பட்டாபி பங்கஜம் தம்பதிகளின் கண்ணீர் அவரின் பாதத்தை நனைத்துக்கொண்டிருந்தது.

“மாமா, என்னை மன்னிக்கணும். ரயிலிலே வரும் போது உங்கள் மகத்துவம் தெரியாமல் ஏதேதோ வாய்க்கு வந்த படியெல்லாம் பேசி விட்டேன். பாவத்தைப் போக்க வந்த இடத்தில், மேலும் பாவத்தை சம்பாதித்து மகாபாவியாகி விட்டேன். தயவு செய்து இந்த மிகச்சிறிய தொகை ரூபாய் பத்தாயிரத்தை தாங்கள் ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் சற்று ஆறுதல் அடையும். தயவுசெய்து ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி இரு கன்னங்களிலும் தன் கைகளால் அறைந்து கொண்டார் பட்டாபி.

“இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதற்குப் பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப்பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ! இந்த ஊரிலே உள்ள பாடசாலையில் சுமார் ஐம்பது வித்யார்த்திகள் (வேதம் படித்து வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்) குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்னானம் செய்தால், எல்லா பாவமும் விலகி விடும். சகல க்ஷேமமும் ஏற்படும்” என ஆசீர்வதித்தார்.

அந்தப்பெரியவரை உற்றுநோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில், “கருணைக் கடலாம் காஞ்சி மஹா முனிவர்” ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.

அழகிய உடலோ,
அருவருப்பான உடலோ,
உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்,
அழுகக்கூடிய, நாறக்கூடிய,
அப்புறப்படுத்த வேண்டிய,
பொருளாகி விடுகிறது.

அதை
எரிக்க வேண்டிய அவசரமும்,
அவசியமும், நிர்பந்தமும்
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்
அழகும் இல்லை,
அருவருப்பும் இல்லை.
சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாய்ப் போற்றப்படுகிறது.

பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது பட்டாபிக்கு.

– ஜூலை 2007

Print Friendly, PDF & Email

1 thought on “உடம்பெல்லாம் உப்புச்சீடை

  1. கதை மிக அருமை .யதார்த்தம் .ஆனால் மனித சாம்பலை ரயிலில் கொண்டு செல்ல சில விதிமுறைகள் உண்டு .அப்படியே நம்முடன் கொண்டு செல்ல முடியாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *