கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 7,399 
 

கொஞ்ச நாளா மணிக்கு ஒரு சந்தேகம்

“ரவி! எனக்கு ஒரு டவுட்ரா!”

“என்ன?”

“இல்லே மச்சி! நான் தினமும் ஆபிஸ் போறப்ப பார்ப்பேன்! பஸ் ஸ்டான்ட்லே அவள் என்னை பார்த்து சிரிக்கிறா மாதிரி இருக்கும்”

“ஆள் பாக்க எப்படி இருப்பா?”

“அட்டகாசமா இருப்பா! கொஞ்சம் அன்சிகா மாதிரி, கொஞ்சம் அஞ்சலி மாதிரி
பள பளன்னு”

“ஆமா! கொம்புக்கு புடவை சுத்தினாலும் ரம்பைன்னு சொல்ற வயசு. பாவம் , நீ என்ன பண்ணுவே?”

“இல்லே மாப்பிள்ளே! . இவ ரொம்ப அழகு. கண்ணை பறிக்கிற மாதிரி.”

“போதும் போதும்! வாயை துடை ! வழியறது. இது எவ்வளவு நாளா?”

“இப்போதான் ஒரு பத்து நாளா”

“சரி, இன்னிக்கு அவளை பாத்து தைரியமா பேசு. லிப்ட் கொடுக்கட்டுமான்னு கேளு”

”நானா?” – மணிக்கு கொஞ்சம் உதறல்.

“பயந்தால் ஒன்னுத்துக்கும் உதவாது. தைரியம் புருஷ லக்ஷணம்”

****

மணி ஒரு பி.ஈ. ஒரு சின்ன கம்பனியில் வேலை. இப்போது 15000 சம்பளம். அவனது ரூம்மேட் ரவி ஒரு பி.பி.ஏ. ஒரு சின்ன தொழிற்சாலையில் கணக்கெழுதும் வேலை. 12000 சம்பளம். இருவருக்குமே வயது 26. வாழ்க்கையை அனுபவிக்க துள்ளும் பருவம்.

டாஸ்மாக், டெனிம் பாண்ட், சினிமா, ஊர் சுற்றல். வருமானத்தை மீறிய செலவு செய்ய அஞ்சாத வயது. பார்த்துக் கொள்ளலாம். வட்டிக்கு தான் கடன் கிடைக்குமே? சம்பளத்தை மட்டும் அவர்கள் நம்பி இல்லையே.

****

பத்து நாள் கழித்து பார்க்கில் மணியும் லதாவும்

“லதா! என்னாலே நம்பவே முடியலே?”

“எதை மணி ?”

“நாம ரெண்டு பேரும் இவ்வளவு சீக்கிரம் பழக ஆரம்பிச்சிடுவோம்னு”

“ஆமா! மணி , நீங்க இவ்வளவு தைரியமானவரா இருப்பீங்கன்னு நான்கூட எதிர்பார்க்கலை”

“சரி! உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்னு ஆசை. என்ன வேணும்னு கேளு”

“என்ன வேணா கேக்கலாமா?”

“தாராளமா! என் தலையை அடகு வெச்சாவது வாங்கி தருவேன்”

“அதெல்லாம் வேணாம்! வேஸ்ட் ! உங்களாலே முடிஞ்சா ஒரு நல்ல தங்க சங்கிலி வாங்கி தாங்க! இப்போ நான் போட்டிருக்கிறது வெறும் கவரிங் தான்!”

“ஐயோ! என் கிட்டே அவ்வளவு பணம் இல்லியே! குறைஞ்சது ஒரு 50 ஆயிரமாவது வேணாமா?”

“சரி, பரவாயில்லே! விடுங்க! இது பெரிய விஷயம் ஒன்னும் இல்லை. ”

”இல்லே இல்லே ! சும்மா ஒரு தமாஷுக்கு சொன்னேன்! உனக்கு தெரியும்தானே, நான் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பனிலே நல்ல வேலையிலிருக்கேன். ஜஸ்ட் லைக் தட் வாங்கிடலாம். உனக்கில்லாததா?”

“இதோ பாரு மணி ! கஷ்டம்னா வேணாம்!”

