இருவேறுலகம் இதுவென்றால்

 
அன்று விடிந்த அந்தப்பொழுது.., ஏதோ ஓர் அசாதாரணத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டிருப்பது போல அவளுக்குப்பட்டது.அறையின் மூலையில் உள்ள நார்க்கட்டிலில் மரக்கட்டையைப் போல அசைவற்றுப் படுத்துக் கிடந்தான் கலைப்பிரியன்.இயற்கை உபாதைகளுக்காகவும்கூட நேற்றிரவு அவன் தன்னை எழுப்பியிராதது ராதாவின் மனதுக்குள் நெருட…,அவன் முகத்தருகே கை வைத்துப் பார்த்தாள் அவள்.
திக்கித் திக்கிப் பாடம் ஒப்புவிக்கிற மாணவனாய்ச் சுவாசம் அவனிடமிருந்து தயங்கித் தயங்கி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அடங்கிக் கொண்டிருந்த அவனுடைய மூச்சுக் காற்றைப் போலவே வாழ்க்கையின் சவாலான சந்தர்ப்பங்களிலும் கூட அணைந்து விடாமல் பாதுகாத்து வந்த ஆர்வங்களும்,வேகங்களும் கொஞ்சம்கொஞ்சமாய் அவனில் அடங்கிக் கொண்டு வருவதை அவளால் உணர முடிந்தது.
‘’அக்கா !’’ -கதவைத் தட்டியது கலாதான்.
அந்த எட்டடிக் குச்சுக்குள் சுழன்று கொண்டிருந்த குடலைப் புரட்டும் நோய் வாடையும்,புழுக்கமும் ஏதோ தனக்கு மட்டுமே உரிய அந்தரங்கச் சொத்தென்று பாதுகாத்துக் கொள்பவளைப் போலக் கதவை அரைகுறையாகத் திறந்தாள் ரத்னா.
கதவு முழுவதுமாகவே திறந்திருந்தாலும் உள்ளே வருகிற உத்தேசம் இல்லாதவளாய்க் காணப்பட்ட கலா , உல்லாச மனநிலையில் படபடத்தாள் .
‘’என்னக்கா..! இன்னும் குளிக்கப் போகலியா ?’ டாண்’ னு ஒரு மணிக்கெல்லாம் வண்டி வந்திடும் ! நெனவிருக்கு இல்லே ! இன்னிக்கு ஏ.வி.எம்மிலே ஷூட்டிங் ! அண்ணனைக் கவனிக்கறதிலே மறந்திடாதீங்க!’
கலாவின் நினைவூட்டலால் தன்னிலை பெற்ற ரத்னாவின் கண்களில் அந்தச் சுற்றுப் புறமே புதியதாய்த் தென்பட்டது.
கூரைக் குடிசைகளுக்குச் சற்றே மேலான அந்த சிமிண்ட் லைன் வீடுகள் …எத்தனையோ இடைவெளிக்குப் பிறகு முற்றம் தெளிக்கப்பட்டு….,வண்ணக் கோலங்களை அணிந்து கொண்டு…! ம்..உள்ளும் புறமும் வேறானவை என்று எப்படிச் சொல்லிவிட முடியும் ? இங்கே ‘உள்’தானே புறத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது ? இந்த வீடுகளுக்கு..இவற்றில் வசிக்கிற மனிதர்களுக்கு ..இன்றைய ஷூட்டிங் ஒரு செயற்கை சுவாசத்தையே அல்லவா செலுத்தியிருக்கிறது?
’’என்ன ரத்னா இங்கே நின்னுக்கிட்டிருக்கே? குழாய்ல அதிசயமாத் தண்ணி வருது..நமக்கு நல்ல காலம் வந்தாப்பிலே ! சீக்கிரமாத் தண்ணி பிடிச்சுவச்சிட்டு..சோறு பொங்கிட்டுக் கெளம்பற வழியப் பாரு..’’
‘’கெளம்பணுங்க்கா’’
’’இதபாரு ரத்னா…! தம்பி ஒடம்பை நெனச்சே மறுகிக்கிட்டிருக்காதே! ஏதோ…பணமுள்ள மொதலாளிங்க அடிச்சுக்கிட்டாங்க ! இப்பத்தான் நமக்கு ஒரு விடிவு காலம் வந்திருக்கு! நாம என்ன லட்சக் கணக்கிலே கறுப்புப் பணமா சேர்த்து வச்சிருக்கோம்? இந்த மூணு நாள் ஷூட்டிங்கை நம்பி எத்தனை எடத்திலே கடன் வாங்கியிருக்கேன்…தெரியுமில்லே? நீயும் கூடக் கெடக்கிற காசிலே தம்பிக்கு நல்ல வைத்தியமாப் பாக்கலாம் ..கெளம்பும்மா!’’
- ஒரு மூத்த சகோதரியைப் போன்ற கரிசனத்துடன் பேசி விட்டுப் பார்வதி அக்காள் சென்ற பிறகு கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே வந்தாள் ரத்னா.
அவன் படும் வேதனையைக் காண மனம் சகிக்காத நிலையிலும் கால்கள் அனிச்சையாக அவனருகிலேயே அவளைஅழைத்துச் சென்றன.
ஆறடி உயரமும்,அதற்கேற்ற கம்பீரத் தோற்றமுமாய்த் திரைப்படக் கல்லூரி மாணவனாய் அவள் சந்தித்திருந்த அதே சதீஷ்! உலக சினிமாவையே உள்ளங்கையில் அடக்கி வைத்திருந்த ஆழ்ந்த ஞானமும்,கர்ம யோகியைப்போல சதாகாலமும் இலட்சியமே குறியென நிலைத்திருக்கும் தீட்சண்யம் வாய்ந்த காந்தக் கண்களும் ரத்னாவை அவனருகிலேயே கட்டிப்போட்டன.
ஆசையோடு தான் தேர்ந்து கொண்ட துறையைத் தான் விடுகிற சுவாசமாகவே ஆக்கிக் கொண்டு, உலகத்தையும்,வாழ்க்கையையும் கலைக் கண்களால் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குக் கலைப்பிரியன் என்ற பெயரைச் செல்லமாகச் சூட்டியவளே அவள்தான் !
‘’இத பாரு ரத்னா ! ’எ ஃபிலிம் பை கலைப்பிரியன்’னு போட்டுக்கிட்டுப் பேர் வாங்கிட்டுப் போயிடறது என்னோட லட்சியமில்லை ! தாய்,தங்கச்சி,தாலி,தாரம்ங்கிற செண்டிமெண்டுகளுக்குள்ளே குதிரை ஓட்டிக்கிட்டிருக்கிற நம்ம தமிழ்ப்படங்கள் ..உலக மேடையிலே பேசப்படற அளவு உயர்ந்தா,அதுதான் எனக்கு சந்தோஷம் !’’
-உண்மையான தாகமும்,வெறியுமாய்ப் பேசும் அவனது கலைத்தவம் – பணம்,புகழ்,விருது என்ற எல்லைகளையெல்லாம் கடந்த தொலைதூர இலக்கொன்றில் மையம் கொண்டிருந்தது.
ரத்னாவும் அவனுமாய் இணை சேர்ந்த பிறகும் கூடக் காதல் பேசாமல் வித விதமாகத் திரைக்கதைகளையே பேசி,விவாதித்து ஒவ்வொரு ஷாட்டாக எழுதிப் பார்த்துத் தங்கள் கற்பனைப் படத்தை எந்த ஃபைனான்சியரின் துணையுமின்றி மனத் திரையில் ஓட்டிப் பார்த்து …! எத்தனை இனிமையான காலங்கள் அவை ?
தன்னுடைய இலட்சியக் கனவுக்கும் நடைமுறை யதார்த்தத்துக்கும் இடையே தூர்க்கவே முடியாத அகழிகள் கிடப்பது கலைப் பிரியனுக்கு நன்றாகவே தெரிந்தாலும் கூடத் தன் மனத்தின் அழைப்பை மீறி அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காகக் கூட..எதனோடும் யாரோடும் சமரசம் செய்து கொள்வது அவனுக்குத் துளியும் சம்மதமில்லாமல் போயிற்று.அந்தக் காரணத்தினாலேயே ரத்னா ஒரு துணை நடிகையாகிற நிர்ப்பந்தம் நேர்ந்தபோது அவன் அதை ஏற்க முடியாமல் துடித்துப் போனான்.
