இரண்டு நண்பர்களின் கதை

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 42,654 
 

ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில், சுந்தர சோழன் தெருவில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் பிறந்தவர்கள். ஒன்றாகவே பள்ளிக்கூடம் சென்றார்கள். போகும் வழியில் மாந்தோப்பு இருந்தது. காவலும் இருந்தது. தோட்டக்காரர் இல்லாத பொழுதுகள் எது என்பதை செல்வம் அறிவான். பத்துக் காய்களாவது / பழங்களாவது அடிக்காமல் அவன் பள்ளிக்கு வருவது இல்லை.

மாடன், இதுபோன்ற காரியங்களில் இறங்கும் வீரனும் இல்லை; நியாயவாதியும் இல்லை. தோட்டக்காரர், மாணவன் ஒருவனைக் கட்டிவைத்து அடித்ததைக் கதிகலங்கப் பார்த்தவன் அவன். பிறரின் தூக்குப் பாத்திரத்தை திறந்து, மதியச் சாப்பாட்டை உண்பதில் செல்வத்துக்கு அதீத ஆசை இருந்தது. பையன்கள் சிலர் தகராறு செய்தார்கள். அதில் ஒருவன் பள்ளியைவிட்டுத் திரும்பும்போது அவன் மீது கல் எறிந்தான் செல்வம். எறிந்தவன் யார் என்பதை அந்தப் பையனால் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருமுறை மாடனின் உணவை உண்டான். மாடனாலும் அதிகம் எதிர்க்குரல் எழுப்ப முடியவில்லை. சாலை போட நிறைய கற்களைக் கொட்டி வைத்திருந்தது நகரசபை.

இரண்டு நண்பர்களின் கதை

ஒரு மதியப் பொழுதில் எரிந்துகொண்டிருந்த சூரியனுக்குக் கீழே புளியந்தோப்பில் இருந்து, செல்வம் ஓர் அறைகூவலை விடுத்தான். ”இனிமேல் நான் பள்ளிக்கூடம் வருவதாக இல்லை. என்னடா படிப்பு, பெரிய படிப்பு. அவனவன் நம்மளக் கேள்வி கேட்கிறான். தெரியலைன்னா, பெஞ்சு மேல ஏறி நிக்கச் சொல்றான். குட்டிங்க சிரிக்கிறாளுக. எந்த நாய் எந்த தேசத்தை ஜெயிச்சா என்ன, தோத்தா என்ன. நான் ஜெயிக்கிறேன்டா. படிச்சவன்தான் கிழிக்க முடியுமா? நான் கிழிக்கிறேன்டா…” என்றான்.

பையன்கள் விதிர்விதிர்த்துப் போனார்கள். செல்வம் சொன்னவை எதிலும், அவர்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை. அவர்களுக்கும் அதே அபிப்ராயம்தான். ஆனால், அப்பாக்கள், உதைகள், தெரு, ஊர் என்று பல பயமுறுத்தல்கள். என்ன படிக்கிறோம், எதுக்காகப் படிக்கிறோம் என்று தெரியாமலேயே பத்து வருஷத்தை வீணாக்குகிறவர்கள் மத்தியில் செல்வம் விஸ்வரூபம் எடுத்து நின்றான். மாடன் பிரமித்து நின்றிருந்தான்.

இரவு நேரத்தில், காடாவிளக்கு வெளிச்சத்தில் துப்பட்டி, வேட்டி, துண்டு, சேலைகள் கொண்ட ஏல வியாபாரம் செய்துகொண்டிருந்தார் செல்வத்தின் அப்பா. எடுபிடி வேலைக்குத் தனியாக ஓர் ஆளை வைத்தால் சம்பளம் தர வேண்டும்; ஆனால், மகனுக்குத் தரவேண்டியதில்லை என்பதற்காக, அப்பா மகிழ்ச்சியுடன் அவனைச் சேர்த்துக்கொண்டார். அந்த வார இறுதியில், சனிக்கிழமை அன்று, செல்வம் தன் தந்தையிடம் சொன்னான்,

”ஒரு வாரம் வேலை பார்த்திருக்கேன். மற்றவனுக்கு என்ன கூலி கொடுப்பியோ, அதை எனக்குக் கொடு.”