”ஒரு கஷ்டமுமில்லை. அடுத்த தடவை உன்னை பாக்கச்சே, செயினோடதான் பாப்பேன்”

****

மணியும் ரவியும் அறையில்

“ரவி, லதா நெக்லஸ் வேணும்னு ஆசைப் படறா”

“என்ன மச்சி, அதுக்குள்ளே காதல் முத்தி போச்சா?”- ரவி

“அதெல்லாம் இல்லேடா! எதாவது கொடுக்கணும் போல இருக்கு. பிரஸ்டீஜ்!”

“வெட்டி பந்தா! சரி வா! போய் பாக்கலாம்! நல்லதா ப்ரெசென்ட் பண்ணு. ஜமாய்”- ரவி

“இப்பவேவா?”- மணி

“முடிவு பண்ணியாச்சுன்னா முடிச்சுடனும், கிளம்பு. இப்பவே இருட்டி போச்சு“.

“ரவி, செயின் வேண்டாண்டா, இப்பத்திக்கி ஒரு மோதிரம் வாங்கி கொடுத்திடறேன். நமக்கும் மத்த செலவு இருக்கில்லே. பின்னாடி, பாத்துக்கலாம்”

“அதுவும் சரிதான், போலாம் வா. பைக் ஸ்டார்ட் பண்ணு”

****

இரண்டு நாள் கழித்து – பார்க்கில் மணியும் லதாவும்

“லதா ! இந்தா! உனக்கு ஒரு சின்ன அன்பளிப்பு. கண்ணை மூடிக்கோ!”

“என்ன செயின் தானே?”

“இப்போ ஒரு மோதிரம் ப்ரெசென்ட் பண்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணு, ஒரு மாதத்திலே உனக்கு ஒரு செயின் காரன்ட்டீ”

மணி மோதிரம் பரிசளித்தான். “நல்லாயிருக்கா?”

“ஓ. ரொம்ப நல்லாயிருக்கு. தங்கம்தானே! மணி, நிஜம் சொல்லு !”

“பாத்தியா! என்னையே சந்தேகபடறியே! என்னோட அரை மாச சம்பளம் தெரியுமா?”

“சும்மா! தமாஷுக்கு சொன்னேன்! கோவிச்சுக்காதடா என் செல்லமே!”

****

நான்கு நாள் கழித்து – லதாவின் அலுவலகம்

“சாரி கல்பனா! உன் கழுத்து செயினை எவனோ அறுத்து கிட்டு போயிட்டானாமே! கேள்விப்பட்டேன். என்னடி ஆச்சு?” – லதா

“போனா போகட்டும் விடுடி! என் கழுத்து தப்பிச்சிதே! இருட்டிலே, ரெண்டு பேர் மோட்டார் பைக்லே வந்து அடிச்சிட்டு போயிட்டாங்க. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன்”

“எனக்கு கூட பயம்பா.”- லதா

“ஆமா லதா! நகை விஷயத்திலே நாமதான் ஜாக்கிரதையாக இருக்கணும்”

****

பத்து நாள் கழித்து

தினசரிப் பத்திரிகைகளில் நான்காம் பக்கத்தில் ஒரு செய்தி.

‘ மாலை ஐந்து மணிக்கு அமிஞ்சிக் கரையில் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து கழுத்து சங்கிலி பறிப்பு. மோட்டார் பைக்கில் வந்த இரு இளைஞர்களின் துணிகர கொள்ளை. மக்கள் அவர்களை மடக்கி, கட்டி வைத்து அடித்தனர். போலீஸ் விசாரணை.’

போலீஸ் ஸ்டேஷன்
——————————

“நல்ல வேலையிலே இருந்துகிட்டு ஏன் தான் இப்படி புத்தி போவுதோ இந்த காலத்து படிச்ச பிள்ளைங்களுக்கு” – ஏட்டு ஏகாம்பரம் திட்டிகொண்டிருந்தார்.

“இதெல்லாம், ஹார்மோன் செய்யற வேலைங்க. உருப்பட மாட்டாங்க” – கான்ஸ்டபிள் கந்தசாமி பக்க வாத்தியம்.

“தகுதிக்கு மீறி வாழ நினைச்சா, இது தான் ஆகும். இப்போ வாழ்க்கையே வீண். ”

ஜெயில் அறையில்:
—————————-

போலீஸ் அடி, உடம்பெல்லாம் வீக்கம். ஈன ஸ்வரத்தில் முனகினான் மணி. மணியும் ரவியும் இப்போது போலீஸ் கஸ்டடியில்.

“இதுக்கு தான் நான் அப்பவே அடிச்சிக்கிட்டேன் ! இந்த ஏரியா வேண்டாண்டா ! இப்போ எல்லாரும் உஷாரா இருக்காங்க. அதுவும் பகல்லே வேனாண்டான்னு. கேட்டியா? இப்போ பாரு என்ன ஆச்சி?” -மணி

“இல்லேடா !. இருந்த காசை எல்லாம், உன் டிரஸ் தண்ணின்னு செலவு பண்ணிட்டே. என் செலவுக்கு காசே இல்லே எனக்கு வேறே வழி தெரியலே! ” – ரவி

‘என்னடா அவசரம் உனக்கு? கொஞ்ச நாள் கழிச்சி, அம்பத்தூரிலே அடிசிருக்கலாமில்லே? போன தடவை நான் பண்ண மாதிரி, அடிக்கற நகையை மோதிலால் சேட் கிட்டே வித்துட்டு செலவு பண்ணியிருக்கலாம் . என் பேச்சை கேட்டாத்தானே? ” – புலம்பினான் மணி

“சாரி நண்பா!. என்னாலே தண்ணி போடாமே இருக்க முடியலே!. புரிஞ்சிக்கோ”- ரவி

“சரி, சரி, முதல்லே, நாம மாட்டாமே வெளிலே வரணும். அதுக்கு ஒரு நல்ல வக்கீல் ஏற்பாடு பண்ணியிருக்கேன், நம்ம சேட் மூலமா. கோர்ட்லே கேட்டா, இதுதான் முதல் தடவைன்னு சொல்லணும். ஓகே வா? அப்புறம், அம்மா மருந்து செலவுக்காகதான் இந்த சங்கிலி திருடினோம்னு சொல்லணும்.”

“சரி, எப்படியாவது சீக்கரம் வெளிலே போயிடனும்டா.”

“பாக்கலாம்! பொதுவா, தண்டனை ரெண்டு மூணு வருஷம் வரும். ஆனால், நம்ம படிப்பு வயசு பாத்து, வக்கீல், மிஞ்சி போனா நமக்கு ஆறு மாதம் ஜெயில் இருக்கும்னு சொன்னார். ஜட்ஜ் மனசு வெச்சா, நாம வார்னிங்கோட வெளிலே வந்துடலாமாம்”- மணி

“மச்சி! நான் முடிவு பண்ணிட்டேன். நாம படிச்ச படிப்புக்கும், தகுதிக்கும் இந்த கேவலமான வேலை வேண்டாண்டா. பிடிபட்டா, ஜனங்க பெண்டு நிமித்தறாங்க. வெளியே வந்ததும், வேறே நல்ல பிசினெஸ் பண்ணலாம்”. – ரவி

“அப்போ வேலைக்கு போக வேண்டாமா?”- மணி

“இனிமே யாரு நம்மை வேலைக்கு சேர்த்துப்பாங்க.? கற்பனை கூட பண்ணாதே. நாம ரெண்டு பெரும் பேசாம ஒரு ‘சிட் பன்ட்’ ஆரம்பிச்சிடலாம். லம்பா காசு பண்ணிடலாம்”

“நல்ல ஐடியா மச்சி. நம்ம ஜனங்க சரியான காசாசை பிடிச்சவங்க. கொண்டு கொட்டுவாங்க. திரும்ப கொடுக்கவே வேண்டாம். அப்படியே அள்ளிடலாம். அது சிட் பன்ட் இல்லே. சீட் பன்ட் ”- மணி சிரித்தான்.

“எப்பவாவது, கை அரிச்சா, ஒன்னு ரெண்டு செயின் பறிப்பு பண்ணலாம். தங்கம் மேலே ஆசைப் படர பொம்பளைங்க இருக்கற வரைக்கும் நம்ம காட்டிலே மழை தான். நீ வேணா பாரேன்! ”- ரவி

“ஆமாமா, முதல்லே நல்ல வேகமா போற பெஸ்ட் பைக் வாங்கிக்கனும்” – மணி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *