இரயில் பயணம்

 

இன்று இரவு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் இரயிலில் பயணம் செய்யப்போவதை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டிருந்தார் செல்வம். இதற்கு இவரது முந்தைய கசப்பான அனுபவம் தான் காரணம்.

சாதாரணமாக நாம் அனைவரும் தொலை தூரப் பயணம் என்றாலே, பேருந்தை விட இரயில் பயணத்தையே தேர்வு செய்வோம். காரணம்: நிறைய மனிதர்கள்- பேசிக்கொண்டே போகலாம், நினைத்த நேரத்தில் சௌகர்யமாக உணவு உண்ணலாம், சுடச்சுட தேநீர் அருந்தலாம், புத்தகம் படிக்கலாம், உட்கார்ந்து கால் வலித்தால் சிறிது நேரம் உலாவிக்கொள்ளலாம், சுகமான காற்றை அனுபவிக்கலாம்- பேருந்தில் செல்லும் போதும் அதே இயற்கைக் காற்று தான், ஆனால் அது இரயிலில் கிடைப்பது போல இதமாக இருப்பதில்லை, கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், இன்னும் எத்தனையோ. ஆனால் இந்த அனைத்து சுகங்களும் முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு மட்டுமே. முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகுந்த வலியைத் தரக்கூடியது.

பெயரில் மட்டும் தான் செல்வம்! படிப்பில் கெட்டிக்காரரான செல்வம், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது விடாமுயற்சியால் ஓரளவு நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் முப்பத்தி ஐந்து வயது இளைஞர். வாங்கும் சம்பளத்தை வீணாக செலவு செய்யும் பழக்கம் கிடையாது, எப்படியாவது சிரமப்பட்டு தனது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற துடிப்பு மனதில் எப்போதும் உண்டு. அதற்காக வேண்டி அவர் எந்த ஒரு தவறான வழியையும் பின்பற்றுவதில்லை. சத்தம் போட்டு கூட யாரிடமும் பேசமாட்டார், அமைதியின் சுவரூபம். அவர் வேண்டுமானால் இரயிலில் முன்பதிவு செய்தே பயணம் செய்யலாம், ஆனால் முன்பதிவு செய்து பயணம் செய்வதற்கும், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வதற்கும் விலை பாதிக்குப் பாதி. பணத்தின் அருமை தெரியாமல் பலர் இருக்க, ஒரு ரூபாயைக் கூட பார்த்துப் பார்த்து செலவு செய்பவர்கள் பலர். ஒரு ருபாய் இருந்தால் தேங்காய் சில்லோ, மிளகாயோ வாங்கி சட்னிக்கு வைத்துக்கொள்ளலாம் என்று என்னும் தாய்மார்களும், தன்னுடைய குழந்தைக்கு மிட்டாய் ஏதாவது வாங்கிப் போகலாம் என்று நினைக்கும் தந்தைமார்களும் அதிகம் நம் நாட்டில். செல்வமும் அந்த வகையைச் சேர்ந்த தந்தை தான். அதனாலேயே முன்பதிவு செய்யாமலே நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்யலாம் என்று முடிவு செய்தார்.

