உடன் பிறப்பு

 

அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி அறிவதற்கு அவனுக்குச் சில காலம் எடுத்தது. அந்தப் பேய் உடன் இருப்பதே தெரியாத ஆரம்பக் காலம். அது குறைவில்லாத மகிழ்வோடு இருந்த காலம். அவன் சின்னச் சின்ன சிலுமிசங்கள் செய்தாலும் அவனால் அப்போது பெரும் ஆக்கினை இல்லை.

காலம் மாறியது. இயற்கை சில விசயங்களில் கருணை அற்றுக் கறாராக இருக்கிறது. காலத்தின் அடிபணியாச் சுழற்சியில் அந்த உடன் பிறந்த பேயின் பிரசன்னம் அவனுக்குச் சிறிது சிறிதாகத் தெளிவாகத் தொடங்கியது. அதன் இம்சை அதிகரித்தது. உடன் பிறந்த, அவனை விட்டுப் பிரிக்க முடியாத, பிரிந்து போக விரும்பாத அந்தப் பேயின் பிரசன்னமும் அவனுக்கு அவ்வப்போது இன்பம் தந்தது என்பது வேறு ஒரு கதை. அவனோடு இருப்பது நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல இன்பத்தையும், துன்பத்தையும் தரவல்லது. அவனுக்கு அது நித்திய வரமும் சாபமும் போல.

இப்படியாக அவனும் அவனது உடன் பிறந்த பேயும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகப் பாலர் பருவத்தைப் பின்தள்ளி பள்ளிப் பருவத்தின் இறுதியை வந்து அடைந்தனர். இப்போது அவனின் பிரசன்னம் எங்கு சென்றாலும், எப்போதும், எதிலும் இடைவிடாது அவனுடன் நிழலாகத் தொடர்கிறது. அந்தப் பேய் சும்மாய் இருப்பதும் இல்லை, சொன்ன சொல்லை கேட்பதும் இல்லை. அந்தப் பேயை விட்டு அவனால் விலகி வாழ முடியுமா என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. அவனை விட்டு விலகிய வாழ்வு எப்படி இருக்கும் என்கின்ற கற்பனை அவனுக்குத் தித்திக்கவில்லை. வாழ்வின் சுவாரசியமே அந்தப் பேயுடன் சேர்ந்து இருப்பது அல்லவா என்று சில வேளை அவனுக்கு எண்ணத் தோன்றுகிறது. வாழ்வில் அமைதி பெற வேண்டும் என்றால் அவனை விட்டுப் பிரிந்து எங்காவது தொலைந்து போக வேண்டும் என்பதும் அவனுக்கு விளங்குகிறது. இவன் போன்ற சகோதரப் பேய்களைப் பிரிந்தவர்கள் தான் அமைதி பெறுவதாக் கூறுகின்றனர். அந்தப் பேயைப் பிரிய வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றும். அடுத்த கணமே அந்தப் பேயைப் பிரிய முடியாது என்கின்ற பாசமும் வேதனையான உண்மையும் விளங்கும். அதுவே மனித வாழ்வின் போராட்டம் ஆகும். அந்தப் பேயைப் பிரிந்தால் அது சுவாரசியம் அற்ற பிண வாழ்க்கை ஆகிவிடும் என்று அவனுக்குத் தோன்றும். அவனோடான இருப்பு என்பது சேர்ந்து இருக்கவும் வேண்டும் அதேவேளைச் சேர்ந்து இருக்கவும் முடியாது என்கின்ற இரட்டை நிலை என்று அவன் உணர்ந்தான். அந்தப் பேய் என்றும் நிழலாக அவனைத் தொடர்கிறது. அதன் கைவசப்பட்டவனாய், எசமானின் உணவாகப் போகும் ஆட்டு மந்தை போல, அகப்பட்டுக் கொண்ட அவன் வாழ்வு அவனுக்கு விளங்குகிறது.

