இளைஞர்களின் மனசு

 

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

வண்டி திக்கி திணறி செலவ்து போல் தோன்றியது.நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தோம். மணி நண்பகல் மூன்று மணி அளவில் இருக்கும். மதியத்தூக்கம் கண்ணைச்சுழற்றியது. பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் கம்பியை பிடித்து தூங்கி தூங்கி என் மீது விழுந்து என்னையும் தடுமாற செய்து கொண்டிருந்தார்.சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை பார்த்தேன்.அவர்கள் பாடு என்னை விட மோசமாக இருந்தது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து தூக்கத்திலேயே இருந்தனர் என்று சொல்வதை விட கிடந்தனர்.அப்ப்டியே என் பார்வையை சுழற்றினேன். நான்கைந்து சீட் தள்ளி ஒரு அறுபத்தைந்து வயது மதிக்கத்தகுந்த நபர் நிற்கமுடியாமல் தடுமாறி கொண்டிருந்தார். அவர் அருகில் உள்ள சீட்டில் இளம் வயது உடைய இரண்டு பேர் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டு வந்தனர். எனக்கு மனதில் கோபம் வந்த்தது.அவர் வயது என்ன? இந்த இளவட்டங்களின் வயது என்ன? கொஞ்சம் எழுந்து இடம் கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்.

போய் சொல்லலாம் என்று நினைத்தால் கூட்டம் நகர விடாமல் செய்தது.அந்த இளைஞர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர்கள் அந்த பெரிய மனிதரை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவரோ தடுமாறி அவர்கள் மேலே விழுந்தார். அந்த இளைஞர்களோ அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருந்தனர்.

இந்த காலத்து இளைஞர்களின் இலட்சணம் இதுதான். நாடு எங்கே போகிறது? இவர்களை நம்பி நாம் எல்லாம் எதிர் காலத்தில் எப்படி வாழ்வது? மனதுக்குள் இன்றைய இளைஞர்களை திட்டிக்கொண்டேன்.ஒரு பத்து பதினைந்து நிமிடம் ஆகுமா? இதற்கே எழுந்து நின்று பஸ்ஸில் வர இக்கால இளைஞர்கள் தயங்கினால் எதிர்காலத்தில் இவர்களால் என்ன சாதிக்க முடியும்?

பஸ் கம்பியை பிடித்து தொங்கியபடியே கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தேன். பத்து நிமிடம்தான் ஆகியிருந்தது.இது நகர பேருந்து ஆகையால், ஒவ்வொரு நிறுத்த்த்திலும் நின்று நின்றுதான் செல்லும். இதனால் இன்னும் அரை மணி நேரம் கூட ஆகும்.அதற்குள் அந்த பெரியவரின் பாடு எப்படியாகுமோ தெரியவில்லை. மனது அங்கு நின்று கொண்டிருக்கும் பெரியவருக்காக வருத்தப்பட்டது.

நான் ஒரு சீட்டில் உட்கார்ந்திருந்தாலாவது அந்த பெரியவரை அழைத்து உட்கார வைக்கலாம். நானே நின்று கொண்டிருக்கிறேன். இங்கிருந்தே அந்த பசங்களிடம் ஏம்ப்பா அந்த பெரியவருக்கு கொஞ்சம் இடம் கொடுக்கலாமில்ல? என்று கேட்டுவிடலாமா என்று நினைத்த போது அங்கேயே ஒருத்தர் ஏன் தம்பி நீங்க கொஞ்சம் எழுந்து இவருக்கு இடம் கொடுக்கலாமில்ல என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்கள் அவர் கேட்டதை கண்டு கொள்ளாதவர்களாக பேசிக்கொண்டே வந்தனர். தாளமாட்டாமல் அவர் ஏம்ப்பா நான் கேட்டுகிட்டே இருக்கேன் கண்டுக்காம பேசிக்கிட்டே இருக்கீங்க? என்றவருக்கு பேசிக்கொண்டு வந்தவர்களில் ஒரு இளைஞன் எங்களுக்கு எந்திருச்சு இடம் கொடுக்க
விருப்பமில்லைன்னு அர்த்தம் புரியுதா? என்று பதில் சொன்னான்.

அதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லாமல் வாய் மூடி நின்று விட்டார். நல்ல வேளை நான் அவர்களிடம் வாய் கொடுத்திருந்தால் என் நிலைமை என்னவாயிருக்கும், அதுவும் இந்த கூட்டத்தில்.அதிலும் ஒரு சின்ன மகிழ்ச்சி வந்தது.

ஒரு வழியாக கிணத்துக்கடவு வந்தது. அப்பாடி கொண்டு வந்து சேர்த்தார்களே என்ற சந்தோசத்தில் கூட்டம் மள மள வென இறங்கியது. நான் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு பள்ளிக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச வேண்டும். தலைப்பு “இக்கால இளைஞர்களின் மனப்போக்கு”. அதில் இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகள் நன்றாகத்தான் உள்ளது, நமக்குத்தான் அவர்களை சரியாக கையாளதெரியவில்லை”என்ற தலைப்பில் பேசவேண்டும்.பஸ்ஸில் அந்த இளைஞர்களின் செயல்பாட்டை கண்டவுடன் மனசு விட்டு போயிருந்தது. இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகளை நம்மால் கூட கையாள முடியாது என்று மனசுக்கு தோன்றிவிட்டது.