”நான்தானே உனக்கு சோறு போடறேன்” என்றார் செல்வத்தின் தந்தை.

”அது பெத்தக் கடன். சோறு போட்டுத்தான் தீரணும். நான் ஏழு இரவுகள் உழைச்சிருக்கேன். அதுக்குக் கூலியை எடுத்துவை” என்றான் செல்வம்.

அடுத்த சில ஆண்டுகள், செல்வத்தின் கண்டுபிடிப்புகளாக மாறின. முதல் கண்டுபிடிப்பு, உலகம் நிலமாக, சம பூமியாக, வயல் காடாக யாரையோ எதிர்பார்த்தபடிப் படுத்துக்கிடப்பதை அவன் உணரத் தொடங்கினான். இந்த நிலம் இயற்கை கொடுத்த தனம். இது நிலத்தின் மேல் வாழ்கிற அனைவருக்கும் சொந்தம். இதைச் சில பேர், தேவைக்கு அதிகமாக தன்னிடம் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துவது அதர்மம். மண் வளத்தைத் தன் வளமாக மாற்றுவதுகுறித்துத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.

இதனிடையே அரும்பிக்கொண்டிருந்த ஓர் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டான். அந்த இயக்கம், நாக்குகளை மட்டுமே நம்பிய இயக்கம். தொடக்கத்தில் அவனுக்குத் தடுமாற்றமாக இருந்தாலும், போகப் போக வாய்வீச்சுகளோடு பேசத் தொடங்கினான். இயக்கம் மேற்கொண்ட சில போராட்டங்களில் பங்குகொண்டு, சிறைக்குச் சென்று (மொத்தமே மூன்று நாட்கள்) ‘தியாகி’ ஆனான். அவனுடைய மாவட்டத்துக்கு அவனே அதிகாரி ஆனான். தமிழ்நாட்டின் ‘போகூழ்’ என்று சான்றோர் சொன்னபடி, அவன் இருந்த இயக்கம் வேழ நாட்டின் ஆட்சியையும் பிடித்தது.

செல்வம், உலகை வெல்லப் புறப்பட்டான். முதலில் புறம்போக்கு நிலங்கள், ஏழைகள், பேச்சற்றவர்கள், விதவைகள் போன்றோரின் நிலம், வீடுகளைத் தன்வயப்படுத்தினான். எதிர்த்தவர்களை, தன் இயக்கச் சகோதரர்களைக் கொண்டு அடக்கினான். காவல் துறை மற்றும் அதிகாரிகளை வசப்படுத்தினான். நீரோடிய ஆறுகளில் மணல் ஓடுவது, அவனுக்குத் திருப்தியைத் தந்தது. நகரங்களுக்கு வீடு கட்ட மண் வேண்டாமா என்ன?

இரண்டு நண்பர்களின் கதை2

செல்வத்தை, மேலே மேலே என்று அண்ணாந்து பார்த்துக் கழுத்து சுளுக்கிக்கொண்டது மாடனுக்கு. செல்வத்தின் பார்வையைவிட்டு அகலாமல், தன்னை நிறுத்திக்கொள்ளும் லௌகீகம் மாடனுக்கு இல்லாமல் இல்லை. அரசு நிறுவனம் ஒன்றில் ஊழியனாகத் தன்னைப் பொருத்திக்கொண்ட மாடன், மாலை வேளைகளில் செல்வத்தோடும் தன்னை இணைத்துக்கொண்டான். அதிகாரப்பூர்வமற்ற, அதே சமயம் அதிகாரப்பூர்வமான பி.ஏ-வாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டான் மாடன்.

மாடனின் பணிகள் பெருகத் தொடங்கின. செல்வத்தின் மூன்று மாளிகைகளும், அவனுடைய நிர்வாகத்தின் கீழ் வந்தன. ஒரு மாளிகையில் வரலட்சுமி இருந்தாள். இன்னொரு மாளிகையில் ஷீலா இருந்தாள். மூன்றாவது மாளிகை, அரசியல் ஆராய்ச்சிகளுக்கு என்று இருந்தது. வரலட்சுமி, நிறைய தெய்வ நம்பிக்கைக் கொண்டவள். வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பாள். ‘கணவனின் புகழ், செல்வாக்கு, வருவாய் பெருகி, அவன் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வேண்டும்’ என்று கோயில் கோயிலாகச் சென்று அர்ச்சனை செய்வாள். கோயில் தொடர்பான அனைத்துப் பிரயாண ஏற்பாடுகளையும், கோயில்களின் வரலாற்றுப் புராணம் பெருமைகளையும் மாடன் மகிழ்ச்சியுடனும் கடமை உணர்வுடனும் கற்றுக்கொண்டான்.