அன்று மாலை அப்படித்தான் நடந்தது. தேவி இரவுச் சாப்பாட்டிற்கு அவனை வரச் சொன்னாள். அவள் அவனோடு கல்லூரி செல்லும் தோழி. அதனால் பழக்கம். அவன் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. துறம்சோவில் தாய் தகப்பனோடு வாசித்து வந்த அவள் ஒஸ்லோவிற்குப் மேற்படிப்பு படிக்க வந்திருக்கிறாள். அவளுக்கும் தனிமை. அதனால் அவர்களுக்குள் நட்பு. அதில் அவள் மிகவும் உறுதி. இந்தப் பேய் அவனோடு எப்போதும் அலைவதால் அவளின் வீட்டிற்கும் அவனோடு சென்றது. இந்தப் பேய் தன்னோடு அவள் வீட்டிற்கும் வருவது பற்றி அவனுக்குக் கலக்கமாய் இருந்தாலும் இந்தப் பேயை வர வேண்டாம் என்று அவனால் சொல்ல முடியவில்லை. சொன்னாலும் அது அவன் சொற் கேட்காது என்பதும் அவனுக்கு நன்கு தெரியும்.

அவள் அடுக்குமாடி ஒன்றில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தாள். படிப்பதற்குக் கொடுக்கும் கடன் பணம் இப்படி வசதியாக வாழ்வதற்கு இப்போது ஒஸ்லோவில் போதாது. தாய் தகப்பன் உழைத்துச் சேமித்ததில் இருந்து உதவி செய்ய வேண்டும். எப்படியோ அவளுக்கு வசதி இருக்கிறது. அத்தோடு அது அவர்கள் பிரச்சனை என்று அவன் எண்ணினான். அவள் அப்படி வசதியாக வாழ்வது தான் உனக்கு வசதி என்று அந்தப் பேய் அவனிடம் அவிப்பிராயம் சொன்னது.

அவன் அவள் வீட்டை அடைந்தான். அவன் அவள் வீட்டின் அழைப்பு மணியைத் தேடிப் பிடித்து அழுத்தியதும் “கொஞ்சம் பொறுங்க…” என்று அவள் குரல் கொடுத்த வண்ணம் வந்து கதவைத் திறந்தாள்.

பெண்கள் தேவதைகளாகவும் பேய்களாகவும் மாறுகிறார்கள் என்று அவன் எண்ணினான். தங்களைத் தேவதைகள் ஆக்கிக் கொள்வதற்காகப் பல மணி நேரங்களைக் குளியல் அறையில் செலவிடுகிறார்கள். அதனால் ஐரோப்பிய ஆண்கள் இன்று வெற்றிகரமாகச் சமையல் அறையைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறார்கள். ஏன் தமிழர்களில் சிலரும் தான். அவள் வீட்டில் சமையல் அறையைக் கைப்பற்றுவதற்கு இன்னும் யாரும் வரவில்லை என்று எண்ணியவன் அவள் குளியல் அறையில் பல மணி நேரத்தைச் செலவு செய்திருப்பாள் என்பதை அவளைப் பார்த்த உடன் விளங்கிக் கொண்டான். சிவப்பும் வெள்ளையும் கலந்ததான பூ வண்ணங்கள் உள்ள ஒரு மேற்சட்டை. அதற்கு ஏற்ப ஒரு வெள்ளை அரைப் பாவாடை. கண்ணுக்கு மை எழுதி, இதழுக்கச் சிவப்பு எழுதி என்கின்ற பெண்களின் கைவண்ணத்தைப் பார்த்த அவனுக்கு வியப்பு மிகுதியாகிற்று. அதனால் சில கணங்கள் தன்னை மறந்து, அவள் அழகைப் பருகி, மதி மயங்கி நின்றான். “வாங்க… உள்ள வாங்க…” என்றாள் ஒளியை வாள் ஆக்கி, விளியைக் குருடாக்கிய அவள் முத்துப் பற் சிரிப்புடன். அவன் உள்ளே சென்றான். அவன் உடன் பிறப்பு எந்த அனுமதியும் இன்றி அவன் பின்னே உள்ளே சென்றது. அவன் உள்ளே சென்று அவள் காட்டிய சோபாவில் மேலங்கியை அவளிடம் கொடுத்துவிட்டு இருந்தான். அவள் மேலங்கியைக் கொளுவி விட்டு வருவதற்கச் சென்றாள். அவள் அப்படிச் செல்லும் போது அவள் அழகை அவள் அவனைப் பார்க்காத துணிவில் அவன் வெகுவாக இரசித்தான்.

ஆண், பெண், நட்பு, தனிமை என்பன ஒன்றாக அமையும் போது சமுதாய நிர்பந்தத்தை மறந்து, இயற்கை தனது குணத்தைச் சில வேளை காட்டச் செய்கிறது. அவனுக்கு ஏதோ போன்று இருந்தது. அவளைக் கட்டி அணைக்க வேண்டும் போன்றதோர் எண்ணம் வலுவாகத் தோன்றியது. அவனது எண்ணத்தை அறிந்தது போல “அதுவே சரி. அதையே செய்.” என்று அதற்கு உடன் பிறப்பும் ஊக்கம் கொடுத்தது. “போ போ.” என்று அவனை ஏவியது.