‘’உன்னைச் சம்பாதிக்க விட்டுட்டு நான் ஒக்காந்து சாப்பிட வேண்டியிருக்கேங்கிற பாமரத்தனமான காரணத்துக்காக இதை நான் எதிர்க்கலை ரத்னா ! நம்ம ரெண்டு பேரிலே யாரோட திறமை ஏற்கப்பட்டாலும் அது ரெண்டு பேருக்குமே வெற்றிதான்! ஆனா..இந்தத் துறையிலே ஒன்னோட டெக்னிகல் அறிவுக்கும்,கதைசொல்ற திறமைக்கும் பக்கத்திலே கூட வர முடியாதவங்களுக்குக்கீழே நீ பத்தோடே பதினொண்ணா அவமதிக்கப்படற கொடுமையை என்னாலே தாங்கிக்க முடியாதும்மா!’’
ஆனாலும் தினந்தோறும் அவர்களின் அரை வயிறு நிரம்புவதற்காகவாவது .. அதைத் தாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது இடிந்து போனான் அவன்.ஆனால்…நோய்ப் படுக்கையில் விழுந்து விட்டநிலையிலும்கூட அவனது கதையை வைத்து ஒரு கலைப்படம் எடுக்கப்போவதாய்ச் சத்தியம் செய்து வாங்கிக் கொண்டு போன ஒருவர், அதை அழகுபடுத்துவதான ‘நல்லெண்ணத்தி’ல் அசிங்கப்படுத்தி அதைக் குலைத்தபோது , மூலக் கதைக்குச் சன்மானமாகத் தன் முன்பு நீட்டப்பட்ட காசோலையை மறுத்து அதை மூர்க்கமாய்க் கிழித்தெறிந்தான் அவன்.
சலனமின்றிப் படுத்திருந்த கலைப்பிரியனிடமிருந்து விக்கல் ஒலி ஒன்று வெளிப்பட , நினைவு கலைந்தாள் ரத்னா. இனிமேல் தாமதிப்பதில் பொருளில்லை. அவனைச் சுத்தம்செய்து ஆகாரம் ஊட்டிவிட்டு அவளும் கிளம்பியாக வேண்டும்! நீண்ட நாள் தொடர்ந்த வேலைநிறுத்த முடக்கத்திற்குப் பிறகு சோம்பல்முறித்துக் கொண்டு இன்று எழுந்திருக்கும் கனவுத் தொழிற்சாலை தரப்போகிற வருமானத்தில் அவள் அவனுக்கு மருந்து வாங்கியாக வேண்டும் !
தண்ணீர் பிடிக்கிற இடத்தில் கேலியும் சீண்டலுமாய்க் கூடியிருந்த பெண்களின் முகத்தில் ஒரு திருவிழாப்பூரிப்பு !
‘’நீ என்னதான் சொல்லு !காமெரா முன்னாடி நிக்கிறதே ஒரு தனி ஜோருதான் இல்லே..!’’
‘’ஆமாம்..இவளைத்தான் காமெரா டைட் குளோசப்பிலே காட்டப் போகுதாக்கும்’’
‘’முகம் தெரியுதோ…மூக்குநுனி தெரியுதோ..அதைப் பத்தி நமக்கென்ன?ஷூட்டிங் நடத்தறது பெரிய கம்பெனி ! வழக்கமா நமக்குக் கெடக்கிற வருமானத்துக்கு மேலேயே கொடுக்கிறதோட மூணு நாள் நல்லா…வாய்க்கு ருசியாச் சாப்பாடும் கெடைக்கும்’’
‘’ஏங்க்கா ! பொதுவாப் பாட்டு டான்ஸுன்னா பத்து இருவது எக்ஸ்ட்ரா ஆளுகளைத்தானே கேப்பாங்க ! இவங்க ஒரே சமயத்திலே நூறு பொம்பளைங்க வேணுன்னு கேட்டிருக்காங்க ?’’
‘’இல்லேடி..இது ஏதோ பூசைக் காட்சியாம்! மஞ்சப் பொடவை ரவிக்கை போட்டுக்கிட்டு..ஹீரோயின் கூடச் சேர்ந்து..’’
‘’வேப்பிலை அடிக்கணுமாக்கும்…’’
-இவர்கள் இத்தனை பேருமாய்ச் சேர்ந்து பேசிச் சிரித்துத்தான் எத்தனை நாளாயிற்று ?
ரத்னாவின் வருகை அவர்களது பேச்சில் சிறியதொரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டுத் தொடர்ந்தது.
‘’ரத்னாக்கா ! நீங்களும் வர்றீங்கதானே ?’’
‘’ம்…அக்காவோட அழகுக்கும் நடிப்புக்கும் படிப்புக்கும் எங்கேயோ போயிருக்கலாம்’’
‘’அண்ணன் மட்டும் என்னவாம்…நல்ல காலம் வந்திருந்தா பெரிய பெரிய டைரக்டர்களுக்கெல்லாம் மேலேயே போயிருப்பார்’’
-பணத்தின் பாதை அடைபட்டுப் போனாலும் அன்பின் ஊற்று வற்றிப் போகாத அற்புதமான பெண்கள் ! வெள்ளித் திரையில் நட்சத்திரங்களாய் மின்ன ஆசைப்பட்டு வந்து விட்டு மின்மினிப்பூச்சிகளாக மட்டுமே தலையை நீட்டி விட்டுப் போனாலும் அடுத்தவர் வாய்ப்பைக் கண்டு பொறாமை கொள்ளாதவர்கள்…
வாழ்க்கை நெருக்கடிகளால் தங்கள் கூட்டத்தோடு இணைந்திருந்தாலும் ….ரத்னாவும் கலைப்பிரியனும் திறமைகளில் தங்களை விட மேலானவர்கள் என்ற உணர்வும்,அவர்கள் வித்தையும்,ஞானமும் வீணாய்ப் போகிறதே என்ற ஆதங்கமும் அந்தப் பெண்களுக்கு நிறையவே இருந்தது.
’’ரத்னாக்கா ஒங்களுக்குத்தான் ஹிந்தி நல்லாத் தெரியுமே ! இன்னிக்கு நம்ம கூட நடிக்கிற ஹீரோயின் கூட இந்திக்காரிதானாம் ! கொஞ்சம் நைசாப் பேசி ஒரு அக்கா வேஷத்துக்காவது சான்ஸ் வாங்கிடுங்களேன் ’’
‘’என்ன இது….இன்னமும் கெளம்பாம சளசளன்னு பேசிக்கிட்டு…? இன்னும் ஒரு மணி நேரத்திலே ஸ்டூடியோவிலிருந்து பஸ் வந்திடும்! போய்ப் பொறப்படற வழியப் பாருங்கம்மா ’’
-விரட்டிக் கொண்டே வந்த அவர்களின் ஏஜண்ட் மணி அண்ணன், அங்கே நின்றிருந்த ரத்னாவைக் கண்டதும் குரலைத் தணித்துக் கொண்டான்.
’’தங்கச்சி …நீயும் கவலைப்படாம இவங்க கூடப் போயிட்டு வாம்மா ! நீ திரும்பி வர்ற வரைக்கும் ‘கலை’த் தம்பியை நான் பாத்துக்கறேன்’’
-கோடம்பாக்கம் வட்டரத்திலேயே முரடனென்று பெயர் எடுத்திருந்த மணி அண்ணன் , திரைக்கல்லூரி வாழ்க்கையில் அவர்களுக்கு மூத்த மாணவன். கலைப்பிரியனின் ஆற்றல்களையும்,பரிமாணங்களையும் முழுவதுமாய் அறிந்திருந்த அவனது தீவிர அபிமானி..

‘’இந்தா பாரு பார்வதி ! இன்னிக்கு என்னால உங்க கூட வர முடியாது. எல்லாருக்கும் கம்பெனியிலே சாப்பாடு வாங்கித் தர்றது, சம்பளம் வாங்கிக் கொடுக்கறது …இதையெல்லாம் இன்னிக்கு நீ பாத்துக்க..’’என்று பார்வதியிடம் தெரிவித்தவன், மீண்டும் ரத்னாவிடம்,
’’எல்லாரையும் பஸ்ஸிலே ஏத்தி விட்டப்புறம் நான் நம்ம வீட்டுக்கு வந்து தம்பியை ‘சார்ஜ்’ எடுத்துக்கறேன்மா… நீ கடைசியா வந்து இவங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம்’’ என்றபடி அங்கிருந்து அகன்றான்.
அந்தக் குறுகிய சந்தை முற்றாக அடைத்தபடி விஸ்தாரமான சுற்றுலாப் பேருந்து ஒன்று நின்று கொண்டிருக்க ,தங்களின் தனி அடையாளங்களையே துறந்தவர்களாய் மஞ்சள் உடை அணிந்த பெண்கள் அதன் இருக்கைகளை நிறைத்திருந்தார்கள்.
‘’என்ன..எல்லாரும் வந்தாச்சா? ஒழுங்காப் போய்ச் சொன்னபடி வேலை செஞ்சிட்டுச் சண்டை போடாம பணத்தைவாங்கிக்கிட்டு வந்து சேருங்க! நான் போய் ரத்னா தங்கச்சியை அனுப்பறேன்.அது வந்தப்பறம் பஸ் கெளம்பலாம்’’
மணி அண்ணன் மூன்று முறைக்கும் மேலாகத் தட்டிய பிறகு கதவைத் திறந்த ரத்னா, மஞ்சள் புடவையை உடுத்திக் கொண்டு தயார் நிலையில் இருந்தபோதும் அவள் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர் கண்டு அதிர்ந்தான் அவன்.
‘’என்னம்மா இது …?பொறப்படற நேரத்திலே இப்படிக் கண்கலங்கிட்டு…’’
‘’மொதல்லே உள்ளே வாங்கண்ணே ‘’
-ஒன்றும் புரியாதவனாய் அவன் உள்ளேநுழைய ….கதவை அழுத்தித் தாளிட்ட ரத்னா அவனுக்கு மட்டும் கேட்கும் அடங்கிய குரலில் அதனை அறிவித்தாள்.
‘’அவர் போய்ச் சேர்ந்திட்டார் அண்ணே’’
-கலைப்பிரியன் இருந்த திசையில் அப்போதுதான் கண்களைச் செலுத்திய மணி அண்ணன் , போர்வை போர்த்தப்பட்டுச் சடலமாய்க் கிடந்த அந்தக்கலைஞனின் சன்னதியில் பொடிப்பொடியாக நொறுங்கிப் போனவனாய்த் ‘’தங்கச்சீ…;;என்று அழுவதற்கு உரத்த குரலெடுத்தான்.
அதற்குள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னைச் சுதாரித்துக் கொண்டாள் அவள்.
‘’அண்ணே …வேண்டாண்ணே ..குருவிக் கூட்டைப்பிரிச்சுப் போடற மாதிரி ..இந்த வீடுகளோட சந்தோஷத்தை என் புருஷனோட சாவு கெடுத்திட வேண்டாம்ணே..! நம்மளை மாதிரி ஏழைங்க எல்லாம் காக்கா ஜாதி ! இப்ப இங்கே ஒரு சாவு விழுந்திடதுன்னு தெரிஞ்சா ..இங்கே உள்ள எந்தக் காக்காயுமே இரை தேடப் போகாது ! இன்னிக்கு வேலைக்குப் போகப் போறோம்கிறதைச் சொல்லிச் சொல்லி வாங்கின கடனிலே எத்தனை நாளா இங்கே உள்ள அடுப்பெல்லாம் எரிஞ்சிக்கிட்டிருந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியும்…கலைஞர்களோட வயத்திலே பணக்காரங்கதான் அடிக்கிறாங்கன்னா என்னோட கலைப்பிரியனும் அடிச்சிடக் கூடாதுண்ணே !
இப்ப நான் அவங்க கூடப் போகாட்டிக்கூட அவங்களுக்கு சந்தேகம் வந்திடும்!அதனாலே நான் போறேன்!’’
-இந்தக்கட்டத்தில் பொறுத்துக் கொள்ளவேமுடியாதவளாய்த் தேம்பி வெடித்தாள் அவள்.
‘’கடைசியா…எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செஞ்சிடுங்கண்ணே…நான் வர்ற வரைக்கும் ..இவரை..என்னோட ‘கலை’யைப் பத்திரமாப் பார்த்துக்கங்க ! நான் கொண்டு வர காசு,இவரோட கலைப் பயணத்தைக் கடன் இல்லாம முடிக்கிறதுக்காவது உதவட்டும் !’’
பிரம்மாண்டமான அந்தப் படப்பிடிப்புக் கூடத்தின் நான்காவது தளம் ஆர்ட் டைரக்டரின் கை வண்ணத்தில் விசாலமானதொரு பூஜைக் கூடமாக உருப் பெற்றிருந்தது.அங்கே புகழ் பெற்ற அந்த முன்னணி நடிகை நூற்றெட்டு அம்மன்களாக உருவகிக்கப்பட்டிருந்த அந்தத் துணை நடிகைகளின் ‘கவரிங்’தாலிகளில் குங்குமம் தீற்றித் தாலிவரம் கேட்டபடி மஞ்சள் நீரில் உருண்டு,புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருந்த அதே வேளையில் ….கலைப் பிரியனின் விறைக்கத் தொடங்கியிருந்த உடம்பின் மீது உட்கார முற்பட்ட ஈக்களை வெகு சிரத்தையோடு விரட்டிக் கொண்டிருந்தான் மணி அண்ணன்

 

தொடர்புடைய சிறுகதைகள்
வட்டங்களும் பரிமாணங்களும்
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிளை நடையில் சாத்தி வைத்து விட்டு அவன் கூடத்தில் நுழைந்தபோது அங்கே ஏக இரைச்சலும், சிரிப்புமாயிருந்தது. வீட்டில் இரண்டே பேர், ராதா, அவன் மகாவி; பாலு. அவன் தம்பி, ...
மேலும் கதையை படிக்க...
அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினாள். ''ஐயையோ....! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து போச்சே...? '' ஒரு கணம், மொத்தக் குடும்பமும் திடுக்கிட்டுப் போய்விட.... என் மனதின் ஆழத்தில் மட்டும் கபடமான ஒரு திருப்தி! எல்லோருமாக ஹரித்துவார் போக ...
மேலும் கதையை படிக்க...
கண் திறந்திட வேண்டும்…!
’’செல்லி! அந்த ஷெல்ஃபிலே இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் எடுத்துத் தூசிதட்டி ஒழுங்கா அடுக்கி வை!நானும் பப்பியும் கடைத் தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறோம்’’ கதவைத் தாளிட்டு விட்டுப் புத்தக அடுக்குகளைப் பிரித்துத் துடைக்க ஆரம்பிக்கிறாள் செல்லி.அவளுக்குப் புஸ்தகமென்றால் கொள்ளை ஆசை.பளபளப்பான வண்ணங்களில் வழுக்கிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
'டெமாக்கிளிஸ்'சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில் வழுக்கி விரையும் மனிதர்கள்....,வித விதமான அவர்களின் நடை,உடை பாவனைகள்..., முக அமைப்புக்கள், அந்த ஆறு மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த பலதரப்பட்ட அலுவலகங்களின் ...
மேலும் கதையை படிக்க...
கையில் வைத்திருந்த பனையோலை விசிறியால் வீசிக்கொண்டே ‘தோல் தலகாணி’யைத் தலைக்கு வைத்துக்கொண்டு வளவின் ஒரு பக்கம் கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாலாச்சி. அது ஆழ்துயில் இல்லை, அறிதுயில் என்பது அங்கிருந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான். "ஏ தெவ்வி, இங்ஙனே கொஞ்சம் வா” என்று இரண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
அன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல் தேறி விடுமென்றோ ..முந்தைய நிலைக்கு வந்து விடுமென்றோ எந்த நம்பிக்கையும் கன்னையாவுக்கு இல்லை. அதைப் பற்றிய வருத்தமும் அவனுக்கு இருந்ததாகச் ...
மேலும் கதையை படிக்க...
அமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன். எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ...
மேலும் கதையை படிக்க...
ஊர்மிளை
இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு இலட்சுமணன். ""அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்! இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை...நேற்றுப் பகல் முழுவதும் ...
மேலும் கதையை படிக்க...
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி) ’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால வழிபாடு நடந்தேறுவதற்கு அறிகுறியாக நாத வெள்ளமாகப் பல முறை முழங்கி ஓய்கிறது. அதன் ஒலி முழக்கம் ஓய்ந்த பின்னரும் கூடப் பெரியாழ்வாரின் ...
மேலும் கதையை படிக்க...
எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கி்றேன். இப்போது இதுதான் பிடித்திருக்கிறது. கையில் எடுத்திருக்கும் வேலைக்குத் தேவையாகவும் கூட…! வெற்று ஆரவாரங்களிலிருந்து……., அன்றாடவாழ்வின் ஆயாசமூட்டும் அசட்டுக்கூச்சல்களிலிருந்து விடுபட்ட தனிமை…….! மொழியின்…….பேச்சின் ஊடாட்டமற்ற தனிமை ! எப்போதோ ஒரு வருடம் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த ஆச்சி…,….இந்த மடத்தை ...
மேலும் கதையை படிக்க...
வட்டங்களும் பரிமாணங்களும்
காசு
கண் திறந்திட வேண்டும்…!
நேரமில்லை
விரிசல்
தரிசனம்
சாத்திரம் அன்று சதி
ஊர்மிளை
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
ரோக்ஸானாவுடன் ஒரு மாலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)