செல்வம், ‘கடவுள்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘இயற்கை’ என்ற சொல்லையே பயன்படுத்தினான். ஒரு கட்டத்தில், ஆற்றங்கரை ஓரம், புது மாளிகை ஒன்றை அவன் வாங்கி இருந்தான். தொழிலாளர் வர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முகமாக, அந்த மாளிகையை அவன் அவனுடைய தோட்டக்காரர் பெயரில் வாங்கினான். ‘மாதம் 2,000 சம்பளம் பெறும் தோட்டக்காரர், மூன்று கோடிக்கு எவ்வாறு ஒரு பேரில்லம் வாங்க முடியும்?’ என்று ஓர் இயக்கம் கேள்வி கேட்டது. ‘ஓய்வு நேரத்தில் அவர் பேருந்து நிலையத்தில் வேர்க்கடலை விற்றுச் சம்பாதித்த பணம்’ என்றும், ‘தன் தோட்ட வேலையை ராஜினாமா செய்ததன் மூலம் பெற்ற பணமும் சேர்ந்தே அந்த மாளிகை’ என்று மாடன் சொன்னான். எதிர்ப்பாளர்கள் ‘ஆம்… ஆம்’ என்றார்கள்.

மாடன் முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சி, வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஒருநாள் இயக்கத்தின் முக்கியப் புள்ளியாகிய கோபி, அவனைப் பார்க்க வந்தான். ”என்னண்ணே விசேஷம்..? இந்த ஏழையைப் பார்க்க வந்திருக்கீங்க…’ என்று வரவேற்றான் மாடன்.

”இதென்ன டி.வி. இவ்வளவு பெரிசாக்கூட வருதா?”

”ரொம்ப நாளாச்சே. தலைவர் அன்பளிப்பு!” செல்வத்தைச் ‘செல்வம்’ என்று சொல்லக் கூடாது என்று, ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே அவன் எச்சரிக்கை செய்யப்பட்டுவிட்டான்.

”என்ன விசேஷம் கோபி. இன்னைக்கு சிறப்புக் குழு கூடுதே. நாம புறப்பட வேணாமா?”

”இன்னைய சிறப்புக் குழுவில் முக்கியமான ஒரு பிரச்னையை எழுப்பப்போறேன் தம்பி”

”என்ன பிரச்னை?”

”தலைவர், ஒரு கூட்டத்தில் வெச்சு லட்சுமியைப் பார்த்திருக்கார். ‘வாம்மா உன்னோடு பேசணும்’னு காரில் ஏற்றி அவர் தங்கும் விடுதிக்கே அழைச்சுக்கிட்டுப் போயிருக்கார். ‘இன்னும் வாடகை வீட்லயா குடி இருக்கே.? சொந்த வீடே வாங்கித் தர்றேன்’னு சொல்லி இருக்கார். அப்புறம் தப்பா நடந்திருக்கார். லட்சுமி, அவரைத் தள்ளிட்டு ஓடிவந்திருக்கு.”

தலைவரைப் பற்றிய இந்தத் தகவல் மாடனுக்கு ஆச்சர்யம் தருவதாக இல்லை. அவனுக்குப் பதற்றமாக இருந்தது. அண்மைக்காலமாகவே பெண்கள், இயக்கத்துக்கு வருவது குறைந்துபோயிருந்தது. கோபி – லட்சுமி திருமணத்துக்கு மாடனும் போயிருந்தான்.

”என்ன பண்ணலாம்?” என்றார் கோபி.

இயக்கத்துக்காகச் சிறைக்குச் சென்றவர் கோபி. அவர் முகத்தில் கோபத்தைக் காட்டிலும் அருவருப்பே மேலோங்கி இருந்தது.

”அண்ணே, நீங்க சீனியர். கட்சிக்காக உழைத்தவர். உங்க நிலைமை எனக்குப் புரியுது. நீங்க எது செஞ்சாலும் அது சரியாதானே இருக்கும்.”