இருந்தும் அவன் எதையும் அதிரடியாகத் துணிந்து செய்து பழக்கம் இல்லாதவன். அந்தத் தயக்கம் அவனது கண்ணியத்தைக் காத்தது. திரும்பி வந்த அவள் அவனைப் பார்த்து “வயின் குடிப்பீங்களே? இல்லாட்டி கோப்பி குடிக்கப் போறீங்களே?” என்றாள். “வயினா? உங்களிட்டை அதுவும் இருக்குதா? நீங்கள் குடிப்பீங்களா?” அவன் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு பல கேள்வி கேட்டான். “ஐயே… உங்கடை புத்தியைப் பாருங்க. ஓஸ்லோவில வயின் குடிக்கிற தமிழ் பெம்பிளையளும் இருப்பினம் தான். ஆனா… எங்கடை இடத்தில அப்பிடி எல்லாம் இல்லை. நாங்கள் சிறிலங்கா மாதிரித் தான் இங்கையும் வாழுகிறம். வயின் சாப்பாடு சமைக்க வாங்கினது. நிறைய மிச்சம் இருக்குது. வேணும் எண்டா சாப்பாட்டுக்கு கொஞ்சம் குடியுங்க. என்ரை அப்பாவும் சாப்பாட்டிற்கு கொஞ்சம் குடிப்பார். சிவப்பு வயின் உடம்புக்கு நல்லது என்பார். அதுதான் கேட்டன்.” என்றாள் அவள். “அப்ப எடுத்தாங்க…” என்றான் அவன்.

வயின் பரிமாறப்பட்டது. அவள் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு உரிமையோடு அவன் அருகே வந்து இருந்து அவன் குடிப்பதை இரசித்தாள். இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த உடன் பிறப்பு “நீ ஒரு களிமண்.” என்றது. “ஏன்?” என்றான் அவன் கோபமாக. “அவளைப் பார்… இப்போது எப்படி உனக்குத் தெரிகிறாள் என்று உற்றுப் பார்?” என்றது உடன் பிறப்பு.

“முதலில் அழகியாகத் தெரிந்தவள் இப்போது வானத்துத் தேவதை மண்ணிற்கு வந்தது போலத் தெரிகிறாள்.” என்றான் அவன். “நீ ஒரு களிமண்.” என்று உடன் பிறப்பு மீண்டும் எள்ளலாக அவனைச் சாடியது. “ஏன்?” என்றான் அவன் மிகவும் கோபமாக. “களிமண் என்று சொல்லியதற்கே அர்த்தம் விளங்காத களிமண் அல்லவா நீ?” என்றது உடன் பிறப்பு. அதன் எள்ளலான பார்வை அவனைக் கொன்றது. “அதற்கு என்ன அர்த்தம்? நீ பெரிய மேதை என்கின்ற நினைப்பா உனக்கு?” என்றான் அவன். “எப்படியோ உன்னை மேய்ப்பவன் நான் தானே?. முட்டாளே! பெண்ணே உனக்கு மது ஊற்றித் தருகிறாள். அவள் கண்களே உன்னை விலகாது நோக்குகிறது. இன்னுமா விளங்கவில்லை?” என்றது உடன் பிறப்பு. “ஓ நீ அப்படிச் சொல்லுகிறாயா? என்றாலும் எனக்குத் தயக்கமாக இருக்கிறது. இங்கு வாழ்ந்தாலும் நாங்கள் தமிழர்கள் இல்லையா?” என்றான் அவன். “நிறம் என்ன? இனம் என்ன? மதம் என்ன? இயற்கை உனக்குக் கொடுத்ததை அனுபவிக்கத் தெரியாத முட்டாளா நீ?” என்றது உடன் பிறப்புக் கோபமாக. “நீ என்னை இப்படி இழித்துப் பேசாதே. நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்.” என்றான் அவன். “இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அவளை அணைத்து ஒரு முத்தம் கொடுத்து உன் மனதின் விருப்பத்தைத் தெரிவித்து விடு.” என்றது உடன் பிறப்பு.

உடன் பிறப்புக் கொடுத்த துணிவில் அவளின் முகத்தைத் தனது இரு கைகளாலும் பிடித்துத் திருப்பி தனது முகத்தை அதன் அருகே அவன் கொண்டு சென்றான். உடன் பிறப்பின் எள்ளலும், உள்ளே சென்ற மதுவும், அதீத துணிவை அவனுக்குத் தந்தது இருந்தது.

அந்தத் துணிவிற்கு அப்படி ஒரு அடி விழும் என்று அவன் நினைத்து இருக்கவில்லை. அவள் “சீ” என்ற வண்ணம் வயின் குவளையைத் தட்டிவிட்டு எழுந்தாள். அதே வேகத்தோடு போய்க் கதவைத் திறந்து பிடித்தாள். நான் ஒரு முட்டாள் என்று அவன் எண்ணினான். அவள் கொடுத்த மேலங்கியைத் தலை குனிந்த வண்ணம் வாங்கிக் கொண்டான்.

உடன் பிறப்பு கவலையோடு தலை குனிந்த வண்ணம் அவன் பின்னே பேசாது சிறிது தூரம் வந்தது. பின்பு சமாதானம் சொல்வது போல் “இவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி. நீ கவலைப்படாதே” என்றது. “உன் பேச்சுக் கேட்டு நான் அவமானப் பட்டதுதான் மிச்சம். என்னை நீ தனியே விட்டுவிட மாட்டாயா? என்னைத் தயவு செய்து தனியே என் போக்கில் விட்டு விடேன்?” என்று அவன் அதனிடம் கெஞ்சிக் கேட்டான். அதற்கு உடன் பிறப்பு தலையை நிமிர்த்திப் பலமாகச் சிரித்து விட்டு “நீ உன் உயிரை விட்டால், உன்னை விட்டு நானும், என்னை விட்டு நீயும் பிரிந்து போகலாம்.” என்றது. “நீ கொடுமை ஆனவன்.” என்றான் அவன். “நான் அல்லக் கடவுள்.” என்றது உடன் பிறப்பு.

- ஓகஸ்ட் 1, 2017 

தொடர்புடைய சிறுகதைகள்
மூர்த்தி அந்தக் கடைக்கு இரண்டு வாடிக்கையாளருடன் யோசித்த வண்ணம் புறப்பட்டான். அந்த யோசனை அவனுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. புறப்பட முன்பு, பின்பு என்று எப்போதும் அந்தக் கடைக்குப் போவதா விடுவதா என்கின்ற ஒரு யோசனை. அதனால் உண்டாகும் குழப்பம் நீண்ட ...
மேலும் கதையை படிக்க...
வினோதன் மாவெட்டையில் உள்ள தங்கள் வயலை நோக்கி அவசரமாகச் சென்றான். தப்பு ஆர்வக் கோளாற்றில் அதை நோக்கி ஓடினான். வாய்க்காலில் நீர் கரை புரண்டு கடல் நோக்கித் தீரக்காதலில் மூர்க்கமாக ஓடியது. வெள்ளை கடற்கரை, மேற்கு கடற்கரையென மழைநீரில் கொள்ளை ஆசையோடு ...
மேலும் கதையை படிக்க...
அன்று அசோகவனத்திற்கே கொண்டாட்டம். அசோகவனத்து அரக்கிகளில் காலம் தந்த பாடத்தால் பூரண மனமாற்றம். பிதற்றும் பேதை என்று எண்ணிய சீதையை அவதாரம் என்று கண்ணுற்று அசோகவனத்து அரக்கிகள் அதர்ம தடுமாற்றம் நீக்கி நியாயத்தின் மீது நிலையாக காலூன்றிய கணங்கள். அசோகவனத்திற்கு அன்னை ...
மேலும் கதையை படிக்க...
எள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது உயிரை நிறுத்தச் சுற்றியிருந்து சுற்றம் பாலூற்றவில்லை. பஞ்சில் நனைத்த ஏதோவொரு கொழுப்பு என் உதட்டில் பூசப்பட்டது. காதிற்கும், மனதிற்கும் இனிய ...
மேலும் கதையை படிக்க...
சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால் சூரியனைத் தலைக்கு மேல் வைத்ததாகக் கோபம் அவவிடம் இருந்து பீறிட்டுப் பாயும். அவவின் கோபாக்கினி தாங்கதா பல ஆண் சூரியர்கள் ...
மேலும் கதையை படிக்க...
பலசரக்குக் கடைகள்
வளையா முதுகுகள்
சீதாயனம்
புதிய ஆத்மாக்கள்
இரதியக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)