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு; முன்பதிவு செய்யாமல் இரயிலில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்பதை அறிந்திருந்த செல்வம், இரயில் நிலையத்திற்கு இரயில் கிளம்பும் பல மணி நேரத்திற்கு முன்பே வந்து உட்காருவதற்கு இடம் பிடித்துவிட்டார். அப்போது உட்கார்ந்தவர் தான், இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அப்பொழுதே ஏறத்தாழ நிரம்பிவிட்டது. கையில் ஒரு பையை தனது நெஞ்சோடு அணைத்துத் திரு திருவென பாவம் போல விழித்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த யாரும் யாரிடமும் பேசுவது போல் தெரியவில்லை. ஆனால் சல சலவென சத்தம் கேட்டுகொண்டே இருந்தது. ஏழு மணியளவில் இரயில் புறப்பட்டது. அவரை சுற்றி சுமார் நாற்பது பேர் இருந்தார்கள். இதுவே முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பெட்டியாக இருந்தால் அதில் பயணம் செய்வது எட்டு பேராகத் தான் இருக்கும். இரவு உணவிற்காக அவரது மனைவி இட்லி கட்டிக் கொண்டிருந்தாள். கூட்ட நெரிசலில் அவரால் அதை எடுத்து சாப்பிட முடியவில்லை, பசியைப் போக்க 11 மணிக்குள் சுமார் ஐந்து தேநீர் அருந்திவிட்டார். ஜன்னல் அருகில் இருந்ததால் தான் தேநீர் வாங்குவது கூட சுலபமாக இருந்தது. இங்கு பயணம் செய்பவர்களுக்கு விடிய விடிய சிவராத்திரி தான், கொட்ட கொட்ட விழித்திருந்தார்கள் அனைவரும்.

செல்வம் அருந்திய நீரும் தேநீரும் வேலையைக் காட்டிவிட்டது. எழுந்து சென்றால் இடம் பறிபோய்விட நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதால் அடக்கிக் கொள்வதென முடிவு செய்தார். அது போக அங்கிருந்து எழுந்து சென்று கழிப்பறை போவதொன்றும் அந்த அளவிற்கு சுலபம் இல்லை, சிறு வயதில் நாம் கேட்ட கதையில் மலையைக் கடப்பது போல தான். எவ்வளவு நேரம் தான் அது சாத்தியம், முடியவில்லை. இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் இரண்டு மணியளவில் கழிப்பறை போவதென முடிவு செய்தார். அங்கிருந்த எவரிடமும் தனது பையைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்ல மனமில்லை. பையிலிருந்து ஒரு துண்டை எடுத்து அவரது இடத்திற்குக் காவல் வைத்து விட்டுக் கிளம்பினார். திரும்பும் இடமெல்லாம் மனிதர்கள், அடுத்த எட்டு எடுத்து வைக்க வழியில்லை. பச்சை குதிரை தாண்டுவது போல ஒவ்வொருவர் மீதாக தாண்டி ஒரு வழியாக தனது இலக்கை அடைந்தார். கழிப்பறையின் அருகிலும் எண்ணற்ற மனிதர்கள். அதில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கழிப்பறையின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் செல்வம் முகத்திலும் ஒட்டிக்கொண்டது அவரது சோகம்.

எதிர்பார்த்ததைப் போல அவர் இடத்தில் வேறொரு இருபது வயது இளைஞன் உட்கார்திருந்தான். கண்களை ஜன்னல் வழியே விட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

செல்வம், மெதுவான குரலில் தயங்கியவாறு “தம்பி தம்பி” என்றார்.

அவன் தலையைத் திருப்பியவாறு தெரியவில்லை.

தோள்களிலே தட்டி “தம்பி இது என்னோட எடம், துண்டு கூட போட்டுட்டு போனேன்” என்றார்.

“என்னது உன்னோட எடமா? உங்கப்பன் வீட்டு சொத்தா? போயா”

செல்வம் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.

“ஒரு வயசுக்கு மரியாத வேணாமா? என்ன நீ இப்டி பேசுற?” என்று ஆவேசமானார்.

“இப்போ எந்திரிக்க முடியாதுயா. என்ன செஞ்சிடுவ நீ? மூடிட்டு போய்டு, இல்லனா மரியாத கெட்டுடும்” கூடவே நாலைந்து கெட்ட வார்த்தையும்.

சுற்றி இருந்த யாரும் இவருக்காக பரிந்து பேசவில்லை. அது கூட இவருக்கு வருத்தம் தரவில்லை. யாராவது உதவி செய்திருந்தால் தான் ஆச்சர்யம். வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அந்த இளைஞன் அப்படி பேசியதைத் தான் தாங்க முடியவில்லை. வேறெதுவும் அவனிடம் பேச விருப்பமில்லை. மறுபடியும் கழிப்பறை அருகில் சென்று கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவருடன் பயணத்தைத் தொடர்ந்தார். இருவரும் ஒரு சோகப் புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர்.

இதை நினைத்து தான், இன்று மீண்டும் பயணம் செய்வதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். இது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அவர் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. வரும் போது சீக்கிரமாக வந்து இடம் பிடித்ததைப் போல இன்று அவ்வாறு செய்யவில்லை. நின்று கொண்டே பயணம் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அவர் மனிதில் இருந்த உறுதி உடலில் இல்லை. காலையிலிருந்து அலைந்த அலைச்சலால் நெடுநேரம் நிற்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் பெட்டிக்குச் சென்று விடலாம் என்று முடிவு செய்தார். பதினொன்றரை மணிக்கு மேல் அங்கு சென்றார் நடுக்கத்துடன். அங்கும் அவமானத்தை சந்தித்து விடுவோமோ என்று மனதில் எண்ணற்ற ஓட்டங்கள். சாதரணமாக இவ்வாறு பயணம் செய்யமுடியாது. காவல்துறையினர் சுத்திக் கொண்டிருப்பார்கள், அது போக அங்கு பயணம் செய்யும் பயணிகளே செல்வம் போன்ற ஆட்களை அனுமதிப்பதில்லை. காரணம், எதையாவது திருடிக்கொண்டு சென்று விடுவானோ என்று.

செல்வம் குத்து மதிப்பாக ஒரு பெட்டிக்குள் ஏறினார், சில இளைஞர்களைத் தவிர அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். பையிலிருந்த லுங்கியை எடுத்து விரித்து படுத்துக்கொண்டார் தயக்கத்துடன். ஆனால் தூங்க முடியவில்லை. அவர் பயந்த மாதிரியே 12 மணியளவில் தொப்பை வைத்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு காவல் அதிகாரி வந்தார். அவர் எழுப்புவதற்கு முன்னாடியே இவர் எழுந்து உட்கார்ந்து கொண்டார். முகத்தில் அச்ச ரேகை தீர்க்கமாக ஓடியது.

“என்னவே இங்க படுத்துருகீரு?”

“சா……….ர்………. சா……….ர்”

செல்வம் வாயில் அதைத் தவிர வேறொன்றும் வரவில்லை.

அவர் போட்ட சத்தத்தில் ஏறத்தாழ அங்கு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் முழித்துவிட்டார்கள்.

“டிக்கெட்ட கொண்டா”

கையில் வைத்திருந்த டார்ச் லைட் வெளிச்சத்தில் அதை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இங்க ஏன் வந்த?”

எதுவும் பதில் சொல்லவில்லை… மௌனம்…

“இது உனக்கு தெரிஞ்சவங்களா? இது உனக்கு தெரிஞ்சவங்களா?” என்று அங்கு படுத்திருந்தவர் ஒவ்வொரு முகத்திலும் டார்ச் லைட்டால் வெளிச்சம் அடித்துக் கேட்டார்.

அதற்கும் அவர் எதுவும் பதில் சொல்லாமல் தலையை தொங்க போட்டு நின்று கொண்டிருந்தார்.

செல்வத்தின் முகத்தைப் பார்த்து அவருக்கே பரிதாபமாக இருந்தது. அந்த காவல் அதிகாரி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மெதுவான குரலில், “இங்க பொம்பலயாளுலாம் பக்கதுல படுத்துருக்காங்கல, வேற எங்கயாவது போய் படுத்துக்கோ, சரியா” என்றார்.

சரிங்க சார் என்று சொல்வது போல வேகமாக தலையை ஆட்டிக்கொண்டார்.

ஆனால் அந்தப் பெட்டியில் உள்ள எல்லா லோயர் பெர்த்திலும் பெண்கள் படுத்திருந்ததை செல்வம் அறிந்திருந்ததால் எழுந்து செல்லாமல் அந்த காவல் அதிகாரி சென்று விட்டாரா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அந்த பெட்டியிலிருந்து அவர் அடுத்த பெட்டிக்கு செல்வதை உறுதி செய்தவுடன் மீண்டும் உறங்குவதற்கு ஆயத்தமானார்.

“யோவ் அதான் பொம்பளயாளு படுத்துருக்கு, வேற எங்கயாவது போய் படுன்னு சொன்னார்ல, அப்புறம் ஏன் இங்க படுக்க போற?” என்று அங்கு படுத்திரிந்த ஒருவர் தோரணையுடன் கேட்டார்.

“இல்லங்க எல்லா எடத்துலயும் பொம்பளைங்க படுத்துருக்காங்க” என்று சொல்லி முடிப்பதற்குள்

“இப்போ எந்திரிச்சு போறியா இல்லையா” என்று நாக்கை துருத்திக் கொண்டு காலால் உதைப்பது போல ஓங்கினார்.

எளியர்வர்களிடம் தனது வீரத்தைக் காண்பிப்பது தானே நமது வழக்கம்!

பயத்தில் உட்கார்ந்தவாறே இரண்டடி நகர்ந்து சென்றார்.

கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

கழிப்பறையின் அருகில் வந்து நின்று கொண்டார்.

நெஞ்சில் சொல்ல முடியாத வலி. அழுவதற்குக் கூட தைரியம் இல்லை.

மனதில் எண்ணற்ற விடை தெரியாக் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது!

அடுத்த நிறுத்தத்தில் இரயில் நின்றவுடன் அங்கிருந்து இறங்கி முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பெட்டியை நோக்கி நடந்துகொண்டிருந்தார் கனத்த மனத்துடன்… 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று மாலை நான்கு மணிக்கு மாப்பிள்ளைப் பார்க்க வருவதாக பெண் வீட்டில் சொல்லியிருந்ததால், மாப்பிள்ளை வீட்டில் 'தட புட' லாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். இந்த வரன் நிச்சயம் முடிந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஜாதகமெல்லாம் பார்த்தாகிவிட்டது, எட்டு பொருத்தம். இது இரண்டாவது வரன், ...
மேலும் கதையை படிக்க...
ப்ரோடீன்ஸ் பிராய்லர் கடை... அவரது மகன் வைத்த பெயர் அது. கோழிகளும், கோழிகளின் தோல் உறிக்கும் இயந்திரமும் இருக்கும் ஒரு சிறிய அறையின் முன்னால் பனை ஓலையால் கூரை வேயப்பட்டிருக்கும். அந்த கூரையில் தோல் உரிக்கப்பட்ட கோழிகள் தொங்கியவாறு இருக்கும். கோழியை வெட்டுவதற்கு ...
மேலும் கதையை படிக்க...
என் போன்றவர்களுக்கெல்லாம் காதலிக்க அறுகதை கிடையாது. அதுவும் என்னை விட பத்து வயது சிறியவனைக் காதலிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது எனக்கு. ஆண்கள் தன்னை விட பத்து வயது சிறியவளைக் காதலிக்கலாம், மணந்து கொள்ளலாம். ஆனால் பெண்ணாகப் பிறந்தால்? பெண்கள் அவ்வாறு ...
மேலும் கதையை படிக்க...
இருவரும் நடைபாதை ஓரத்தில் பொடிநடையாக ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உடையும் இன்ன பிற அணிகலன்கலுமே, அவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் என்றும் சொல்லியது. மேலும் அவர்கள் சுமக்கும் குடும்ப பாரங்களை அவர்களது முகம் ...
மேலும் கதையை படிக்க...
ஸ்மைல் ப்ளீஸ்…! சிரிப்பிற்கு கியாரண்டி…!
பக்… பக்… பக்…
புன்னகைகள் புரிவதில்லை…
கேளிக்கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)