பஸ் நிலையத்திலிருந்து பள்ளிக்கு செல்ல ஒரு ஆட்டோவை பேசி ஏறி உட்கார்ந்துகொண்டேன். அப்பொழுது ஆட்டோக்கார்ரிடம் பாலு அண்ணே சவாரி எங்கே போகுது? நான் பஸ்ஸில் பார்த்த அந்த இளைஞர்கள் வந்து கேட்டனர். ஏன் மணி? ஸ்கூல் வரைக்கும் “சாரை” கூட்டிட்டு போறேன், என்றவரிடம் அண்ணே இந்த ஆத்தாவ அதுவரைக்கும் கொண்டு போய் விட முடியுமா? என்று கேட்டனர். ஆட்டோ டிரைவர் என் முகத்தை பார்க்க நான் அந்த ஆத்தாவை பார்த்தேன்.மிகுந்த வயதானவராக தெரிந்தார். இருந்தாலும் இந்த இளைஞர்கள் பஸ்ஸில் அந்த பெரியவருக்கு இடம் கொடுக்காமல் நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. எனக்கு எங்கிருந்துதான் அந்த தைரியம் வந்ததோ தெரியவில்லை. ஆட்டோ
டிரைவரிடம் தம்பி தாராளமா அந்த ஆத்தாவை கூட்டிடு போறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை, ஆனா இந்த பசங்க பஸ்ஸில ஒரு பெரிய மனுசனுக்கு இடம் கொடுக்காம பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரைக்கு,ம் நிக்க வச்சு வந்தாங்களே, அப்ப மட்டும் இவங்க மனிதாபிமானம் என்னவாச்சு?

இந்த கேள்வி ஆட்டோக்காரருக்கு புரியாமல் அவர்களை பார்க்க அவர்கள் இரண்டு நிமிடங்கள் மெளனமாய் என்னைப்பார்த்து நின்றனர். பின் ஐயா நீங்களும் அந்த பஸ்ஸிலதான் வந்தீங்களா? என்று கேள்வியை கேட்டனர். நான் ஆம் என்று தலையசைத்தேன்.

அவர்களில் ஒருவன் நீங்க கேட்டது நியாயம்தான்,அதுக்கு முன்னாடி ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகணும். நாங்க காலையில பொள்ளாச்சி போனது அங்க ஒரு தியேட்டர்ல காலை காட்சி பாக்கறதுக்கு, அது கொஞ்சம் ஆபாசமான படம். அதனால நாங்க பயந்து பயந்து அங்க போய் டிக்கெட் வாங்க வரிசையில நின்னோம். அப்ப இந்த பெரியவர் எங்களுக்கு முன்னாடியே போய்கிட்டிருந்தார். எங்களுக்கு முன்னாடி வரிசயில் இருந்தவங்க ஒரு மணி நேரமா நின்னுகிட்டிருக்கறதா சொன்னாங்க. ஏன் சார் ஒரு ஆபாசப்படத்த பார்க்கறதுக்கு ஒரு மணி நேரமா நின்னு டிக்கெட் வாங்கும்போது வயசானதே தெரியாதவங்க, பஸ்ஸுல அரை மணி நேரம் நின்னா குறைஞ்சா போயிடுவாங்க, அதுக்கோசரம்தான் நாங்க அவர் நிக்கறத
பத்தி கவலைப்படலே.யாராவது பாத்துடுவாங்களோ அப்படீன்னு நாங்க பயப்பட்டுகிட்டு போகும்போது ஒரு பெரிய மனுசன் அப்படீங்கறவரு மட்டும் எப்படி சார் அந்த கூட்ட்த்துல நிக்கலாம்.அப்ப மட்டும் கால் வலிக்காதா? கேட்டவனுக்கு என்ன பதில் சொல்ல? என்று புரியாமல் சரி தம்பி நான் இந்த ஆத்தாவ பத்திரமா இறக்கிவிட்டுட்டு போயிடறேன்.

ஆட்டோ சென்று கொண்டிருந்த்து. இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு நம்மை போன்ற பெரியவர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை இந்த நிகழ்ச்சியை வைத்து கருத்தரங்கில் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
ஜன்னல் வழியே வெளியே பார்த்துகொண்டிருந்தேன், கீழே மாமியாரும் மருமகளும் மரத்தடியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் அதிகமாக பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் நெருங்கி உட்கார்ந்துள்ளதை பார்ப்பதில் ஒரு அன்னியோன்யம் தெரிநதது. பொதுவாக மகிழ்ச்சியான சூழ்நிலை அங்கில்லை என புரிந்தது, பெருமூச்சு வநதது எனக்கு, என்ன செய்வது ...
மேலும் கதையை படிக்க...
முன்னொரு காலத்தில் கமலாபுரம் என்னும் ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் வெளியூர் சென்று கை வினை பொருட்களை வாங்கி வந்து ஊர் ஊராய் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அவள் வீட்டு வேலைகள் ...
மேலும் கதையை படிக்க...
மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண் மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றேன், பக்கத்திலிருந்த என் மனைவி கற்பூர ஆரத்தியை எடுக்க என்னை தட்டியவுடன் நான் கண்விழித்து ...
மேலும் கதையை படிக்க...
மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொல்றே,உன்னைய நம்பித்தானே கதைய மாத்தி உனக்கு இந்த கேரக்டர் கொடுத்தேன், இப்ப திடீருன்னு இப்படி சொன்னா எப்படி, கேட்ட முருகேசுவிடம் ப்ளீஸ் முருகேசு ...
மேலும் கதையை படிக்க...
மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள், உங்கள் கணவன் இறந்துவிட்டார் என்று. இனி கணவன் உடலை எடுத்துச்செல்ல வேண்டும். கையில் இருப்பதோ இருபத்தி எட்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும். அந்த வேதனையான கட்டத்திலும் சி¡¢ப்பு வந்தது வந்தனாவுக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்க ...
மேலும் கதையை படிக்க...
உயிர்
வளையல்
தமிழ் மொழிநண்பர்கள்
ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை
பேராசை சொந்தங்களும் கை கொடுத்த நண்பர்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)