அன்றைய சிறப்புக் குழு தொடங்கும்போது, கோபி எழுந்து நின்றார். தலைவர் ”என்ன?” என்றார். உடனே எப்போதும் தலைவரைச் சுற்றி இருக்கும் பத்து பேர் எழுந்து ”என்னடா?” என்றார்கள்.

”கணக்கு…” என்றார் கோபி.

”என்ன கணக்கு?”

”மாநாட்டுக் கணக்கை ஏன் தரலை?”

”அது அடுத்த மாநாட்டில் பொதுக் குழுவில் வைக்கப்படும்” என்றார் தலைவர்.

இதற்கிடையில், கோபி அவரை அறியாமலேயே கூட்ட அரங்க வாயிலை நோக்கி நகர்த்தப்பட்டார். அவர் கால்கள், செயல்படாததுபோல இருந்தன. சற்று நேரம் கழித்து அவர் பிரக்ஞை மீண்டது. அவர் சட்டை பல இடங்களில் கிழிந்து தொங்கியது. உடம்பு முழுக்க வலித்தது. வாசலில் நின்ற போலீஸ்காரர் ஒருவர் கோபியைப் பார்த்து, ”கலாட்டாவா பண்றே… ஒழுங்கா வீடு போய்ச் சேர்” என்றார்.

அடுத்த நாள், ‘கோபி’ என்று அழைக்கப்படும் கோபிநாதன், இயக்கக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாகவும் பண்பாடு இன்றியும் செயல்பட்ட காரணத்தால், அவரை இயக்கத்தை விட்டு நீக்கியிருப்பதாகப் பெட்டிச் செய்தி வந்தது.

தலைவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று நினைத்தான் மாடன். கோபியின் மனைவியிடம் தலைவர் நடந்துகொண்ட விதம் அவன் மனதை நெருடியது. மனிதன் செய்யக் கூடாதது. அதிலும் தலைவனாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டவன், கண்டிப்பாகச் செய்யக் கூடாதது. இத்தனைக்கும் மாடனுக்கும் சங்கரிக்கும் தலைவர்தான் திருமணம் செய்துவைத்தார். செம்மண் நிலத்தில் பெய்த மழை பற்றி அன்று பேசினார் தலைவர். கையில் சிலம்பை ஏந்தி பாண்டியனிடம் வழக்குரைத்த கதையைப் பேசினார். தனிமையில் வைத்து மணமக்கள் இருவர் கைகளிலும் இரண்டு கவர்களை வைத்து அழுத்தினார். ஒவ்வொரு கட்டும் 10,000 என்று பிறகு தெரிந்தது. மாடன், வீடு பார்த்துக் குடியேறினான். அதற்கான தேவைகளுக்கு உதவினான் செல்வம். வால் இல்லாத நாய்க்குட்டியாகத் தன்னை பாவித்துக்கொண்டான் மாடன்.

சங்கரி, கிராமத்துப் பெண்; ஒரு வகையில் மாடனுக்குத் தூரத்து உறவு. பெரியோர் பார்த்து நடத்திய திருமணம். ஆனால், தலைவர் தலைமையில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகக் கருத்து தெரிவித்துச் சாதித்தான் மாடன்.

மாடனின் இல்லறம் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு, இயக்கப் பத்திரிகை ஒன்று வந்துகொண்டிருந்தது. சங்கரி, ஓய்வு நேரத்தில் முழுமையாகப் பத்திரிகை பார்த்தாள். அடிக்கடி அது பற்றி மாடனிடம் விவாதிக்கவும் செய்தாள். ஓர் இரவில் அவள் மாடனிடம் கேட்டாள்,

”நம்ம இயக்கத்துக்கு பெண்கள் ஏன் மாமா ரொம்பக் குறைவா வர்றாங்க. அன்னைக்கு அந்தக் கட்சி நடத்தின விவசாயப் பேரணிக்கு நிறைய சனம் வந்துச்சே!”

”என்னமோ அப்படித்தான் இருக்கு” என்றான் மாடன்.

”சின்னச் சின்ன ஊர்ல எல்லாம் பெண்கள் அமைப்பை ஏற்படுத்தணும் மாமா. பெண்களுக்குப் பெரிய பொறுப்புகள் தரணும். பெண்களுக்குன்னு மாநாடு ஒண்ணு நடத்தணும்” என்றாள் சங்கரி.

மறுநாள் இதை அப்படியே தலைவரிடம் சொன்னான் மாடன்.

”பெரிய தலைவி மாதிரி என்னென்னமோ பேசுது தலைவரே சங்கரி.”

தலைவர் முகத்தில் ஆச்சர்யம் துலாம்பரமாகத் தெரிந்தது.

”சங்கரி, அறிவாளினு எனக்குத் தெரியும். உனக்குத்தான் சங்கரியைப் புரிஞ்சுக்க முடியலை. பெண்கள் அமைப்புக்கு சங்கரியையே தலைவியா போட்டுடலாம். அமைப்பு பற்றி சங்கரிகிட்ட பேசணுமே!”

”அழைச்சுட்டு வர்றேன் தலைவரே.”

”இங்க வேணாம். நானே உன் வீட்டுக்கு வர்றேன். தொந்தரவு இல்லாமப் பேசலாம்.”

”இது, தலைவர் எனக்குச் செய்யற பெரிய கௌரவம் தலைவரே…”

நாலு முழம் வேட்டியைத் துண்டாக அணிந்த தலைவர் சொன்னார்.

”தோழமையில் பெரியவர் சிறியவர் ஏது மாடா?”

அடுத்த நாளைத் தேர்ந்தெடுத்தார் தலைவர்.உறங்கி எழுந்த சங்கரி, சமையல் அறையிலேயே இருந்தாள். இறைச்சியில் அனைத்துவிதமானதும் இருக்கும்படியாக சமைத்தாள். தலைவருக்கு மீன் அதிகம் பிடிக்குமென்பதால், மீன் குழம்பு, மீன் வறுவல், மீன் புட்டு மற்றும் ஆடும் கோழியும் தயாராயின.

தலைவர் வாசனையோடு வந்தார். ‘பெண்கள் இல்லாத இயக்கம் வளராது’ என்று தெள்ளத்தெளிவாகச் சொன்னார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுப்ரமணிய பாரதியாரிடம் சகோதரி நிவேதிதா, ‘உங்கள் மனைவி எங்கே? ஏன் அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவில்லை?’ என்றார். ‘நாங்கள் பெண்களை இந்த மாதிரி இடங்களுக்கு அழைத்து வருவதில்லை’ என்றாராம். ‘அதனால்தான் இந்தியா இன்னும் அடிமைப்பட்டுக்கிடக்கிறது’ என்றாராம் நிவேதிதா.

கண்கள் விரியக் கேட்டுக்கொண்டிருந்தாள் சங்கரி. மாடன், ‘தெரிந்துகொள் எங்கள் தலைவரை’ என்று கண்களால் சொல்லிக் கொண்டிருந்தான். உருவாக இருக்கும் இயக்கத்தில் பெண்கள் அமைப்புக்குத் தவிர்க்க முடியாமல் தலைவர் கௌரவத் தலைவராக இருப்பது, சங்கரி தலைவியாக இருப்பது என்று தன் முடிவைச் சொன்னார் தலைவர்.

”ஐயையோ, நான் அற்பம் ஐயா” என்றாள் சங்கரி. உண்மையிலேயே அவள் பயந்துதான் போனாள்.

”இல்லை சங்கரி… நீ அற்பம் அல்ல, சிற்பம்” என்றார் தலைவர்.

மாடன், விழுந்து புரளாத குறையாகச் சிரித்து, தலைவர் சொன்னதை ரசித்தான்.

”நாம் பாமரம்.”

”இல்லை நீ பாமயம்.”

”நான் படிக்காதவள்.”

”ஆமாம். படிக்கக் கூடாததைப் படிக்காதவள்.”

விருந்து நடந்தது. மிகவும் ரசித்துச் சாப்பிட்டார் தலைவர்.

”என் வாழ்வில் இத்தனை சுவையான உணவைச் சாப்பிட்டதே இல்லை” என்றார் தலைவர்.

இது பொய்யாகத்தான் இருக்கும் என்று சங்கரி நினைத்தாள். ஆனால், அந்தப் பொய், அவளுக்குப் பிடித்திருந்தது. உண்டு முடித்த அவர் கைகளுக்கு நீர் வார்த்தாள் சங்கரி.

”தலைவரே… அறையில் வந்து படுத்து ஓய்வு எடுங்களேன்” என்றான் மாடன் கட்டிலைக் காட்டி. தலையசைத்தார் தலைவர்.

”வெற்றிலை இருக்குமா… தாம்பூலம் போடவேண்டும் போல இருக்கு.”

”ஐயையோ… உங்களுக்கு வெற்றிலைப் பழக்கம் இல்லைன்னு வெற்றிலை வாங்கிவைக்கவில்லை. இதோ, ஒரு நிமிஷம். தெருமுனைக் கடையில் வாங்கிட்டு ஓடிவர்றேன்” என்றபடி ஓடினான் மாடன். தெருவில் கூட்டம் கூடி இருந்தது. பெருமை, வியர்வைபோல வழிந்தது அவனுக்கு.

தலைவர், கட்டிலில் சாய்ந்துகொண்டார்.

”சங்கரி” என்றார்.

சங்கரி அவர் அருகில் போய் நின்றாள். தலைவர் அவள் கையைப் பிடித்தார். சங்கரி விழித்துக்கொண்டாள்.

”என்ன?” என்றாள்.

”இந்த மடையனோடவா நீ வாழ்றது. உன்னை ராணி மாதிரி வாழவைக்கிறேன். அரண்மனை மாதிரி வீடு, நகை, சொத்து, சுகம்!”

”எட்றா கையை…” என்றாள் சங்கரி.

தலைவர் திடுக்கிட்டு, எழுந்து உட்கார்ந்தார்.

”இதிலென்ன தப்பு சங்கரி. விருந்தில் இதுவும் சேர்த்திதானே?”

”உன் வீட்டுக்கு வர்ற விருந்தாளிக்கு உன் பொண்டாட்டியைக் கொடு, என்கிட்ட இந்த வேலை எல்லாம் வேணாம். செருப்புப் பிஞ்சிடும்.. வெளியே போடா நாயே!”

தலைவர் பாக்கெட்டில் இருக்கும் சீப்பை எடுத்து தலைமுடியை சீவிக்கொண்டு வெளியே போனார். மக்கள் அவரை வாழ்த்திக் கோஷம் போட்டார்கள்.

எதிரில் வெற்றிலையோடு வந்தான் மாடன்.

”என்ன தலைவரே.. வெற்றிலை போடாமக் கிளம்பிட்டீங்க..?”

ஒன்றும் பேசாமல் காரில் ஏறிக்கொண்டு புறப்பட்டார் தலைவர்.

உள்ளே வந்த மாடன் சங்கரியிடம் ‘என்ன நடந்தது?’ என்று கேட்டான். நடந்ததைச் சொன்னாள் சங்கரி.

”செருப்பால அடிக்கிறதுதானே, அந்த நாயை…” என்றான் மாடன்.

ஓசூர் மாநாட்டில் இதைப் பேசிவிடலாம் என்று இருந்தான் மாடன். மாநாட்டில் அவன் எழுந்து நின்றான்.

”என்ன?” என்றார் தலைவர்.

”போன கிருஷ்ணகிரி மாநாட்டுக் கணக்கை ஏன் தரலை?” என்றான் மாடன்.

அடுத்த 15 நிமிடங்களில் மாடன் தெருவோரம் கிடந்தான். சாக்கடையில் அவன் விழுந்து கிடந்தான் என்பதை அவன் புரிந்துகொள்ள நீண்ட நேரம் பிடித்தது. புதர் ஓரம் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த சட்டம்-ஒழுங்கு வீரர், அவனிடம் சொன்னார்.

”கூட்டத்துல போயி கலாட்டா பண்ணலாமாடா நாயே…” என்றார்.

சொறி நாய் ஒன்று… மாடனை விசித்திரமாகப் பார்த்தது!

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

2 thoughts on “இரண்டு நண்பர்களின் கதை

  1. நல்ல கதை.. படிக்க படிக்க ஆர்வம் என் நேரத்தை ஈட்டுகிறது…

  2. இயல்பான நடை கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது நன்றாக விளக்கப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் எல்லாம் படிக்க வேண்டிய கதை. நன்று கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *